-சரவணன் சந்திரன்
இதை ஒரு அனுபவக் குறிப்பாகவே முன்னிறுத்தத் துணிகிறேன். கட்டுரையாக வடிவமைப்பதில் சில சிக்கல்கள் இருக்கின்றன. ஏனெனில் கட்டுரை என்று வரும் போது, எல்லாத் தரப்பையும் பார்த்து ‘கும்பிடறேன் சாமி’ என்பது போன்ற சகஜமாக்கும் சில நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியிருக்கும். தமிழகத்தில் விவசாயம் என்று பேச ஆரம்பிப்பதே கத்தி மேல் நடப்பதற்குச் சமமானது. அசந்தால் அத்தனை பேரும் சேர்ந்து குத்திக் கிளறி விடுவார்கள் என்பதால்தான் அனுபவக் குறிப்பு என்று இறங்கி வர வேண்டியிருக்கிறது. ஏனெனில் அனுபவக் குறிப்பில் அனுபவங்களில் பழுது இருக்கலாம்.
அது அனுமதிக்கப்பட்டதும்கூட. அனுமதிக்கப்பட்ட அளவைத் தாண்டி ஒரு சிட்டிகை அதிகமானால்கூடச் சிக்கல்தான் என்பதையும் புரிந்தே வைத்திருக்கிறேன். கண்ணை மறைக்கும் சில தவறான தகவல்கள்கூட இருக்கலாம் என்பதால் எளிதாகக் கடந்து போய்விடுங்கள் என்று உரிமையாகவே கேட்பதற்கு வாய்ப்புக்கள் இருக்கின்றன.
நாற்பது நாட்களுக்கும் மேலாக விவசாயிகள் தலைநகரான டெல்லியில் போராடினார்கள். கோவணத்தோடு அமர்ந்தார்கள். பெண்கள் காடு கரைகளில் குளிக்கும் போது அணிவதைப் போல மாரப்பு வரை சேலையைக் கட்டிக் கொண்டு பரிதாபமாக உட்கார்ந்திருந்தார்கள்.
பல்வேறு போராட்ட வடிவங்களை அவர்கள் செயல்வடிவம் செய்து காட்டினார்கள். இதன் உச்சக்கட்டமாக எல்லோரும் சேர்ந்து சிறுநீர் குடித்தார்கள். உண்மையில் இது தேசிய அவமானம். அவர்கள் மலத்தை தின்பதற்குள் ஓடிப் போய் தடுத்துவிட்டோம் என மாநில அரசு மார்தட்டிக் கொள்ள வேண்டும். மத்திய அரசின் நெருக்கடிகளைப் பார்த்தால் விட்டால் மாநில அரசே சிறுநீர் குடித்து விடும் போலிருக்கிறது? அப்படி ஒரு நிலை உருவாகி, குடித்தால் தெரியும் வலியும் வேதனையும்.
அந்தப் போராட்டக் குழுவின் ஒருங்கிணைப்பாளரான அய்யாக்கண்ணு பல்வேறு போராட்ட வடிவ முறைகளை அறிமுகம் செய்வதில் கைதேர்ந்தவர். இதற்கு முன் தமிழகத்தில் இப்படி அவர் நிறையப் போராட்டங்களை இதேமாதிரி நடத்தியிருக்கிறார் என்பதையும் சுட்டிக் காட்ட வேண்டும்.
ஏனெனில் ஆடி கார் வைத்திருக்கிற அய்யாக்கண்ணு தமிழகத்தில் ஏன் போராடவில்லை என்று மத்திய அரசு ஆதரவு பெற்ற சில மனிதர்கள் உரக்கப் பேசிக் கொண்டிருக்கின்றனர். உண்மையில் அய்யாக்கண்ணு தெளிவாக மறுபடி மறுபடி அழுத்தமாகச் சொல்கிறார். “நாங்கள் அத்தனை விதமான போராட்டங்களையும் தமிழகத்தில் நடத்திப் பார்த்துவிட்டோம். யாரும் காது கொடுக்கவில்லை. டெல்லியில் போராடினால் கவனம் கிடைக்கும் என்பதற்காக இங்கே வந்திருக்கிறோம்” என்று அவர் சொல்வது மிகச் சரியானது.
விவசாயப் போராட்டங்கள் இல்லாத நாட்களே இல்லை என்கிற மாதிரிதானே தமிழகம் இருக்கிறது? வங்கியில் இருக்கும் வராக்கடனான ஒரு இலட்சத்து நாலாயிரம் கோடியை ஒரே நாளில் தள்ளுபடி செய்கிறது ரிசர்வ் வங்கி. வராக்கடன் வாங்கியவர்கள் எல்லாம் காணாமல் போய்விட்டார்களா? கடன் வாங்கிய ஒருத்தன் செத்த பிறகு பதினாறாம் நாள் காரியம் முடிந்தால்தான் வராக்கடன் வகையிலேயே வரும்.
ஆனால் இருப்பவர்கள் எல்லாம் வாழ்வாங்கு வாழ்பவர்கள்தானே? ஒரு டிராக்டரை பறிமுதல் செய்வதற்கு ஆள் படை அம்புகளோடு அதிகாரிகள் போய் நின்ற காட்சிகளையும் பார்த்திருப்பீர்கள்தானே? அப்படி வராக்கடன் வாத்தியார்களையும் போய் வளைத்துப் பிடிக்க வேண்டியதுதானே? நிலைமை இப்படி இருக்கையில் விவசாயிகள் கடன்களைத் தள்ளுபடி செய்யுங்கள் என்று கேட்பது நியாயம்தானே? ஒரு கண்ணில் வெண்ணையும் இன்னொரு கண்ணில் சுண்ணாம்பும் வைக்கும் முன்னுதாரணங்கள் இருக்கும் போது எல்லோரும் அதைப் பின்பற்றத்தானே விரும்புவார்கள்?
உண்மையில் மத்திய அரசு கடைசி நாள்வரை போராடிய விவசாயிகளைக் கண்டு கொள்ளவே இல்லை. பிரதமர் அவர்களைச் சந்திக்கவே மாட்டார் என்பது தெரிந்த விஷயம்தான். ஏனெனில் இன்று தமிழகத்தில் இருந்து கிளம்பி வந்து போராடிக் கொண்டிருக்கும் விவசாயிகளை, அவர்களின் போராட்டத்திற்கு அடிபணிந்து பிரதமர் சந்திப்பதை இந்த அரசு எந்திரம் விரும்பாது.
போராடினால் கிடைத்து விடும் என்கிற மனநிலையை அவர்கள் பொதுவாகவே வளர்க்க விரும்ப மாட்டார்கள். அப்படியே சந்தித்து விட்டாலும், அப்புறம் ஓவ்வொரு மாநிலத்தில் இருந்தும் இப்படிக் கூட்டம் கூட்டமாகக் கிளம்பி வருவார்கள். ’அவனைப் பாத்தேல்ல. என்னையும் பாரு’ என்பார்கள் என்பதை நினைத்து இந்த அமைப்பு அஞ்சத்தான் செய்யும். ஆட்சி நடத்துகிற எல்லோருக்கும் வரும் அடிப்படைச் சிக்கல் இது. ஆட்சியாளர்கள் நினைத்தால்கூட அதிகாரிகள் வர்க்கம் இதை ஆதரிக்காது. எப்போதுமே அதிகாரிகள் வர்க்கம் என்பது குறுக்கே போவதற்கென்றே பிறந்த பூனைகளைப் போல சங்கடத்தைக் கொண்டு வருபவர்கள்.
மத்திய அரசு இது மாநில அரசின் எல்லைக்குட்பட்டது என்பதைத் தெளிவாக உணர்த்தி விட்டது. மாநில அரசு என்ன செய்து கொண்டிருக்கிறது என்பதை எல்லோரும் 24/7 செய்தித் தொலைக்காட்சிகள் வழியாகப் பார்த்துக் கொண்டுதானே இருக்கிறோம். உள்ளே வெளியே மங்காத்தா ஆட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. யார் யாருக்கு எந்தெந்த பசையான துறையை ஒதுக்குவது எனக் கடுமையான பேச்சு வார்த்தைகள் நடந்து கொண்டிருக்கின்றன.
இரட்டை இலையை மீட்பது என சும்மா ஒப்புக்குப் பேட்டி கொடுத்துக் கொண்டிருக்கின்றனர். வளம் கொழிக்கும் துறைகளை எங்களுக்குக் கொடுங்கள் எனப் பலரும் முண்டியடிப்பதாலேயே பேச்சுவார்த்தைகளில் பிரேக் விழுந்து கொண்டிருக்கிறதே தவிர, மற்ற பிரச்சினைகள் அல்ல. மாநில அரசு கடந்த மூன்று வருடங்களாகவே எந்தவித முன்னேற்பாட்டு விவசாய நடவடிக்கைகளிலும் இறங்கவில்லை என்பதே உண்மை.
வரலாறு காணாத வறட்சி நிலவப் போகிறது என வானியல் வல்லுனர்கள் தொடர்ந்து கதறிக் கொண்டிருக்கின்றனர். பக்கத்தில் இருக்கும் தெலுங்கானாவிலும் ஆந்திராவிலும் ஏரி குளங்களை முன்னுணர்ந்து தூர்வாரி விட்டனர்.
தெலுங்கானா முதல்வர் சுமார் இருபதாயிரம் ஏரிகளுக்கும் மேல் ஒரே வருடத்தில் தூர் வாறியிருக்கிறார். ராணுவ நடவடிக்கை போல கருதிக் கொண்டு மாநிலத்தின் அத்தனை துறைகளையும் களத்தில் இறக்கி இதைச் செய்து காட்டியிருக்கிறார். அதைவிட அதிசயம் என்னவென்றால், ஆந்திராவிலிருந்து தங்களுக்கு முறைவைத்துத் தரப்படும் கிருஷ்ணா ஆற்று நீர் தங்களுக்கு வேண்டாம் என்றும் அறிவித்திருக்கிறார். இது ஏதோ அமெரிக்காவிலோ ஆஸ்திரேலியாவிலோ நடந்தால்கூட பரவாயில்லை.
நமக்கு பக்கத்தில் இருக்கும் மாநிலத்தில் நடைபெறும் இதுபோன்ற முயற்சிகளில் இருந்து பாடம் கற்றுக் கொள்ள தமிழக அரசு நிர்வாகம் முயற்சிக்கவே இல்லை. அமைச்சர்களும் மக்கள் பிரதிநிதிகளும் அப்போலாவில் குடியிருந்தார்கள் என்பது உண்மைதான். அதிகாரிகள் எங்கே போனார்கள்? அரசு நிர்வாகத்தை நடத்துவது அதிகாரிகள்தானே? நாங்கள் குளத்தை தூர் வாரப் போகிறோம் என்று கிளம்பினால், வேண்டாம் என்று எந்த அமைச்சர் கையைப் பிடித்துத் தடுக்கப் போகிறார்? உண்மையில் எல்லா தரப்பிற்கும் அக்கறையில்லை. இந்தச் சூழ்நிலையில் தமிழகத்தை விட்டு விட்டு டெல்லியில் போய் போராடாமல் என்ன செய்வார்கள்?
வருடம் தோறும் விவசாயத்திற்குப் பிரச்சினை இருக்கிறது என்பது உண்மைதான். இப்போது மட்டும் என்ன புதிதாக வந்துவிட்டது எனக் கேள்விகள் எழுகின்றன. ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு எல்லா துறைகளில் இருந்தும் மக்கள் போராட்டக் களத்திற்கு வந்துவிட்டதைப் போல இந்த விஷயத்தையும் சுருக்கிப் புரிந்து கொள்ளக்கூடாது.
உண்மையில் வரலாறு காணாத வறட்சி இங்கே நிலவுகிறது. சமீபத்தில் எங்களுடைய நிலத்தில் போர்வெல் போட்ட போது அதிர்ஷ்டவசமாக ஆயிரம் அடியில் நிலத்தடி நீர் கிடைத்தது. அந்தத் தண்ணீரைக் கண்டறிவதற்கே நான்கு இடங்களில் துளை போட வேண்டியிருந்தது. அய்யாக்கண்ணு இருபது ஏக்கர் நிலம் வைத்திருக்கிறார் என்பதால் அவர் பணக்கார விவசாயி என்று சொல்கிறார்கள்.
ஒரு இடத்தில் இருபது ஏக்கர் வைத்திருக்கிற விவசாயி ஒருத்தர் தன்னுடைய நிலத்தில் பதினைந்து இடங்களில் நிலத்தடி நீருக்காக போர்வெல் தோண்டியிருக்கிறார். ஒன்றில் மட்டுமே கொஞ்சமாகத் தண்ணீர் கிடைத்திருக்கிறது. இனி அவரிடம் இருபது ஏக்கர் இருந்தாலும் இரண்டு ஏக்கரில்கூட விவசாயம் செய்ய முடியாது என்பதுதான் நிதர்சனமான நிலைமை.
தண்ணீருக்குப் பேர் பெற்ற பொள்ளாச்சி பகுதிகளில் ஆயிரத்து இருநூறு அடி தோண்டியும் தண்ணீர் இல்லை என்கிற செய்திகளும் வருகின்றன. கடந்த வாரம் தன்னுடைய நிலத்தில் மூன்று இடங்களில் தோண்டியும் தண்ணீர் வராத சோகத்தில் விவசாயி ஒருத்தர் மாரடைப்பால் செத்துப் போயிருக்கிறார். இதற்கு முன்னர் இதே மாதிரி தண்ணீர் இல்லாத, கருகிய பயிர்களைக் கண்ட நிலையில் இருநூறிற்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை மற்றும் தீடீர் மரணங்களைச் சந்தித்தனர்.
எல்லோரும் காதல் தோல்வியில் அரளி விதையை அரைத்துக் குடித்துவிட்டனர் என்று சொன்னாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. தமிழகம் முழுக்க இதுதான் நிலைமை. எங்கேயும் தண்ணீர் இல்லை. தண்ணீர் வருவதற்கான வாய்ப்புகளும் வெகு தொலைவில் இருக்கின்றன. மொட்டை வெயிலில் வானத்தை வெறித்துப் பார்த்துக் கொண்டிருக்க முடியுமா?
செடிகளுக்கு மனிதர்களுக்கு வருவதைப் போல அம்மை நோய் வந்திருக்கிறது என்று இந்தத் துறை சார்ந்தவர்கள் வர்ணிக்கிறார்கள். நீரில்லாமல் வருகின்ற குறைபாடு அது என்று விளக்குகிறார்கள். பழங்கள் செடியிலேயே காய்ந்து விடும். கொய்யா, மா, எலுமிச்சை என எல்லா செடிகளும் காய்ந்து கருகியிருக்கின்றன. திண்டுக்கல் பகுதிகளில் கொத்துக் கொத்தாக அத்தனை செடிகளும் நீரில்லாமல் கருகி விட்டன.
செடிகளுக்கு மனிதர்களுக்கு வருவதைப் போல அம்மை நோய் வந்திருக்கிறது என்று இந்தத் துறை சார்ந்தவர்கள் வர்ணிக்கிறார்கள். நீரில்லாமல் வருகின்ற குறைபாடு அது என்று விளக்குகிறார்கள். பழங்கள் செடியிலேயே காய்ந்து விடும். கொய்யா, மா, எலுமிச்சை என எல்லா செடிகளும் காய்ந்து கருகியிருக்கின்றன. திண்டுக்கல் பகுதிகளில் கொத்துக் கொத்தாக அத்தனை செடிகளும் நீரில்லாமல் கருகி விட்டன.
இன்னும் இரண்டு மாதங்களில் மிச்சமிருப்பவைகளும் கருகி விடுமோ என்கிற பயத்தில் தினம்தோறும் கதறிக் கொண்டிருக்கின்றனர். ஒரு லோடு தண்ணீரில் விலை 3600 ரூபாய். பத்து ஏக்கர் நிலத்திற்குத் தினமும் பத்து லோடுகளாவது தேவைப்படும். தினமும் 36000 ரூபாய் செலவழித்து விவசாயம் பண்ணுகிற நிலையிலா விவசாயிகளின் நிலை இருக்கிறது சொல்லுங்கள்? நெல் உள்ளிட்ட பாரம்பரிய பயிர்களை விளைவிக்கும் விவசாயிகளின் நிலை இதைவிடக் கொடுமை என்பதையும் பதிவு செய்தாக வேண்டியிருக்கிறது. இந்த நிலையில்தான் விவசாயிகள் இப்போது களத்திற்கு வந்திருக்கின்றனர். எதிர்காலத்தில் எதிர்பார்க்கப்படும் பருவ மழைகள் சரியாகப் பெய்தால்தான் இந்த நிலை மாறும் என்று அந்தத் துறை சார்ந்தவர்கள் சொல்கிறார்கள்.
இப்போது சொன்னதெல்லாம் ஒரு தரப்பிற்கு வக்காலத்து வாங்கி இன்னொரு தரப்பை முன்னே நிறுத்தி குற்றம் சாட்டிய வகையிலானது. இந்தப் பிரச்சினை ஏன் வந்தது? இதில் மத்திய மாநில அரசுகளுக்குப் பங்கிருக்கிறது என்பதையும் மறுக்க முடியாது. உண்மையில் இந்தப் பிரச்சினை இப்படிப் பூதாகரமாக வெடித்ததற்கு விவசாயிகளும் காரணம்தான் என்பதை ஒரு விவசாயியாகச் சொல்கிறேன். அதனால்தான் ஆரம்பத்திலேயே இதை அனுபவக் குறிப்பு என்று சொன்னேன். நீர் மேலாண்மையில் விவசாயிகள் ஒரு சிறு துரும்பைக் கூடக் கிள்ளிப் போடவில்லை. சில இடங்களில் விதிவிலக்காக சில முயற்சிகளைச் செய்திருக்கலாம் என்பதையும் மறுக்க முடியாது.
ஆனால் பெரும்பான்மை பற்றித்தான் இந்த இடத்தில் சுட்டிக் காட்ட வேண்டியிருக்கிறது.
நூறுநாள் வேலைத் திட்டம் உண்மையிலேயே நல்ல திட்டம்தான். பொருளாதரத்தில் நலிவடைந்த பிரிவிற்கு அரசே கொடுக்கும் உதவித் தொகை போன்ற திட்டம் அது என்பதில் சந்தேகமேயில்லை. அந்தச் சொற்பத் தொகையை வைத்துக் கொண்டு ரேஷன் அரிசி பொங்கிச் சாப்பிடும் ஏராளமான தாய்மார்களை பயணங்களில் சந்தித்திருக்கிறேன்.
நூறுநாள் வேலைத் திட்டம் உண்மையிலேயே நல்ல திட்டம்தான். பொருளாதரத்தில் நலிவடைந்த பிரிவிற்கு அரசே கொடுக்கும் உதவித் தொகை போன்ற திட்டம் அது என்பதில் சந்தேகமேயில்லை. அந்தச் சொற்பத் தொகையை வைத்துக் கொண்டு ரேஷன் அரிசி பொங்கிச் சாப்பிடும் ஏராளமான தாய்மார்களை பயணங்களில் சந்தித்திருக்கிறேன்.
ஆனால் அந்தத் திட்டத்தால் ஏதேனும் பணிகள் நடந்தனவா? உண்மையில் கண்மாய்கள், ஏரி, குளங்களைத் தூர்வாருவதுதான் அந்தத் திட்டத்தின் முதன்மையான நோக்கம். அப்படி எங்காவது பெரியளவில் நடந்திருக்கிறதா என்பதை மனசாட்சியுடன் உற்றுப் பாருங்கள். இந்தத் திட்டத்தால் விவசாயத்திற்கான தொழிலாளர் தட்டுப்பாடு வந்தது தனிக் கதை. ஆக விவசாயத்தையும் கெடுத்தது. விவசாய பணிகளுக்கும் உதவவில்லை அந்தத் திட்டம். தங்களுக்குக் கிடைத்த திட்டத்தின் வழியாக எந்தவித வேலைகளையும் பார்க்காமல் அரசுகளை மட்டும் குற்றம் சாட்டுவது சரியான போக்குதானா?
ஏரி குளங்களை அரசு தூர்வாரவில்லை என்றால், இந்தத் திட்டத்தின் வழியாக எல்லோரும் சேர்ந்து செய்திருக்கலாமே? ஒரு சில இடங்களில் அப்படிச் செய்தும் இருக்கிறார்களே? ஆனால் அதையெல்லாம் செய்யவில்லை. சொட்டு நீர் பாசன வாய்ப்புகளை ஏற்படுத்தித் தர அரசு மானியம் தருகிறது. பண்ணைக் குட்டைகளை தங்களுடைய நிலங்களில் தோண்டித் தருவதற்கு அரசு மானியம் தருகிறது. சில இடங்களில் பதிவு செய்தால் இலவசமாகவே வந்து தோண்டித் தருகிறார்கள். நாமே தோண்டினால்கூட எடுக்கிற மண்ணிற்கு காசு தருவதற்கும் ஆட்கள் இருக்கிறார்கள்.
ஆனாலும் இதையெல்லாம் செய்யவில்லை. பொதுவாகவே தமிழக விவசாயிகளை நெருங்கிப் பார்த்தால், நிலத்தோடு போராடும் குணத்தை அவர்கள் மெல்ல மெல்ல கைவிட்டு வருகின்றனரோ என்கிற சந்தேகமும் அச்சமும் நிலவுகிறது. விவசாய நிலங்களின் பரப்பு சுருங்கிக் கொண்டே வருவதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன. வெளியில் இருந்து வரும் அழுத்தங்கள் நிறைய இருக்கின்றன. ஆனால் அடிப்படையான இந்த மனநிலை மாற்றத்தைப் பதிவு செய்வதற்கு சற்றுச் சங்கடமாகத்தான் இருக்கிறது. விவசாயிகள் என்றால் எதையும் எதிர்த்துப் பேசவே கூடாது என்கிற நிலை இருப்பது உண்மையில் நல்லதில்லை.
எந்தத் தொழிலில் பிரச்சினை இல்லை என்று சொல்லுங்கள்? எனக்குத் தெரிந்த நண்பர் ஒருத்தர் பால் கம்பெனி நடத்துகிறார். போகிற இடத்தில் எல்லாம் ஏமாற்றுகிறார்கள். இருபது பால் பாக்கெட்டுகளை ஒரு கடையில் போட்டால் பத்து பாக்கெட் பால் கெட்டு விட்டது எனக் கூசாமல் பொய் சொல்கிறார்கள் என ஒப்பாரி வைத்தார். கடலில் எண்ணை கொட்டிய விவகாரத்தினால் எழுந்த பயத்தின் காரணமாக கடந்த இரண்டு மாதங்களாக மீன் வியாபாரம் அடியோடு படுத்து விட்டது. பத்தாயிரம் ரூபாய்க்கு விற்றுக் கொண்டிருந்த இடத்தில் வெறும் முன்னூறு ரூபாய்க்கு வியாபாரம் ஆனது.
இப்படிச் சொல்லிக் கொண்டே போனால், தமிழகத்தில் எல்லா தொழில்களும் ஏதாவது ஒரு கட்டத்தில் பெருஞ்சிக்கல்களைச் சந்தித்துக் கொண்டு தானிருக்கின்றன. எல்லோரும் விவசாயிகளைப் போல புலம்புகிறோம். கதறக்கூடச் செய்கிறோம். அதேசமயம் வேறு வழியில்லாமல் மாற்று ஏற்பாடுகளை அதே தொழில்களுக்குள்ளேயே கண்டுபிடித்து நகர்கிறோம் என்பதைச் சுட்டிக் காட்ட வேண்டியிருக்கிறது.
விவசாயத் துறையில் அது நிகழ்கிறதா என்று கேட்டால், ஒரு பத்து சதவீதம் நிகழ்கிறது என்றுதான் தயக்கமாகச் சொல்ல வேண்டியிருக்கிறது.
விவசாயத் துறையில் அது நிகழ்கிறதா என்று கேட்டால், ஒரு பத்து சதவீதம் நிகழ்கிறது என்றுதான் தயக்கமாகச் சொல்ல வேண்டியிருக்கிறது.
இடையில் மஹாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள பீஜாப்பூர் வரை பயணம் செய்து அங்குள்ள விவசாயிகளைச் சந்தித்த போது புதிய திறப்புகளைக் காண முடிந்தது. சொட்டு நீர் பாசனம் வழியாக அவர்கள் நிலத்தோடு இன்னமும் மூர்க்கமாகப் போராடிப் பலன்களைப் பெற்றுக் கொண்டிருக்கின்றனர். சரளைக் கல் இருக்கிற நிலத்தை தமிழகத்தில் சீந்தக்கூட மாட்டார்கள். ஆனால் அங்கே அந்த நிலத்தில் மாதுளைச் செடிகளை சொட்டு நீர் பாசனம் வழியாக மிகச் சிறப்பாக வளர்த்தெடுக்கிறார்கள். இங்கேயும் அது மாதிரியான நிலை வர வேண்டும் என்பதுதான் எதிர்பார்ப்பாக இருக்கிறது.
தமிழ்நாட்டில் விவசாயிகளுக்கு ஆயிரம் சிக்கல்கள் இருக்கின்றன என்பது உண்மைதான்.
தமிழ்நாட்டில் விவசாயிகளுக்கு ஆயிரம் சிக்கல்கள் இருக்கின்றன என்பது உண்மைதான்.
அதேசமயம் விவசாயத்திலிருந்து விலகும் இந்த மனநிலைதான் மிக ஆபத்தான சிக்கல் என்பேன். விவசாயத்தின் மீது நம்பிக்கை இழப்பது. நிலத்தோடு போராடும் குணத்தை மெல்ல மெல்ல இழப்பது ஆகிய இரண்டு காரணிகள் மிக முக்கியமானவை. இந்த இரண்டு மனநிலைக்குக் காரணம் அரசுகள் மட்டுமல்ல என்பதை எப்போது ஒத்துக் கொள்கிறோமோ அப்போது செழிப்பின் வாசனை எல்லா நிலங்களிலும் பரவக்கூடும்.
-
சரவணன் சந்திரன்
எழுத்தாளர் .இயக்குநர்
கருத்துகள்
கருத்துரையிடுக