BY
இந்தியாவின் முன்னணி யோகா குரு பாபா ராம்தேவ் ஒரு கடைந்தெடுத்த ப்ராடு என்பது விபரமரிந்தவர்கள் அனைவருக்கும் தெரியும். ப்ராடுத்தனம் செய்யும், பாபா ராம்தேவ், ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர், ஜக்கி வாசுதேவ் போன்றவர்கள்தான், மக்களின் மூடத்தனங்களை பயன்படுத்திக் கொண்டு, அவர்களை ஏமாற்றி தங்கள் வியாபார சாம்ராஜ்யத்தை மேலும் மேலும் விரிவாக்கிக் கொண்டே செல்கின்றனர்.
ஆன்மீக வியாபாரத்தோடு நிற்காமல், அந்த ஆன்மீக பாப்புலாரிட்டியை மேலும் பணமாக்கும் முயற்சியில் ஈடுபடுபவதில் முன்னணியில் இருப்பவர்கள் இருவர். ஒருவர் ஜக்கி வாசுதேவ். மற்றொருவர் பாபா ராம்தேவ். பாபா ராம்தேவின் பல கோடி ரூபாய் மதிப்புள்ள ப்ராண்ட்தான் பதஞ்சலி.
அண்ணாமலை படத்தில் ரஜினியின் வளர்ச்சியை விட பிரம்மாண்டமானது பதஞ்சலியின் வளர்ச்சி.
நூடுல்ஸ் முதல் ஆட்டா வரை அனைத்து வித மளிகை வியாபாரத்தில் பன்னாட்டு முன்னணி நிறுவனங்களை மிக குறுகிய காலத்தில் பின்னுக்கு தள்ளியது. இன்று பதஞ்சலி நிறுவனம் உலகளாவிய மிகப் பெரிய ப்ராண்ட். கோடிகளில் திளைக்கும் ஒரு நிறுவனம்.
பிரபல சர்வதேச ப்ராண்டுகள், ஒரு புதிய பொருளை அறிமுகப்படுத்துகையில், அதை மார்க்கெட்டிங் செய்ய பல கோடிகளை செலவு செய்யும். நுகர்வோரின் விருப்பங்கள் என்ன. ஒரு பொருள், என்ன நிறத்தில் என்ன தன்மையில் இருந்தால் அதை நுகர்வோர் விரும்புவார்கள். எந்த மாதிரி விளம்பரம் செய்ய வேண்டும். எந்த பொருளாதாரப் பிரிவை இந்த பொருள் சென்று சேர வேண்டும். சந்தையில் இந்தப் பொருளுக்கான போட்டியாளர்கள் யார். அவர்களின் பொருளை விட, இந்தப் பொருள் எந்த வகையில் வேறுபட்டுள்ளது என்பன உள்ளிட்ட ஆராய்ச்சிகளில் ஈடுபடுவதற்கென்று மட்டும் பல கோடிகளை பன்னாட்டு நிறுவனங்கள் செலவு செய்யும். இத்தனை செலவுகளுக்குப் பிறகும், புதிதாக அறிமுகப்படுத்தும் ஒரு பொருள் சந்தையில் தோற்றுப் போகலாம்.
ஆனால் பதஞ்சலிக்கு அது போன்ற எந்த சிக்கலும் கிடையாது. நுகர்வோர் பழக்க வழக்கங்கள் (behaviour) தொடர்பாக எந்த செலவுகளையும் செய்தது கிடையாது. பதஞ்சலி நிறுவனத்துக்கு ஒரே அடிப்படைதான். பன்னாட்டுப் பொருட்களை வாங்காதீர்கள். பதஞ்சலி பொருட்கள், இயற்கை முறையில், உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டது. இது சுதேசி பொருள். இது மட்டுமே பதஞ்சலியின் தாரக மந்திரம்.
மோடி தும்மினால் கூட அதை தேசபக்தித் தும்மல் என்று பெருமை பேசித் திரியும் கோடிக்கணக்கான பக்தாள் கூட்டம்தான் பதஞ்சலியின் இலக்கே. அந்த கண்மூடித்தனமான மோடி பக்தி மற்றும் தேசபக்தியை அடிப்படையாக வைத்து, களமிறங்கியதுதான் பதஞ்சலி நிறுவனம்.
ஆனால், எல்லா மனிதர்களையும் போலத்தானே பாபா ராம்தேவும் ? சாதாரண மனிதர்களுக்கு இருக்கும் பலவீனங்களை விட, ப்ராடு சாமியார்களுக்கு பலவீனங்கள் அதிகமாக இருப்பது இயல்புதானே ? அந்த இயல்பான பலவீனமான பேராசை பாபா ராம்தேவுக்கும் பதஞ்சலிக்கும் தலை தூக்கியது. அதன் விளைவுதான், வாட்ஸப் செயலிக்கு போட்டியாக, பதஞ்சலி களமிறக்கிய புதிய செயலி கிம்போ.
வாட்ஸப், இன்று செல்போன் பயன்படுத்துபவர்களில் 99 சதவிகித்ததினரின் வாழ்வில் இன்றியமையாத ஒன்றாக மாறி விட்டதை நாம் அனைவரும் அறிவோம். வாட்ஸப் நிறுவனம் தனி நிறுவனமாக இருந்தபோது இருந்தததை விட, ஃபேஸ்புக் நிறுவனம் அதை வாங்கிய பிறகு, அதன் தொழில்நுட்பமும், பாதுகாப்பு அம்சங்களும் பல மடங்கு மேம்பட்டிருப்பதை நாம் அறிவோம்.
அந்த வாட்ஸப்புக்கு போட்டியாக கிம்போ செயலியை சந்தையில் அறிமுகப்படுத்தியது பதஞ்சலி. அதன் டேக் லைனாக, இந்தியா பேசுகிறது என்ற வாசகத்தையும் அறிமுகப்படுத்தியது பதஞ்சலி.
தேசபக்தி பேசும் பல காவி ஊடகங்களை வைத்து, கிம்போ இந்தியாவை புரட்டிப் போடும் ஒரு செயலி என்று செய்திகளும் வெளியிட வைக்கப்பட்டன.
Paytm நிறுவனம் தனிநபர் தகவல்களை பிரதம மந்திரி அலுவலகத்துக்கு அளித்ததாக கோப்ரா போஸ்ட் நிறுவனம் செய்திவெளியிட்டு அந்த சூடு ஆறும் முன், பாஜகவிற்கு மிகவும் நெருக்கமான நபர் அதுவும் பொதுத்தேர்தல் வருவதற்க்கு 1 வருடம் இருக்கும் நிலையில் இப்படி ஒரு செயலியை தயாரித்ததற்கு உள்நோக்கம் இருக்குமா என்பதை நாம் சிந்தித்து பார்க்க வேண்டும்.
மிகுந்த படோடாபத்தோடு கிம்போ அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால், பாபா ராம்தேவ், இணையத்தின் வீச்சை அறியாத ஒரு மூடன் என்பது ஒரு சில மணி நேரங்களிலேயே அம்பலமானது.
கிம்போ செயலியின் தொழில்நுட்ப அம்சங்கள், அதன் வரலாறு, எங்கிருந்து திருடப்பபட்டது என்பது உள்ளிட்ட அனைத்து விபரங்களையும் அடுத்தடுத்து எடுத்து வெளியிட்டார்கள் இணையவாசிகள்.
ஆண்ட்ராய்டு ப்ளே ஸ்டாரில் பதஞ்சலி கம்யூனிகேஷன் என்ற பெயரில் பதிவேற்றப்பட்ட, iOS ஆப் ஸ்டோரில் Appdios Inc என்ற பெயரில் பதிவேற்றப்பட்டு உள்ளது.
யார் இந்த Appdios என்று பார்த்தால் அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணத்தில் பதிவு செய்யப்பட்டிருக்கும் நிறுவனம் என்பது தெரிய வருகிறது, சுதேசி என்பது வெறும் மார்க்கெட்டிங் யுக்தி மட்டுமே. iPhoneஇல் இருந்து சுதேசி பொருளை மட்டுமே வாங்கவும் என்று ட்வீட் போடுவதும், nike ஷூ அணிந்து கொண்டு சுதேசி வசனம் பேசுவதும் வேறு வேறல்ல.
இந்த தகவல்களை இணையவாசிகள் ட்விட்டரில் பாபா ராம்தேவை டேக் செய்து அடுத்தடுத்து அம்பலப்படுத்தினர். கூகிள் ப்ளே ஸ்டோருக்கு புகாரும் அனுப்பினர். கூகிள் ப்ளே ஸ்டோரில் இருந்து கிம்போ செயலி, அம்போவென தூக்கப்பட்டது.
அந்நிறுவனத்தின் இணையதளமும் www.kimbho.com தற்போது முடங்கி உள்ளது.
Appdios அந்த நிறுவனத்தை அதித்தி கமல் மற்றும் சுமித் குமார் என்ற இந்திய வம்சாவளியை சேர்ந்த இரண்டு பேர் 2012 ஆம் ஆண்டு நிறுவி, 2016 ஆம் ஆண்டு நிறுவனத்தை மூடி உள்ளனர்
அந்நிறுவனம் போலோ மெஸ்சேன்ஜ்ர் என்ற செயலியை 2015ஆம் ஆண்டு தயாரித்து வெளியிட்டு இருக்கிறது, அதுவும் தற்போது நீக்கப்பட்டு உள்ளது.
போலோ மெஸ்சேஞ்சுரில் உள்ள அத்தனை அம்சங்களும் கிம்போ செயலியிலும் உள்ளது, அந்த செயலி குறித்து விவரிக்கும் வாசகங்களில் இருந்து, screen shot முதல் அத்தனையும் அப்படியே அச்சு பிசகாமல் காப்பியடிக்கப் பட்டிருக்கிறது. போலோ செயலியை வாங்கி பட்டி டிங்கரிங் பார்த்து (White Labelling ) பேரை மாற்றி சுதேசி ஆப் என்று சொல்லி விளம்பரப்படுத்தி இருக்கிறார் பாபா ராம்தேவ் என்ற மோசடிப் பேர்வழி.
சரியாக பட்டி டிங்கரிங் பார்க்கும் அளவுக்கு கூட ஏன் பாபாஜிக்கு பொறுமை இல்லை என்பது தெரியவில்லை. போலோ செயலியில், ஒன் டைம் பாஸ்வேர்ட் (OTP) கேட்கும் அம்சத்தை, பெயரைக் கூட மாற்றாமல், அப்படியே கிம்போவில் பயன்படுத்தியிருந்தனர்
அறிமுகப்படுத்திய ஒரே நாளில் சுமார் 50 ஆயிரம் டவுன்லோட் செய்யப்பட்டிருக்கிறது, ஆப் ட்ரெண்டிங்கில் 9 ஆவது இடத்தில் இருந்து தற்போது நீக்கப்பட்டிருக்கிறது. தொழில்நுட்ப காரணங்களால் தற்காலிகமாக நீக்கப்பட்டிருப்பதாக செய்தி வெளிவந்தாலும் உண்மையில் இந்த குளறுபடிகளை சரிசெய்யவே அது நீக்கப்பட்டிருக்கிறது.
இதை தாண்டிய முக்கிய விஷயம் அந்த செயலியின் பாதுகாப்பு தன்மை. உங்கள் போனில் உள்ள கேமரா, தகவல்கள், sms, லொகேஷன் என்று அனைத்தையும் அது பயன்படுத்த அனுமதி கேட்கிறது.
இந்த செயலியை பயன்படுத்திய பிரான்ஸ் நாட்டை சேர்ந்த எலியட் ஆண்டர்சன் என்ற ஹேக்கர் தன்னால் இந்த செயலியை பயன்படுத்தும் எல்லா நபர்களின் SMS சை படிக்க முடிகிறது என்று கூறுகிறார்
தனி நபர் பாதுகாப்புக்கு எந்த ஒரு சட்டமும் நம் நாட்டில் இல்லாத போது ஆதார் கசிவு, cambridge analytica, PayTM என்று தொடர்ந்து தனி நபர் தகவல்களை அரசியலுக்கு பயன்படுத்தும் நேரத்தில் சுதேசி போர்வையில் இப்படி ஒரு செயலி. இது போன்ற செயலிகளால் ஏற்படும் ஆபத்தை நாம் ஏற்கனவே இந்த கட்டுரையில் பார்த்தோம். இணைப்பு
இது போதாதென்று இதே பெயரில் போலி செயலிகள் மிக குறுகிய நேரத்தில் ப்ளே ஸ்டோரில் நிறுவப்பட்டுள்ளது, பதஞ்சலி மேல் உள்ள மோகத்தில் அறியாத பயனாளிகள் அதற்கு பதில் வேறு ஒரு செயலியை தரவிறக்கம் செய்தால் அதில் என்ன வில்லங்கம் இருக்கும் என்பது யாருக்கும் தெரியாது.
கேம்ப்ரிட்ஜ் அனலிட்டிக்கா நிறுவனத்தின் சேவைகளை பயன்படுத்தி, உலகில் பல நாடுகளில் உள்ள கட்சிகள் பயனடைந்தது போலவே, நமது டேட்டாவை திருடி, நமது சமூக வலைத்தள பழக்கவழக்கங்களை ஆராய்ந்து, நம்மை மூளைச் சலவை செய்து, பயமுறுத்தி, தாமரை மலர்ந்தால் மட்டுமே இந்தியாவில் இந்துக்கள் வாழ முடியும் என்ற எண்ணத்தை நம் மனதில் ஏற்படுத்தி, மீண்டும் தாமரையை மலர வைக்க எடுக்கப்படும் முயற்சிகளின் ஒரு வடிவமாகவே ப்ராடு சாமியார் பாபா ராம்தேவின் கிம்போ முயற்சியை பார்க்க வேண்டி உள்ளது.
ஒரே நாளில் இந்த செயலியை தங்கள் செல்பேசிகளில் நிறுவிய 50 ஆயிரம் பேரின் டேட்டாக்களை, பாபா ராம்தேவ் உறிஞ்சி இந்நேரம் பாதுகாத்திருப்பார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
நமது டேட்டாவை உருவ, சங் பரிவாரமும், பாபா ராம்தேவும், கிம்போ செயலியோடு நிற்கவில்லை. பொதுத் துறை நிறுவனமான, பிஎஸ்என்எல் நிறுவனத்தோடு இணைந்து, பதஞ்சலி நிறுவனம் புதிய சிம் கார்டுகளை வெளியிட்டுள்ளது. இந்த பதஞ்சலி-பிஎஸ்என்எல் சிம் கார்டை நீங்கள் பயன்படுத்த வேண்டுமானால், பதஞ்சலி நிறுவனத்தின் ஸ்வதேஷி சம்ரித்தி கார்டையும் சேர்த்து வாங்க வேண்டும். அந்த சம்ரித்தி கார்டு டெபிட் கார்டு போல. அதை பயன்படுத்தி, நாடெங்கும் உள்ள பதஞ்சலி கடைகளில் பொருட்கள் வாங்கிக் கொள்ளலாம். இணைப்பு 1 இணைப்பு 2
எப்படியெல்லாம், பொதுத் துறை நிறுவனங்களையும் பயன்படுத்தி, நம் டேட்டாவை திருடும் வேலைகளில் காவிப் பரிவாங்கள் இறங்குகின்றன என்பதை புரிந்து கொள்ளுங்கள்.
கிம்போ வெகு விரைவில் அம்பலப்பட்டு விட்டது. ஆனால் இந்த அனுபவத்தை பயன்படுத்தி, கவனமாக, அம்பலப்படாத வகையில், நாளை வேறு ஒரு செயலியை காவிகள் களமிறக்கலாம். அதை நாம் தாமதமாக கண்டுபிடிக்கலாம் அல்லது கண்டுபிடிக்காமலும் போகலாம்.
ஆனால், நமது சமூக வலைத்தள பழக்க வழக்கங்களின் அடிப்படையில் நாம் யார், நாம் யாருக்கு வாக்களிக்கப் போகிறோம் என்பதை உத்தேசமாக ஊகிக்க மட்டுமே முடியும். தெளிவான சிந்தனையோடு, சாதக பாதகங்களை, பாரபட்சமின்றி நாம் அலசி, சற்று பொறுமையாக சிந்தித்து முடிவெடுத்தால், கேம்ப்ரிட்ஜ் அனலிட்டிக்கா, கிம்போ போல ஆயிரம் மென்பொருட்கள், செயலிகள் வந்தாலும் நம் மனதை யாராலும் மாற்றவே முடியாது.
கிம்போ போன்றவை பலவீனமானவர்களை மனதில் வைத்தே உருவாக்கப்படுகின்றன. அவர்களின் நோக்கத்தைப் போல எதையும் அலசி ஆராயாமல், முட்டாள் பக்தர்களாக இருக்கப் போகிறோமா, அல்லது சுய சிந்தனையோடு இருக்கப் போகிறோமா என்பதை நாம்தான் முடிவு செய்ய வேண்டும்.
கருத்துகள்
கருத்துரையிடுக