புதிய தலைமுறை பிறந்து நேற்றோடு ஓராண்டு நிறைவடைகிறது. இன்று இரண்டாமாண்டு தொடக்கம்!
வாழ்த்தும் நெஞ்சங்களுக்கு நன்றி! இன்று முழுவதும் சுவாரஸ்மான பல நிகழ்ச்சிகள் வரிசைகட்டுகின்றன. ஒரு தகவல் எப்படிச் செய்தியாகிறது, செய்தியாளர்களின் அனுபவங்கள், ஓராண்டில் வந்த வரைகலைப் பதிவுகள், ஒவ்வொரு பிரிவிலும் என்னென்ன நடக்கிறது, செய்திசேகரிக்கச் செல்லுமிடங்களில் நிகழ்ந்த குறும்பு நிகழ்வுகள் அனைத்தும் ஒளிபரப்பாகின்றன. நீதிமன்றச் செய்தியாளர் சுப்பையாவின் சேட்டைகள் அமோகம்!!!
இப்படி அனைத்துமே வெளிப்படையாக ஒளிபரப்பாவதால் நானும் சற்று மனம் திறக்கிறேன் இங்கு! முகநூல் பக்கங்களில் என் இதயம் தேடும் நண்பர்களே ! வாழ்க்கையை எழுதிப்பார்க்கும் எண்ணம்வந்ததுண்டு பலநாள். இன்றுதான் எழுத்துக்களாய் உதிர்கின்றன! வார்த்தைகளை வடிவாக அளந்துவைக்கும் மனநிலையிலில்லை இப்போது. எழும் எண்ணங்கள் எழுத்துக்களாய் என்னிடம் சரிபார்த்துக்கொள்ளாமல் விரல்வழி இறங்கி இங்கு அமர்கின்றன. இருகண்களால் மட்டுமல்ல இதயத்தாலும் படித்துவிடுங்கள். புரிந்துவிடும். இல்லையெனில் உதிரிப்பூக்களாய்த்தானிருக்
சிவகாசியில் தாமரை என்ற தொலைக்காட்சியில்தான் தொடங்கியது எனதிந்த வாழ்க்கை!.. மாவட்ட அளவில் அரசியல்வாதிகளைப் பேட்டியெடுக்கும் நிகழ்ச்சி. கண்கள் முதலில் கேமரா பார்த்தது இங்குதான். ஊதியமென்பதெல்லாம் இல்லை. பின்னர்,,,,,
சென்னைக்கு வெறும் பெட்டியோடு வந்தேன். மஞ்சள் பை காலம் முடியாமலிருந்திருந்தால் அதோடுதான் வந்திருப்பேன்! அறையில் என் உறவும் நட்புமான வெங்கடகிருஷ்ணன், ஸ்ரீதர் இருவருடன் சென்னை வாழ்க்கை தொடங்கியது. சோர்ந்துபோகும்போதெல்லாம் சிவகாசியிலிருந்து திராவிடர்கழகப் பெரியவர் மணியம் அவர்களின் தபாலட்டை வரும். அநேகமாக ஒருவரிதான் எழுதி அனுப்புவார். உதாரணமாக “ தலைநகரை விலைபேசு “ என்று இருக்கும். அறையில் நாங்கள் மூவரும் கணிப்பொறியியலாளர்கள். ஒருவன் வெரிசான், இன்னொருவன் டி.சி.எஸ். நான் மல்லாந்துபடுத்தபடி காப்மேயர், ஷிவ்கெரா, மனம்தரும் பணம் என்று படித்துக்கொண்டிருப்பேன். அவர்களுக்குப் புத்தி ஜெயித்தது. எனக்குத் தமிழாசிரியரின் இரத்தம். இரத்தம் ஜெயித்தது. அத்தனை தொலைக்காட்சிகளிலும் விண்ணப்பித்தேன். இரவெல்லாம் கண்டதும் படிப்பேன். கடன் வாங்கப் பிடிக்காது. இரண்டு வேளைதான் உண்பேன். ஆனால் மகிழ்ச்சியாகத்தான் இருந்தேன்.
விண் டிவியில் பேட்டியாளனாக வாய்ப்புகிடைத்தது. அப்போது பொறுப்பிலிருந்த பாக்கர் மற்றும் ஜைனுலாபுதீன் தோளில் தட்டிக்கொடுத்தனர். கொஞ்சம் வளர்ந்தேன். வாரமொரு நிகழ்ச்சி. ஊதியம் 200 ரூபாய். ஆறுமாதங்கள் கழித்து 250 ஆயிற்று! அதாவது மாதம் 1000 சம்பாதித்தேன். நண்பர்களின் அப்போதைய ஊதியம் மாதம் 20,000! ஓராண்டு அங்கிருந்தேன்.
பிறகு பொதிகைத் தொலைக்காட்சியில் நேர்காணல். என்னுடையதுதான் இறுதி விண்ணப்பம். 1200 பேர் வந்திருந்தனர். அடேயப்பா என்று மலைத்துப்போனேன் . இன்றும் திராவிடர் கழகத் தோழர் பிரின்ஸிடம் கேட்டால் கண்ணீர் வரச் சிரிப்பார். அவரும் உடனிருந்தார். எதிர்வரிசையில் ஓர் அழகான பெண். தந்தையோடு! முகம் பார்க்க வெட்கம். (எனக்குத்தான்!) எழுந்து நடந்தால் உள்ளே இருட்டில் பெரிய நடராஜர் தாண்டவச் சிலை. போய் உட்கார் என்று மிரட்டுவது போல் பிரம்மாண்டம்! திரும்பிவந்தேன். அவளது தந்தை மட்டும் எழுந்து எங்கோ நடந்தார். கொஞ்சம் பார்த்துக்கொண்டேன் அவளை! குதூகலமாயிருந்தது. மற்றவர்கள் “ தொழிலாளி” என்ற சொல்லைப் பலமுறை உச்சரித்துக்கொண்டிருந்தனர்
குமுதத்திலிருந்து ஒரு நாள் அழைப்பு! நான் தான் ஒன்று விடாமல் விண்ணப்பித்துக்கொண்டே இருப்பேனே! நேர்காணலுக்கு எட்டிப்பார்த்த அறையில் என் கனவுநாயகன் ரபிபெர்னார்ட்! ரைட்டு சம்பளமே கேட்கக் கூடாது. இவரோடு பேசிக்கொண்டிருந்தாலே போதும்! என்றுதான் சேர்ந்தேன். இணையதளப் பொறுப்பாளனாக முழுநேர ஊழியனாக்கிக்கொண்டார்கள். 25,000 மாத ஊதியம். 2006ல். ஒவ்வொரு நாளும் அவரிடமிருந்து பாடங்கள் கற்றேன். நினைத்தபோது நினைத்ததைப் பேசுவார். சமயங்களில் கடிந்துகொள்வார். சிலநேரம் அடிமனத்து இரகசியங்களை மென்மையாகப் பகிர்வார். மனதளவில் ஒரு சேவகனாய் அவருக்கு நான் விருப்பத்தோடிருந்தேன். நிர்வாக ஆசிரியர் வரதராஜன் அவர்களும் என்மீது மிகுந்த அன்பு காட்டினார். குமுதம் ஆசிரியர் ப்ரியா கல்யாணராமன், நிர்வாகிகள் அனுராதா, சீனிவாச வரதன் என்று அனைவரும் தோள்தட்டிக்கொடுத்தனர். இன்னும் கொஞ்சம் வளர்ந்தேன். ஒன்பது பேர் வேலையை ஒருவன் பார்த்தேன். இணையத்தளம் குறித்த நடுப்பக்க விளம்பரம் வெளிநாடுகளுக்கு மட்டும் செல்லும். அதில் ரபிசார் போட்டோவை வைத்து லே அவுட் செய்திருப்பேன். அவர் அதை எடுத்துவிட்டு என் போட்டோவை வைத்து அழகுபார்ப்பார். (அவர் நாடாளுமன்ற உறுப்பினரானபோது நானடைந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. அவர் இனி என்ன ஆவார் என்பதும் எனக்குத் தெரியும்!) பிறகு ரபிசாரும் வெளியேறினார். நானும் அங்குள்ள அரசியலால் வெளியேறவேண்டியதாயிற்று மகிழ்ச்சியோடு! அறை நண்பர்கள் 25000 த்திலிருந்து 30000 த்தை நெருங்கிக்கொண்டிருந்தனர்.
விடைபெற்ற நாளன்று நேராக ஒரு சலூனுக்கு சென்றேன். அடுத்த மூன்று மாதங்களில் என் வாழ்நாள் நண்பர்கள் பிரபாகரன், மணிவண்ணன், நாரயணசாமி, எத்திராஜ் ஆகியோரோடு சேர்ந்து 20 இலட்சம் ரூபாய் செலவில் ஒரு பார்லர் வைத்தேன். உறவுகள் மிரண்டன. உற்றவர்கள் தலையில் கைவைப்பதா மூக்கில் விரல் வைப்பதா என்று குழம்பினர். என் தாய் தந்தையர் எப்போதும் என்மீதான நம்பிக்கையை விடவில்லை. ஒருவேளை நீ ஏராளமாய்த் தொலைத்தாலும் இறுதிவரை சாப்பாடு போட நானிருக்கிறேன் என்றார் ஒருநாள். அவர் எப்போதாவதுதான் அப்படிப் பேசுவார். மற்றபடி கலாய்த்துக்கொண்டே இருப்பார். அந்த ஒருநாளைக் கெட்டியாக மனதில் வைத்துப் பல சோதனைகளைக் கடந்துவிடுவேன். பார்லர் எனக்குச் சாப்பாடு போடத்தொடங்கிற்று. ஆனால் இலாபமில்லை. நண்பர்கள் ஒரு கேள்வியும் கேட்காதவர்கள்.
மீடியா4யூ என்ற ஒரு நிறுவனத்தைத் தொடங்கினேன். நண்பர் ஒருவர் நிர்வாகம். எனது பணம். என் மனம் கவர்ந்த அழகன் கிருஷ்ணா டா வின்ஸி கிரியேட்டிவ் பார்ட்னர்! விஜய் தொலைக்காட்சியில் ஒரு சுதந்திரதினத்தன்று ஏழரை இலட்ச ரூபாய் செலவில் நிகழ்ச்சி வெற்றிகரமாக ஒளிபரப்பாயிற்று! கிருஷ்ணாவின் வசீகர எழுத்து. போட்டிபோட்டுக்கொண்டு எழுதினேன். பஞ்ச் டயலாக்குகள் மட்டும் என்னுடையவை! நம்மாழ்வார்: நம்மை ஆள்வோர் நம்மீது காட்டும் கரிசனத்தை விட நம்மாழ்வார் நம்மீது காட்டும் கரிசனம் அதிகம். கேரம் இளவழகி: சிவப்புக் காய்கள் கண்டு நடுங்கும் கருப்பு விரல்களுக்குச் சொந்தக்காரி அல்போன்ஸ்ராய் காட்டுயிர் ஒளிப்பதிவாளர்: இவரும் வேட்டைக்காரர்தான் தூக்குவது துப்பாக்கியல்ல கேமரா என்று எழுதியதெல்லாம் ஹிட்! நானே திரையில் தோன்றியிருக்கலாமென்றாலும் கோபிநாத்தை வைத்துச் செய்தோம். யார் எழுதியது நன்றாக இருக்கிறதென்று அவர் சொன்னதை வந்து சொன்னார்கள். ஒளிபரப்பாயிற்று. தலைநிமிர்ந்த தமிழர்கள் என்பது தலைப்பு. அறையில் நண்பர்கள் விசிலடித்தார்கள். பிறகு நிறுவனம் வீணாய்ப் போயிற்று. என் பணம் 5 இலட்சம் போயிற்று. காரணமொன்றுமில்லை. குடி குடியைக் கெடுக்கும். குடும்பத்தில் ஒருவர் குடித்தாலே போதுமே. பார்ட்னர்ஷிப்பும் குடும்பம்தானே! காயம் பட்ட வேதனையில் ரவுடி போல் திரிந்தேன். சீண்டியவர்களையெல்லாம் அடிக்கக் கைகள் ஓங்கின. கண்கள் சிவந்தன. தலை சூடாயிற்று. தூக்கமற்றுப் போனேன். வறண்டே கிடந்தது தொண்டை. காவல்நிலையம் சென்று போராடினேன். லஞ்சம் கேட்ட சப்.இன்ஸ்பெக்டரோடு மோதினேன். கமிஷனரிடம் போனேன். மடக்கி டி.எஸ்.பி.யைச் சந்திக்க அனுப்பப்பட்டேன். தேநீர் கொடுத்து உபசரித்தார். எதிர்த்தரப்பின் வேலையெனப் புரிந்தது. மனித உரிமை ஆணையம் வரை சென்றேன். நாளாகும்போல் தெரிந்தது. சென்னைக்கு வந்ததிலிருந்து நடந்தவற்றையெல்லாம் நினைத்துப்பார்த்தேன். தலை கவிழ்ந்தேன். சரி! சான்றிதழ் கிடைக்காத இந்த அனுபவப்படிப்பிற்கு 5 இலட்சம் விலையென நினைத்துகொண்டேன். இதற்குப் பதிலாகப் பின்னாலிருந்த லிபாவில் சேர்ந்து எம்.பி.ஏ.வாவது படித்திருக்கலாம்.
வயிறு பசித்தது!
மீண்டும் எங்காவது வேலையில் சேரவேண்டிய நிலை! ஒருநாள் பூங்குழலி வீட்டிற்கு வந்தாள். பின்னாலேயே ஜீதமிழ் தொலைக்காட்சியிலிருந்து அழைப்பு. நீ வந்த நேரம் என்று சொன்னேன் கிண்டலுக்கு. இப்படியொரு பெண் கிடைத்தால் நன்றாக இருக்குமென்று கூறினார் அம்மா என்னிடம் தனியாக! இரண்டாண்டுகாலம் ஜீதமிழில். மாநகரத்தந்தை மா. சுப்பிரமணியன் அவர்களோடு நேரலை நிகழ்ச்சி! அவரது படுக்கையறையில் வைத்து நட்போடு பேசுமளவிற்கு நீண்டது உறவு. செய்தி வாசிப்பும், பேட்டியும் இரு கண்களாயின.
பொதிகையில் அன்பு நண்பர் எனது முதல் தர ரசிகர் தொல்காப்பியன் அவர்களுக்காகவும் தொடர்ந்து பிரபலங்களை நேர்காணல் செய்துகொண்டே இருந்தேன்.
கார் அதுஇதுவென்று செலவுக்கான பொருட்களாகச் சேர்த்திருந்தேன். பணம் வந்து நின்று சென்றுவிடும் ஓரிடமாகத்தான் என் உள்ளங்கைகளிருந்தன. ஐயோ இன்னொருமாதம் காத்திருக்க வேண்டியிருக்குமே என்றிருக்கும். அப்போதெல்லாம் என் கவலைகள் மறக்கக் கைகொடுத்தது என் நட்புதான்.
நட்பென்றால் இலேசுபாசான நட்பல்ல. மணிக்கணக்கில் பேசும் காதல் போன்ற நட்பு. தமிழருவி மணியன் ஐயா (தந்தையின் மரணம் பற்றி அவர் கூறி முடிக்கும்போது என் தொலைபேசி நனைந்திருந்தது!) அன்போடு தான் சொன்ன புத்தகங்களைப் படித்துவிட்டேனா என்று அதட்டுவார்.
சபாநாயகர் காளிமுத்து இரயில்வே ஸ்டேசனில்பார்த்து கடிதம் மட்டும்தான் எழுதுவீர்களா வீட்டிற்கு வரமாட்டீர்களா….வாருங்கள் என்பார். ” நல்ல படிப்பாளிதான் நல்ல படைப்பாளியாக முடியும்” என்று அவர் பேசியது எங்கோ ஒலிபெருக்கியில் ஒருநாள் கேட்டேன். சீக்கிரம் ஒரு நாள் பார்த்துவிட்டு வரவேண்டுமென நினைத்தேன். ஆனால் திடீரென ஒருநாள் அவர் இறந்ததுக்கு நீங்க போகலயா என்றார் ரபிசார். அதிர்ந்துபோய் இல்ல சார் என்றேன். ஆனால் மனதிற்குள் “அவரோட ஒடம்ப நா பாத்தாத்தான அவரு செத்ததாக் கணக்கு? அவர சாகவிடமாட்டேன் சார் ! என்றேன்.
ரபி சார் அவர் விரும்பும்போது மட்டுமே என்னை அழைப்பதை நானும் ரசிப்பேன். அவரது காரின் பின்புறக் கண்ணாடியை ஒருலாரி அப்பளம்போல் நொறுக்கியபொது “வெங்கடப்பிரகாஷை வரச்சொல்லுங்க” என்று நடுரோட்டிலிருந்து சொல்லியனுப்பியபொழுது அவர் மனதில் நான் எங்கிருக்கிறேன் என்பது புரிந்தது. திடீரென ஒருநாள் தொலைபேசியில் அழைத்தார். இதழ்களில் இதழ்களே நிரம்பிக்கிடந்த ஆபாசத்தைச் சொல்லிக்கசந்தவர் “ ஒரு நாள் சொன்னீங்க வெங்கடப்பிரகாஷ். நாம எல்லாம் பள்ளி ஆசிரியர்களின் பிள்ளைகள் சார். பள்ளி ஆசிரியர்களுக்கும் பத்திரிக்கை ஆசிரியர்களுக்கும் வித்தியாசம் ரொம்ப சார்” ன்னு! வெல் செட் வெல்செட் “ என்றபோது இவரைப் புரிந்துகொள்ளாமலிருப்பவர்க
விஜய் டிவியில் வெளிநடப்பு செய்திருப்பார். மாலையில் குளிர்ச்சியாக அறையில் வெங்கடேசு அல்வா சாப்பிடுலே என்பார் நெல்லைக்கண்ணன் ஐயா. நான் அனுப்பிய சி.டி.யெல்லாம் கேட்டுட்டியாலே ? என்பார்.
நாடறிந்த நாஞ்சில் சம்பத் என்னறையில் கரண்டியைக் கையில் வாங்கி “ என்ன வெங்காயமா வெட்டுறே? வெங்காயம்! வெங்காயம்! தள்ளு இப்பிடிப் பொடியா நறுக்குனாத்தான் நல்லாயிருக்கும். நீ செஞ்சத மனுஷம் திம்பாம்? என்பார். அன்று மாலையே ஏழுகிணறு பொதுக்கூட்டத்தில் ” என் ஆருயிர்த் தோழன் வெங்கடேசப்பிரகாஷ் “ அவர்களே என்று முழங்கிக்கொண்டிருப்பார். முன்னாலிருக்கும் அதிமுக முக்கியஸ்தர்கள்கூடக் கும்பிட்டார்கள். கொடுமை! எம்பேர இப்ப்டித் தப்பாச் சொன்னதுக்கு நா வெங்காயம் வெட்டுனதே தேவல என்று முணங்கிக்கொண்டிருப்பேன். திடீரென உச்சஸ்தாயியில் ” என் பேச்சை என் மூச்சை என் காலடித்தடங்களைப் படம் பிடித்து அந்தச் சக்கர நாற்காலிச் சண்டாளனுக்குத் தூது சொல்லும் ஒற்றர்படைக் காவலர்களே ” என்று சொல்லிவிடுவார். எனக்கு வியர்க்க ஆரம்பித்திருக்கும்.
இத்தனை பேரும் வந்திருந்து வாழ்த்தினார்கள் என் திருமணத்தை! ரபி சாரைத்தவிர. வேறு யாரும் வரவில்லையென்றால் வெறுத்திருப்பேன். ஆனால் இவர் மீது அன்பு கூடுகிறது. ஏனென்று தெரியவில்லை. சிவகாசியில் என் திருமணத்திற்கு இரவெல்லாம் கொடி கட்டும் வேலையைக் கூடத் தன் கண்காணிப்பிலேயே செய்தார் அண்ணன் சம்பத்! காலையில் தலைவர் வை.கோ.வந்தார். என்னைப் பற்றி இப்படியும் சொல்லிக்கொள்ள முடியுமா?! என்று நானே வியக்குமளவிற்குப் பேசினார். என் ஆயுளுக்கும் இனி மனச்சோர்வே வராது எனக்கு! தமிழ்க்கடல் நெல்லைக்கண்ணன் முதல்நாள் வந்தார். தமிழறிஞர் பேராசிரியர் கு.ஞானசம்பந்தன் வந்தார். சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குப் பஞ்சமில்லை. கழுத்தில் மாலையோடு வரவேற்புரை நிகழ்த்தினேன். என் உறவுகள் ” பூன மாதிரி இருந்தானே இப்பிடிப் பேசுறானே” என்று சாமி வந்த பெண்டாட்டியைப் பார்ப்பதுபோல் பார்த்தார்கள்! “ அன்றொரு நாள் சென்னைக் கடற்கரையில் குளிர்மணலைச் சுடுமணலாக்கிய வார்த்தைச் சித்தர் வலம்புரியாரின் வாக்கைச் சொல்லி முடிக்கிறேன். நாளைய தமிழகம் நம் தலைவரின் கரங்களில் பத்திரமாக இருக்கும்” என்றுமுடித்தேன்! இன்றும் ஒவ்வோரிடத்திலும் மக்கள் பிரச்னைக்காகத் தன்னலம் பாராமல் அவர் முன்னிற்கும்போது இதோ ஒரு கதாநாயகனின் காலத்தில் நாமும் வாழ்கிறோம் என்று தோன்றிக்கொண்டேயிருக்கிறது.
அந்த இறுதி நிகழ்ச்சியை இன்றைய புதிய தலைமுறைச் செய்தித் தலைவர் சீனிவாசன் பார்த்திருந்தாரென்பது எனக்குத் தெரியாது. பணியில் சேர்ந்த முதல்நாள் அறையில் பாராட்டினார். உங்கள் நிகழ்ச்சி பார்த்தேன். மிக இனிமையாக இருந்தது. ஆனால் இனிமையாக மட்டுமே இருந்தது. அது மட்டுமே போதுமா? என்று தொடங்கினார். எனக்கு அப்போதுதான் முதன் முதலாகப் பெட்டியோடு சென்னைக்கு வந்திறங்கியது போன்றிருந்தது. குமாரராணி மீனாமுத்தையா அவர்களிடம் பேட்டியெடுத்தபோது “ ராஜா போயிட்டாரு. இனி என்ன செய்யிறது. ஸ்கூல் ஆரம்பிச்சா என்ன நம்பி குழந்தைகள யார் விடுவான்னு வருத்தமா இருந்துச்சு “ என்று சொல்லும்போது தாங்கமுடியாமல் அம்மா அப்படிச் சொல்லாதீர்கள். இந்த நாட்டில் பிள்ளைகளில்லாத பெரியார்தான் தந்தை ஆனார். பிள்ளைகளில்லாத தெரசாதான் அன்னை ஆனார் என்று சொன்னேன். பேஸ்புக்கில் ப்ரியா கல்யாணராமன் நெகிழ்ந்து பகிர்ந்திருந்தார். ரபிசாரிடமிருந்தும் பழகிய அறிஞர்களிடமிருந்தும் ஓரளவிற்குக்கற்றுவிட்டதாய் நினைத்திருந்த வேளையில் அவர் சொன்னது இடியாயிறங்கியது! ஆஹா ! இவரிடம் நாம் வாழ்நாளில் கற்க வேண்டியது நிறைய இருக்கிறது சம்பளமே இல்லாவிட்டாலும் பரவாயில்லை என்று! நான் எங்கெல்லாம் இப்படி நினைக்கிறேனோ அங்கெல்லாம் சம்பளத்திற்குக் குறைவேயிருக்காது. இதற்குள் வெளிநாடுகளுக்கு என் பழைய அறைத்தோழர்கள் சென்று செட்டிலாகியிருந்தனர். ஊதியத்தை புதிய தலைமுறை நேர்செய்துவிட்டது. இன்று அவர்கள் வரிசையில் நானும் சேர்ந்துவிட்டேன் இங்கிருந்தபடியே! சாலையிலிருந்து கீழறிங்கிவிட்ட வண்டியைத் தட்டுத்தடுமாறி மீண்டும் மேலேற்றியதைப் போல! இந்த சாகசம் எனக்குப் பிடித்திருந்தது.
புதிய தலைமுறையில் பணியில் சேர்ந்த நாளிலிருந்து இன்று வரை எங்கள் தலைவரும் விடாப்பிடியாய் உற்சாகத்தோடு கற்றுக்கொடுத்துக்கொண்டே இருக்கிறார். நாங்களும் கற்றுக்கொண்டே இருக்கிறோம். நண்பர் தலைவராயிருப்பதுபோலிருக்கிற
என் மனதில் எத்தகைய ஒரு நிறுவனத்தில் பணிபுரிய நினைத்தேனோ அதை அடைந்துவிட்டேன். ஆனால் இதை அடைவதற்கு என் வாழ்நாளில் பத்தாண்டுகாலக் காத்திருப்பு தேவைப்பட்டதே! எந்த நிறுவனத்திலிருந்தாலும் பலரையும் பணியில்சேர்க்கும் வாய்ப்பு எனக்குக் கிடைக்கும். அவர்களில் சிலரால் எனக்குப் பிணி நேர்ந்தும்கூட இன்று வரை அதை விடவில்லை நான். வருத்தமும் படுவதில்லை. ஆனால் சில நேரங்களில் யாராவது
“ எங்க அக்கா பொண்ணுதான். அழகா இருப்பா. தமிழ் நல்லா படிப்பா…தமிழ் சீரியல்லாம் கூடப்புரிஞ்சு பாப்பா. இஸ்கோல்ல கலாச்சாரங்கள்ளயெல்லாம் கலந்துட்ருக்கா.. பேங்க்லதான் வேலபாக்குறா. கல்யாணம் வரைக்கும்தான். இப்போ அவளுக்கு அது பிடிக்கல,.அதான் நியூஸ் கியூஸ் வாசிக்கலாமேன்னு நினைக்கிறா. புதிய தலைமுறைல சொல்லிவிட்றீங்களா? நீங்க நல்லா நியூஸ் படிக்கிறீங்க. எப்ப வரச்சொல்லட்டும் எங்கக்கா பொண்ண?” என்று கேட்கும்போது “ நா செத்ததுக்கப்புறம் ” என்றுதான் சொல்லத்தோன்றுகிறது நண்பர்களே……. ஆனால் எங்கள் தலைவர் சீனிவாசன் ஒருநாள் அப்படி வந்த ஒரு பிஸியோதெரபிஸ்ட் பெண் ஒருவரிடம் சிரித்துக்கொண்டே “ உங்களை இன்றே நான் வேலைக்கு எடுத்துக்கொள்கிறேன். எங்கள் செய்தியாளர் ஒருவரை உங்களுடன் அனுப்புகிறேன். அவரை பிஸியோதெரபிஸ்ட்டாக உங்கள் மருத்துவரிடம் உடனே சேர்த்துவிட்டுவிடுங்கள் “ என்றார். அந்தப் பெண் லிப்டைக்கூடத் தேடவில்லை. படிவழியாகவே இறங்கிப்போய்விட்டாள். அதனால்தான் அவர் தலைவராயிருக்கிறார் என்று நினைத்துக்கொண்டேன்.
இத்தனை இருந்தும் கோபதாபங்கள் சலசலப்புகள் எழாமலில்லை. ஆனால் அத்தனையும் குடும்பத்திற்குள் நடப்பவை போல்தான். புரிந்துகொள்ளாமல் வெளியேறிய நண்பர்களும் உண்டு. மேலுள்ளவர்களின் பாரத்தையும் புரிந்துகொண்டு தோள்கொடுப்பவர்களாக விரைவில் அனைவரும் மாறிக்கொண்டிருக்கிறார்கள்.
மனம் நிறைவாக இருக்கிறது. பத்தாண்டுகள் அனுபவமிருந்தாலும் என் மனைவியாயிருந்தாலும் ஆறு மாதங்கள் ஆறப்போட்டு சோதித்து சன் டிவியில் அவள் வாசித்ததன் நிறை குறைகளை விரிவாக அவர் சொல்லி பிறகு பணியில் சேர்த்துக்கொண்டார். நண்பர்களுக்கெல்லாம் சிபாரிசு செய்யும் எனக்கு என் மனைவிக்கு சிபாரிசு செய்ய நா எழாமல் போனபொழுதுதான் நான் நேர்மையாகத்தானிருக்கிறேன் எனபதை அழுத்தமாக உணர்ந்தேன்.
இப்பொழுதுதான் நானே சேர்ந்த உணர்வு . அதற்குள் ஓராண்டாகிவிட்டது. எத்தனை எத்தனை அனுபவங்கள் இந்த ஓராண்டில் . எவ்வளவு தலைவர்கள்! சமூக ஆர்வலர்கள்! எத்தனை விதமான மனிதர்கள் என் பாதையில் …….. சந்தித்த அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்!
அத்தனைக்கும் மேலாக நண்பர் சத்தியநாராயணன். நண்பர் என்றுதான் சொல்லத்தோன்றுகிறது. தொலைக்காட்சி நிறுவனர். நினைத்தால் உல்லாச புரியில் நீந்த வாய்ப்பிருப்பவர் எங்களோடு சேர்ந்து நெருப்பாற்றில் நீந்திக்கொண்டிருக்கிறார். இவருக்காக உயிரும் கொடுக்கலாம். அவ்வளவுதான் சொல்லமுடியும். இது அவர் தரும் ஊதியத்திற்காக அல்ல. அவர் காட்டும் அளவற்ற அன்பிற்கும், மரியாதைக்காகவும்!!!
சென்னையில் ஒளிபரப்பில் சற்றே முடக்கப்பட்டிருக்கிறோம் என்ற ஒன்றுதான் இந்நேரத்தில் மனதில் வலிதரும் ஒன்று! நேரலையில் நான் சொன்னது போல் நெருப்பைக் கரையான்கள் அரிக்கமுடியாது நண்பர்களே! தெரிந்தோ தெரியாமலோ நல்லது செய்திருக்கிறார்கள்!
உண்மையில் ஒரு செய்தியாளனாக இன்னும் என் பணியைத் தொடங்கவில்லை. இனிதான் தொடங்கப்போகிறேன்.
சொந்த வீடு மட்டுமே சொர்க்கமென்றிருந்த நான், எனக்குப் பிடித்த புத்தகங்களை எடுத்துப்போய் திருமணமான புதிதில் என் மாமனார் வீட்டில் ஒவ்வோர் அறையிலும் வைத்துப் படித்திருக்கிறேன். அதன்மூலமாய் அந்த வீடும் விருப்பமானதாக அமைய ஒரு இனிய தொடக்கமாய் அமையட்டும் என்று! அது நடந்தது.
அதேபோல் இந்த ஓராண்டும் என் விருப்பத்திற்கேற்றார்போலவே
முதல் ஆண்டில் முதல் செய்தியை வாசிக்க வாய்ப்பளித்து என்னைப் பெருமைப்படுத்தினர். இரண்டாமாண்டு முதல் செய்தியை என் துணைவியும் தோழியுமான பூங்குழலி இன்று வாசிக்கிறார். இதுவரை நாங்கள் பணியாற்றிய நிறுவனங்களிலேயே எங்களை மிகவும் மரியாதையோடு நடத்தி உச்சத்தில் வைத்து அழகுபார்ப்பது புதியதலைமுறைதான். ஏதோ கனவுலகிலிருப்பதுபோல்தான் இருக்கிறது இன்னும்! இதற்காகத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா!!!!!!!!!
Engineering படித்து விட்டு இந்த ஊடக துறையை எவ்வாறு தேர்வு செய்தீர்கள்?????நானும் வேறு ஒரு துறை மாற விரும்புகிறேன்...உங்களின் பதில் எனக்கு சிறிதேனும் உதவும் என்று நெனைக்கிறேன்...ஏனென்றால் நானும் ஒரு engineer...
2:10am
Venkada Prakash
பிடிக்காமல் படித்தது அது! நம் கல்வி முறையும் அதைக் கற்றுத்தருகிறவர்களும்.......மண
கருத்துகள்
கருத்துரையிடுக