கல்விக்கூடங்களில், அலுவலகங்களில், அங்கிங்கெனாதபடி எங்கும், வந்தே மாதரம் பாடப்படவேண்டும் என மாண்புமிகு நீதியரசர் முரளிதரனய்யா உத்திரவிட்டுவிட்டார்.
பெரிய மனது வைத்து, நீதியரசர் நியாயமான காரணங்களுக்காக பாடாமலும் இருக்கலாம் எனவும் கூறியிருக்கிறார். ஆனால் எது நியாயமான காரணம் என்பதை இன்னொரு வழக்கு தொடுத்துத்தான் தெரிந்துகொள்ளவேண்டும்.
ஏற்கெனவே அனைத்து பள்ளி, கல்லூரிகளிலும் வந்தேமாதரம் பாடப்படவேண்டும் எனக் கோரும் மனு ஒன்று உச்சநீதி மன்றத்தில் தாக்கலாகி, , மத்திய அரசிற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டிருக்கிறது. அடுத்த மாதம் அவ்வழக்கு மீண்டும் விசாரணைக்கு வரவிருக்கிறது.
யோகியார் உ.பி முதல்வரான பின் அங்கே தேசபக்தி பீறிட்டெழுகிறதா, மீரட் மேயர், வந்தே மாதரம் பாட மறுத்த முஸ்லீம் உறுப்பினர்கள் சிலருக்கு மாநகராட்சி மன்ற நடவடிக்கைகளில் பங்கு பெற அனுமதி மறுக்க, முதல்வர் ஆதித்யநாத், ஆஹா, இதென்ன கொடுமை என அங்கலாய்த்திருக்கிறார். பாட மறுப்பவர்கள் பாகிஸ்தானுக்குப் போகலாம் எனச் சொல்லவில்லை நல்லவேளையாக.
ஆனால் உத்தராகண்ட் கல்வி அமைச்சர் ஏறத்தாழ அப்படித்தான் சொல்லியிருக்கிறார். இந்தப் பின்னணியிலேயே உச்ச நீதி மன்றத்தில் வழக்கு. இப்போது தமிழகமும் நாட்டுப் பற்றில் நாங்கள் சளைத்தவர்கள் இல்லை என்பதை நிரூபித்திருக்கிறது.
இதெல்லாம் போக திரையரங்குகளில் தேசியகீதம், ஜன கண மன, இசைக்கப்படவேண்டுமென்ற உச்சநீதிமன்ற உத்திரவால் விபரீத விளைவுகளை நாடு சந்தித்து வருவது நமக்குத் தெரியும். எழுந்து நிற்காதவர்களுக்கு தேசபக்த குண்டர்கள் தர்ம அடி கொடுக்கின்றனர். உடல் ஊனமுற்றவர் ஒருவரும் சிக்கியிருக்கிறார்.
பக்தாஸ், இப்டியெல்லாம் அடிச்சிடப்டாது எனும் ரீதியில், ஊனமுற்றோர் எழுந்து நிற்கவேண்டாமென்றும், திரைப்படத்திலேயே தேசிய கீதம் பாடப்படுமானால், அப்போதும் எழுந்து நிற்கவேண்டாமென்றும் உச்சநீதி மன்றம் கூறியது.
ஜனகனமணதான் நாட்டின் அதிகாரபூர்வ தேசிய கீதம் (National Anthem), வந்தேமாதரத்தின் முதல் இரு கண்ணிகள் தேசியப் பாடல் (National Song).
துர்கா தேவி என விதந்தோதப்படும் அன்னை இந்திராவின் ஆட்சியில்தான் தேசத்திற்கு அவமரியாதை இழைப்பதைத் தடுக்கும் சட்டம் (Prevention of Insults to National Honour Act, 1971) என ஒன்று இயற்றப்பட்டது. அதாவது அவசர நிலைக்கு முன்பே.
அச் சட்டத்தின் கீழ்தான் திரையரங்குகளில் தேசிய கீதம் ஒலிக்குமானால் உரிய மரியாதை செலுத்தப்படுவதை உறுதிசெய்யவேண்டும் எனக் கோரி வழக்கு தொடரப்பட்டது. கேட்டது ஒலிக்குமானால் உரிய மரியாதை என்பது மட்டுமே. கனம் உச்ச நீதிமன்றமோ திரைப்படம் துவங்கும் முன் தேசிய கீதம் இசைக்கப்படவேண்டும், அப்போது அனைவரும் எழுந்து நிற்கவேண்டும், எனக் கூற, ஒரே களேபரம்.
அது இடைக்கால உத்திரவே, அதனை எதிர்த்தே மனு தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது.
இந்நிலையில்தான் இப்போது வந்தே மாதர உத்திரவு.
இது நாள்தோறும் இந்தியா வானொலியில் நாம் கேட்கும் பாடல்.
பாடலின் முழு வடிவம்:
வந்தே மாதரம்
சுஜலாம் சுபலாம் மலயஜ சீதளாம்
சஸ்யஷ்யாமளாம் மாதரம்
ஷுப்ரஜ்யோத்ஸ்னா புலகிதயாமினீம்
புல்லகுசுமித த்ருமதள ஷோபினீம்
சுஹாசினீம் சுமதுர பாஷினீம்
சுகதாம் வரதாம் மாதரம்
சப்தகோடி காந்த காலகால நிநாட கராலே
த்விசப்த கோடி புஜேர் த்ருதகர கர்வாலே
த்விசப்த கோடி புஜேர் த்ருதகர கர்வாலே
அபல கேன மா ஏதா பலே
பகுபல் தாரிணீம் நமாமி தாரிணீம்
ரிபுடலவாரிணீம் மாதரம்
வந்தே மாதரம்
துமீ வித்யா துமீ தர்மா
துமீ ஹ்ரிதீ துமீ மர்ம
தவம் ஹி ப்ராணாஹ் சரீரே
பஹுதே துமீ மா ஷக்தி
ஹ்ருதயே துமீ மா பக்தி
தோமாராயிப்ரதிமா கரி
மந்திரே மந்திரே
த்வம் ஹி துர்கா தசாப்ரஹார நாதாரிணீ
கமலா கமலதள விஹாரிணீ
வாணீ வித்யாயினீ நமாமி த்வம்
நமாமி கமலாம் அமலாம் அதுலாம்
சுஜலாம் சுபலாம் மாதரம்
ஷ்யாமளாம் சரளாம் சுஷ்மிதாம் பூஷிதாம்
தாரணீம் பரணீம் மாதரம்
முண்டாசு கவியின் மொழி பெயர்ப்பு:
நளிர்மணி நீரும் நயம்படு கனிகளும்
குளிர்பூந் தென்றலும் கொழும்பொழிற் பசுமையும்
வாய்ந்துநன் கிலகுவை வாழிய அன்னை! (வந்தே)
தெண்ணில வதனிற் சிலிர்த்திடும் இரவும்
தண்ணியல் விரிமலர் தாங்கிய தருக்களும்
புன்னகை ஒளியும் தேமொழிப் பொலிவும்
வாய்ந்தனை இன்பமும் வரங்களும் நல்குவை. (வந்தே)
கோடி கோடி குரல்கள் ஒலிக்கவும்
கோடி கோடி புயத்துணை கொற்றமார்
நீடு பல்படை தாங்கிமுன் னிற்கவும்,
கூடு திண்மை குறைந்தனை என்பதென்?
ஆற்றலின் மிகுந்தனை, அரும்பதங் கூட்டுவை,
மாற்றலர் கொணர்ந்த வன்படை யோட்டுவை. (வந்தே)
அறிவும் நீ தருமம் நீ, உள்ளம் நீ, அதனிடை
மருமம் நீ உடற்கண் வாழ்ந்திடும் உயிர் நீ
தோளிடை வன்புநீ, நெஞ்சகத்து அன்புநீ.
ஆலயந் தோறும் அணிபெற விளங்கும்
தெய்வச் சிலையெலாம், தேவி, இங்குனதே. (வந்தே)
பத்துப் படைகொளும் பார்வதி தேவியும்
கமலத் திகழ்களிற் களித்திடும் கமலையும்
அறிவினை யருளும் வாணியும் அன்னைநீ! (வந்தே)
திருநி றைந்தனை, தன்னிக ரொன்றிலை!
தீது தீர்ந்தனை, நீர்வளஞ் சார்ந்தனை
மருவு செய்களின் நற்பயன் மல்குவை
வளனின் வந்ததோர் பைந்நிறம் வாய்ந்தனை
பெருகு மின்ப முடையை குறுநகை
பெற்றொ ளிர்ந்தனை பல்பணி பூண்டணை.
இருநி லத்துவந் தெம்முயிர் தாங்குவை,
எங்கள் தாய்நின் பாதங்கள் இறைஞ்சுவோம்! (வந்தே)
பங்கிம் சந்திர சாட்டர்ஜி 1875ல் முதலில் இரண்டு கண்ணி அல்லது பத்திகளை எழுதுகிறார். கவிதையில் மிகக் கடினமான வங்க/வடமொழிச் சொற்களைப் பயன்படுத்தியிருப்பதாக அவரது மகளும் நண்பர்களும் விமர்சிக்கின்றனர். வேண்டுமென்றே நான் அப்படி எழுதவில்லை, தன்னெழுச்சியாக கற்பனையில் உதித்ததுதான் என்கிறார் பங்கிம் சந்திரர்.
ஏழாண்டுகள் கழித்து அவர் வெளியிட்ட ஆனந்த மடம் நாவலில், மேலும் சில கண்ணிகளுடன், வந்தே மாதரம் பாடல் இடம் பெறுகிறது. அதுவரை அக்கவிதை வெளியிடப்படவில்லை.
பிறகு ரவீந்திரநாத் தாகூர் இசையமைத்துப் பாட, வந்தேமாதரம் இசைத் தட்டாக வெளியாகி, பிரபலமானது.
1905ல் வங்காளம் இரண்டு பகுதிகளாக பிரிக்கப்பட்டபோது கிளர்ச்சியாளர்கள் தெருவெங்கும் வந்தே மாதரம் என முழங்கினர்.
வ உ சி கப்பல் வாங்கியது அந்தக் கட்டம்தான் எனவேயே கப்பலோட்டிய தமிழனில் ’வந்தேமாதரம் என்போம்’ எனும் பாரதி பாடல் ஒலிக்கிறது.
வந்தே மாதரத்தில் லஷ்மி, துர்கை, சரஸ்வதி எல்லாம் வருகின்றனர், அது முஸ்லீம்களின் ஏக இறை நோக்கிற்கு எதிரானது. பழமைவாதத்தில் ஊறிய முஸ்லீம்கள் இதனை எதிர்க்காமல் விடுவார்களா, எனக் கேட்கின்றனர் வலதுசாரி சிந்தனையாளர்கள். ஜின்னா வேறு ஆட்சேபித்திருக்கிறார் எனவும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இன்னொருபுறம் முரளிதரனாரின் நாட்டுப் பற்றை வளர்க்கும் நேற்றைய தீர்ப்பிற்குப் பின், நமது தௌஹீத் போன்ற அமைப்புக்கள், ஆ ஊ எனக் குதிக்கின்றனவா, சரி இந்த முஸ்லீம்கள் இப்படித்தான், என எண்ணத் தோன்றும்.
ஆனால் பிரச்சினை லஷ்மி வகையறாக்களால் மட்டும் இல்லை. சரியாகச் சொல்லவேண்டுமானால், பாடல் இடம் பெறும் ஆனந்தமடமே அனைத்து விமர்சனங்களுக்கும் காரணமாக அமைந்தது.
வங்கத்தை உலுக்கிய 1770 பஞ்சத்தைப் பின்புலமாகக் கொண்டு எழுதப்பட்டிருக்கும் அந்த நாவல் முஸ்லீம்களை மோசமாக சித்தரிக்கிறது. பஞ்சத்தின் போது சன்னியாசிகளுக்கும் பிரிட்டிஷாருக்கும் கடும் மோதல் மூள்கிறது – சன்னியாசிகளுக்கு அப்போதெல்லாம் யாத்திரைகளின் போது கிஸ்தி வசூலிக்கும் உரிமை இருந்தது. பஞ்சம், கிழக்கிந்தியக் கம்பெனிக்கு கட்டவேண்டிய வரி, இந்நிலையில் விவசாயிகள் சாமியார்களுக்கு எங்கிருந்து கொடுப்பது? நாங்கள் என்ன செய்வோம் என மன்றாடுகின்றனர். கொதிக்கின்றனர் சன்னியாசிகள். கஜானாக்களை சூறையாடுகின்றனர். கிழக்கிந்தியக் கம்பெனி சிப்பாய்களுடன் நிகழும் மோதல்களில் நூற்றுக்கணக்கில் இந்த சாமியார்கள் கொல்லப்பட்டனர்.
இந்து, முஸ்லீம் சாமியார்கள் இருவருமே இந்த புரட்சியில் பங்கேற்றிருந்தனர். ஆனால் ஆனந்த மடமோ அதை ஒரு இந்து சன்னியாசிகளின் புரட்சி, விவசாயிகளைக் கொடுமைப் படுத்தியது நவாப்கள்தான், பிரிட்டிஷாருக்கும் அப்போது நடந்த படுகொலைகளுக்கும் சம்பந்தமில்லை, என்று கூறுகிறது. குறிப்பாக முஸ்லீம்களை வங்க மக்களின் எதிரிகளாகக் காட்டுகிறது. முஸ்லீம்களை வீழ்த்துவோம், மசூதிகளைத் தகர்ப்போம், கவலை வேண்டாம் இந்துக்களே நம்மைக் காப்பாற்ற பிரிட்டிஷார் வந்துவிட்டனர் என்றெல்லாம் சொல்கிறது.
இன்னொன்றையும் நாம் நோக்கலாம். பாரதமாதா அன்னியனுக்கு அடிமைப்படமுடியுமா என்று தன்னை மறந்து உணர்ச்சி ததும்ப பாடிய பங்கிம் சந்திரரும் நீண்ட காலம் துணை ஆட்சியராகப் பணியாற்றினார். இறுதிவரை விசுவாசமாகவும் இருந்திருக்கிறார். காலனீய அரசு அவருக்கு விருதெல்லாம் வழங்கி கௌரவித்திருக்கிறது.
அப்படிப்பட்ட ஒரு நபர் முஸ்லீம்கள் மீது விஷத்தைக் கக்கி எழுதியுள்ள நாவலில் இடம்பெறும் ஒரு பாடல், பாரதமாதாவை இந்துக் கடவுளாகவும் சித்தரிக்கும் ஒரு பாடல், அதனை நாட்டு விடுதலை முழக்கம் என்றால் முஸ்லீம்கள் ஆத்திரப்படுவதில் வியப்பென்ன?
1905 கட்டத்தில் காங்கிரஸ் மாநாடுகளில் வந்தே மாதரம் பாடப்படத் தொடங்கியது. ஆனால் முஸ்லீம்களிடமிருந்து எதிர்ப்பெழ, முதல் கண்ணியோடு நிறுத்திக்கொண்டனர்.
1937ல் முதல் முறையாக ஆட்சிப் பொறுப்பேற்ற காங்கிரசும் வந்தேமாதரம் வானொலியில் ஒலிபரப்பக்கூடாதென தடைவிதித்தது.
இன்றளவும் அகில இந்திய வானொலியிலும் சரி நாடாளுமன்ற அவைகளிலும் சரி, முதல் இரண்டு கண்ணிகள் மட்டுமே பாடப்படுகின்றன.
மன்மோகன் சிங் அரசு 2006ல் வந்தே மாதரம் காங்கிரஸ் மாநாட்டில் பாடப்பட்ட நூறாவது ஆண்டு எனக் கூறி அதைக் கொண்டாடியது. உடனே சில முஸ்லீம் தலைவர்கள் வழக்கம்போல எதிர்க்க, பிரச்சினை மீண்டும் தீப்பிடித்துக்கொண்டது.
வந்தே மாதரம் மட்டுமல்ல ஜனகன மண கூட நாடாளுமன்றத்தில் இசைக்கப் படத்துவங்கியதே 1992ல்தான், அதுவும் பாஜக தலைவர்களில் ஒருவரும் இன்றைய உ.பி ஆளுநருமான வி பி நாயக்கின் வற்புறுத்தலின் பேரில்தான். பிரணாப் முகர்ஜி கூட அவருக்கு தனது பாராட்டுக்களைத் தெரிவித்திருக்கிறார். தேச, மத வெறிக்கு தூபம் போடுகிறது பாரதீய ஜனதா, ஆஹா சபாஷ் சபாஷ் என்கிறது காங்கிரஸ். இந்நிலையில் முஸ்லீம்கள் மத்தியில் தௌஹீத் போன்ற இயக்கங்கள் வளர்வது இயற்கைதானே.
இஸ்லாத்தைத் தழுவிய நம் ஏ ஆர் ரெஹ்மானும் நமக்கொரு வந்தே மாதரம் அளித்திருக்கிறார் என்பதையும் நாம் மறக்கலாகாது
ஆனால் சமூக விரோதிகளான சங்கிகள் வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் வந்தேமாதரத்தைப் பயன்படுத்தி, முஸ்லீம்களுக்கெதிராக துவேஷ ப் பிரச்சாரம் செய்கின்றனர்.
சரி அவர்கள் ஆட்சி இப்போது. முன்னெப்போதையும்விட அவர்கள் வலிமையுடன் திகழ்கின்றனர். 2019ல் கூட மீண்டும் மோடிதான் எனக் கணிக்கப்படுகிறது.
இந்நிலையில் இன்னுமொரு தமிழர், அதுவும் தலித், சதாசிவத்தாரின் பாதையில் பயணித்து, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாகலாம். ஆகட்டுமே. மகிழ்ச்சிதான்.
ஆனாலும் எதற்கும் இருக்கட்டுமே என்றுதான் இக்கட்டுரை. ஏதாவது ஒரு கட்டத்தில் இதுவும் தேவைப்படக்கூடுமே.
(பி.கு. தன் செலவில் கட்டுரையாளர் நீதியரசர் முரளிதரன் அவர்களுக்கு ஆனந்த மடம் புதினத்தின் தமிழ் அல்லது ஆங்கில வடிவை அனுப்பிவைக்கத் தயார்.)
த.நா.கோபாலன்.
T N Gopalan
T.N. Gopalan is a senior journalist based in Chennai
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
கருத்துகள்
கருத்துரையிடுக