BY
சர்க்கார் திரைப்பட சர்ச்சை ஒரு வழியாக முடிந்துள்ளது. இந்த சர்ச்சையில் சந்தடியில்லாமல் 200 கோடிகளை வாரிச் சென்றுள்ளனர் கேடி சகோதரர்கள்.
யாருக்கும் வெட்கமில்லை என்றே சொல்ல வேண்டியதாக உள்ளது.
இன்று தமிழ்த் திரைப்பட உலகில் முன்னணியில் உள்ள இரண்டு குதிரைகள் என்றால் அது அஜீத் மற்றும் விஜய் என்று தெளிவாக சொல்லலாம். அஜீத் தனது அரசியல் ஆசைகளை வெளிப்படையாக கூறியதில்லை. ஆனால் விஜயோ, தனது பாக்ஸ் ஆபீஸ் வசூல் தகுதியின் காரணமாக, முதல்வர் கனவோடுதான் இருக்கிறார். அவரை விட அவர் தந்தை சந்திரசேகர் உள்ளாட்சித் துறை அமைச்சர் கனவோடு இருக்கிறார். இதன் காரணமாகத்தான் தனது ரசிகர்கள், ரசிகர் மன்றங்கள் என்ற பெயரில் செய்யும் கூத்துக்களை, விஜய் மவுனமாக ரசித்து வருகிறார்.
தமிழ்த் திரையுலகில் முதலிடத்தில் இருப்பதால், எவ்வளவு விரைவாக முடியுமோ, அத்தனை கோடிகளை சம்பாதிக்க வேண்டும் என்று நினைப்பது இயல்பு. பந்தயத்தில் ஜெயிக்கும் குதிரை மீதுதானே பணம் கட்டுவோம். ஆனால், பந்தயத்தில் முன்னணியில் இருக்க வேண்டும் என்பதற்காக, அரசியலை அதில் கலந்து, பார்வையாளர்களை பைத்தியக்காரனாக்குவதுதான் அயோக்கியத்தனம். அதைத்தான் விஜய் தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறார்.
ஒரு வழியில் விஜய், ரஜினியை பின்பற்றுகிறார் என்றும் சொல்லலாம். 1996 முதல், ரஜினி இந்த பார்முலாவைத்தானே கடைபிடித்து வருகிறார்.
விஜய், அஜீத் போன்ற ஸ்டார் அந்தஸ்து உள்ள நடிகர்களுக்கு கதை பண்ணுவது அத்தனை எளிதல்ல. இந்த வயதில், அவர்கள் கல்லூரியில் காதல் செய்பவர்களாக காட்ட முடியாது. இயல்பான ஒரு சாதாரண கதாநாயகனாகவும் காட்ட முடியாது. ஆங்கிலத்தில் Larger than life என்று சொல்லுவார்களே. அது போன்ற பிம்பத்தை கொண்டுள்ள இந்த நடிகர்கள், அந்த பிம்பத்துக்கு எந்த வகையிலும் பழுது நேராத கதைகளை தேடுகிறார்கள். ஹாலிவுட்டைப் போல எந்த கதையாக இருந்தாலும், நல்ல கதையாக நடிக்க தயார் என்று கூற முன்னணி நடிகர்கள் தயார் இல்லை.
50 பேரை அநாயசமாக ஒரே அடியில் வீழ்த்தும் நாயகர்களாகவே திரையில் தோன்ற விரும்புகிறார்கள். கடந்த 10 ஆண்டுகளாக விஜயின் படங்கள், தொடர்ச்சியாக இதே வகையில்தான் இருந்து வருகிறது.
இப்படி உருவானதுதான் சர்க்கார். சர்க்கார் திரைப்படத்தை தயாரித்தது கேடி சகோதரர்களின் சன் பிக்சர்ஸ் நிறுவனம். சில ஆண்டுகளாகவே, பிரபலமான நடிகர்களின் திரைப்படத்தில் சில காட்சிகளையோ, சில வசனங்களையோ, அல்லது கதையையோ வைத்து, சர்ச்சைகளை உருவாக்கும் வழக்கம் அதிகரித்து வருகிறது. விஜயின் மெர்சல் திரைப்படத்தில் கூட, ஜிஎஸ்டி குறித்த ஒரு வசனத்தை வைத்து, காவிக் கூட்டத்தினர் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி, பணம் செட்டில் ஆனதும் அமைதியாகினர்.
அதே போன்றதொரு சர்ச்சையை இந்த திரைப்படத்திலும் உருவாக்கினால் படத்தின் வசூலுக்கு அது உதவும் என்பதை கேடி சகோதரர்கள் நன்றாகவே உணர்ந்திருந்தனர். இதை விஜய் நன்றாக பயன்படுத்திக் கொண்டார். விஜய்க்கு இன்றைய தேவை பணம். அதற்காக எத்தகைய வேடமும் பூண அவர் தயங்க மாட்டார். திரைப்படங்களில் பன்ச் டயலாக் பேசும் விஜய், தலைவா பட வெளியீட்டுக்கு சிக்கல் என்றதும், கொடநாட்டில் தங்கியிருந்த ஜெயலலிதாவை சந்திக்கச் சென்று, அது முடியாமல் போய், படத்தின் தலைப்பில் இருந்த Time to Lead என்பதை எடுக்க ஒப்புக் கொண்டு, ஜெயலலிதாவின் காலில் விழாத குறையாக கெஞ்சி ஒரு வீடியோ வெளியிட்டார். விஜயின் துணிச்சலெல்லாம் தன் வருமானத்துக்கு பங்கம் நேராத வரை மட்டுமே. அதனால்தான், இதோ அரசியலுக்கு வரப் போகிறேன், நாளை வருகிறேன் என்று பாவலா காட்டிக் கொண்டிருக்கிறார். இப்படி பாவலா காட்டினால்தான், அவரின் விசிலடிச்சான் குஞ்சு ரசிகன், விஜய்க்கு கட்அவுட் வைப்பான். பால் ஊற்றுவான். நாளை நாம் உள்ளாட்சித் துறை அமைச்சராகி விடலாம் என்ற கனவோடு, குடும்பத்தை விட்டு விட்டு விஜயின் பின்னால் சுற்றுவான்.
கேடி சகோதரர்களை பொருத்தவரை, எதில் எடுத்தாலும், லாபம், லாபம், மற்றும் லாபம் மட்டுமே. ஆனால் தீட்டிய மரத்தையே பதம் பார்க்கத் தயங்காதவர்கள்தான் கேடி சகோதரர்கள்.
தொண்ணூறுகளின் தொடக்கத்தில் சன் டிவி தொடங்க பெரும் தொகை தேவைப்பட்ட நிலையில், இந்தியன் வங்கியிடம் கடன் கேட்டு அணுகுகிறார்கள். இப்போது போல, அப்போது கேபிள் தொலைக்காட்சித் துறை பெரிய அளவில் இந்தியன் வங்கி கடன் தர முன்வரவில்லை. அப்போது, உடன்பிறப்புகள் உழைப்பில் திரட்டப்பட்ட திமுக அறக்கட்டளையின் நிதியை, மந்தைவெளியில் உள்ள கும்பகோணம் சிட்டி யூனியன் வங்கியில் அடமானம் வைத்து, கடன் வாங்கி தொடங்கப்பட்டதுதான் சன் டிவி.
கட்சிக்காக கட்டப்பட்ட அறிவாலயத்தையே தங்கள் அலுவலகத்துக்காக ஆக்ரமித்தவர்கள்தான் கேடி சகோதரர்கள். இப்படி திமுகவை, தங்கள் நலனுக்காக முழுமையாக பயன்படுத்திக் கொண்ட மாறன்கள்தான், கருணாநிதியையே கோபப்படுத்தினார்கள். சர்வே வெளியிட்டதெல்லாம் பிற்காலத்தில். அதற்கு முன்பாகவே, செய்திகளில் கருணாநிதியின் அறிக்கைகளுக்கு உரிய முக்கியத்துவத்தை அளிக்க மாட்டார்கள். கலைஞர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகள் குறித்த செய்திகளை வெளியிட மாட்டார்கள். பல நேர்வுகளில் கலைஞர், சன் டிவி செய்தி ஆசிரியர்களை அழைத்து கடுமையாக திட்டியுள்ளார். ஒரு சில நேர்வுகளில், சன் டிவி அலுவலகத்துக்கே வந்து கடுமையாக தன் கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
ஆனால் கேடி சகோதரர்கள் அதை கண்டுகொள்ளவே மாட்டார்கள். 3 ஏப்ரல் 2006 அன்று, சன் டிவி பங்குகள் முதன் முறையாக பங்குச் சந்தையில் வெளியிடுவதற்கு முன்னால், கலைஞர் குடும்பம் சன் டிவியில் செய்திருந்த முதலீட்டுக்காக ஒரு தொகையை கேடி சகோதரர்கள் வழங்கினர். அவர்கள் வழங்கிய தொகை மிகக் குறைவு. ஆனால் அவர்கள் அளித்த தொகை, கலைஞர் குடும்பம் செய்த முதலீட்டை விட கணிசமாக அதிகம் என்பதால், யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. ஆனால் அந்த முதலீட்டின் அசல் மதிப்பு என்ன என்பது கேடி சகோதரர்களுக்கு தெரியும் சன் டிவியின் IPO வெளியான சமயத்தில் நிர்ணயம் செய்யப்பட்ட தொகை, 865 ரூபாய். 24 ஏப்ரல் 2006 அன்று பங்குச் சந்தையில் சன் டிவி பங்குகள் பட்டியலிடப்பட்டதும், அது அன்று முடிந்த தொகை 1465 ரூபாய். இதற்கு பிறகுதான் கருணாநிதி குடும்பத்துக்கு தாங்கள் கடுமையாக ஏமாற்றப்பட்டுள்ளோம் என்பதே தெரிகிறது.
இதற்கு பின்னர்தான் தினகரனில் அழகிரிக்கு செல்வாக்கு இல்லை என்று சர்வே வெளியிட்டதும், அஞ்சா நெஞ்சனின் ரவுடிகள், தினகரன் அலுவலகத்தில் மூன்று ஊழியர்களை எரித்துக் கொன்றதும்.
அப்போதுதான் கருணாநிதி, கேடி சகோதரர்களின் உண்மையான முகத்தையே புரிந்து கொள்கிறார். அதற்கு பிறகு அவசர கதியில் தொடங்கப்பட்டவைதான் கலைஞர் டிவி, கலைஞர் செய்திகள், சிரிப்பொலி எல்லாம். அதன் பிறகு, கலைஞரின் “இதயம் இனித்ததும், கண்கள் பனித்ததும்” வரலாறு.
இவ்வாறு இதயம் இனித்த அந்த இடைபட்ட காலத்தில்தான் 2ஜி ஊழல் வெளியாகியது. ஆ.ராசாவுக்கு முன் தொலைத் தொடர்புத் துறை அமைச்சராக இருந்தவர்தான் தயாநிதி மாறன். அவருக்கும் 2ஜி ஊழலில் தொடர்பு உள்ளது என்று செய்திகள் வெளியான தருணம். ஊழலுக்கு மொத்த காரணமும், ஆ.ராசாதான் என்று தினந்தோறும் செய்திகளை வெளியிட்டு, 2ஜி ஊழலை தமிழகத்தில் ஊதிப் பெரிதாக்கியதே சன் டிவிதான். ஆனால், 2ஜி ஊழலை தொடங்கி வைத்ததே தயாநிதி மாறன்தான். ஆனால், எந்த விவகாரத்திலும் சிக்காமல், தப்பித்துக் கொள்வதில், கேடி சகோதரர்கள் கில்லாடிகள். தயாநிதி மாறனுக்கு 2ஜி ஊழலில் உள்ள தொடர்பு குறித்த சவுக்கு கட்டுரை.
2006ல் திமுக ஆட்சி வருவதற்கு முன்னால், ஜெயலலிதா ஆட்சி காலத்தில், தமிழகத்தில் கேபிள் விநியோகம் செய்ததில் இரு நிறுவனங்கள் முன்னணியில் இருந்தன. மும்பையை சேர்ந்த ஹாத்வே நிறுவனம் அதில் ஒன்று. ஹாத்வே நிறுவனம், தமிழகத்தில் கணிசமான இணைப்புளை வைத்திருந்தது. தமிழகத்தில் முதன் முறையாக ஆப்டிக் ஃபைபர் இணைப்புகளை பதிக்க தொடங்கியிருந்தது.
திமுக ஆட்சிக்கு வந்த உடனேயே, கேடி சகோதரர்கள் ரவுடித்தனத்தில் இறங்கினார்கள். ஹாத்வே நிறுவனத்தின் கேபிள்கள் அறுத்து எறியப்பட்டன. சென்னை மாநகராட்சியை வைத்து, ஆப்டிக் பைபர் பதிக்க ஹாத்வே நிறுவனத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டதால், அந்த நிறுவனம் தங்கள் கடையை காலி செய்து விட்டு தமிழகத்தை விட்டு வெளியேறியது.
கேடி சகோதரர்கள் மற்றும் கருணாநிதி குடும்பத்தினர் இணையாமல் இருந்த சமயத்திலேயே சென்னை மாநகராட்சியின் அனுமதியே இல்லாமல் சென்னை நகர் முழுவதும் கேபிள்களை பதித்தவர்கள்தான் கேடி சகோதரர்கள். இது தொடர்பாக கேடி சகோதரர்களின் நிறுவனமான கல் கேபிள் மீது எப்ஐஆர் கூட பதிவு செய்யப்பட்டிருந்தது.
கேடி சகோதரர்களின் எஸ்சிவி நிறுவனம் தமிழகம் முழுக்க ஆக்டோபஸ் போல பரந்து விரிந்து, ஒட்டு மொத்த கேபிள் விநியோகத்தை கையில் எடுத்துள்ளதை அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதா உணர்ந்தார்.
கேடி சகோதரர்களின் ஏகபோகத்தை ஒழிக்க, ஜனவரி 2006ல், கேபிள் துறையை அரசுடைமையாக்க சட்டம் கொண்டு வந்தார். கருணாநிதிக்கு முக்கியத்துவம் அளித்து செய்திகள் வெளியிட மறுத்து, திமிர்த்தனமாக நடந்து கொண்ட கேடி சகோதரர்களுக்கு அப்போது திமுக தேவைப்பட்டது. கருணாநிதி தேவைப்பட்டார். ஜெயலலிதா சட்டப்பேரவையில் அறிமுகப்படுத்திய கேபிளை அரசுடைமையாக்கும் சட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கக் கூடாது என்று கருணாநிதியை அழைத்துக் கொண்டு அவசர அவசரமாக 22 ஜனவரி 2006 அன்று தயாநிதி மாறன், அப்போதைய ஆளுனர் சுர்ஜித் சிங் பர்னாலாவை சந்தித்தார். இணைப்பு. அது சட்டமாகும் முன்பாகவே தேர்தல் அறிவிக்கப்பட்டதால் அது சட்டமாகவில்லை.
2006 சட்டப்பேரவை தேர்தலில் திமுவின் தேர்தல் அறிக்கையில் இருந்த கவர்ச்சிகரமான அறிவிப்பு என்னவென்றால், இலவச கலர் டிவி. எங்கள் வீட்டில் டிவி இல்லாத காரணத்தால், நான் சிறிய வயதில், பக்கத்து வீட்டில் 10 பைசா கொடுத்து ஒளியும் ஒலியும் பார்த்துள்ளேன். ஆகையால், ஏழை மக்களுக்கு இலவச கலர் டிவி வழங்கப்படுவது எனக்கு மகிழ்ச்சியே.
ஆனால், இந்த அறிவிப்பின் பின்னால், கேடி சகோதரர்களின் லாப வெறி இருந்தது என்பது மறுக்க முடியாத உண்மை. 2006 திமுக ஆட்சியை பிடிப்பதற்கு முன்னதாகவே, கேபிள் விநியோகத்தில் ஏறக்குறைய ஏகபோகமாக இருந்தனர். ஒரு கோடி இலவச கலர் டிவி என்றால் ஒரு கோடி புதிய கேபிள் இணைப்பு அல்லவா ? கேடி சகோதரர்கள் அடையப் போகும் லாபத்தை நினைத்துப் பாருங்கள். 2006 முதல் 2011ல் திமுக ஆட்சி முடிவடையும் வரை, சுமங்கலி கேபிளைத் தவிர்த்து தமிழகத்தில் ஒரே ஒரு கேபிள் ஆப்பரேட்டர் கூட இல்லை என்பதை உறுதியாக சொல்லலாம்.
ஏகபோகத்தினால் வரும் எல்லா பிரச்சினைகளும், கேடி சகோதரர்களின் கேபிள் விநியோக ஏகபோகத்திலும் வந்தது. ஒரு சேனல் சுமங்கலி கேபிளில் தெரிய வேண்டுமென்றால், அந்த சேனல் வருடத்துக்கு சுமங்கலிக்கு கட்ட வேண்டிய தொகை, 2010ல் 8 கோடி ரூபாய். 8 கோடி கட்டினால் சேனல் தெரியும். கட்டாவிட்டால் சேனல் யாருக்குமே தெரியாது. இப்போது போல அப்போது யு ட்யூப் பிரபலமடையவில்லை. அது மட்டுமல்ல, 8 கோடி கட்டினாலும் முக்கியமாக ஒரு கண்டிஷன் உண்டு. கேடி சகோதரர்களுக்கு எதிரான எந்த செய்தியையும் அந்த சேனல் ஒளிபரப்பக் கூடாது. ஒரு முறை, கேடி சகோதரர்கள் டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜரானதை காண்பித்த காரணத்துக்காக, இன்று வரை, புதிய தலைமுறை சேனல், சுமங்கலியில் தெரிவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இது தவிர திமுக ஆட்சியில் சன் பிக்சர்ஸ் என்ற திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி, திரைத் துறை முழுக்க தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தார்கள் கேடி சகோதரர்கள். திமுக ஆட்சி காலத்தில் மட்டும் சன் பிக்சர்ஸ் தயாரித்த திரைப்படங்களின் எண்ணிக்கை 20. அதன் பிறகு தயாரித்துள்ள திரைப்படங்கள், சர்க்கார் உட்பட 4 மட்டுமே. ஏன் அதிமுக ஆட்சியில் திரைப்படம் தயாரிக்கவில்லை ? பணமில்லாமல் போய் விட்டதா ? ஏன் என்றால், ஆட்சி அதிகாரம் இல்லை என்பதால், தியேட்டர் ஓனர்களை மிரட்டி படத்தை ஓட வைக்க முடியாது. காலியான தியேட்டர்களை பயன்படுத்தி கருப்பை வெள்ளையாக்க முடியாது என்பதே. அவர்கள் தயாரித்து, கடுமையான தோல்வியடைந்த, சுறா, திண்டுக்கல் சாரதி, மாசிலாமணி போன்ற திரைப்படங்கள் கூட, டாப் டென் திரைப்படங்களில் முதலிடத்தில் உள்ளது என்று கூசாமல் நிகழ்ச்சி வெளியிடும் அளவுக்கு மனசாட்சி இல்லாத கீழ்த்தரமானவர்களே கேடி சகோதரர்கள்.
எந்த இலவச டிவி திட்டத்தினால் கோடிக்கணக்கில் லாபமடைந்து கொழித்தார்களோ, அதே இலவச திட்டத்தை கேவலமாக சித்தரித்து காட்சிகளை உருவாக்கி, வசனங்களை புகுத்தி, அதை பெரிய சர்ச்சையாக்கி, அதன் மூலம் தங்கள் லாபத்தை பெருக்கிக் கொள்வதே கேடி சகோதரர்களின் நோக்கம்.
இது குறித்து கருத்து தெரிவித்த டெல்லி பத்திரிக்கையாளர் ஒருவர், “ஒரு குப்பையை எப்படி விற்று லாபம் அடைவது என்பதை மாறன் சகோதரர்களிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டும். இத்திரைப்படத்தை சன் குழுமம் மற்றும் சன் பிக்சர்ஸ் தயாரிக்காமல் இருந்திருந்தால், 2018ன் மிகப் பெரிய தோல்விப் படமாக சர்க்கார் அமைந்திருக்கும். இத்திரைப்படம் அத்தனை சிறப்பான படமல்ல. ஆனால், அதை மார்க்கெட்டிங் செய்த விதம்தான் கவனத்தில் கொள்ள வேண்டியது. விஜயை மோசமானவராக சித்தரிக்க வேண்டும் என்ற சதித் திட்டம் உள்ளதோ என்று சந்தேகிக்க தோன்றுகிறது. இந்த திரைப்படம் மோசமென்றால் அத்துனை மோசம். இத்திரைப்படத்தில் லாஜிக் இல்லை, திரைக்கதை இல்லை, கோர்வை இல்லை. குப்பையிலிருந்து பொறுக்கிய பல்வேறு காட்சிகளை தொகுத்தது போல இருக்கிறது.
மக்கள் நலத் திட்டங்களின் முக்கியத்துவத்தை உணர்ந்து, மக்கள் நலனுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்திய கருணாநிதி, தனது கல்லறையில் புரண்டிருப்பார். கருணாநிதியின் குடும்பத்தை சேர்ந்தவர்களே நலத் திட்டங்களை குறை கூறுவது காலத்தின் கோலமே.
பணத்துக்காகவும், லாபத்துக்காகவும், சன் குழுமமும், மாறன் சகோதரர்களும் எதையும் செய்யத் துணிவார்கள் என்பதற்கு சர்க்கார் ஒரு சிறந்த உதாரணம்” என்றார் அந்த பத்திரிக்கையாளர்.
அவர் கூறியது போலவே, சர்க்கார் சர்ச்சையில் தொலைக்காட்சிகளும், சமூக வலைத்தளங்களும், மயிர் பிளக்கும் விவாதங்களை நடத்திக் கொண்டிருக்க ஆங்கிலத்தில் Laughing all the way to the Bank என்று சொல்வார்கள். அது போல, கோடிகளை கோணிகளில் சுருட்டி பதுக்கிக் கொண்டிருக்கிறார்கள் கேடி சகோதரர்கள்.
உதவி வரைத்தன்று உதவி உதவி
செயப்பட்டார் சால்பின் வரைத்து.
கலைஞர் மு.கருணாநிதி உரை:
உதவி என்பது, செய்யப்படும் அளவைப் பொருத்துச் சிறப்படைவதில்லை; அந்த உதவியைப் பெறுபவரின் பண்பைப் பொருத்தே அதன் அளவு மதிப்பிடப்படும்.
கருணாநிதி பண்பில்லாதவர்களுக்கு உதவி செய்து விட்டார்.
கருத்துகள்
கருத்துரையிடுக