-சரவணன் சந்திரன்
காலையிலிருந்து ஏதோ சொந்த வீட்டில் இழவு விழுந்தது போலவான மனநிலையில் தவிக்கிறேன். அதிலும் அந்த ஒற்றை வார்த்தை அதிகமும் தொந்தரவு செய்கிறது. “ஒரு தொழில் முனைவோனாக தோற்று விட்டேன்”. சாதாரணமாக விரக்தி மனநிலையில் சொல்லப்படுகிற வார்த்தைகள் அல்ல. அடர்த்தியான அர்த்தங்கள் பலகொண்ட வார்த்தைகள் இவை. பலபேர் பல தருணங்களில் இந்த வார்த்தைகளை உச்சரித்திருக்கிறார்கள். என் நினைவு சரியாக இருக்குமானால், சுபிக்ஷா நிறுவனத்தின் நிறுவனரும் ஒரு இக்கட்டான கட்டத்தில் இதே மாதிரிப் புலம்பியிருக்கிறார். அவரையுமேகூட அடுத்த கட்டத்திற்கு நகரவிடாமல் வங்கிகள் நெருக்கடி கொடுத்தன.
இன்னும் வழக்குகளில் சிக்கி, சென்னையில் பல இடங்களில் மூடியே கிடக்கிற சுபிக்ஷா நிறுவனக் கட்டிடங்களைக் கடக்கும் போதெல்லாம் அநிச்சையாய் அந்த வார்த்தைகள் நினைவிற்கு வரும். திட்டமிடாத கிளைபரப்பல்களால் வந்த தோல்விகளில் ஒன்றும் அது. தொழிலில் இதுபோல் முடங்கிக் கிடந்து மீண்டு எழுந்தவர்கள் குறித்த கதைகளும் ஏராளமாய்க் கொட்டிக் கிடக்கின்றன இங்கே. தொழில் என்று வந்து விட்டால் மீண்டவர்களிடமிருந்தும் மாண்டவர்களிடமிருந்தும் ஏராளமான பாடங்கள் கற்பதற்காகக் காத்துக் கிடக்கின்றன.
எங்கிருந்து எதைக் கற்றுக் கொள்ளப் போகிறோம் என்பதில்தான் எங்கே இருக்கப் போகிறோம் என்பது உறுதியாகிறது. கர்நாடகா செல்லும் போதெல்லாம் உடனடியாகவே இரண்டு பேர் நினைவிற்கு வருவார்கள். கேப்டன் கோபிநாத்தும் சித்தார்த்தாவுமே அவர்கள். “FISHIN" துவங்குவதற்கு முன்னால், அது மாதிரியான கடைகள் பெங்களூரில் ஏற்கனவே இருப்பதாகக் கேள்விப்பட்டு அதைப் பார்க்கப் போயிருந்தோம். கடையின் முகப்பு எப்படியிருக்க வேண்டும் என்பதற்கு, “இதோ அதை மாதிரி” என நண்பன் ராஜ்மோகனிடம் காட்டியது, காபி டே கடையின் முகப்பைத்தான். கத்தரிப்பூ நிறத்தினுள் வெள்ளை வெளிச்சம். அதை மாதிரியாக வைத்தே ஊதா நிறத்தில் வெள்ளை எழுத்துக்களைப் பொறித்தோம். அந்த வகையில் சித்தார்த்தாவிற்கு எங்களது குட்டி நிறுவனம் நன்றிக்கடனோடு அஞ்சலியும் செலுத்துகிறது.
காபி தோட்டத்து உரிமையாளர் வீட்டுப் பையனான சித்தார்த்தா இயல்பாகவே கோப்பைக்குள் காபியை அடைத்து விற்கிற கனவை வந்தடைந்தார். சித்தார்த்தாவுக்கும் இராணுவத்தில் சேர விருப்பம் இருந்திருக்கிறது. ஒருவேளை சேர்ந்து விட்டு மறுபடி தொழில் துவங்கியிருந்தால் இந்த முடிவிற்கு வந்து சேர்ந்திருக்கவும் மாட்டார். அதற்கு முன்னர் அவருக்கு எல்லா விதங்களிலும் நல்ல கல்வியும் நற்சூழலும் கிடைத்திருக்கிறது. எவருக்கும் கிடைக்காத அரும்பாக்கியமது என்றே வர்ணிப்பேன் அதை. எதுவுமே இல்லாதவர்களுக்கே அதன் அருமை புரியும். காபி தோட்டத்தினுள் சுற்றும் குளுகுளுவென்ற வாழ்க்கையே அது. என்னுடைய கல்லூரியில் அந்தப் பிராந்தியத்தைச் சேர்ந்த காபி தோட்டத்து உரிமையாளர்களது பையன்கள் பலரைப் பார்த்திருக்கிறேன் என்கிற வகையிலேயே இதைக்கூடச் சொல்கிறேன். சித்தார்த்தா பற்றிய மேற்படி தகவல்களையெல்லாம் இணையத்தில் தேடினால் அதிகமாகவே கிடைக்கக்கூடும்.
ஆனால் இங்கே வேறொரு விஷயத்தைப் பேசப் பிரியப்படுகிறேன். அதே கர்நாடகத்தில் இருக்கிற குக்கிராமம் ஒன்றில் இருந்து கிளம்பிய வேறோருத்தரின் கதையும் நம்முன்னே ஏற்கனவே கடைபரப்பப் பட்டிருக்கிறது. எட்டுப் பிள்ளைகள் கொண்ட வீட்டில் இரண்டாவதாகப் பிறந்தவர் அவர். ஆசிரியரான தந்தையிடம் வீட்டில் இருந்தே கல்வி கற்றார். ராணுவத்தில் சேர்ந்தார். அதற்குப் பிறகு கேப்டன் கோபிநாத் இவரென உலகம் அடையாளம் காணத் துவங்கியது அவரை. இந்தியாவின் முதல் உள்ளூர் குறைந்த கட்டண விமான சேவையைத் துவக்கியவர் அவரே. 2003 ஆம் ஆண்டு ஏர் டெக்கான் தன்னுடைய சேவையைத் துவக்குவதற்கு முன்பு வரை அப்படியொன்று நடக்கும் என எவருமே நம்பவில்லை. விமானப் பயணம் என்றாலே, இன்னொரு தட்டினருக்கானது என்றே இருந்த புரிதலை அடித்து நொறுக்கியவர் அவர்.
பூனைநடை நடந்தெல்லாம் அந்த இடத்தை வந்து சேரவில்லை அவர். “Simply Fly” என அவர் எழுதிய புத்தகத்தில் கடந்து வந்த பாதையை சமரசமில்லாமல் விரித்து வைத்திருப்பார். அந்தப் புத்தகம் தமிழில்கூடக் கிடைக்கிறது. தொழில் தொடங்க நினைப்பவர்கள் தவறவே விடக்கூடாத புத்தகம் அதுவென்பேன். ஆரம்பத்தில் ஹெலிஹாப்டர் சேவையாகத் துவங்கிய பயணம் எப்படிப் படிப்படியாக விமானச் சேவையாக வளர்ந்தது என்பதை வர்ணித்திருப்பார் அதில். அவர் பட்ட துயரங்களையெல்லாம் வேறு யாராவது சந்தித்திருந்தால், ஆரம்பத்திலேயே விலகி ஓடியிருப்பார்கள். நெஞ்சுரத்துடன் எதிர்த்து நின்றார் கேப்டன் கோபிநாத்.
இப்போது தோற்றுப் போன தொழிலதிபர் என்கிற அடைமொழியோடு இன்னொரு நாட்டில் தஞ்சமடைந்து கிரிக்கெட் பார்த்துக் கொண்டிருக்கும் விஜய் மல்லையா ஏர் டெக்கானின் பெரும்பாலான பங்குகளை விலை கொடுத்து வாங்கி விட்டு, கேப்டன் கோபிநாத்தை என்ன பாடு படுத்தினார் என்பதையெல்லாம் படித்தால், மல்லையாவை காலம் ஊரை விட்டு விரட்டியது சரிதான் என்கிற முடிவிற்கு இயல்பாகவே வந்து சேர்ந்து விடுவோம். என்னையெல்லாம் கேட்டால் காலம் அவரை தண்ணியில்லாத காட்டிற்குத்தான் துரத்தியிருக்க வேண்டுமென்பேன். ஏற்கனவே பல இடங்களில் பலநேரங்களில் சொன்னதைத்தான் திரும்பவும் இந்த இடத்தில் சொல்ல வேண்டியிருக்கிறது. வெயிலடி படுகிற செடிகளே எல்லா வறட்சிகளையும் எதிர்த்து நிற்கிற திராணியைப் பெறுகின்றன.
சித்தார்த்தா விஷயத்தையே எடுத்துக் கொள்ளுங்கள். ஏற்கனவே இருந்த தங்களுடைய குடும்ப வணிகத்தைத் திறம்பட எடுத்து விரித்துப் பறந்தார். ஆனாலும் நிழலடி பட்ட செடியே அவர். எதிர்த்து நிற்கிற திறத்தை எங்கே இழந்தார்? என்ன இல்லை அவரிடம்? எதற்காக காலத்தின் முன்னால் மண்டியிட்டார்? கேப்டன் கோபிநாத் கதை அப்படியில்லை. வெறும் கையில் முழம் போட்டு வானத்தில் தனக்கான அடையாளத்தைப் பறக்க விட்டார். சொன்னால் ஆச்சரியமாக இருக்கும். ஏர் டெக்கானின் முதல் விளம்பரத் தூதர் ஆர்.கே.லட்சுமண் வரைந்த காமன்மேன் வரைசித்திரமே. தரையிலிருந்து புறப்பட்ட காமன்மேன் எதிர்ப்புகளை எளிதாகவே எதிர்கொண்டார்.
இதைப் பொதுமைப்படுத்த முடியாது என்பது நன்றாகவே புரிகிறது. எல்லா இடங்களிலும் எல்லா மாதிரியான ஆட்களும் இருக்கவே செய்வார்கள். ஆனாலும் பொதுவாகவே முதல் தலைமுறையாய் முட்டி மோதுகிறவர்களிடம் இருக்கிற தீரம் மூன்றாம் தலைமுறை தொழில்முனைவோர்களிடம் இருப்பதில்லை. நன்றாகத் தெரிந்த சரவண பவன் ஹோட்டல் சங்கிலியையே எடுத்துக் கொள்வோம். சில கிளைகளுக்கு இப்போது போய்ப் பார்த்த போது, அருளடங்கி இருப்பதை வெளிப்படையாகவே பார்க்க முடிகிறது. உணவிலும் தரத்திலும் எப்போதோ அது சரிவை நோக்கி நகர்ந்து விட்டதென அதன் நிரந்தர வாடிக்கையாளர்கள் புலம்புவதைக் காதுபடவே கேட்க முடிகிறது. எதனால் என்பதை இந்தப் பின்னணியில் வைத்து ஆராய்ந்தால் புரிந்து கொள்ளலாம். பெரும்பாலும் மூன்றாம் தலைமுறை கைமாற்றி விடுவதிலும் இழுத்து மூடுவதிலுமே அதிகமும் ஆர்வம் காட்டுகிறது. கிளைபரப்பி நிற்கிற ஆலமரத்தை பாடுபட்டாவது வெட்டிச் சாய்த்து விடுகிறார்கள். தொட்டதற்கெல்லாம் சுணங்கி விடும் ஆட்களை அங்கேதான் அதிகமும் பார்க்க முடிகிறது.
மாறாக இழப்பதற்கு ஒன்றுமில்லையென முட்டி மோதி முன்னுக்கு வருகிறவர்கள் பலரிடம் இயல்பான தீரம் ஒட்டியிருப்பதைப் பார்க்கவும் முடிகிறது. சித்தார்த்தா விஷயத்தில் இருந்து இதையே நான் கற்றுக் கொள்ளவும் விரும்புகிறேன். சுபிக்ஷா நிறுவனர் இப்போதும் எங்கேயாவது முட்டி மோதிக் கொண்டிருப்பார் என்பதை உறுதியாகச் சொல்லி விடமுடியும். எல்லாவற்றையும் இழந்த பிறகும் இப்படி முட்டி மோதுகிறவர்கள் பலரைச் சந்தித்திருக்கிறேன். அவர் குறித்து ஆயிரம் சர்ச்சைகள் இருந்தாலும் ஏர்செல் சிவசங்கரனே மிகச் சிறந்த உதாரணம்தான். அவரும் சித்தார்த்தாவும்கூட நல்ல நண்பர்கள் என்கிற மாதிரி ஒரு குறிப்பொன்றையும் இப்போது படித்தேன். எங்களுடைய கடையின் வாடிக்கையாளராகவும் அவர் இருக்கிறார்.
இந்தியாவில் இருக்கும் போதெல்லாம் கடைக்கு வருவதை வாடிக்கையாகக் கொண்டிருக்கும் அவர், எங்களுக்கு சொத்தாய் பல அறிவுரைகளை எங்களுடைய ஆரம்ப காலகட்டத்தில் சொல்லியிருக்கிறார். அவருக்கு வணிகத்தில் ஏற்படாத சிக்கல்களா? நாட்டை விட்டே ஓடி ஒளிய வேண்டிய நிலை ஏற்பட்ட போதுகூட எப்படி முட்டி மோதி எதிர்த்து நின்றார்? இவர்களிடமிருந்தே புதிய தொழில்முனைவோர்கள் பாடம் கற்க வேண்டுமெனவும் தோன்றுகிறது.
சித்தார்த்தா விஷயத்தில் வேறொரு கோணத்தில் ஒரு சிக்கல் இருப்பதையும் கவனிக்க வேண்டும். தினமும் புழங்குகிற பெரிய இடத்தில் “தோற்றுப் போன தொழில்முனைவோனாக” நிற்க விரும்பாத மன அயர்ச்சியே அவரை இந்த முடிவிற்குத் தள்ளியிருக்கக்கூடும். அவர் தன்னுடைய நிறுவன சகாக்களுக்கு எழுதிய கடிதத்தை முழுமையாகப் படித்த போது, அதை உணரவும் முடிகிறது. ஏனெனில் தொழில்முனைவோன் என்பது பதவியல்ல. அது ஒரு பொறுப்பு. நம்மை நம்பி வந்த பணியாளர்களைக் கரை சேர்க்க வேண்டுமென்கிற துடிப்பு அந்தப் பொறுப்பிற்கு முன்னால் இருக்கிறது. அதனால்தான் அந்தக் கடிதத்தில் கவனமாக அந்த வார்த்தைகளைக் கையாள்கிறார்.
இறுதியில் அவர் தன்னுடைய பணியாளர்களுக்கு அவநம்பிக்கையையே பரிசாக அளித்து விட்டும் சென்றிருக்கிறார் என்கிற வகையில் ஆழமான வருத்தமே மேலிடுகிறது. எதைக் கொண்டு வந்தோம், எதை இழப்பதற்கு என்பதை வணிகத்தில் மட்டுமாவது பின்பற்றலாம் என்றே நினைக்கிறேன். எதுவாக இருந்தாலும், அதைச் செலுத்துவது மனமென்னும் லகான்தான். அதன் பிடியை விட்டு விட்டால், பல்லாயிரம் கோடி ரூபாய்கூட அற்பமாய் ஆற்றில் மிதக்கும்!
சரவணன் சந்திரன் ,லகுடு ,பார்பி உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர்
கருத்துகள்
கருத்துரையிடுக