-மகிழ்ச்சி என்பது இங்கே விலை போகிற சமாச்சாரம் என்று யூகித்திருக்கிருக்கிறோமா? ஆழமாக விவாதிப்பதென்றால், மகிழ்ச்சி என்று இன்றைக்குப் பேசிக் கொண்டிருக்கிற உணர்வு கைதேர்ந்த கைகளால் உருக்கி உருவாக்கப்பட்ட சரக்கு. கவலைகளை மறந்து எந்நேரமும் மகிழ்ச்சியைத் தேடிக் கொண்டிருப்பது. காடுகளில், மலைகளில், ஒரு கோப்பைத் தேநீரில் என சந்தை வழிநடத்தும் இடங்களிலான தேடல் அது.
தொண்ணூறுகள் என்றில்லை. எண்பதுகளின் இறுதியில் இருந்தே இந்த மகிழ்ச்சி வணிகம் மெல்ல இந்தியாவிற்குள் ஊடுருவ ஆரம்பித்து விட்டது. வறுமையின் நிறம் சிவப்பு என சாக்கடைக்குள் அமிழ்ந்து கிடக்கிற ஆப்பிளை எடுத்து கழிவிரக்கத்தோடு உண்ணும் தலைமுறைக்கு அடுத்த தலைமுறையின் சந்தைச் சரக்கது. எதுவெல்லாம் செய்தால் மகிழ்ச்சியாக இருக்கும்? என்னென்ன பரிந்துரைகள் சந்தையில் கொட்டிக் கிடக்கின்றன? உதாரணமாக ஒன்றை மட்டும் சொல்ல வேண்டுமெனில் மகிழ்ச்சியாய் மலர்ந்து சிரிப்பதற்கு ஒரு கோல்கெட் தேவையாக இருக்கிறது.
மெல்ல பின்னோக்கி யோசித்தால், உலகமயமாக்கல் என்கிற கரங்கள் எந்நேரமும் மகிழ்ச்சி என்னும் கருதுகோளை மக்கள் மத்தியில் எப்படி மெல்ல விதைத்தார்கள் என்பது விளங்க வரும். இதனடிப்படையில் உலகச் சந்தைகளில் இருக்கிற அத்தனை துறைகளையும் உள்ளொடுக்கி விவாதித்து விட முடியும்.
சினிமா துறையைப் பொறுத்தவரை, நடிகர் ரஜினியை இந்த ஒட்டுமொத்த போக்கின் மிகச் சிறந்த மகிழ்ச்சிச் சந்தைச் சரக்கென்பேன். சமீபத்தில் அவர் ஒரு படத்தில் அழுத்தம் திருத்தமாக மகிழ்ச்சி என்று உச்சரிப்பார். ஆனால் அப்போது அவருடைய முகபாவங்கள் மகிழ்ச்சி என்பதற்கு நேரதிரான பாவனையைக் காட்டிக் கொண்டிருக்கும். கண்களில் நிரந்தரமாய் மகிழ்ச்சிக்கு எதிரான ஒரு தடத்தை உருவாக்கிக் கொண்டே அவர் பல ஆண்டுகளாகச் சுற்றி வருகிறார். தன் காலுக்கடியில் இருப்பதை விடுத்து மகிழ்ச்சியை அவர் வேறொரு பக்கம் தேடிக் கொண்டிருக்கிறாரோ?
ரஜினி கொண்டு வந்த மகிழ்ச்சி என்பது வெறும் திரை சார்ந்தது மட்டுமல்ல. திரைக்கு வெளியேயும் அவர் மகிழ்ச்சியின் தூதுவரே. எங்களது வீட்டிற்குப் பக்கத்தில் அண்ணன் ஒருத்தர் சோடா கம்பெனி நடத்தி வந்தார். ரஜினி படம் ரிலீஸாகும் போதெல்லாம் அவர் குஷியாகி விடுவார். வேறொன்றுமில்லை? அன்றைக்கு அதிக சோடாக்கள் விற்றிருக்கும். வீட்டிற்கு கைநிறைய பூந்திப் பொட்டலங்களோடும் பகோடா பொட்டலங்களோடும் திரும்பி வருவார். அவரது அன்றைய தின மகிழ்ச்சியிலும் கலந்து கொண்டிருந்திருக்கிறேன்.
அவருக்கும் கஷ்டங்கள் வரும். அப்போதெல்லாம் தலைக்கு மேலே கையை உயர்த்தி, “எல்லாம் மேல இருக்கிற ஆண்டவன் பாத்துப்பான்” என்பார் மெல்ல நகைத்தபடி. துக்கத்தை மீறி நம்பிக்கையைக் காட்டும் ஒரு மகிழ்ச்சியான முறுவல் இருக்கும் அதில். இந்த உணர்வைத்தான் ரஜினி ஆழமாக அவருடைய ரசிகர்களிடம் ஊன்றியிருக்கிறார்.
ரஜினி ரசிகர்கள் பலரைப் பார்த்திருக்கிறேன். கூட்டம் கூட்டமாக அவர்கள் கிளம்பி தெப்பக்குளத்தில், அவர் படம் வெற்றி பெற வேண்டி, படிச் சோறு சாப்பிடுவார்கள். இதென்ன காட்டுமிராண்டித்தனம் என்று எனக்கே தோன்றியிருக்கிறது. ஆனால் அவர்கள் பலரை நெருங்கிப் பார்க்கையில், வாழ்க்கையில் போராடி வெல்கிற முன்னைப்பில் இருப்பவர்கள் அல்லது போராடத் துவங்குபவர்களாக இருந்தார்கள்.
ரஜினி அடிக்கடி, குடும்பத்தைப் பார்த்துக் கொள்ளுங்கள் என்று சொல்வதெல்லாம் மிகையாகப் படுகிறது இப்போது. ஆனால் அந்த வார்த்தையை அவருடைய ரசிகர்கள் மிகச் சரியாகவே எடுத்துக் கொள்வதாகப் படுகிறது. கீழே இருந்து உழைத்து மேலேறி தான தர்மம் செய்வது மகிழ்ச்சி என்பது போல பலவிதமான கருதுகோள்களை அவர்களிடையே விதைத்திருக்கிறார்.
நிஜ வாழ்வில் இப்போது அவர் எப்படியென்று தெரிய, நெருங்கிப் பழகியதில்லை. ஒருவகையில் அவருடைய வாழ்வே இப்படிக் கிளம்பி மேலே வந்ததுதானே? ஆனால் திரையின் வழி அதைத்தான் முன்னிறுத்துகிறார். சைக்கிளில் வீடு வீடாகப் போய் பால் போடுகிறவராக வாழ்க்கையைத் துவக்கி வாழ்வின் உச்சியை எட்டிப் பிடித்தவராகத்தான் அவர் பெரும்பாலும் தன்னை முன்னிறுத்துகிறார். அல்லது பெரும் பணத்தை உதறிவிட்டு சாமானியனாக தன் கூட்டிற்குத் திரும்பும் காவிய வகையிலான மகிழ்ச்சியை முன்னிறுத்துகிறார்.
தொடந்து உன்னிப்பாகக் கவனித்தால், ரஜினியைப் பற்றி சோகமயமான சித்திரங்கள் எதுவுமே சமீப காலத்தில் தட்டுப்படவில்லை. அவர் மலர்ந்த முகத்தோடு வாயைக் கோணி சிரிக்கிற தோற்றமே எப்போதும் முந்திக் கொண்டு சித்திரமாக உருவாகி வருகிறது.
அவர் மருத்துவமனையில் இருந்து ஆடியோ வெளியிட்ட போதுகூட கஷ்டப்பட்டு அவரது வழக்கமான ஹாஹாஹா என்கிற சிரிப்புச் சத்தத்தைத்தான் வலியை மீறி வலுக்கட்டாயமாக வெளிப்படுத்தினார். ஆனால் மூச்சிரைப்புகளுக்கு நடுவே அந்த மகிழ்ச்சிச் சிரிப்பை அவருடைய ரசிகர்கள் மிகச் சரியாக இனம் கண்டு கொண்டனர்.
ஆரம்ப கால படங்களில் அவர் எவ்வளவோ பரீட்சார்த்தமாக முயற்சித்துப் பார்த்திருக்கிறார். ஆனால் பிற்காலங்களில் தரையிலிருந்து கிளம்பி மேலெழும் பருந்து என்கிற சித்திரமே அவரிடமிருந்து மக்கள் எதிர்பார்க்கிறார்கள் என்பதை மிகச் சரியாகப் புரிந்து கொண்டார்.
அதைத்தான் எல்லா நேரங்களிலும் விதைத்து அறுவடையும் செய்கிறார். சாதாரண பேச்சின் போதுகூட இந்தச் சித்திரத்தைத்தான் வரைந்தும் காட்டுகிறார். “நான் யானை இல்லை குதிரை. விழுந்தாலும் படக்குன்னு எந்திரிச்சிருவேன்” என்பதுகூட அப்படியான ஒன்றுதான். திரைக்கு உள்ளேயும் வெளியேயும் ஒரு மாதிரியான வெற்றிக்கான அறைகூவல்களை விடுத்துக் கொண்டே இருப்பது.
தோல்வியிலிருந்து வெற்றிக்கு என்பதுதான் இந்த மகிழ்ச்சிச் சந்தையின் ஒற்றை வரி முழக்கம். ஒன்று திரட்டப்பட்ட மகிழ்ச்சியின் வழியாக போராட உந்து சக்தியளிப்பது. இதை வெறும் வணிக சூத்திரம் என்று மட்டுமே சுருக்கி விடக்கூடாது. உண்மையில் இலட்சக்கணக்கான மக்களின் அடியாழத்து வேட்கையும் இதுதான்.
இதைத்தான் ரஜினி மிகச் சரியாகப் புரிந்து கொண்டிருக்கிறார். திரைக்கு உள்ளே இதைத்தான் வெவ்வேறு கச்சாப் பொருட்களின் வழியாக சந்தைப்படுத்துகிறார். அப்படித் தன்னைச் சந்தைப்படுத்துகிற இடத்திலேயும் வைத்துக் கொண்டிருக்கிறார். அதனால்தான் மகிழ்ச்சியான வெள்ளைப் பன்றிக் குட்டிகள் அவரது காலைச் சுற்றிக் கொண்டுமிருக்கின்றன.
திரைக்கு வெளியேயும்கூட பிரிவில்லாத குடும்பம், மகிழ்ச்சியான குழந்தைகள், மகிழ்ச்சி என்கிற கருதுகோளை நம்பிக்கைகளோடு சேர்த்துத் தூக்கிப் பிடிக்கும் கடவுள், ஜோதிடம் என அவருக்கு இருக்கும் வாழ்க்கை ஏதோவொரு வகையில் ரசிகர்களை அவர் பால் ஈர்க்கிறது. ஒட்டுமொத்தமாக அக வாழ்வு மற்றும் புறவாழ்வில் வெற்றி பெற்ற நபர் என்கிற மையத்தை உருவாக்கித் தருகிறது.
அவர் காலத்திய நடிகர்கள் பலரிடம் இல்லாத தனிப் பண்பு அது. திரைக்கு வெளியேயும் அவர் துள்ளிக் குதித்து மகிழ்ச்சியாகத்தான் நடக்கிறார். இது ஒரு காலகட்டத்தின் தேவை. வேலையில்லாத் திண்டாட்டங்கள் ஒழிந்து, கொட்டிக்கிடக்கிற வேலை வாய்ப்புகளிடையே முன்னேறி சந்தையை விரிவுபடுத்துகிற முயற்சிகளுக்கு முட்டுக் கொடுக்கிற நற்செயலிது.
நாற்பது வயதைத் தொட்டவர்களை மட்டுமல்லாமல், இப்போது முப்பது வயதைத் தொடுகிறவர்களையும் அதனால்தான் அவர் ஈர்க்கிறார். மகிழ்ச்சியைக் கடை விரிக்கும் சந்தையின் தேவையும் அதுதான்.
சந்தை அதனால்தான் அவரை முன்னிறுத்திக் கொண்டாட்டங்களை நடத்துகிறது. மல்டிபிளக்ஸ்களில் மட்டுமல்லாமல் விமானத்தில்கூட அவரது கொடி பறக்கிறது. சந்தைக்கு எல்லோரையுமே ஒரே நேரத்தில் கவர்ந்திழுக்கக்கூடிய ஒரு முகம் எப்போதும் தேவையாக இருக்கிறது. வராது வந்த மாமணி போல இந்த விஷயத்தில் ரஜினியை எல்லோரும் மிகச் சிறப்பாகப் பங்கு பிரித்துக் கொண்டனர். சோடா கம்பெனி நடத்துகிற அந்த அண்ணனும்கூட அடக்கம் அதில்.
மாறாக, திரைக்கு வெளியே அவர் இந்த மகிழ்ச்சிக் கொண்டாட்டங்களில் இருந்து விலகியே அலைகிறார். அப்படியான சித்திரம்தான் அழுத்தமாக எனக்குள் எழவும் செய்கிறது. உண்மையில் அடியாழத்தில் அவர் அப்படி இருக்கவும் கூடும். அகத்தில் இல்லாதது புறத்தில் வந்து விழவே செய்யாது.
ஆனால் உண்மையைச் சொல்ல வேண்டுமெனில், ஒரு காலகட்டத்திய மகிழ்ச்சி என்கிற கருதுகோளாக அவர் இருந்தார் என்கிற வகையில் உள்ளார்ந்த மகிழ்ச்சியை அவர் உணரலாம். அவர் தேடுவது அவரது காலுக்கு அடியில்தான் கிடக்கிறது. நிறைவான வாழ்வு என்கிற குற்றவுணர்வுகள் ஏதுமில்லாத, உள்ளார்ந்த உணர்தலே அது.
அவர் திரையில் வரைந்து காட்டியதைப் போல உண்மையிலும், எல்லா வளங்களையும் உதறி மக்களுக்காக நல்லது செய்ய முன் வரும் காவிய மகிழ்ச்சி என்கிற பாவனையையும் உள்ளடக்கியதே அது. மகிழ்ச்சி என அவர் முகம் மலர்ந்து தயங்காமல் இனி அவர் உரக்கச் சொல்லவும் செய்யலாம். மகிழ்ச்சி என்கிற காலம் அவரைத் தேர்ந்தெடுத்து வழிநடத்தியது. முழுக்கவும் அவர் அதற்குச் சொந்தக்காரர்தான்!
இந்தியாடுடே ரஜினி சிறப்பிதழில் வெளியான கட்டுரை
.
கருத்துகள்
கருத்துரையிடுக