BY SAVUKKU · கருணாநிதி ஜெயலலிதா என்ற இரு பெரும் ஆளுமைகள் இல்லாமல் தமிழகம் முதன் முதலாக ஒரு தேர்தலை சந்திக்க இருக்கிறது. ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக தமிழக அரசியல் இவர்களைச் சுற்றியே வந்தது. இருவரின் பாணிகளுமே தனித் தனி என்றாலும், அரசியல் நகர்வுகளை இந்த இருவருமே தங்கள் கட்டுக்குள் வைத்திருந்தார்கள். குறிப்பாக தேர்தல் சமயங்களில், இவர்கள் இருவரின் நடவடிக்கைகளும் உற்று நோக்கப்படும். கசியும் தகவல்களை நம்புவதா இல்லையா என்று யோசித்துக் கொண்டிருக்கும் நேரத்திலேயே, திடீரென்று கூட்டணியை அறிவிப்பார்கள். அப்போதும் திரைமறைவு பேரங்கள் நடைபெற்றுக் கொண்டுதான் இருந்தன. ரகசிய பேச்சுவார்த்தைகளும் உண்டு தான். ஆனால், பொது மக்களுக்கு, இந்தத் திரைமறைவு பேரங்கள் தெரியாமல் பார்த்துக் கொண்டார்கள். கட்சிகளைக் கூட்டணிக்குள் வர வைக்க, இந்த இரு ஆளுமைகளும், அனைத்து வழிமுறைகளையும் கடைபிடிப்பார்கள். ஒரு நேரத்தில் ஒரு கட்சியோடு பெரிய தொழிலதிபர் கூட்டணி பேச்சுவார்த்தையை நடத்துவார். உளவுத் துறையின் மூத்த அதிகாரி பேசுவார். ...
நாளைய வரலாற்றிக்கான இன்றைய பதிவுகள்