பெரும்பாலானோருக்கு என்னவென்று புரிந்திருக்கும். புரியாதோருக்கு, சுன்னத் கல்யாணம் இஸ் நத்திங்பட் சர்கம்சிஷன் AKA கு** கல்யாணம்.
இதற்கு ஏன் கல்யாணம் என்று பெயர் வந்தது எனப்புரியவில்லை. இப்போதெல்லாம் சு.க பெரும்பாலும்ஆஸ்பத்திரியிலேயே முடிந்துவிடுகிறது. 90கள் வரை கிராமங்களிலும் டவுன்களிலும் அது ஒரு விழா போலநடக்கும். இப்போது 89% குழந்தைகளுக்கு பிறந்த சில நாட்களிலேயே நடத்தி விடுகின்றனர். முன்பு பெரியவன் ஆன பின்னும் சிலருக்கு நடப்பதுண்டு. எனக்கு மிகத்தெரிந்த ஒரு பையனுக்கு அஞ்சாப்புஆனுவல் லீவ்ல நடந்துச்சு (யார்னு கேக்கப்படாது).
<<<<<<கொசுவத்தி ஸ்டார்ட்ஸ்>>>>>>
அது ஒரு இனிய ஞாயிறு. நாங்கள் இருந்தது ஊத்துக்கோட்டை என்னும் சிற்றூரில். வீட்டின் மாடியில்ஷாமியானா போடப்பட்டு, அக்கம்பக்கத்தினர், உறவினர், சுற்றம் சூழ வந்து வீடே கலகலவென்றிருந்தது.ஒரு பக்கம் “தம்” பிரியாணி தயாராகிக்கொண்டிருந்தது. திடீரென்று கிடைத்த லைம்லைட்டில் தலைகால் புரியாது இரு இளந்தளிர்கள் சுத்தி சுத்தி வந்தன. ஒன்று நான். மற்றொன்று என் அண்ணன் (பெரியப்பாமகன்).
மதிய விருந்து தடபுடலாக நடக்க, எங்களுக்கு ஆட்டுக்கால் உறிஞ்சி & எக்ஸ்ட்ரா சிக்கன் 65 தரப்பட்டது.அடுத்த ஆடு நாம் தான் என அறியாத அவ்விரு ஆடுகளும் இலையில் வைக்கப்பட்ட ஆட்டை, அள்ளிஅள்ளிப்பருகவேண்டிய அமிர்தமடா இதுவென உண்டன.
பின் , போட்டோகிராபரொருவர் வீட்டுக்கு வந்தார். 90களின் Kidஸல்லவா, போட்டோகிராபரைப்பார்த்ததும்இன்னோவாவை கண்ட நாஞ்சிலாராய் உள்ளம் பூரித்து, எங்களுக்கு செய்யப்பட்ட அலங்காரம் (புது பேண்ட்,சொக்காய், தொப்பி, மூஞ்சி முழுக்க பான்ஸ் பவுடர்) கண்டு கண்கள் பனித்து, இதயம் இனித்து,முத்தாய்ப்பாய் அவர்கள் சூட்டிய ரோஜா மாலையை அணிந்ததும் ஆனந்தத்துக்கம் தொண்டையைஅடைத்தது.
“ச்சளக்...கிஷ்க்யூவ்ன்...ச்சளக்...கிஷ்க்யூவ்ன்... ” - அணி அணியாய் எங்களோடு சேர்ந்து எல்லாரும்போட்டோ எடுத்துக்கொண்டாயிற்று.
மாலை சுமார் 6 இருக்கும். எங்களுடையது இரு வீடுகள் அருகருகே சேர்ந்த ஒற்றை வீடு. வீடு #1ல் இருஆடுகள் & ஃபுல் தாய்மார்கள். வீடு #2ல் வெள்ளைத்தொப்பி போட்ட வித வித பாய்மார்கள். அனைவரும் யாரையோ எதிர்பார்த்துக்காத்திருந்தனர்.
சிறிது நேரத்தில் தட் டுத்தடுமாறி ஒரு வயதான (அழுக்கேறிப்போய் ப்ரவுனாக மாறிய வெள்ளைதொப்பியும்ரீகல் சொட்டு நீலத்தால் வெளுக்கப்பட்ட சட்டை கைலியும் உடுத்தியிருந்த) தாத்தா வந்தார். பரஸ்பரம்அஸ்ஸலாமு அலைக்குமும் அலைக்கும் சலாமும் பகிர்ந்த பின்னர் ஊதுபத்திகள் மணம் பரப்ப, அரபியில்துஆ (ப்ரார்த்தனை) நடைபெற்றது. முடிந்ததும் கற்கண்டு, பேரீச்சை & ஆசை சாக்லேட் அன்போடுபகிரப்பட்டது. இதுவரை சிறப்பாக போய்க்கொண்டிருந்த “அப்துல் இன் ஒண்டர்லான்ட்” தினத்தில் கேவிஆனந்த் பட டுஸ்ட்டாக ‘அது’ நடந்தது.
வயதில் மூத்தவர் என்ற திருக்காரணத்தினால் என் அண்ணனும், பாச்சா என எல்லோராலும் அன்போடுஅழைக்கப்படும் முதல் ஆட்டை வீடு நம்பர் 1ல் இருந்து வீ.ந 2க்கு அழைத்துச்சென்றனர். சுமார் 3 நிமிடம் 60நொடிக்கு மயான அமைதி.
"ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஅல்லாஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ"
கேட்டுச்சே ஒரு சத்தம், எங்கண்ணன்கிட்டருந்து அந்த வீட்டில்.
சடாரென்று எல்லாம் விளங்கியது. எங்களை இதுவரை போஷித்து, பரிபாலித்து போற்றி வளர்த்தது பலிகொடுக்கத்தான். கழுத்தில் கத்தி வைத்து கரகரகர... நாம அம்பேல்... நாம மவுத்தாகப்போறோம். நம்மலகுர்பானி குடுக்கப்போறாங்க.. சூரியனில்லாததால் இருட்டிவிட்டது என்பதையும் தாண்டி எனக்கு மட்டும்ப்ரத்யேகமாக உலகம் இருண்டது.
10 நிமிடம் இருக்கும். சிவப்புத்துணி போர்த்தப்பட்டு (என்னது எங்கேயா? ‘அங்க’தான்...) கண்ணீர் பீய்ச்சியபடிகிடந்த எங்கண்ணனைக் கையில் ஏந்தி வந்தார்கள்.
கொலை செய்யப்படுவதை விட கொலை செய்யப்படுவதைக்காண்பதும், அடுத்து தானும்அதுபோலக்கொல்லப்படப்போகிறோம் என அறிவதும் மிகப்பெரும் சித்ரவதை. அது எனக்கு நேர்ந்தது.அடுத்த வீட்டில் என்ன நடக்கிறது என்று தெரியவில்லை. ஆனால் நிச்சயம் ஆபத்து உண்டென்றுஉள்ளங்கை ஸ்மார்ட் போன் போல தெரிந்தது.
அண்ணனை பாயில் கிடத்தி, அடுத்து என்னை அழைத்தனர். நானாவது போறதாவது, “என்ன உட்டுடுங்கடாடாய்” என எங்கப்பாரைப்பார்த்து கத்தவும், என்ன பாய் பேசிட்டு இருக்கீங்க என ஒரு தடி தாடி பாய்என்னைஅலேக்காக தூக்கிச்செல்லவும் சரியாய் இருந்தது.
அந்த அறை.
முதலில் மல்லாக்க படுக்கப்போட்டு சட்டையையும், பேண்ட்டையும் கழட்டினர். பின் "சக்கரையில்” ஒருதிரவத்தை ஊற்றி உள்ளே ஊசிபோட்டனர். அப்போதே ஆரம்பித்துவிட்டேன் என் ஆலாபனையை. கைகாலை உதற முடியாமல் பல பாய்மார்கள் அழுத்திக்கொண்டனர் (மத்தியானம் சாப்ட்ட ஓசி பிரியாணிக்குவிசுவாசமாம்... தக்காளி).
ஊதுபத்தி வாசம், இனிப்பு வகைகள், ரோஜா மாலைகள் சூழ்ந்திருக்க, நடுவே ட்ரெஸ் இல்லாமல்அம்மன்குண்ஸாக நான், சுத்திலும் தாடிவாலாஸ். இதை விட ரொமாண்டிக்காக எதும் இருக்க முடியுமா? ஹூம்ம்ம்...
ஒரு கிழவனார் "தீன் தீன் மொஹ்மாத்...தீன் தீன் மொஹ்மாத் சொல்லு" என்றார். எனக்கு பகலிலேயேபாத்திமா கேக்காது. ராத்திரியில் ராக்கம்மாவா கேட்கும்? சரியாய் புரியாமல் "தீன் தீன் மாமா"எனக்கதறினேன். “அரே... மாமா இல்ல... மொஹமத்” என்றார். வந்த கடுப்பில் "ப்போடா" என நான்எதிர்வினையாற்ற, எமோஷனை வெளிக்காட்டாது, ஆத்திரத்தில் அந்தக்கிழவர் காலை இன்னும் இறுக்க,ஒரு சைனா கத்தரியால் (அல்லது சேவிங் கத்தி), பிறந்ததிலிருந்து என்னுடன் வாழ்ந்த ‘அது’, பிப்ரவரி14க்கு ரோஜா மொட்டு செடியிலிருந்து களையப்படுவதுபோல் கத்தரிக்கப்பட்டது.
அந்த வலியை சொன்னால் புரியாது.
பிறகு இன்னும் சில பல அடித்தல் திருத்தல்கள், லத்தி சார்ஜ், துப்பாக்கி சூடுகள் என "சம்பவ" இடத்தைஅடித்து நொறுக்கிய பின், இடுப்பில் சிவப்பு துணி (யெஸ்.. ஸேம் ப்லட்... ஸேம் செஹப்புத்துணி… பாரபட்சம்பாக்காம அடிச்சுப்புட்டானுவ) போர்த்தப்பட்டு அரை மயக்க நிலையில் மைனர் operated குஞ்சு கிடத்தப்பட்டார்.
சிறிது நேரத்திற்குப்பின் கண்விழிக்கையில் எங்களைச் சுற்றி அக்கம்பக்கத்திலுள்ள அத்தனை பெண்களும்(ஹிந்து & கிர்ஸ்டின்ஸ்) கூடி விட்டனர். அவர்கள் இது போன்ற சம்பவத்தை செவி வழிச்செய்தியாகமட்டுமே அறிந்துள்ள படியால் நேரலைக்காட்சிக்காக கூடினர் (6லிருந்து 60 வரை). வரும்ஒவ்வொருவருக்கும் முதலில் "சப்ஜெக்ட்" குறித்து 5 நிமிடம் தியரி வகுப்பு நடைபெறும். பின் “நாடகமேடையின்” சிவப்புத்திரை விலக்கப்பட்டு நான் & என் அண்ணன் பங்கேற்கும் "இரு கோடுகள்" எனும்பிரசித்தி பெற்ற நாடகம் காட்டப்படும்.
"ஸ்ஸ்ஸ்....ஷ்ஹ்ஷ்ஹ்ஸ்ஷ்....அய்யூஊஊ... உஹ்ப்ஹ்ப்ஃப்ஃப்…" என ஒவ்வொரு பொண்ணும் ஒவ்வொருஃபீலிங்ஸைக்கொட்ட, சிவப்புத்திரை மூடப்பட்டு, வரிசையில் அடுத்து வருபவருக்கு ஷோ ஆரம்பிக்கும்.
லேடீஸ் பாத்தாங்களே, கூச்சமா இல்லையா என ஆங்காங்கே சிலர் நினைப்பது கேட்கிறது. நானெல்லாம்கவரி மான் பரம்பரை. வந்த ஆத்திரத்துக்கு சிக்கென கண்ணை இறுக மூடிக்கொண்டேன் (வேறு வழி?)
எங்கண்ணன் கொஞ்சம் ரொம்பவே வெள்ளை. நான் லைட்டா காக்காவுக்கு காம்படிசன். சில கிழடுகள்எங்கண்ணனுடையதை சாதாரணமாகவும், என்னுடையதை கண்கள் சுறுக்கி, வெயில் நேரத்தில் நெற்றியில்கையை வைத்துப்பார்ப்பதுபோல் பார்த்து உண்மையிலேயே வெந்த புண்ணில் விழி பாய்ச்சிச் சென்றதுகள்.
எல்லோரும் வந்து பார்த்தும் அத்தை மகள்களை மட்டும் காணவேயில்லை. அவர்களைப்பார்த்தால் காயம் சீக்கிரம் ஆறாதாம். பாட்டி சொன்னார். “ஏன்? அவங்களப்பாத்தா தையல் பிரிஞ்சுடுமா” எனக்கேட்கும் பகுத்தறிவு அப்போது இல்லாததால் அப்பாவி கோயிஞ்சாமியாக நம்பினோம்.
எங்களுக்கும் எங்கள் அம்மாக்களுக்கும் அன்றிரவு தூக்கமில்லை. நாங்கள் புரண்டு படுத்து விடாமலும்,கொசு, பூச்சி கடித்துவிடாமலும் இருக்க அருகிலேயே இருந்து விசிறிக்கொண்டிருந்தனர்.
அடுத்த நாள், இடைத்தேர்தல் தொகுதி மக்களுக்கு கிடைப்பதுபோல பலமான மரியாதை ரிட்டன்ஸ். என்ன வேணும் என அப்பா (நேற்று “என்ன உட்டுடுங்கடா டாய்”னு திட்டினேனே, தட் சேம் தகப்பன்சாமி)கேட்க, டெக்கு வேணும் என கோரஸ் பாடினோம். அடுத்த ஒரு மணி நேரத்தில் டெக்கு (வீடியோ ) வந்தது.வீட்ல விசேஷங்க, சத்யம் சிவம் சுந்தரம், துர்கா போன்ற காவியங்களைப்பார்த்ததாய் நியாபகம். மூன்றுவேளையும் கோழிக்கறி, பச்சை முட்டை, பால், மேரி பிஸ்கட், பழம் என தடபுடல் கவனிப்புகள்.அவ்வப்போது சிவப்புத்துணி லுல்லாவில் ரத்தத்தோடு ஒட்டிக்கொண்டு பிரிக்க முடியாது லந்து பண்ணும். And ச்சுச்சா & கக்கா போகும்போது தவிர பிரச்சினை ஏதுமில்லை.
இப்போது விருந்தினர் விசிட்டுகள் சகஜமாக, எல்லாம் இயல்பு நிலைக்குத்திரும்பியது.
ஒரு வாரத்தில் அடுத்த டுஸ்ட்டாக, ஒரு டாக்டர் வந்து சுடுநீர் எனப்பொய்சொல்லப்பட்ட கொதிநீரை“ஜிம்பலக்கடி பம்பா”வில் ஊற்றி, டெட்டால் போட்டு துவைத்து, வீடு முழுகி, கோலம் போட்டு புள்ளி வைத்துஅவர் பங்குக்கு சம்பவம் நடத்திவிட்டுச்சென்றார். பட்ட (கா*)லிலே படும் என்பது இதுதானோ எனநொந்துகொண்டே மேலும் ஒரு வாரம் ஒடியது.
மீண்டும் டாக்டர் வந்து பார்த்து சரியாகிடுச்சு என்றார். அவர் சர்ட்டிபிகேட் கொடுத்துச்சென்ற அரை மணிநேரத்தில் டெக்கு திருப்பி அனுப்பப்பட்டது.
சாப்பாடு கவனிப்பு மட்டும் தொடர்ந்தது. மெல்ல மெல்ல மற்ற உடைகள் உடுத்தத்துவங்கி, பின்னொருகாலத்தில் நண்பர்களால் முக்காலா முக்காபுலா பாட்டுப்பாடி கலாய்க்கப்பட்டு, பாய்வீட்டுப்பெண்ணைக்காதலித்த நண்பனை “கல்யாணம்லாம் ப்ரச்சனயில்ல மச்சி, ஆனா மொதல்லஒன்னோட ஜிங்குனமணில “மணிய” கட் பண்ணிடுவாங்க, ஓகேவா” என சிரித்துப்பேச வைத்து, இன்னும் பலவெளிச்சொல்ல முடியாத “றோபல்” அனுபவங்கள் தந்து, இதோ, இந்தப்பதிவு வரை கொண்டுநிறுத்தியிருக்கிறது, எங்கள் சுன்னத் கல்யாணம்
.
நன்றி முத்தலிப் பாய் அண்ணண்
கருத்துகள்
கருத்துரையிடுக