தன் கரிய, பெரிய கண்ணைக் கசக்கிக்கொண்டே சிவந்த, சிறுவாயில் கொட்டாவி உதிர்த்தபடி சேர்த்தலை இருப்பூர்தி நிலையத்தில் வலப்பாதம் பதித்தாள் கண்ணகி. கூரையில் தொங்கிக்கொண்டிருந்த மின்னணு கடிகாரம் 07:35 எனச்செம்மையாய்த் துடித்தது. கண்ணகியின் இருதயம் அதைவிட வேகமாய்த்துடித்து ரத்தந்துப்பியது. அவள் அப்பா அழுக்கேறிய வெள்ளை வேட்டியை மடித்துக்கட்டியபடி ரீபாக் என்று ஆங்கிலத்தில் எழுத்துப்பிழையுடன் எழுதப்பட்ட கருப்புப்பையைத் தூக்கிக்கொண்டு பின்னாலேயே அவசரமாக இறங்கித்தடுமாறினார். அங்கு ரயில் ஒரு நிமிடம்தான் நிற்கும் என்றிருந்தார்கள். கண்ணகி அவர் கையைப்பிடித்து ஆசுவாசப்படுத்தினாள். ஐந்து மணி நேரம் தாமதமாக ரயில் வந்து சேர்ந்திருப்பதைப்பதிவு செய்யப்பட்ட பெண் குரல் மலையாளத்தில் அறிவித்து அசௌகர்யத்துக்கு வருத்தம் மொழிந்தது. கொஞ்சமும் இங்கிதமின்றி அதைச்சட்டை செய்யாமல் ரயில் நகரத்தொடங்கியது. “ஒரு நிமிஷம்னா ஒரே நிமிஷமேதான் நிக்கறான், பாப்பா.” ஆச்சரியமாய் அலுத்துக்கொண்டபடி அப்பா நடந்தார். கண்ணகி புன்னகைத்தாள். நேற்று மாலை நான்கு மணிக்கு மதுரையில் ரயிலேறியது. இன்று பத்து மணிக்கு கண்ணகிக்கு ‘பரிக்ஷா’ தேர்வு. இவ...
நாளைய வரலாற்றிக்கான இன்றைய பதிவுகள்