ஆண்கள் என்பவர்கள் யார்?
இது கொஞ்சம் சிக்கலான கேள்விதான்.. ஆண்கள் என்ற உடன் உடனே என் மண்டையில் உதிப்பது அப்பாவோ அண்ணனோ தம்பியோ கணவனோ அல்ல என் அம்மா போதித்த விலகி நிற்க வேண்டிய ஆண்தான் பட்டென்று மூளையில் வந்துவிட்டு போகிறான், இது பசுமரத்தாணி என்பதால் என்னை நானே குற்றம் சொல்லமாட்டேன்.. :)
என்னால் ஆண்களுடன் பழக முடியுமே தவிர அவர்களின் உலகத்துக்குள் செல்ல முடியாது, அங்கு எனக்கு அனுமதியும் இல்லை. காரணம் என் நலன் கருதி எனக்கான எல்லையை அவர்களே தீர்மானித்துக்கொண்டார்கள் இதனால் தான் இன்னும் நண்பர்களாகவே நீடிக்கிறார்கள்.
இவனுங்க சண்டை போடறதே வித்தியாசமா இருக்கும் ரெண்டு பேரு கட்டிப்புரண்டு சண்ட போட்டு வாய்ல ரத்தம் கிழிய நின்னானுவ நான் ஒரு பொது நண்பி என்பதால் ஊடால போயி பிரிச்சுலாம் விட்டேன்
கடைசில என்னடான்னு பார்த்தா,, மறுநாள் ரெண்டு பயலுவளும் ஒருத்தன் மடில ஒருத்தன் படுத்துக்கிட்டு.. ”இந்த லூசுதாண்டா நம்மள சண்ட போட விடாம பிரிச்சு விட்டுட்டுன்னு” என்னைய ஓட்ரானுங்க…..
இது எப்படி சாத்தியம் என்று நானும் பல வழிகளில் யோசித்து முயன்று தோத்துட்டேன்,
நான்லாம் சண்டை போட்டால் குறைந்த பட்சம் ஒரு மாசமாவது பேசாம இருக்கணும் அதுக்கு பேருதான சண்டை..
ஆணின் ஆகப்பெரும் குறையும் நிறையும். பழகுகையிலும் விலகுகையிலும்
உண்மையாய் இருந்துவிடுகிறான்.. பட்டும்படாமல் பழக விலக அவனுக்கு கைவரப்போவதே இல்லை.. இதனால் தான் அடிக்கொருமுறை விரக்தியான மனநிலைக்கு தள்ளப்படுகிறான்,. எனை புரிந்துகொள்ளுங்கள் என்று கதற நினைக்கையில் எனை புரிந்துகொள்ளாத நீ எனக்கு எதற்கு என்ற முடிவுக்கும் சேர்ந்தே வந்துவிடுகிறான்.
பெண்கள் திருமணம் முடிக்கையில் அம்மா அப்பா வாழ்ந்த வாழ்க்கை அனைத்தையும் தியாகம் செய்துதான் கணவன் வீட்டுக்கு வருகிறாள்
இதனினும் பெரிய தியாகம் சில ஆண்கள் செய்துவிடுகிறார்கள்
தனக்கே தனக்கான மனைவி மக்களின் வாழ்வாதாரத்திற்க்காக எங்கோ ஒரு மூலையில் வேலை செய்து கொண்டு அவர்கள் மேல் செலுத்த வேண்டிய அன்பை என்ன செய்வதென்று தெரியாமல் திணறி துளிர்க்கும் அவனின் கண்ணீருக்கு சொல்ல எந்த பதிலும் இல்லை
தகப்பன் இல்லாத ஒரு ஆண், தங்கைக்கு கல்யாணம் செய்துவிட்டு
அவள் புகுந்த வீடு செல்கையில், அழக்கூடாது என்ற வைராக்கியத்தையும் மீறி சொட்டும் கண்ணீருக்கு மாற்று இவ்வுலகி ஏது?
இங்கிருக்கும் ஆண்கள் அதிகம் பேர் சொன்ன வாக்கியம்
நல்லவனாக இருந்து என்ன பிரயோசனம். நல்லவனாக நடிக்க விரும்பவில்லை… என்பதுதான் இதற்கெல்லாம் என்ன காரணம் ?
நன்றாக யோசித்துப்பாருங்கள் அவன் ஆசைப்படுவது கெட்டவன் என்ற பிம்பத்தை அல்ல, தான் தானாக இருக்கவேண்டும் என்ற சுதந்திரத்தை கட்டற்ற வெளியை… அப்படி இருக்கும் ஒருவனை கெட்டவன் என்று அடையாளப்படுத்தியதே இப்படி சொல்ல தூண்டியிருக்க வேண்டும்..
நீடூழி வாழ்க…!
………………….புராணம் தொடரும் ..
நன்றி: மீனாம்மா கயல்
கருத்துகள்
கருத்துரையிடுக