வேலை கிடைக்காம இருந்தப்பவும் சரி, வேலை கிடைச்சு சென்னையிலேயே செட்டிலான பிறகும் சரி... ஒவ்வொரு தடவை சொந்த ஊருக்குப் போகும்போதும், நமக்குனே காத்துட்டிருக்கிற டிக்கெட்டுகளை சமாளிக்கணும்னா, கொஞ்சம் கஷ்டம்தான். இவங்களுக்கெல்லாம் 'நாம என்ன வேலை பார்க்கிறோம்’னு விளக்குறதுக்குள்ளேயே, நொந்துடுவோம். அதுவும் இந்த ரிப்போர்ட்டர் வேலையை விளக்குறது இருக்கே...
ஊர்ல இறங்கி, பேக்கோட நடந்துபோனாலே, நாலு திசையில இருந்தும் நோக்கு வர்மம் மாதிரி நோக்குவாங்க. ''எங்கே இருக்கீங்க தம்பி?, ஆளையே பார்க்க முடியலை''னு ஆரம்பிப்பாங்க. 'இதென்னடா கொடுமையா இருக்கு? ஊர்ல உள்ளவங்க அப்படித்தானே கேட்பாங்க?’னு யோசிக்கிறீங்க. எக்ஸ்கியூஸ் மீ.... அந்தாளு இந்தக் கேள்வியை என்கிட்ட கேட்கிறது எட்டாவது முறை.
'எங்கே இருக்கீக தம்பி?’னு ஆரம்பிக்கிற ஆம்பளைங்களை விட, 'என்ன வேலை பார்க்கிற?’னு ஆரம்பிக்கிற பெண்கள் கொஞ்சம் டேஞ்சர். 'ரிப்போட்டர்னா? இந்தக் கணக்கு எடுக்கிற வேலையா?’ 'அது இல்லடி, ஊரு ஃபுல்லா சுத்துவாங்கள்ல அது...’ 'இல்லை.. டி.வி-யில மைக்கைப் பிடிச்சுக்கிட்டு நிப்பாங்கல்ல... அந்த வேலை’னு ஆளாளுக்குப் பந்து வீசுவாங்க. எல்லாத்துக்கும் திக்கித் திணறிப் பதில் சொன்னாலும், 'அப்போ, ரிப்போர்ட்டர்னா ரிப்பேர் பார்க்கிறது கிடையாதா?’னு ஒரு பொம்பளை போடுற வொய்டு பாலை எப்படி அடிக்கிறதுனு நீங்களே சொல்லுங்க பாஸ்.

இப்படி டேஞ்சராப் போனாலும், டேமேஜ் ஆகாமப் போய்க்கிட்டு இருக்கிற சமயத்துல, கையில காபியை ஆத்திக்கிட்டே வர்ற அம்மா 'அதெல்லாம் இல்லைடி... இந்த நடிகர் நடிகைகளையெல்லாம் பார்த்து, பேசிட்டு வருவாங்கள்ல... அந்த வேலை’னு ஸ்பீடா ஆத்துவாங்க. அப்புறமென்ன? இந்த சீரியல் நடிகை, அந்த சீரியல் நடிகை, அடுத்த வாரம் வர்ற சீரியல் உனக்கெல்லாம் முன்னாடியே தெரிஞ்சுடுமேனு அவங்கெல்லாம் ஆரம்பிக்க... அன்னைக்கே அடுத்த டிரெயின்ல சென்னைக்கே போயிடலாமோனு தோணும்.
முதன் முதலா ரிப்போர்ட்டரா சேர்ந்தப்போ, ஊர்ல இருக்கிற அத்தை பொண்ணு, மாமன் பொண்ணுங்ககிட்டயெல்லாம், 'நடிகைகளெல்லாம் என்கிட்ட எப்பிடிப் பேசுவாங்க தெரியுமா?’னு ஓவராவே சீனைப் போட்டுட்டேன். அதோட விளைவு, ஒவ்வொரு தடவை ஊருக்குப் போகும்போதும் எனக்கு மட்டும் கொஞ்சம் ஸ்பெஷல் கவனிப்பு. 'லெட்சுமி மேனன் பத்தாப்பு படிக்குதானு கன்ஃபார்ம் பண்றேன்னு என் ஃபிரெண்ட்கிட்ட பெட் கட்டிட்டேன்... அவ போன் நம்பர் குடுடா?’னு டார்ச்சர் பண்ணும்போதுதான் தெரியுது, அப்போதைய கவனிப்பின் அர்த்தம். இதே மாதிரிதான் பசங்ககிட்டேயும், 'நைட்டு நடக்கிற தீர்த்தவாரித் திருவிழாவில நம்மளை காமெடி பீஸ் ஆக்கிடுவாங்க. இதுக்குத்தான் ஒவ்வொரு தடவை பேட்டி எடுக்கும்போதும் சம்மந்தப்பட்டவங்களோட ஒட்டிக்கிட்டு எடுத்துடுறது ஒரு போட்டோ. ஆனா, 'அம்மா கொடுத்த லேப்டாப்பை வெச்சே இந்த மாதிரி ஆல்ட்ரேஷன் பண்ணிடலாமே?’னு சயின்டிஃபிக்கா கேள்வி கேட்டு மடக்குவாய்ங்க.
நண்பர்கள்தான் இப்படினா, அவங்க அப்பாக்கள் ஒரு ஸ்டெப் மேல... 'பி.ஜே.பி. தலைவரைப் பேட்டி எடுத்திருக்கேன், வாங்கிப் படிச்சுப் பாருங்க’னு சொன்னா, 'சரிடா... நம்ம ஏழாவது வார்டு கவுன்சிலர் இருக்கார்ல, அவரை ஒரு பேட்டி எடுத்துப் போடுறா... பெரிய மனுஷன்ல’னு மொட்டைக் கத்தியால் குத்துவார்கள். இன்னொருத்தரோ, 'தம்பி கைத்தறி சங்கம் நாகராஜ் இருக்கானே... சங்கத்துக் காசை ரொம்பப் பிடுங்கித் திங்கிறான்பா, அதை உங்க பத்திரிக்கையில போடேன்’னு போடுவார் ஒரு போடு... திட்டு வாங்கினாலும் பரவாயில்லைனு, பல பேரு ஊர்லேயே சுத்துறதுக்கான காரணம் எனக்கு அப்போதான் புரிஞ்சது.
இப்படி இவங்க பண்ற அதிரடி அட்ராசிட்டிகளுக்குப் பயந்துதான் இப்பெல்லாம் 'எந்த ட்ரெயின் அர்த்த ராத்திரியில ஊர்ல இறக்கிவிடுது?’னு தேடிப்பிடிச்சு ஏறிப்போறேன். ஆனா, அந்த அர்த்தராத்திரியிலேயும் தூக்கம் தொலைச்ச எவனாவது 'தம்பி... ஆளையே பார்க்க முடியலை?’னு ஆரம்பிச்சுடுவானோனுதான் திகிலா இருக்கு!
கருத்துகள்
கருத்துரையிடுக