BY SAVUKKU ·
கருணாநிதி ஜெயலலிதா என்ற இரு பெரும் ஆளுமைகள் இல்லாமல் தமிழகம் முதன் முதலாக ஒரு தேர்தலை சந்திக்க இருக்கிறது. ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக தமிழக அரசியல் இவர்களைச் சுற்றியே வந்தது. இருவரின் பாணிகளுமே தனித் தனி என்றாலும், அரசியல் நகர்வுகளை இந்த இருவருமே தங்கள் கட்டுக்குள் வைத்திருந்தார்கள். குறிப்பாக தேர்தல் சமயங்களில், இவர்கள் இருவரின் நடவடிக்கைகளும் உற்று நோக்கப்படும். கசியும் தகவல்களை நம்புவதா இல்லையா என்று யோசித்துக் கொண்டிருக்கும் நேரத்திலேயே, திடீரென்று கூட்டணியை அறிவிப்பார்கள்.
அப்போதும் திரைமறைவு பேரங்கள் நடைபெற்றுக் கொண்டுதான் இருந்தன. ரகசிய பேச்சுவார்த்தைகளும் உண்டு தான். ஆனால், பொது மக்களுக்கு, இந்தத் திரைமறைவு பேரங்கள் தெரியாமல் பார்த்துக் கொண்டார்கள். கட்சிகளைக் கூட்டணிக்குள் வர வைக்க, இந்த இரு ஆளுமைகளும், அனைத்து வழிமுறைகளையும் கடைபிடிப்பார்கள். ஒரு நேரத்தில் ஒரு கட்சியோடு பெரிய தொழிலதிபர் கூட்டணி பேச்சுவார்த்தையை நடத்துவார். உளவுத் துறையின் மூத்த அதிகாரி பேசுவார். சில சமயங்களில், சம்பந்தப்பட்ட அரசியல் கட்சித் தலைவரின் நெருங்கிய உறவினர் பேசுவார். இவை எதுவுமே பொது வெளிக்கு வராது. கூட்டணி அறிவிக்கப்பட்ட பின்னர் அந்தக் கூட்டணியின் வெற்றி தோல்விகள் விவாதிக்கப்படுமே ஒழிய, கூட்டணி எப்படி அமைந்தது என்பது, ஊடகங்களில் கிசு கிசு செய்தியாக மட்டுமே புதைக்கப்பட்டு விடும்.
2019 தமிழக தேர்தல் களம் பல ஆபாசமான காட்சிகளை பார்க்கும் நெருக்கடிக்கு நம்மை ஆளாக்கியிருக்கிறது. கூட்டணிப் பேச்சுவார்த்தைகள் வெற்றி பெறுவதற்காக இந்த அரசியல் கட்சிகள் எந்த எல்லைக்கும் செல்லும் என்பதையே சமீப காலம் நமக்கு உணர்த்தியிருக்கின்றன.
அதிமுகவைப் போல அல்லாமல் திமுக கூட்டணி கடந்த ஒரு ஆண்டாகவே சரியான திசையில் பயணித்தது. இடது சாரிகள், விடுதலை சிறுத்தைகள், காங்கிரஸ் என்று இந்தக் கூட்டணி கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக தொடர்ந்து கூட்டியக்கங்களை, போராட்டங்களை நடத்தியுள்ளது. இது ஒரு வலுவான அணி என்றும், இந்தக் கூட்டணி எதிர் அணியை பின்தள்ளிவிட்டு தேர்தலை எதிர்கொள்ளும் என்று நினைத்த சமயத்தில்தான் திமுக, பாட்டாளி மக்கள் கட்சியோடு பேச்சுவார்த்தை நடத்தியது. விடுதலை சிறுத்தைகளுக்கும், பாட்டாளி மக்கள் கட்சிக்கும் ஏழாம் பொருத்தம் என்பதும், பாமக இடம் பெறும் அணியில் விடுதலை சிறுத்தைகள் இடம் பெறாது என்ற வெளிப்படையான அறிவிப்புக்கு பின்னரும் இந்த பேச்சுவார்த்தைகள் தொடர்ந்தன. கடந்த காலங்களில் பாமக திமுகவை எத்தனை கடுமையாக விமர்சித்துள்ளது என்பதை நம்மை விட ஸ்டாலின் அறிவார். விமர்சனங்களைக் கூட ஒருபுறம் ஒதுக்கி வைத்து விடலாம். ஆனால், ஸ்டாலின் முதல்வராக வேண்டும் என்று விசுவாசமாகவும், திராவிட இயக்கத்தின் வரலாறு மற்றும் அதன் தேவையை வலியுறுத்தியும் தொடர்ந்து பேசிக் கொண்டிருக்கும் விடுதலை சிறுத்தைகளை ஓரங்கட்டி விட்டு, பாமகவை திமுக அணிக்கு வரவழைக்க பட்டுக்கம்பளம் விரித்துக் கொண்டிருந்தார் ஸ்டாலின். தமிழகம் திராவிட கட்சிகளால்தான் சீரழிந்து விட்டது என்று தொடர்ந்து பேசி வரும் கட்சி பாட்டாளி மக்கள் கட்சி என்பது குறிப்பிடத்தக்கது. விடுதலை சிறுத்தைகள் திமுக கூட்டணியில் இருந்தால் இதர சமூகத்தினரின் வாக்குகள் விழாது என்பதால், விடுதலை சிறுத்தைகளை கூட்டணியிலிருந்து வெளியேற்றலாம் என்று டிஆர்.பாலு போன்ற தலைவர்கள் வெளிப்படையாகவே ஸ்டாலினிடம் வலியுறுத்தினார்கள்.
கடந்த எல்லா தேர்தல்களிலும் செய்தது போலவே, பாமக திமுகவுடன் நடத்தி வந்த பேச்சுவார்த்தை தொடர்பான செய்திகளைக் கசிய விட்டு, அதிமுகவுடனான தனது பேர திறனை அதிகரித்துக் கொண்டே சென்றது பாமக. தன் பலவீனத்தை வெளிப்படுத்தும் விதமாகவே ஸ்டாலின் பாமகவுடனான ரகசிய பேச்சுவார்த்தைகளை தொடங்கினார். தொடர்ந்து மூன்று தோல்விகளை சந்தித்துள்ள திமுக இன்னொரு தோல்வியை தாங்காது என்பது உண்மையே. அதற்காக, சந்தர்ப்பவாத கட்சியான பாமகவோடு கூட்டணிக்கு முயற்சி செய்தது அவரது பலவீனத்தை அப்பட்டமாக வெளிப்படுத்தியது. இதற்கு முன்பு இருந்தது போல அல்லாமல், தற்போது உள்ள அரசியல் சூழல், திமுகவுக்கு சாதகமாகவே உள்ளது. அந்த சாதக சூழலை வெற்றிச் சூழலாக எப்படி மாற்றுவது என்பதை குறித்தே ஸ்டாலின் சிந்தித்திருக்க வேண்டும். ஒருவேளை, பாமக திமுக கூட்டணிக்கு வந்து, விடுதலை சிறுத்தைகள் வெளியேற்றப்பட்டிருந்தால், ஸ்டாலின் ஒரு சந்தர்ப்பவாதி, சாதியவாதி என்று அவர் மீது உருவாகியிருந்திருக்கும் கறையை அவரால் ஒரு நாளும் அழிக்க முடிந்திருக்காது.

தேர்தல் பரபரப்பு தொடங்குவதற்கு முன்னதாக தமிழகத்தில் பரவலாக இருந்த கருத்து, திமுக கூட்டணி நாற்பதிலும் வெற்றி பெறும் என்பதே. அப்போது அதிமுக-பிஜேபி கூட்டணி உருவாகவில்லை என்பதையும் மறந்து விடக் கூடாது. அதிமுக பல கட்சிகளை இணைத்து கூட்டணி உருவாக்கியதால் மட்டுமில்லை, ஸ்டாலினுடைய பலவீனமான கூட்டணி நகர்வுகளாலும், தொடக்கத்தில் இருந்த அந்த அதீத நம்பிக்கை இன்று பழுதுபட்டுள்ளது.
திமுக இப்படியென்றால், அதிமுகவினர் தாங்கள் அடிமைகள் என்பதை மீண்டும் நிரூபிக்கும் வகையிலேயே பேச்சுவார்த்தைகளை நடத்தினர். கூட்டணி அறிவிப்பு என்பது, அனைத்துக் கட்சிகளையும் ஒன்றிணைத்து, ஒரே குரலில் அறிவிக்க வேண்டியது. இப்படி அறிவிப்பு செய்வதால், மக்களிடம் நம்பிக்கை பெறுவதை விட, சம்பந்தப்பட்ட கட்சிகளின் தொண்டர்களிடம் நம்பிக்கையை ஏற்படுத்த முடியும். ஆனால், பாட்டாளி மக்கள் கட்சியிடம் தங்கள் மானத்தையும் கட்சியையும் அடமானம் வைத்து விட்டதாகவே அதிமுக தொண்டர்கள் பெரும்பாலானோர் கருதுகின்றனர்.
குறிப்பாக பாமகவுடனான கூட்டு ஒரு பொருந்தாத கூட்டணியாகவே பொதுமக்களிடையே பார்க்கப்படுகிறது. ராமதாஸ் மற்றும் அன்புமணி ஆகியோர், கடந்த இரண்டு ஆண்டுகளாக, அதிமுகவை செய்த பல விமர்சனங்கள், மிக மிக மோசமானவை. ஒரு பாராளுமன்ற உறுப்பினர் என்பதையும் மறந்து, அன்புமணி கடுமையான வார்த்தைகளால் தொடர்ந்து விமர்சனம் செய்து வந்தார். சேலம் எட்டு வழிச் சாலை முதல் டாஸ்மாக் வரை, பாமக அதிமுக ஆட்சியையும், அதன் அமைச்சர்களையும் அவர் விமர்சிக்காத நாளே கிடையாது. பாமகவின் கடுமையான அறிக்கைகள், அதிமுக அரசைத் தொடர்ந்து பதம் பார்த்து வந்தன. இது அல்லாமல், தமிழக ஆளுனரை சந்தித்து, 24 குற்றச்சாட்டுகள் அடங்கிய புகார் பட்டியலை அளித்தார் அன்புமணி. கூட்டணிக்கு முதல் நாள் வரை அரசை இப்படி கடுமையாக விமர்சித்த பாமகவோடு அதிமுகவினர் கைகோர்த்ததை தமிழக மக்கள் அருவருப்போடுதான் பார்க்கின்றனர். அரசியலில் தேர்தலுக்கு தேர்தல் கூட்டணிகள் மாறுவது இயல்புதான். ஆனால், பாமக விமர்சனத்துக்கு பயன்படுத்திய வார்த்தைகளும், அதைப் பற்றி கொஞ்சம் கூட வெட்கப்படாமல் அதிமுக கூட்டணி வைத்ததுமே இன்று இக்கூட்டணியை வெறுப்புணர்வோடு பார்க்க வைத்துள்ளது.
திமுக-அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளுடனும் ஒரே நேரத்தில் தேமுதிக பேரம் நடத்தியது ஊடகங்களில் அம்பலமானது. சென்னை நட்சத்திர ஹோட்டலில் மத்திய அமைச்சர் பியுஷ் கோயலுடன் சுதீஷ் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருந்த அதே சமயத்தில், தேமுதிக பிரமுகர்கள் துரைமுருகன் வீட்டில் பேசிக் கொண்டிருந்தனர். இவர்கள் இரு தரப்பிலும் ஒரே நேரத்தில் பேச்சு நடத்துவது துரைமுருகனுக்கு தெரியாதா என்ன ? இதைத் தெரிந்துதான் இவர்களை அம்பலப்படுத்த வேண்டும் என்பதற்காக, ஊடகங்களுக்கு தேமுதிகவினர் வரும் செய்தியை கசியவிட்டார் துரைமுருகன்.
இரு தரப்பிலும் பேச்சுவார்த்தை நடத்துவது வெளிப்படையாக தெரிந்த பிறகு, சுதீஷும், பிரேமலதாவும் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடத்தினர். அந்தச் சந்திப்பில், பத்திரிகையாளர்களை ஏக வசனத்தில் பேசினார் பிரேமலதா. பொது வெளியில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்ற அடிப்படை நாகரீகம் தெரியாத வகையில் பேசினார் பிரேமலதா. இதில் மிகப் பெரிய அயோக்கியத்தனம் என்னவென்றால், தன் மகன் பேசிய பேச்சுக்கு நியாயம் கற்பித்தார் அவர். இவர்களின் மகன், விஜய பிரபாகரன் ஒரு கூட்டத்தில் பேசியபோது, “எல்லா கட்சிக்காரனும் எங்க வீட்டு வாசல்ல வந்து தவம் கெடக்குறானுங்க. நாங்க இல்லாம ஒரு பய ஆட்சி அமைக்க முடியாது” என்று பேசினார். இது குறித்து பத்திரிக்கையாளர்கள் கேள்வி எழுப்பியபோது பிரேமலதா “இளங்கன்று பயமறியாது” என்றார். பத்திரிக்கையாளர்கள் மீண்டும் வலியுறுத்தி கேட்கவும், “அவங்களே (அரசியல் கட்சியினர்) கோவப் படல. உங்களுக்கு என்ன வந்துச்சு” என்றார். இதை விட அதிமுகவை கேவலப்படுத்த முடியுமா என்ன ?
ஆனாலும் எடப்பாடி தேமுதிக கண்டிப்பாக வேண்டும் என்று பிடிவாதம் பிடித்து, இல்லாத மானம் மரியாதையை மீண்டும் இழந்து, தேமுதிகவுக்கு 4 சீட்களை கொடுத்துள்ளார். தேமுதிக, அதிமுக அணியில் இருந்தே தீர வேண்டும் என்று எடப்பாடி பிடிவாதம் பிடிக்க காரணம், 18 தொகுதிகளுக்கான சட்டப்பேரவை இடைத்தேர்தல் தான். எடப்பாடிக்கு பாராளுமன்றத் தேர்தல் குறித்து பெரிய அளவில் கவலையில்லை. இன்னும் சொல்லப்போனால், அதிமுகவில் எவரேனும் வென்று, மத்தியில் அமைச்சராகி, மற்றுமொரு அதிகார மையமாக விளங்குவதை அவர் விரும்பவில்லை. அவரது கவனம் முழுக்க 18 தொகுதிகள் மட்டுமே. 18 தொகுதிகளிலும் வெற்றி பெற்று 2021 வரை, தன் ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டும், தன் சம்பந்தி நலமுடன் வாழ வேண்டும் என்பதைத் தவிர அவருக்கு வேறு ஒரு நோக்கமும் இல்லை. இதற்காக, எத்தகைய அவமானங்களையும் சகித்துக் கொள்ள எடப்பாடி பழனிச்சாமி தயாராகவே இருக்கிறார்.
மேலும், பிஜேபியின் நோக்கமே, தமிழகத்தை மத ரீதியாக பிளவுபடுத்த வேண்டும் என்பதே. உத்திரப்பிரதேசத்தில் 20 சதவிகித இஸ்லாமியர்கள் வாழ்கிறார்கள். ஆனால் உத்தரப் பிரதேச சட்டப்பேரவையில் மொத்தம் உள்ள 403 இடங்களில் ஒரே ஒரு இஸ்லாமியரைக் கூட வேட்பாளராக நிறுத்தவில்லை பிஜேபி.
இதே போல தமிழகத்திலும் இஸ்லாமியரோ, அல்லது கிறித்தவரையோ வேட்பாளராக நிறுத்தக் கூடாது என்ற பிஜேபியின் கட்டளையையும் ஏற்றார் எடப்பாடி. கடந்த மார்ச் ஆறாம் தேதி, சென்னையை அடுத்த வண்டலூரில் நடைபெற்ற, மோடி கலந்து கொண்ட பிரச்சார கூட்ட மேடையில், ஒரே ஒரு இஸ்லாமிய தலைவர் கூட அமர வைக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தான்தோன்றித்தனமாக எடுத்தேன் கவிழ்த்தேன் என்று செயல்படும், ஜெயலலிதா கூட, இப்படி ஒட்டு மொத்தமாக இஸ்லாமிய சமூகத்தை புறக்கணித்தது கிடையாது.
ஆனால் பிஜேபியின் ஏவலாளாக செயல்படும் எடப்பாடி, தமிழகத்தின் சமூக நல்லிணக்கத்தையே குலைக்கும் வகையில் பிஜேபிக்கு ஒத்து ஊதிக் கொண்டிருக்கிறார்.
தமிழகத்தில் இது வரை நடந்த எல்லாத் தேர்தல்களிலும் சாதி பார்த்துதான் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டு வந்துள்ளனர். ஆனால் வெறும் சாதியை மட்டுமே நம்பி, முதன் முறையாக தேர்தலை அதிமுக சந்திக்க இருக்கிறது என்றே நம்புகிறேன்.
அதிமுக, சாதிகளின் பின்னாலும், தேமுதிக வெற்று கௌரவத்திலும், திமுக தடுமாற்றத்திற்குள்ளும் பாமக வெறிக்கூச்சலிலும் தங்களை இழந்து கொண்டிருக்கின்றன.
தேர்தல் கூட்டணி பேச்சு வார்த்தை என்பதை விட ‘தேர்தல் கூட்டணி பேர வார்த்தை’ என்பது சரியாய்ப் பொருந்தியதாக இந்தத் தேர்தலைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். இந்தக் கட்சிகள் எல்லாம் ஒட்டுமொத்தமாய் மறந்தே போனது மக்கள் பார்வையாளர்களாக இருக்கிறார்கள் என்பதை மட்டுமல்ல, தங்களுடைய சுயத்தையும் சேர்த்து தான்.
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
கருத்துகள்
கருத்துரையிடுக