Uncanny Valley – when human features look and move almost, but not exactly, like natural human beings, it causes a response of revulsion among some human observers.
1. ’அன்கேன்னி வேலி’ என்று இங்லீஷில் ஒரு உளவியல் பதம் உள்ளது. என்னவென்றால், மனிதர்களைப் போலவே சில உருவங்களை உருவாக்கி நடமாடவிடுகிறோம் என்று வைத்துக்கொள்ளலாம். அவைகள் மனிதர்கள் போலவே கைகால்களை ஆட்டுகின்றன. பேசுகின்றன. நடக்கின்றன. அவைகளைப் பார்த்த மாத்திரத்தில் நிஜமான மனிதர்களுக்கு முதலில் மனதில் தோன்றும் உணர்ச்சி வெறுப்புதான் என்று இந்தத் தியரி சொல்கிறது.
2. ஹாலிவுட்டின் சரித்திரத்தில் முழுவதும் Performance Capture தொழில்நுட்பத்தில் எடுக்கப்பட்ட முதல் படம் – Polar Express. இந்தப் படத்தைப் பார்த்த பலரும், அதன் அனிமேஷன் மிகவும் கொடுமையாக இருந்ததாகச் சொல்லியிருக்கின்றனர். சிலருக்கு அந்த அனிமேஷனைப் பார்த்ததும் பய உணர்ச்சியும் வந்திருக்கிறது. இது ஏனெனில், நாம் மேலே பார்த்த உளவியல் விஷயம்தான். Uncanny Valley. எதுவுமே முதன்முதலாக இப்படிச் செய்யப்படும்போது அதனை அடிமனம் வெறுக்கத்தான் செய்யும் என்பதே இதன் சாராம்சம்.
ஒரு அனிமேஷன் படத்தில் ஒலி எப்படி இருக்கவேண்டும்? என்னதான் நாம் பார்ப்பது அனிமேஷன் என்றாலும், ஒலியைப் பொறுத்தவரை எத்தனைக்கெத்தனை நிஜமான ஒலிகளோடு ஒன்றுபடுகிறதோ, அத்தனைக்கத்தனை அந்தப் படத்தின் செயற்கைத்தன்மை குறையும். இந்த விஷயத்தைக் கோச்சடையானில் துல்லியமாகச் செய்திருக்கிறார் ரஸூல் பூக்குட்டி. படத்தில் வரும் போர்க்களக் காட்சிகளுக்காக 150 பேரை வெறியுடன் கத்தச்செய்து அதனைப் பதிவு செய்து படத்தில் உபயோகப்படுத்தியிருக்கிறார். இதெல்லாம் ஹாலிவுட்டில் சர்வ சாதாரணம். லார்ட் ஆஃப் த ரிங்ஸ் படங்களில் ஒலியைக் கச்சிதமாகக் கொண்டுவர என்னென்ன செய்திருக்கிறார்கள் என்பதை யூட்யூபிலும் behind the scenes ப்ளூரேக்களிலும் பார்த்துக்கொள்ளலாம். அதேபோல் கோட்டைகளுக்கு நேரில் சென்று அங்கு தர்பார்களில் பேசும்போது எப்படியெல்லாம் ஒலி அதிர்கிறது, எதிரொலிக்கிறது என்பதையும் தீவிரமாக ஆராய்ந்திருக்கிறார். அந்த சாம்பிள்களை வைத்துக்கொண்டுதான் படத்தின் தர்பார் காட்சிகளில் வசனங்கள் பேசும் ஒலிமுறையையும் சத்தங்களையும் வடிவமைத்திருக்கிறார்.
இது மட்டும் இல்லாமல், கவசங்கள், அணிகலன்கள் ஆகியவற்றை அணிந்துகொண்டு ஒரு மனிதன் நடக்கும்போது என்னென்ன சத்தங்கள் எழும்? இதையும் நன்றாக ஆராய்ச்சி செய்து, படத்தில் உபயோகித்திருக்கிறார். பொதுவாக இதுபோன்ற அனிமேஷன் படங்களில் அனிமேஷன் ஒவ்வொரு அடுக்காகத்தான் உருவாக்கப்படும். உதாரணமாக ஒரு மனிதனைக் காண்பிக்கவேண்டும் என்றால் முதலில் அவனது உடலின் ஔட்லைன், பின்னர் அந்த உடலின்மீது முடி, உடைகள், அணிகலன்கள் ஆகிய ஒவ்வொன்றுமே அடுக்கடுக்காக உருவாக்கப்படும். இதனால் ஒலியையும் அதேபோல் ஒவ்வொரு அடுக்காகவே உருவாக்கும் நிர்ப்பந்தம். அதையும் கச்சிதமாகச் செய்து முடித்திருக்கிறார் ரஸூல்.
அவரது முயற்சிகளைப் பற்றி இந்தப் பேட்டியில் விரிவாகப் படித்துக்கொள்ளலாம்.
ஒரு அனிமேஷன் படம் மிகச்சுலபமாக உருவாகிவிடும் என்ற பொதுவான நம்பிக்கையில் உண்மை இல்லை என்று சொல்வதற்காகவே ஒலியைப் பற்றி எழுதினேன். இதுபோன்ற பல அம்சங்கள் ஒன்றுசேர்ந்தால்தான் அனிமேஷன் வெற்றிகரமாக உருவாகும். நிஜத்தில் ஒரு திரைப்படம் எடுப்பதைவிடப் பலமடங்கு கஷ்டப்பட்டால்தான் அனிமேஷன் படம் எடுக்கமுடியும்.
’ராணா’ என்ற கோச்சடையான் ரணதீரன், கோட்டைப்பட்டினம் என்ற நாட்டில் இருந்து சிறுவயதில் காளிங்கபுரிக்குக் கடலில் தத்தளித்து வந்துசேர்கிறான். அந்த ஊரில் பெரும் விரனாக வளர்ந்து மன்னன் ராஜமஹேந்திரனின் நம்பிக்கைக்குப் பாத்திரமாகி, அந்த நாட்டின் தளபதி ஆகிறான். அவர்களது எதிரி நாடு கோட்டைப்பட்டினம். அந்த நாட்டின் அரசன் ரிஷிகோடகன். கோட்டைப்பட்டினத்தின் மூவாயிரம் வீரர்கள் காளிங்கபுரியில் கைதிகளாக இருக்கிறார்கள். அவர்களைக் கவனிக்கும் ரணதீரன், அவர்களுக்கு விடுதலை அளித்து அவர்களைத் தாய்நாடான கோட்டைப்பட்டினத்துக்கு எதிராகவே திருப்பிவிடுகிறான். போர் மூள்கிறது. அப்போது நடக்கும் சில சம்பவங்களால் காளிங்கபுரியின் மன்னன் ராஜமஹேந்திரன் ரணதீரனின் மீது கோபமடைகிறான். அதேசமயம் கோட்டைப்பட்டினத்தின் மன்னன் ரிஷிகோடகனுக்குமே ரணதீரனின் மீது பொறாமை கலந்த கோபம். இரண்டு மன்னர்களின் கோபத்துக்கும் ஆளாகும் ரணதீரன் யார்? அவனது நோக்கம் என்ன? அந்த நோக்கத்தை நிறைவேற்றுகிறானா என்பதே கதைச்சுருக்கம் (சுருக்கத்தைப் படித்ததும் க்ளிண்ட் ஈஸ்ட்வுட்டின் ‘A Fist Full of Dollars’ படம் போலவே இருக்கிறதே என்று தோன்றுகிறதா? அதற்கும் இதற்கும் சம்மந்தமே இல்லை).
கடைசியாக ரஜினி நடித்து எனக்குப் பிடித்த படம் – 1995ல் வெளிவந்த ‘முத்து’. அதற்கு முன்னர் ’பாட்ஷா’. முத்துவுக்குப் பின்னர் வந்த படங்கள் எதுவுமே சுவாரஸ்யமாக இல்லை (சந்திரமுகி உட்பட) என்பது என் கருத்து. ‘முத்துவுக்குப் பின்’ என்றதும் ரஜினி எக்கச்சக்கமான படங்கள் நடித்துவிட்டதாக நினைத்துவிடவேண்டாம். கௌரவ வேடங்களை விட்டுவிட்டுப் பார்த்தால், முத்துவுக்குப் பின்னர் ரஜினி 19 ஆண்டுகளில் ஹீரோவாக ஏழே படங்களில்தான் நடித்திருக்கிறார் (அருணாச்சலம், படையப்பா, பாபா, சந்திரமுகி, சிவாஜி, குசேலன், எந்திரன்). இவைகள் எல்லாவற்றிலுமே எதுவோ ஒன்று மிஸ்ஸாவதுபோலவே எனக்குத் தோன்றியது. இந்தப் படங்களை என்னால் முழுதாக ரசித்துப் பார்க்க முடியவில்லை. குறிப்பாக எந்திரன் படம். இத்தனை வருடங்கள் கழித்து இந்தப் பத்தொன்பது ஆண்டுகளில் ரஜினி நடித்து நான் ரசித்துப் பார்த்த படமாக ‘கோச்சடையான்’ படத்தைத்தான் சொல்லுவேன்.
காரணம்? ரஜினியின் ப்ளஸ் பாயிண்ட்களை கச்சிதமாகக் கோச்சடையான் capture செய்திருக்கிறது. ரஜினிக்கு ஏற்ற வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள கதாபாத்திரங்கள். ரணதீரனாகவும் கோச்சடையானாகவும் ஒவ்வொரு கதாபாத்திரத்துக்கும் ரஜினிக்கே உரிய மேனரிஸங்கள், ஸ்டண்ட்கள், நடனங்கள், வசனங்கள் என்று முழுமையாக ’முத்து’வுக்குப் பின்னர் ரஜினியை ரஜினியாகவே காட்டியிருக்கிறது இந்தப் படம் என்பது என் கருத்து (படையப்பாவில் கொஞ்ச நேரம் இது இருந்தாலும், பின்னர் வேறு ரேஞ்சில் போய்விடும். அதில் ரஜினியைப் பார்த்து அவ்வப்போது ‘வயசாயிருச்சு’ என்னும் விதத்தில் அமைந்த டயலாக்ஸ் வேறு இருக்கும். பாபாவைப் பற்றி சொல்லவே தேவையில்லை. சந்திரமுகியில் ரஜினி ஹீரோவா இல்லை நகைச்சுவை நடிகரா என்ற சந்தேகம் நீண்டநேரம் இருந்தது. சிவாஜியில் ஷங்கர் ரஜினியை வைத்துப் பல கோமாளித்தனங்களை அரங்கேற்றினார். குசேலன் & எந்திரன் – ஆளை விடுங்க சாமி).
படத்தின் ஆச்சரியம் – நாகேஷ். அவரது கதாபாத்திரம் ரஜினிக்குப் பிறகு நன்றாகவே கேப்சர் செய்யப்பட்டிருக்கிறது. வசனம் உட்பட. படத்தில் தீபிகா, சரத்குமார், ஆதி, ஜாக்கி ஷ்ராஃப் உட்பட பிறர் எல்லாருமே கௌரவ வேடம்தான். ரஜினிக்கு சரிசமமாகப் படம் முழுக்க வருபவர் நாசர் மட்டுமே. கூடவே நாசரின் கைத்தடியாக வரும் சண்முகராஜனையும் சொல்லலாம்.
படத்தின் ஒலிக்குப் பிறகு என்னைக் கவர்ந்த விஷயம் – படத்தின் காட்சிகளில் பின்னணிகள் வடிவமைக்கப்பட்டிருக்கும் விதம். படத்தின் களத்தின் பிரம்மாண்டத்தை நன்றாகவே பின்னணிகள் பிரதிபலிக்கின்றன. அதேபோல் படத்தின் பாடல்களும் இசையும் அவசியம் படத்தை சுவாரஸ்யப்படுத்துகின்றன. படத்தின் இன்னொரு அட்வாண்டேஜ் – படத்தின் நீளம். மொத்தம் இரண்டு மணி நேரத்துக்கும் குறைவு என்பதால் வேகமாகவே முடிந்துவிடுகிறது படம்.
எந்த நடிகராக இருந்தாலும் சரி – அவரது வளர்ச்சியில் சில இயக்குநர்கள் குறிப்பிடத்தக்க பங்காற்றியிருப்பார்கள். எண்பதுகளில் ரஜினிக்கும் கமலுக்கும் ஏற்ற பல படங்களை எஸ்.பி. முத்துராமன் எடுத்தார். குறிப்பாக ரஜினியைப் பிரபலப்படுத்தியவர்களில் இவர் முக்கியமானவர் (ஹிந்தியில் இதே காலகட்டத்தில் அமிதாப்பின் சூப்பர்ஸ்டார் அந்தஸ்துக்கு உயர்த்தியவர்களில் ப்ரகாஷ் மெஹ்ராவும் மன்மோஹன் தேஸாயும் முக்கியமானவர்கள்). அதே எண்பதுகளில் கமலுக்கு ராஜசேகர் கிடைத்தார். ராஜசேகருக்குப் பின் சுரேஷ் கிருஷ்ணாவும் சிங்கீதம் சீனிவாசராவும். அப்படி ரஜினிக்கு இந்தப் படத்தில் கே.எஸ். ரவிகுமார் (படத்தின் இயக்குநர் அவர் அல்ல – சௌந்தர்யா என்றபோதிலும், கதை, வசனம், திரைக்கதை ஆகியவை கே.எஸ் ரவிகுமாரின் பங்களிப்புதான்). எனக்குப் பிடித்த கடைசி ரஜினி படமான முத்துவும் ரவிகுமாரின் கைவண்ணம்தான்.
படத்தின் நெகட்டிவ் அம்சம் என்ன?
படத்தின் ஸிஜி சரியாக செய்யப்படவில்லை என்பது உண்மை.
கோச்சடையான் & Performance capture.
இந்தியாவின் முதல் பெர்ஃபார்மன்ஸ் கேப்சர் படமாகக் கோச்சடையான் வரப்போகிறது. படத்தின் ட்ரெய்லர் வந்துவிட்டது. இதைப்பற்றிச் சொல்லவேண்டும் என்றால், இதற்குமுன் வந்திருக்கும் பர்ஃபார்மன்ஸ் கேப்சர் படங்களைப் பற்றிப் பார்க்கவேண்டும். அப்போதுதான் இது என்ன ஏது என்பது தெளிவாகப் புரியும். பின்னர்தான் அது மொக்கையா சுவாரஸ்யமா என்றெல்லாம் விவாதிக்கமுடியும்.
பொதுவாக இந்தத் தொழில்நுட்பத்துக்கு அவதார்தான் எல்லா இடங்களிலும் உதாரணமாகச் சொல்லப்படும். ஆனால் க்ளாடியேட்டரிலேயே இது வந்துவிட்டது. அதற்கும் முன்னர் மம்மி. உலகின் முதல் 3d பர்ஃபார்மன்ஸ் கேப்சர் படம் (முழுதாக இதே தொழில்நுட்பத்தில் எடுக்கப்பட்டது) – போலார் எக்ஸ்ப்ரஸ். அதேபோல், லார்ட் ஆஃப் த ரிங்ஸின் ட்வின் டவர்ஸ்தான் ஆஸ்கரால் அங்கீகரிக்கப்பட்ட முதல் பர்ஃபார்மன்ஸ் கேப்சர் படம்.
ரைட். இப்போது கோச்சடையான்.
அவதாரின் பட்ஜெட் – 237 மில்லியன். அதாவது, தோராயமாக 1443 கோடி ரூ. கோச்சடையானின் பட்ஜெட், அஃபிஷியலாக 125 கோடி என்று தெரிகிறது. அந்த பட்ஜெட்டுக்கு ஏற்ற பெர்ஃபார்மன்ஸ் காப்சரிங் கன்வெர்ஷன் தான் இதில் இருக்கும்.நாம் எல்லோரும் இங்லீஷ் படங்கள் பார்த்தே ஒப்பிட்டுப் பழகிவிட்டதால், தற்போது ட்ரெய்லர் பார்த்ததும் விமர்சனம் செய்வது எளிதாக இருக்கிறது. ஆனால் இந்தியாவின் முதல் பர்ஃபார்மன்ஸ் கேப்சர் படமாக இது வரப்போகிறது என்பதை மறக்கக்கூடாது. ஒருவேளை இதைப்போன்ற படங்கள் பல வந்தபின்னர் அவதாரின் ரேஞ்சுக்கு ஒரு படம் சாத்தியமாகலாம்.
விஸ்வரூபம் படம் டிடிஹெச்சில் வரப்போவதாகக் கமல் அறிவித்ததைப்போல் இதுவும் தொழில்நுட்பத்தில் ஒரு பாய்ச்சல்தான். இந்தத் தொழில்நுட்பத்தை வரவேற்றுப் பார்க்கலாம் என்பது என் கருத்து. அஃப்கோர்ஸ் படம் மொக்கையாக இருந்தால் அதை விமர்சிக்கத்தான் போகிறோம். ஆனால் நான் சொல்லவருவது இந்தத் தொழில்நுட்பத்தைப் பற்றி.
இதனால் விரைவில் எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெமினி போன்றவர்கள் விரைவில் அதிரடியாக இணைந்துகூட நடிக்கமுடியும். தமிழர்கள் கொஞ்சம் வித்தியாசமாக சிந்திப்பார்கள் என்பதால் சில்க் ஸ்மிதாவைக் கதாநாயகியாகப் போட்டுக்கூட விரைவில் படம் வரலாம். (அவர்கள் உயிரோடு இல்லாததால் அவர்களைப் போன்றவர்களைக் கேப்ச்சர் செய்யவேண்டும்).
படம் வரட்டும். விமர்சனம் செய்வோம்.
பர்ஃபார்மன்ஸ் கேப்சரிங் அறிமுகப்படுத்தப்பட்ட 2004ல், Polar Express படத்தின் பட்ஜெட் – 165 மில்லியன் டாலர்கள். அதே பட்ஜெட்டில் அந்தக் காலகட்டத்தில் எடுக்கப்பட்டிருந்தால், அப்போது பர்ஃபார்மன்ஸ் கேப்சர் தொழில்நுட்பப் படங்கள் இந்தியாவில் வந்திருக்காததால் கோச்சடையான் இன்னும் பெரிதாகப் பேசப்பட்டிருக்கலாம். ஆனால் நாம் எக்கச்சக்கமான ஹாலிவுட் பெர்ஃபார்மன்ஸ் கேப்சர் திரைப்படங்களைப் பார்த்துவிட்டதால் கோச்சடையானின் ஸிஜி அந்த அளவுக்கு நமக்குப் பிடிக்காது. கூடவே, இந்தக் கட்டுரையின் முதல் வரியையும் கணக்கில் எடுத்துக்கொள்ளவும். இந்தியாவில் இதுதான் முதல். இப்போதுதான் வந்திருக்கிறது. இன்னும் சில ஆண்டுகளில் இந்தத் தொழில்நுட்பம் மேலும் வளர்ச்சியடையும்போது இன்னும் துல்லியமான பெர்ஃபார்மன்ஸ் கேப்சர் செய்யப்படும் என்பதில் சந்தேகமில்லை.
கூடவே, இந்தியாவில் அனிமேஷனுக்கும் கார்ட்டூனுக்கும் வித்தியாசம் தெரியாத பிரச்னையும் இருக்கிறது. இன்னுமே நம்மில் பலரும் அனிமேஷன் என்றால் அது குழந்தைகளுக்கானது என்று நினைத்துக்கொண்டிருக்கிறோம். காரணம் நம்மில் 90% மக்கள் காமிக்ஸ் படிக்காமல், தொலைக்காட்சியில் அனிமேஷன்கள் பார்க்காமல் வளர்ந்தவர்கள்தான். அதில் தவறும் இல்லை என்றாலும், இப்போதாவது அந்த வித்தியாசத்தைத் தெரிந்துகொண்டால் நல்லது. மேன்மேலும் இதுபோன்ற முழுநீள அனிமேஷன் படங்கள் இந்தியாவில் வருவதை அது இன்னும் ஊக்கப்படுத்தும்.
கோச்சடையான், அதில் இருக்கும் சில குறைபாடுகளை மீறியும் ஒரு சுவாரஸ்யமான entertainer என்பதில் எனக்கு சந்தேகமில்லை. படத்தைப் பார்த்தவர்கள் அவர்களின் கருத்தை இங்கே பின்னூட்டங்களில் சொல்லலாம்.
கோச்சடையானின் மேக்கிங் பற்றிய ஒரு வீடியோ இங்கே.
கருத்துகள்
கருத்துரையிடுக