ஓடிப் போய் பேருந்தை பிடிக்கும் ஆர்வம் தொலைந்து போயிருந்தது. அதற்கு அவசியமும் இல்லை என்பது போல் கூட்ட நெரிசல் குறைவாகவே இருந்தது நேரங்கெட்ட வேளை என்பதால் கூட இருக்கலாம். மணி காலை 10.30 கடந்திருந்தது. பஸ்சில் ஏறி இருக்கை இருக்கிறதா என்ற நோட்டத்தில் அயர்ச்சி. அது இருந்தது ஏகத்திற்கும். ஜன்னலோர இருக்கைக்கு இறக்கை கட்டி பறந்த நாட்கள் நமட்டு சிரிப்பை கூட தரவில்லை. வழியின்றி ஒரு ஜன்னலோர இருக்கையில் உட்கார..
நான்கு ஆப்பிள் அம்பது ரூவாய்க்கும் பலாப்பழம் ஒரு நாலைந்து சுளைகள் ஒரு பாக்கெட் பத்து ரூவாய் என்ற பேருந்து வியாபாரம் ஜரூராய் நடந்து கொண்டிருந்தது.. சற்றைக்கே பேருந்து சுமாரான கூட்டத்துடன் நகரத் தொடங்க என் பக்கத்து இருக்கையும் நிறைகிறது, பஸ் ஸ்டாண்டின் புழுதி காற்றும் சற்று உரைக்கும் வெய்யிலோடு கூடிய பயணத்தில் அப்படி என்ன சுவாரஸ்யம் இருந்து விடப்போகிறது. கண்டக்டர் வர கடைசி நிறுத்தத்திற்கு ஒரு டிக்கெட் எடுத்து பர்சை களைந்து பார்க்க ஹியர் போன் கையில் சிக்கியது வேண்டா வெறுப்பாய் விரல்களிலிருந்து அதை எடுத்து போட்டு விட்டு அலைபேசியை கையில் எடுக்கிறேன்.
பக்கத்து இருக்கை பெண் ஆர்வமாய் அலை பேசியை நோட்டமிடுவது தெரிகிறது. கேலரிக்கு போய் உன் புகைப்படத்தை மெல்ல தொட்டு வருடிப்பார்க்கிறேன். விரல்களில் ஒட்டிக்கொள்ள மறுத்து உன் உதட்டிலேயே தேங்கி போய் நின்றது புன்னகையை மீண்டும் அங்கேயே சேமிப்பில் விட்டேன். சிரித்துக் கொண்டேயிருந்தாய் நீ. மனசுக்குள்
“கள்ளச்சிரிப்பழகா”
மனசு அனிச்சையாய் சொல்லிக்கொண்டது. எட்டி பார்க்கும் முனைப்பில் பக்கத்து இருக்கையில் அப்பெண், சட்டென்று அலைபேசியை அணைக்க பார்வையை வேடிக்கைக்கு திருப்பினாள் பக்கத்து இருக்கைக்காரி..
முன்பெல்லாம் வழியெங்கும் பேருந்தோட போட்டிக்கு ஓடி வரும் மரங்கள் என் வழித் துணை மற்றும் மைல்கற்களில் தூரமும் ஊர் பெயர்களை மனதில் பதித்து கொள்ளும் ஆர்வமும் பழக்கத்தில் ரத்தமாய் ஓடிக்கொண்டிருந்த ஒன்று. ஏனோ எதுவும் உடன் பயணிக்காததாய் மனதிற்குள் ஒரு ஓட்டம். கடந்து போன சில கோயில்களை பார்த்து அனிச்சையாய் கன்னத்தில் போட்டுக்கொண்டு கண்ணை மூடி பிரார்த்திக்கும் மனசு எப்போதும் வியப்புக்கானது. பள்ளிக்கூடம் குடிசை மாடி வீடுகள் என்று பயணத்தின் களைப்பை பெரும் பாலும் குறைக்கும் காட்சி எல்லாம் வழமை போல் அதன் இயல்பில் சற்றும் தொலையாமல்
பஸ்சில் கணிசமாய் கூட்டம் அதிகரித்திருந்தது. மெல்லிய வேர்வை சிகரெட் வாசம் என ஒரு வித இறுக்கம் பற்றிக்கொள்ள தொடங்கியது..இரண்டு பேர் இருக்கைக்கையில் கொஞ்சம் இடம் கேட்க தொடங்கினாள் நின்று கொண்டு பயணம் செய்யும் ஒருத்தி. சற்று முன் நகர்ந்து பக்கத்தில் இருக்கும் பெண்ணை பின்னுக்கு நகர்ந்து உட்கார சொல்ல ஒட்டி கொள்ள கொஞ்சம் இடம் கிடைத்த நிம்மதியில் உட்கார்ந்தவளுக்கு சற்று நேரத்திற்கு சவுகர்யமாய் உட்கார தோன்றியதில் பெரிசாய் ஆச்சரியமில்லை எனக்கு. மெதுவாய் இடித்தும் நெறுக்கியும் உட்கார தொடங்கியவள் கொஞ்சம் நகருங்க நாங்களும் டிக்கெட் எடுத்து இருக்கோம். விழற மாதிரி இருக்கு என்ற தொனியில் பேச ஆரம்பித்தாள். வசதி கோருவதிலும் உரிமை பேசுவதிலும் தவறேதும் இருப்பதாய் எனக்கு படவில்லை. அடுத்த நிறுத்தத்தின் தூரத்தை கணக்கிட தொடங்கினேன். அவள் இடைப்பட்ட தூரத்தில் இறங்க தான் டிக்கெட் எடுத்திருந்தாள் என்பது நன்றாக தெரியும் எனக்கு.
அசெளகர்யங்கள் பயணத்தின் பயணத்தில் இயல்பு என்பதை வாழ்க்கையை கடந்து வரும் அத்தனை பேரும் அறிந்த ஒன்றே. இங்கு பயணம் தான் காரியம் என்பதால் பஸ் ரயில் கார் விமானம் என்பது பொருட்டல்ல. நெரிசல் என்பது போக்குவரத்து கட்டாயம். இதில் செளகர்யத்தை மேற்கொள்வதும் அசெளகர்யத்தை எதிர்கொள்வதும் பயணத்தின் அடிப்படையை கொண்டே தீர்மானிக்கப் பட்டிருக்கும். அவசரம் தெரிந்தது உடன் இருந்த இருவரின் நிலைப்பாட்டை கொண்டு. மேலும் இறுக்கி கொள்ளவோ நொறுங்கி பொறுமை காக்க மனம் ஓப்பவில்லை.
அவசியப்படாத இடத்தில் விட்டு கொடுத்தலோ கட்டிக் காத்தலோ அர்த்தமற்றது மட்டுமின்றி நான் அமர்ந்திருந்த இருக்கையில் முன் பயணத்தில் யாரோ ஒருவர் பயணித்தே இருக்க வேண்டும் என்று அந்த நொடி சட்டென்று உணர்த்த எழுந்தேன். என்னங்க இறங்க போறீங்களா கடைசியா தானே டிக்கெட் எடுத்தீங்க என்று ஆர்வமாய் கேட்ட பெண்ணிடம் அக்கறை கடந்து இருக்கையும் இடமும் சவுகர்யமாய் இனி அமைந்து விட்ட நிறைவு வார்த்தையிலும் கண்ணிலும் தென்பட சன்னமாய் சிரித்தேன். இல்லை அடுத்த நிறுத்தத்தில் இறங்கி கொள்கிறேன். நீங்க நல்லா உட்காருங்க என்று இருக்கையை விட்டு இறங்க வேண்டிய தூரம் வரை நின்று கொண்டு பயணம் செய்ய தொடங்கினேன்.
அவசர அவசரமாய் ஜன்னலோரத்திற்கு நகர்ந்த என் பக்கத்து பெண்மணி சட்டென்று தன்னை வேடிக்கை உலகத்துக்கு ஒப்புக்கொடுத்தாள். இடத்துக்கு முட்டிக்கொண்டவள் நிறைவற்றவளாய் ஜன்னலோரம் வேடிக்கை பார்க்க தொடங்கினாள்.இல்லாத வரை ஏக்கமும் கிடைத்ததும் பேராசையும் வாழ்வின் எதார்த்தம் என்பது புரிந்தவளாய் அவர்களை பார்பதை தவிர்த்தேன்.

கருத்துகள்
கருத்துரையிடுக