“தங்களுடைய விலைப்புள்ளிதான் குறைவானது என்று சீன நிறுவனம் எடுத்து வைக்கும் வாதத்தை, நிதித்துறை நிபுணர்கள் ஒப்புக் கொள்ளக்கூடும். ஆனால் அவ்வாறு நிபுணர்கள் செய்யும் ஆய்வை நீதிமன்றம் செய்ய இயலாது. இது போன்ற விவகாரங்களில் நீதிமன்றங்கள் சட்டரீதியான விவகாரங்கள் குறித்து ஆராய வேண்டுமே ஒழிய, நிதி தொடர்பான விவகாரங்களில் நுழையக்கூடாது. மின் வாரியம் கூறியபடி பார்த்தால், இந்த விவகாரத்தில் மறைமுக கட்டணம் இருக்கும் என்று தெரிகிறது. ஆக மின் வாரியம், இந்த விவகாரத்தில் ஒரு கணக்கு போட்டு ஒரு முடிவுக்கு வந்த பிறகு, நீதிமன்றம் ஒரு நிபுணரின் பணியை எடுத்து, எது குறைந்த விலைப்புள்ளி என்று கணக்கிட இயலாது. ஆகையால் இந்த வாதத்தையும் நிராகரிக்கிறேன்.
சீன நிறுவனம், மற்றும் பெல் நிறுவனம் இரண்டையும் ஒப்பிடுவதற்கான பொதுவான அளவுகோல்கள் இல்லை. சீன நிறுவனம் பழமையான நிறுவனம் என்றால், பெல் நிறுவனம் அனுபவம் வாய்ந்த நிறுவனம். இந்தியாவிலும், வெளிநாட்டிலும் பல்வேறு திட்டங்களை கையாண்ட அனுபவம் மிக்க பெல் நிறுவனம் ஒரு பெரும் நிறுவனமாகவும், சீன நிறுவனம், ஒரு சாதாரண பொடியனாகவும் தமிழக மின் வாரியத்துக்கு தோன்றியிருக்கக் கூடும். ஒரு பொதுத்துறை நிறுவனம் என்ற வகையில், டேவிட்டுக்கும் கோலியாத்துக்கும் இடையே நடக்கும் போட்டியில் டேவிட்டை விட கோலியாத்தை தேர்ந்தெடுப்பதே சிறந்தது என்று மின் வாரியம் கருதுமேயானால் அதை குறை சொல்ல முடியாது. அடுத்ததாக, தெரியாத தேவதையை விட, தெரிந்த சாத்தானே மேல் என்று மின் வாரியம் பெல் நிறுவனத்தை தேர்ந்தெடுத்துள்ளது”
எண்ணூர் அனல் மின் நிலைய திட்டத்தில், சீன நிறுவனத்தின் டெண்டரை நிராகரித்து, பெல் நிறுவனத்துக்கு தமிழக மின் வாரியம் அடாவடியாக டெண்டர் வழங்கியது குறித்து நடத்தப்பட்ட வழக்கில் நீதிபதி ராமசுப்ரமணியம் வழங்கிய தீர்ப்புதான் நீங்கள் மேலே படித்தது. இந்தத் தீர்ப்பு எப்படி பிழையான ஒரு தீர்ப்பு என்பதை ஒரு விரிவான கட்டுரை மூலம் விளக்கப் பட்டிருந்தது. இணைப்பு இந்தத் தீர்ப்பை ரத்து செய்து, கடந்த வாரம், நீதிபதி சுதாகர் மற்றும் நீதிபதி வாசுகி அடங்கிய அமர்வு, ஒரு அற்புதமான தீர்ப்பை வழங்கியுள்ளது. இத்தீர்ப்பின் விபரங்கள் குறித்து இப்போது பார்ப்போம்.
பெல் நிறுவனம் ஒரு பொதுத்துறை நிறுவனம். சீன நிறுவனம், சீன அரசின் பொதுத்துறை நிறுவனம். அந்நிறுவனம், இந்தியாவைச் சேர்ந்த சிலரோடு கூட்டு ஒப்பந்தம் போட்டு, அதன் மூலம் இந்த டெண்டரில் பங்கெடுத்தது. பெல் நிறுவனம் பொதுத்துறை நிறுவனம்தானே …. அந்நிறுவனத்தால் எப்படி லஞ்சத் தொகை கொடுக்க முடியும் என்ற கேள்வி எழும். பெல் நிறுவனத்துக்கு வழங்கப்படும் அத்தனை டெண்டர்களையும், பெல் நிறுவனமே செய்து முடிப்பதில்லை. மாறாக, தனியார் நிறுவனங்களுக்கு சப் காண்ட்ராக்ட் விடுவது காலங்காலமாக இருக்கும் வழக்கம். இது போன்றதொரு சப் காண்ட்ராக்ட் நிறுவனத்திடம் பெரிய தொகையை வாங்கிய காரணமாகவே,
நீதிபதி ராமசுப்ரணியத்தின் முன்பு விசாரணைக்கு வந்த வழக்கை தொடுத்தது சீன நிறுவனம். அந்நிறுவனம், தங்கள் மனுவில், பெல் நிறுவனத்துக்கு எண்ணூர் டெண்டரை வழங்கியது எவ்வளவு பிழையானது என்பதை விரிவாக எடுத்துரைத்திருந்தது. ஆனால், தீர்ப்பளித்த ராமசுப்ரமணியமோ, பெல் நிறுவனம் இந்திய நிறுவனம் என்ற ஒரே காரணத்தின் காரணமாக அந்நிறுவனம் தவறிழைத்தால் கூட பரவாயில்லை என்று தீர்ப்பளித்திருந்தார் நீதிபதி ராமசுப்ரமணியம். ஆனால் அவர் கூறிய ஒரு காரணத்தைக் கூட சுதாகர் அமர்வு ஏற்கவில்லை. அந்த தீர்ப்பின் சாரம் உங்களுக்காக.
பெல் நிறுவனத்துக்கு ஆதரவாக தீர்ப்பளிக்க வேண்டும் என்ற அவரது விருப்பத்தின் காரணமாக, நீதிமன்றத்தில் யாருமே சமரப்பிக்காத ஒரு ஆய்வறிக்கையை கோடிட்டுக் காட்டி, பெல் நிறுவனத்துக்கு ஆதரவாக தீர்ப்பளித்தார்.
நீதிமன்றத்தில் இது தொடர்பான வழக்கு நடந்து கொண்டிருக்கையிலேயே பெல் நிறுவனத்தோடு மின் வாரியம் டெண்டர் தொடர்பாக பேச்சு வார்த்தை நடத்திக் கொண்டிருந்தது என்பதை குறிப்பிடும் நீதிபதி சுதாகர், இந்த ஒரே காரணத்துக்காகவே நீதிமன்றம் இந்த டெண்டரில் தலையிட முடியும் என்று கூறுகிறார். மேலும் இந்த டெண்டரில் சட்டவிரோதமாகவும் பாரபட்சமாகவும் பல விவகாரங்கள் நடந்திருப்பதாகவும் குறிப்பிடுகிறார் நீதிபதி. டெண்டர் தொடர்பான மதிப்பீடுகள் ஜுலை மற்றும் ஆகஸ்ட் 2014 வரை நடைபெறவில்லை என்பது, இந்த வழக்கு விசாரணையில் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் தற்போது இவ்வழக்கில் வாதிடும் அரசு தலைமை வழக்கறிஞரோ, 2 ஜுன் 2014 அன்றே, பெல் நிறுவனத்துக்கு டெண்டர் வழங்குவது என்ற முடிவெடுத்துள்ளார். இதில் ஏதாவது ஒன்று மட்டுமே உண்மையாக இருக்க முடியும்.
அரசு வழக்கறிஞர் பெல் நிறுவனத்துக்கு ஆதரவாக 2 ஜுன் 2014 முடிவெடுக்கப்பட்டது என்று கூறுகிறார். ஆனால் தனி நீதிபதியோ (ராமசுப்ரமணியம்) ஆலோசனை நிறுவனம் அறிக்கை அளித்த 30 மே 2014 அன்று முடிவெடுக்கப்பட்டதாக கூறுகிறார். ஒரு நீதிமன்றத்துக்கு கடிகாரத்தை பின்னோக்கித் திருப்பி வைக்க எப்படி முடிந்தது என்பது புரியவில்லை.
தனி நீதிபதி 19 ஆகஸ்ட் 2014 அன்று தீர்ப்பு வழங்கும் வரை, டெண்டர் முடிவு செய்யப்பட்டதா இல்லையா என்ற தெளிவான முடிவுக்கு மின் வாரியம் வரவில்லை. அப்படி முடிவு செய்யாமல், நடக்கும் சம்பவங்களுக்கு ஏற்ப, தேதிகளை முடிவு செய்து கொள்ளலாம் என்ற எண்ணத்திலேயே மின் வாரியம் இருந்ததாக தெரிகிறது. இது பாரபட்சமான முடிவு இல்லையென்றால் வேறு எது பாரபட்சமான முடிவு என்று எங்களுக்குத் தெரியவில்லை. 26 செப்டம்பர் 2014 அன்று நடைபெற்ற மின் வாரியத்தின் 55வது கூட்டத்தில் டெண்டரை பெல் நிறுவனத்துக்கு வழங்குவது என்று முடிவெடுக்கப்பட்டது என்று கூறப்படுகிறது.
பெல் நிறுவனத்துக்கு டெண்டர் வழங்குவது என்ற முடிவு எடுக்கப்பட்டதே ஆலோசனை நிறுவனத்தின் பரிந்துரையின்படி என்று நீதிபதி ராமசுப்ரமணியம் கூறுகிறார். ஆனால் ஆவணங்களை பரிசீலித்துப் பார்த்ததில் 26 செப்டம்பர் அன்று நடந்த மின் வாரிய கூட்டத்தில்தான், பெல் நிறுவனத்துக்கு டெண்டர் வழங்குவது என்று முடிவெடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. ஒரு டெண்டரை, ஒன்று மின்வாரிய குழு முடிவு செய்ய வேண்டும். அல்லது, ஆலோசனை நிறுவனத்தின் பரிந்துரையின் படி முடிவு செய்ய வேண்டும். ஒரே டெண்டரை, ஆலோசனை நிறுவனமும், மின் வாரியமும், தனித்தனியாக ஆராய்ந்து பரிசீலனை செய்தது என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. இது வெளிப்படையான டெண்டர்கள் சட்டத்துக்கு எதிரானது. வெளிப்படையான டெண்டர்கள் சட்டத்தில், டெண்டரை பரிசீலித்து முடிவெடுப்பது, மின் வாரியத்தின் பொறுப்பு, ஆலோசனை நிறுவனத்தைக் காரணம் காட்டி, மின் வாரியம் தப்பிக்க முடியாது என்பது தெளிவாக உள்ளது. ஆலோசனை நிறுவனத்தின் பரிந்துரையை மின் வாரியம் பெரிதும் சார்ந்திருப்பது, பொறுப்பை தட்டிக் கழிப்பதேயன்றி வேறில்லை. சீன நிறுவனத்துக்கு டெண்டர் ஏன் வழங்கப்படவில்லை என்ற காரணத்தை தெரிவிக்க வேண்டியதில்லை என்று மின் வாரியம் கூறுகிறது. ஆனால் இது பல உச்சநீதிமன்ற தீர்ப்புகளுக்கு எதிரானதாகும்.
இந்த டெண்டர் தொடர்பாக நடந்த ஆலோசனைக் கூட்டங்கள் அனைத்திலும், பெல் நிறுவனமும், சீன நிறுவனமும் பங்கேற்றுள்ளன. ஆலோசனை நிறுவனமும் பங்கேற்றுள்ளது. இக்காரணத்தால், டெண்டர் தொடர்பாக என்ன நடக்கிறது என்பது அனைத்தும் சீன நிறுவனத்துக்கு தெரிந்தே உள்ளது. ஆகையால், ரகசியமாக மின் வாரியத்திலிருந்து தகவல்களை சீன நிறுவனம் பெற்றது என்ற கருத்தை ஏற்றுக் கொள்ள முடியாது. 7.2 சதவிகிதத்திலிருந்து 6.2 சதவிகிதமாக வட்டியை சீன நிறுவனம் குறைத்துள்ளது. இதன் மூலமாக மின் வாரியத்துக்கு சேமிப்பு மட்டும் 1300 கோடி. இப்படிப்பட்ட ஒரு அற்புதமான வாய்ப்பை மின் வாரியம் ஏன் நிராகரித்தது என்பது புரியாத புதிராக உள்ளது. 27 ஜுன் 2014 அன்று நடந்த மின் வாரியம் மற்றும் சீன நிறுவனம் மற்றும் பெல் நிறுவனத்தோடு ஆலோசனைக் கூட்டத்தில் வட்டி விகிதங்கள் முறையே 7.2லிருந்து 6.2 மற்றும் 12.25லிருந்து 12.15 சதவிகிதமாகவும் குறைக்கப்பட்டது. ஆனால், இந்த வட்டி விகிதக் குறைப்பை கணக்கில் எடுத்துக் கொள்ளக் கூடாது என்ற காரணத்துக்காகவே, 2.6.2014 அன்று பெல் நிறுவனம் தேர்ந்தெடுக்கப்பட்டதாக மின் வாரியமும், 30.05.2014 அன்று பெல் நிறுவனம் தேர்ந்தெடுக்கப்பட்டதாக, நீதிபதி ராமசுப்ரமணியமும் ஒரு நிலைபாடு எடுத்துள்ளனர். இது எந்த அடிப்படையில் என்பது புரியவில்லை.
1300 கோடி என்பது சிறிய தொகை அல்ல. இந்தத் தொகையை தமிழக அரசு பல்வேறு நலத்திட்டங்களுக்கு பயன்படுத்தியிருக்க முடியும். ஆனால், இவ்வளவு பெரிய தொகையை சேமிக்க வாய்ப்பு இருந்தும் தமிழக அரசு ஏன் அதை புறந்தள்ளியது என்பது புரியவில்லை. இந்த வட்டி குறைப்பு ஏற்றுக் கொள்ளப்பட்டிருந்தால், மின்சாரம் தயாரிக்கும் செலவு குறைந்து, இதனால் ஏராளமான பொதுமக்கள் பயனடைந்திருப்பர்.
பெல் நிறுவனம் தேசியமயமாக்கப்பட்ட நிறுவனம் என்பதால், பெல் நிறுவனத்தின் செயல்பாடுகளை சந்தேகப்பட அவசியம் இல்லை என்றும், தனியார் நிறுவனங்களின் செயல்பாடுகளை சந்தேகத்தோடுதான் அணுக வேண்டும் என்ற நீதிபதி ராமசுப்ரமணியத்தின் கருத்து, தேவையற்றது. இது ஒரு சர்வதேச டெண்டர். இதில் பங்குகொள்ளும் நிறுவனங்கள் அனைத்தும், ஒரே அளவீட்டில்தான் அணுகப்பட வேண்டும்.
ஆலோசனை நிறுவனத்தின் அறிக்கைப்படி, பெல் நிறுவனம், சீன நிறுவனம் ஆகிய இரண்டுமே தொழில்நுட்ப வகையில் சிறந்தவை. இத்திட்டத்தை செயல்படுத்தும் திறன் கொண்டவை. ஆனால், கடந்த காலத்தில் இந்நிறுவனங்கள் எப்படி செயல்பட்டுள்ளன என்று ஆராய்வது அவசியம்.
நம் நாடு, சோம்பேறித்தனம், தாமதம், அலட்சயி மனப்பான்மை போன்றவற்றால் உரிய பொருளாதார வளர்ச்சி அடையாமல் தேங்கியுள்ளது. இந்தியாவில் மிக கடுமையாக உழைக்கக்கூடிய ஏராளமான மக்கள் இருந்தும், அது சரியான திசையில் செல்லாமல் இருப்பதற்கு இதுவே காரணம். மின் திட்டம் போன்ற முக்கிய திட்டங்களில் ஏற்படும் தாமதங்களை நீதிமன்றம் கண்டுகொள்ளாமல் விடவேண்டுமா என்றால் இல்லை என்பதே அதற்கு விடை. பல நேர்வுகளில் தாமதத்தின் காரணமாக தண்டக் கட்டணம் செலுத்த வேண்டியுள்ளது.
இரண்டு தீர்ப்புகளுக்கும் எவ்வளவு வேறுபாடு பார்த்தீர்களா ? நீதிபதி ராமசுப்ரமணியம், பெல் நிறுவனத்துக்கு ஆதரவாக அளித்த தீர்ப்பு அறியாமலோ, தவறுதலாகவே அளிக்கப்பட்ட தீர்ப்பு அல்ல. நீதிபதி ராமசுப்ரமணியம், ஒரு கற்றறிந்த நீதிபதி. அவர் தெரியாமல் தவறிழைக்கும் நீதிபதி அல்ல. பெல் நிறுவனத்தை விட சீன நிறுவனம் குறைவாக டெண்டர் அளித்துள்ளது, வட்டி விகிதம் குறைவு, மின் வாரியத்துக்கு 1300 கோடி சேமிப்பு வரும் என்ற விபரங்களையெல்லாம் அறிந்தே அப்படியொரு தீர்ப்பை வழங்கினார். அந்தத் தீர்ப்புக்காக அவர் தெரிவித்திருந்த காரணங்கள் மிகவும் அபத்தமாக இருந்தன. பெல் நிறுவனம் இந்திய நிறுவனம் என்ற ஒரே காரணத்துக்காக இது போன்றதொரு தீர்ப்பை வழங்கினார். சரியாக செயல்படாத, தாமதத்துக்கு பெயர்போன நிறுவனம் இந்திய நிறுவனம் என்பதால் அதற்கு எல்லா டெண்டர்களையும் கொடுத்து விட முடியுமா ? தங்க ஊசி என்பதால் கண்ணில் குத்திக் கொள்ள முடியுமா ?
பெல் நிறுவனத்துக்குத்தான் டெண்டரை வழங்க வேண்டும் என்றால் உலகளாவிய டெண்டர் எதற்கு ? நேரடியாக பெல் நிறுவனத்துக்கு வழங்கி விடலாமே ?
நல்ல நீதிபதி என்று பெயரெடுத்த நீதிபதி ராமசுப்ரமணியம் பெல் நிறுவனத்துக்கு டெண்டர் வழங்கியது சரி என்று தீர்ப்பளித்திருக்கிறாரே என்பதுதான் வேதனையான விஷயம். தன் முன் சமர்ப்பிக்கப்பட்ட ஆதாரங்கள், ஆவணங்கள் என்ன ? எடுத்து வைக்கப்பட்ட வாதங்கள் என்ன என்பதை வைத்து தீர்ப்பளிப்பதற்கு பதிலாக அரசுத் தரப்பு ரகசியமாக அளித்த ஆவணங்களின் படி தீர்ப்பளித்துள்ளார். நீதிபதி சுதாகர் தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது போல பல இடங்களில் தேதிகள் மற்றும் சில அறிக்கைகள் குறித்து முரண்பாடான வாதங்களை பதிவு செய்துள்ளார். தன் முன் எடுத்து வைத்துள்ள வாதங்கள் என்ன என்பதை அப்படியே பதிவு செய்திருந்தால், நீதிபதி ராமசுப்ரமணியத்தால் பெல் நிறுவனத்துக்கு ஆதரவாக இப்படியொரு தீர்ப்பை வழங்கியிருக்க முடியாது.
இந்த வழக்கில் கவனிக்கத்தக்க மற்றொரு முக்கிய அம்சம், நீதிமன்றத்தில் மின் வாரியம் கூசாமல் உரைத்த பல்வேறு பொய்கள். இந்த வழக்கில் எப்படியாவது வென்றாக வேண்டும் என்பதற்காக, நீதிபதி ராமசுப்ரமணியம் முன்பாகவும், டிவிஷன் பென்ச் முன்பாகவும், பல்வேறு பொய்களை அரசுத் தரப்பு உரைத்தது. அந்தப் பொய்களை நம்ப விரும்பிய நீதிபதி ராமசுப்ரமணியம், அந்தப் பொய்களுக்கு சான்றளிக்கும் வகையில் அரசுக்கு ஆதரவாக தீர்ப்பு கூறினார். ஆனால் இது எதுவும், நீதிபதி சுதாகர் முன்பாக எடுபடவில்லை.
பெல் நிறுவனத்துக்கு ஒரு டெண்டர் வழங்குவதற்காக, தமிழக மின் வாரியம் எதற்காக இவ்வளவு பொய்களை உரைக்க வேண்டும் என்பது புதிராக உள்ளது அல்லவா ? அங்கேதான் மின்வாரியத்தின் முன்னாள் தலைவரும், தற்போதைய தலைமைச் செயலாளருமான ஞானதேசிகன் வருகிறார். ஏற்கனவே, பெல் நிறுவனத்தின் துணை காண்ட்ராக்டர்களிடம் பெற்ற பணத்துக்கு விசுவாசமாகவே, நீதிமன்றத்தின் முன் இத்தனை பொய்கள்.
இந்த அற்புதமான தீர்ப்பை வழங்கிய நீதிபதிகள் சுதாகர் மற்றும் வாசுகியை பாராட்டியே ஆக வேண்டும். நீதிபதி ராமசுப்ரமணியத்துக்கு வந்த அழுத்தங்கள் போலவே, நீதிபதி சுதாகருக்கும், அரசுத் தரப்பிலிருந்து பல்வேறு அழுத்தங்கள் வந்திருக்கக் கூடும். ஆனால் எந்த அழுத்தத்துக்கும் அசைந்து தராமல், இப்படியொரு அற்புதமான தீர்ப்பை வழங்கிய இந்த நீதிபதி சுதாகர்தான், குமாரசாமிகளைப் பார்த்து நம்பிக்கை இழந்த சமூகத்துக்கு நம்பிக்கையூட்டுகிறார்.
இந்தத் தீர்ப்பு உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தி, இந்தியாவிலேயே முதலீட்டாளர்களை வரவேற்று, பட்டுக் கம்பளம் விரிக்கும் ஒரே மாநிலம் தமிழ்நாடுதான் என்று அடித்துக் கொண்டிருந்த டம்பத்தை, இந்தத் தீர்ப்பு கிழித்தெறிந்திருக்கிறது. 17 ஆயிரம் கோடி அந்நிய முதலீட்டை தவறான முடிவின் மூலம் நிராகரித்து விட்டு, முதலீட்டாளர்களின் ஆதரவாளர் போல நாடகமாடுகிறார் ஜெயலலிதா.
அந்த வகையில இந்தத் தீர்ப்பு, பல முகமூடிகளை கிழித்துள்ளது. கடைசியாக வந்த தகவலின்படி, மின் வாரியம் இந்த வழக்கில் உச்சநீதிமன்றத்துக்கு மேல் முறையீடு செய்வதாக தகவல் வந்துள்ளது.
கருத்துகள்
கருத்துரையிடுக