இப்போது ரெய்டு என்று நடந்து கொண்டிருப்பதெல்லாம், ஏதோ பங்காளித் தகராறு என்று கருதி வேறு வேலையைப் பார்க்கப் போவதுதான் புத்திசாலித்தனம். இந்த வெள்ளாமை ஒருபோதும் வீடு வந்து சேராது..!
150 கோடி ரூபாய் சொளையான பணம், 200 கிலோ ஒளிர்கிற சொக்கத் தங்கக் கட்டிகள், கத்தை கத்தையான ஆவணங்கள் என தொடர்ந்து சில நாட்களாகச் செய்திகள் கூவிக் கொண்டிருக்கின்றன. ஆவணங்களில் என்ன இருக்கப் போகிறது? அசையாத நிலபுலன்கள் குவிந்து கிடக்கப் போகின்றன. இது ஏதோ அதிமுக ஆட்சியில் மட்டுமே நடப்பது போல ஒரு தோற்றமும் இயல்பாகவே விதைக்கப்படுகிறது. உண்மை நிலவரத்தை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாயெல்லாம் பல்லாகப் போட்டு உடைத்த காட்சியையும் செய்தியில் பார்க்க முடிந்தது. அவரது வாய்கொள்ள முடியாத இளிப்பு, அனைத்தையும் சொல்லாமல் சொல்லி விட்டது. அவரே கைதேர்ந்த ஒரு குத்தகைதாரர்தானே..?

இப்போது குறிவைக்கப்பட்டிருக்கிற முதல்தர அரசு ஒப்பந்தக்காரரான செய்யாத்துரைக்கு திமுக ஆட்சிக் காலத்திலும் பல கோடிகள் மதிப்பிலான எட்டு குத்தகைகள் ஒதுக்கப்பட்டதாக போகிற போக்கில் அவர் சொன்னார். அவர் சொன்ன எல்லா விஷயங்களிலும் உண்மை இருந்தது. நீண்ட நாட்களுக்குப் பிறகு, அல்லது முதன்முறையாக அவர் மனம் விட்டு உண்மையைப் பேசினார் என்ற வகையில் சந்தோஷமே. போகிற போக்கில் அவர் அள்ளித் தெளித்ததை விரித்துப் பார்த்தால், இதன் பின்னால் இருக்கிற தொழில் பின்னல் சிலந்தி வலையைப் போல விரியும். இந்த விஷயத்தில் தமிழகத்தை ஏற்கனவே ஆண்ட திமுகவும் விதிவிலக்கில்லை என்பதைப் புரிந்து கொண்டால்தான் மேற்கொண்டு இந்த விவகாரத்தின் அத்தனை தொடர் சங்கிலிகளையும் உணர முடியும். உங்களில் கல் எறியாத எவரோ என்றெல்லாம் இந்த இடத்தில் விவரம் புரியாமல் உதாரணங்களை அள்ளி வீச முடியாது. ஏனெனில், எல்லோருமே இந்தக் குளத்தில் பெரிய பாறாங்கற்களைத் தூக்கிப் போட்டிருக்கிறார்கள்.
கடந்த சட்டமன்றத் தேர்தல் நடந்து கொண்டிருந்தபோது, செய்யாத்துரையின் ஊரான அதே அருப்புக்கோட்டையைச் சேர்ந்த மூன்றாம் தர குத்தகைதாரர் ஒருத்தருடன் சென்னையில் பேசிக் கொண்டிருந்தபோது அவருக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. தொலைபேசியில் அழைத்தவர், அதிமுக சார்பில் போட்டியிட்டவர். அவர் பேசி முடித்ததும் விஷயம் என்ன என்ற போது, “இருபது லட்ச ரூபாயை நூறு ரூபா சில்லறையா மாத்தி ஏதாவது வண்டில போட்டு அனுப்பச் சொல்றாரு. தேர்தல் செலவுக்காக கேக்குறாரு” என்றார் அந்த மூன்றாம்தர குத்தகைதாரர். மூன்றாம் தர ஆட்களிடமே இவ்வளவு என்றால், முதல் தர ஆட்களிடம் எவ்வளவு என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். அவர் உங்களது கட்சியில்லையே என்றபோது, “இந்த விவகாரத்தில கட்சிப் பிரிவினை எதையும் பாக்க மாட்டோம் தம்பி. எங்காளுகளுக்கும் கொடுத்திருக்கேன். யார் வந்தாலும் எங்க மாவட்டத்தில எனக்கு வேலை ஒதுக்கிருவாங்க” என்றார். இந்த விஷயத்தைப் பொறுத்தவரை குத்தகைதாரர்களுக்கு கறுப்பு, சிவப்பு, மஞ்சள், ஊதா என எல்லாமும் ஒன்றுதான். கம்யூனிஸ்ட்கார்கள் உண்மையிலேயே இந்த விஷயத்திலும் பாவம்தான்.

குத்தகையை இட்டார் பெரியார்; இடாதார் சிறியோர் அவ்வளவுதான் நூலிலை வித்தியாசம். அதே தேர்தல் முடிந்து முடிவுகள் வருவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பாக திமுகவின் உயர் மட்ட ஆட்களுடன் அதே சென்னையில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தேன். ஆட்சிக்கு வந்தவுடன் யாருக்கு மணல் குத்தகையைக் கொடுப்பது என்று அவர்கள் பேசிக் கொண்டிருந்தார்கள். அதிமுக அரசில் மணல் வியாபாரத்தை நடத்தியவருக்கே திரும்பவும் தருவதாக முடிவிற்கு வந்தார்கள். இத்தனைக்கும் அந்த நபர் தோட்டத்திற்கு மிகவும் நெருங்கியவர் என அறியப்பட்டவர். “யாரா இருந்தா என்ன..? அவர்ட்ட கொடுக்கல் வாங்கல் சரியா இருக்கு. வாரா வாரம் கேட்கிற முறையில செட்டில் பண்ணிடுறாரு” என்பதுதான் அவர்களுடைய பதிலாக இருந்தது. இதுதான் சகிக்க முடியாத கள யதார்த்தம். இப்போது ஊழலுக்கு எதிராக குரல் கொடுக்கிறேன் என்று கிளம்பியிருப்பதையெல்லாம் லூலாயி என்கிற ரீதியில் எடுத்துக் கொண்டு கடந்து விட வேண்டும். விவரம் புரியாமல் கம்பைத் தூக்கிக் கொண்டு யாராவது உடன் பிறப்புகள் கிளம்பி வந்தால், அவருடைய எண்ணை வாங்கி பத்திரமாக வைத்துக் கொள்ளுங்கள். அடுத்து அவர்களுடைய ஆட்சி வரும்போது ஏதாவது சிபாரிசுக்குப் போகலாம் என்பதால் பகைத்தும் கொள்ளாதீர்கள்.
சமீபத்தில் ஒரு செய்தி படித்தேன். திமுக எம்எல்ஏக்களுக்கு, அவர்களது தொகுதியில் எட்டு கோடி ரூபாய் அளவிற்கு ஒப்பந்த வேலைகளைச் செய்ய, எடப்பாடி தலைமையிலான அரசு மறைமுகமாக வேலைகளை ஒதுக்கி கொடுத்திருக்கும் செய்தி அது. அந்த ஒப்பந்த வேலைகளில் அதிமுகவினர் தலையிடக்கூடாது என்பதுதான் எழுதப்படாத ஒப்பந்தம். எட்டுகோடியை ஒதுக்கி, அதில் முப்பது சதவீதத்தை அவர்கள் எடுத்துக் கொள்ள வழி ஏற்படுத்துவதன் ஊடாக எதிராளியின் பாத்திரத்திலும் தங்கக் கஞ்சியை ஊற்றுகிற ஏற்பாடு அது. அதுமாதிரியான ஒப்பந்தங்களை நம்முடைய கட்சி எம்எல்ஏக்கள் எடுக்கக்கூடாது என திமுகவின் மேல்மட்டம் சொல்லுமானால், அவர்கள் தயங்காமல் தங்களுக்குத் தோதாக செயல்படும் ஒருத்தரைத் தேர்ந்தெடுத்து விடுவார்கள் என்பதுதான் முகத்தில் அறைகிற உண்மை. இதெல்லாம் தெரிந்தும், வாசல்படிக்கு முன்னால் நின்று கொண்டு சத்தம் விடுவதையெல்லாம் விவரம் தெரிந்தவர்கள் நம்பத் தயாராக இல்லை.

இந்த இருவர் மட்டுமா இதில் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள்..? ஒவ்வொரு ஆட்சி அமையும் போதும் அவர்களோடு நட்பில், கூட்டணியில் இருப்பவர்களுக்கும் ஒப்பந்தப் பங்கு போவது என்பது அடிப்படை விதி. கூட்டணிப் பேச்சுவார்த்தையில் இதுவும் அடக்கம் என்பதை போயஸ் கார்டன், அறிவாலயம் பக்கம் சுற்றிய மனசாட்சி உள்ளவர்கள் அறிவார்கள். ஒருதடவை திமுகவோடு கூட்டணியில் இருந்து முறித்துக் கொள்வதற்கு முன்பு பாமக நிறுவனர் சொன்ன கூற்றொன்று புகழ்பெற்றது. “ஒரு ஆயா போஸ்டிங்கூட பண்ணித் தர மாட்டேங்கறாங்க” என அவர் வெளிப்படையாகவே சொன்னது எல்லா பத்திரிகைகளிலும் வந்தது. அப்படியென்றால் என்ன..? அரசு காரியங்களில் தங்களுக்கான பங்கைத் தரவில்லை என்பதுதான் அர்த்தம்.
பல்வேறு அரசு ஒப்பந்தங்கள், பணி இடமாறுதல், புதிய பணி வாய்ப்பு இவற்றைச் செய்து தருவது என்பது ஒரு இணை வணிகம் இங்கே. பல்லாயிரம் கோடி ரூபாய் புழங்குகிற வணிகம். ஐம்பது கோடி ரூபாய் கப்பம் கட்டி விட்டு அடுத்த ஆட்சி வருகிற வரை காத்திருந்தவர்களையெல்லாம் நிறைய பார்த்திருக்கிறேன். எல்லா வணிகத்திலும் இருப்பதைப் போல இதிலும் போலிகள் உண்டு. வேலூரைச் சேர்ந்த அதிமுக அமைச்சர் ஒருவர், நர்சிங் கல்லூரி உரிமம் வாங்கித் தருகிறேன் என்று சொல்லி பத்து கோடி ரூபாயை வாங்கி வைத்துக் கொண்டு, வேலையையும் செய்யாமல் இழுத்தடித்தார். கொடுத்த நண்பர் போய் கேட்டபோது, துப்பாக்கியைக் காட்டி மிரட்டினார். திமுகவைச் சேர்ந்த முன்னாள் மின்சார அமைச்சரின் மச்சானிடம் இதே மாதிரி ஐந்து கோடி ரூபாய் கொடுத்து விட்டு அதை திருப்பி வாங்க நடையாய் நடந்தவரையும் எனக்கு தெரியும்.

இதுபோன்ற அரசு வேலைகளை எடுத்துச் செய்பவர்கள் எல்லோருமே ஏதோ ஒரு அரசியல் கட்சியின் பொறுப்பாளர்களின் உறவினர்களாகத்தான் இருப்பார்கள். அப்படி இருப்பவர்களால் மட்டுமே முதல் தர குத்தகைகளை எடுக்க இயலும். எடப்பாடியின் சம்பந்தி செய்யாத்துரை என்றால், அறிவாலயத்தில் வேறு ஒருத்தர் இருப்பார்; அவ்வளவுதான் வித்தியாசம். மாட்டிக் கொள்கிறபோது மட்டுமே, விஷயம் சந்தி சிரிக்கும். மாட்டிக் கொள்ளவில்லை என்பதற்காக, சந்தியில் நின்று விவரம் புரியாமல் சிரித்துக் கொண்டிருக்கக்கூடாது. பூமராங்கிற்கு, திருப்பி வருகிற பழக்கம் இருக்கிறது என்பதை மறந்துவிடக்கூடாது.
மேல் மட்டத்திலிருந்து அடிமட்டம் வரை பரவியிருக்கிற, உடனடியாக களையெடுக்க முடியாத இணை வணிகம் இது. இதில், புரோக்கர்கள் என்கிற லேயர்கள் இருக்கின்றன. எல்லா நேரங்களிலும் அரசியல்வாதிகளை மட்டுமே குற்றம் சாட்டிவிட முடியாது இல்லையா..? ஒதுக்கப்படுகிற ஒப்பந்தங்களுக்கான பணத்தை பெறுவதற்கு அதிகாரிகளுக்கு இரண்டு சதவீதம் தர வேண்டும். இல்லாவிட்டால், காசோலை காலுக்குக் கீழே கிடக்கும். இன்ன அதிகாரிக்கு இன்ன தொகை கொடுத்து விடுங்கள் என அமைச்சர்களே அழைத்தும் சொல்லி விடுகிற நேர்மையான ஏற்பாடும் உண்டு. அரசாங்கத்தில் இருக்கிற எல்லா துறைகளிலும் வெகு இயல்பாக நடந்து கொண்டிருக்கும் விஷயத்தை ஏதோ சந்திர மண்டலத்தில் நடப்பது போலச் சித்தரிப்பது விஷயத்தின் ஆழத்தை மூடி மறைக்கிற முயற்சியே.

பொதுப்பணித்துறைதான் என்றில்லை... சத்துணவுத் துறை, மின்சாரத் துறை, போக்குவரத்துத் துறை என சகல துறையிலும் இந்த மறை வணிகம் தங்கு தடையில்லாமல் நடந்து கொண்டிருக்கிறது. பிற்படுத்தப்பட்டோர் நலத் துறையையெல்லாம் பசையில்லாத துறை என்பார்கள். ஆனால், அங்கேகூட மொத்தமாக பிளக்ஸ் அடிக்க, இத்தனை சதவீதம் காசு கொடுக்க வேண்டும் என்கிற முறை இருக்கிறது. எதற்குமே உருப்படாத விளையாட்டுத் துறையில் உபகரணங்களை மொத்தமாக அரசிற்கு தருவதற்கு இதே மாதிரி தர வேண்டும். ஒட்டுமொத்தமும் இப்படித்தான் நடக்கிறது என்கிற போது, ஒட்டுமொத்தமான மாற்றம் என்று சொல்வதெல்லாம் சிறுவர்த்தனமான அரசியல் சித்து விளையாட்டு.
இதுமாதிரி சிலர் மீது நடவடிக்கை எடுப்பதன் வழியாக, ஊழலுக்கு எதிரான கட்சியைப் போல பாஜக தன்னைக் காட்டிக் கொள்வதையும் வெளிச்சம் போட்டுக் காட்ட வேண்டும். அதானி யார்..? கொஞ்சம் பெரிய சைஸ் சிவந்த செய்யாத்துரை. சிகப்பாக இருப்பதால் பொய் சொல்ல மாட்டான் என்றெல்லாம் சொல்லி விடமுடியுமா..? நாளையே பாஜக ஆட்சி அமைத்தால் என்ன நடக்கும்..? செய்யாத்துரை போய், கொஞ்சம் மூக்குச் சிவந்தவர்கள் இதே காரியத்தை தலைமைச் செயலகத்தில் செய்வார்கள். இப்போதே ஆங்காங்கே செய்வதில்லையா..? தலைமைச் செயலகம் பக்கமாக பாஜக ஆதரவு பெற்ற புதிய குத்தகைதாரர்கள் சுற்றிக் கொண்டிருப்பதாகவும் விவரம் தெரிந்தவர்கள் சொல்கிறார்கள்.

ஒரு வாதத்திற்காக தமிழகம் முழுக்க இருக்கிற ஒப்பந்தக்கார்கள் எல்லோரையும் ஒரே நாளில் நெருக்கினால் என்ன நடக்கும்..? ஒருத்தரும் டெண்டர் எடுக்க வர மாட்டார்கள். தலைமைச் செயலரும் அவருடைய மச்சானும்தான் போய் சாலை போட வேண்டும். ஐந்து சதவீதமாக இருந்த கமிஷன் தொகை இப்போது நாற்பது சதவீதம் வரை வந்து விட்டதாகவும் சொல்கிறார்கள். அது உண்மையா என்றும் தெரியவில்லை. இந்த சதவீதத்தில் அதிகாரிகளுக்கான ஒதுக்கீடு இருக்கிறதா, இல்லையா..? அதனால்தான் சொல்கிறேன். செய்யாத்துரை என்பதெல்லாம் ஒரு சின்ன உதாரணம்தான். தமிழகம் முழுக்கத் தோண்டிப் பார்த்தால், இன்னும் மிளிர்கிற தங்கக் கட்டிகளைப் பொறுக்கி விட முடியும். இந்த வணிகத்தைப் பொறுத்தவரை, எல்லா மாநிலங்களும் தங்கச் சுரங்கமே.
பார்ட்டியொன்றில் எல்லோரும் வியக்கும் கோடீஸ்வரர் ஒருத்தரைச் சந்தித்தேன். அவர் யார் என்று கேட்டபோது, வடமாநிலங்களில் கொசுக்கு மருந்தடிக்கிற காண்டிராக்டர் என்றார்கள். செய்யாத்துரையெல்லாம் அவர் காலில் விழுந்து ஆசிர்வாதம்தான் வாங்க வேண்டும். ஏனெனில், அவர் பத்தாயிரம் செய்யாத்துரையின் பலம் கொண்டவர். எல்லோரும் தங்களை இந்த விஷயத்தில் தரமான, நயம் எலுமிச்சை ஊறுகாயாகக் காட்டிக் கொள்ள முயல்வதை ஒருபோதும் நம்பிவிடாதீர்கள். ஒருவகையில் எல்லோரும் ஒரே கருஞ்சட்டியில் ஊறிய கசக்கிற நார்த்தங்காய்கள்தான். எலுமிச்சை நேர் வணிகம் என்றால், இந்தத் துறையில் நார்த்தங்காய் என்பது இணை வணிகத்திற்கான குறியீடு. நார்த்தங்காயை ஒரு உதாரணத்திற்காகவே சொல்லியிருக்கிறேன். அதைத் தவறாகச் சொல்லவில்லை. தனி மனிதரை எளிதாகப் போட்டுச் சாய்த்து விடலாம். ஆழமாக ஓங்கி வளர்ந்திருக்கிற இணை வணிகத்தைத் துளி அளவிற்குக்கூட அசைத்துப் பார்க்க முடியாது. அசைக்கிறோம் என்று சொல்லிக் கிளம்புவதெல்லாம் கண்ணா மூச்சி ஆட்டம்தான் தவிர வேறொன்றுமில்லை. இப்போது ரெய்டு என்று நடந்து கொண்டிருப்பதெல்லாம் ஏதோ பங்காளித் தகராறு என்று கருதி வேறு வேலையைப் பார்க்கப் போவதுதான் புத்திசாலித்தனம். இந்த வெள்ளாமை ஒருபோதும் வீடு வந்து சேராது..!
கருத்துகள்
கருத்துரையிடுக