நெடுநாட்களுக்குப் பிந்தைய சந்திப்பில் தோள்தொட்டுப் பேசும் பள்ளிக் கால நண்பனின் சிநேகம், மழை விட்ட பிறகும் மரத்தடியில் சொட்டிக்கொண்டிருக்கும் தூறல், குழந்தைகள் ஊருக்குப் போன நாளில் வீடெங்கும் சிதறிக் கிடக்கும் பொம்மைகளின் ஏக்கம் சுமந்த மவுனம் என வாழ்க்கையின் ஏதோவொரு கணத்தை ஒவ்வொரு வரியிலும் பொதிந்து வைத்து நம் வாசிப்புக்காகக் காத்திருக்கின்றன நா. முத்துக்குமாரின் கவிதைகள்.
1997-ல் ஆரம்பித்து இதுவரை வெளியான முத்துக்குமாரின் நான்கு தொகுப்புகளின் கவிதைகளையும் உள்ளடக்கி வெளிவந்திருக்கிறது ‘நா.முத்துக்குமார் கவிதைகள்’.
பொதுவாகவே, நா.முத்துக்குமாரின் கவிதைகள் காட்சிவயமானவை. ‘என் திரைப்பாடல்களிலும் ஹைக்கூவின் காட்சித்தன்மையையும், அனுபவ அடர்த்தியையும் சரிவிகிதக் கலவையாய் இணைத்து என்னுடைய பாணியாக நான் பயன்படுத்துகிறேன்…’ என்று அவரே சொல்லியிருப்பது அவரது கவிதைகளுக்கும் பொருந்துவதாகவே இருக்கிறது. ஒவ்வொரு கவிதைக்குள்ளும் ஊடாடும் காட்சிகள் நம் பார்வையில் இதுவரை கவனம் பெறாத ஏதோவொரு காட்சியையும் கதையையும் நமக்குச் சொல்லிப் போகின்றன.
முத்துக்குமாரின் கவிதைகளில் இடம்பெறும் சிரிக்காத அப்பாக்களும், தேவையில்லாமல் மாமியார் முணுமுணுப்பதாகக் கடிதம் எழுதும் அக்காக்களும், நண்பனின் தங்கை திருமணத்தில் குடித்துவிட்டு வாந்தி எடுக்கும் நண்பர்களும், ஆடுசதை தெரிய கோலம் போடும் எதிர்வீட்டுப் பெண்ணும், வகுப்பில் ஒன்றாய்ப் படித்த காயத்ரியும் அவருக்கு மட்டுமல்ல, நமக்கும் வாய்த்திருக்கிறார்கள்.
முத்துக்குமாரின் கவிதைகளில் தனித்த கவனம் பெறுபவர்களாகப் பெண்கள் இருக்கிறார்கள். அதிலும் உழைக்கும் வர்க்கத்தைச் சேர்ந்த பெண்கள். கள்ளுக்கடையில் சால்னா விற்கும் பெண், அய்யர் தெருவில் கருவாடு விற்கும் பெண், படம் வரைந்து தரச் சொல்லும் தங்கைகள் என உயிர் சுமந்த மனுஷிகளாக வலம்வருகிறார்கள்.
“இரவுக்காட்சி படம் முடிந்து / ஆற்று மணலில் நடந்து வருகையில் / பனியில் நடந்த காலடிகள்’ என ஹைக்கூவில் பூனைப் பாதம் பதிந்து நடக்கும் கால்கள், சில நேரங்களில் கோபங்கொண்டு எட்டியும் உதைக்கின்றன.
மொத்த கவிதைகளையும் வாசித்து முடிக்கையில், நாம் எழுதியிருக்க வேண்டிய கவிதைகளை, நம் அனுபவம் தொட்டு நா. முத்துக்குமார் எழுதியிருப்பதான உணர்வே மேலெழுகிறது.
நா.முத்துக்குமார் கவிதைகள்
விலை: ரூ.225/-
பட்டாம்பூச்சி பதிப்பகம், அய்யப்பா பிளாட்ஸ்,
45/21, இருசப்பா தெரு, விவேகானந்தர் இல்லம்,
சென்னை 600 005.
தொடர்புக்கு: 9841003366
கருத்துகள்
கருத்துரையிடுக