Disclosure : இந்த மாதிரி அட்வைஸ் பண்றதுல நான் எக்ஸ்பர்ட் கிடையாது. இது எங்கஊட்டு பசங்களுக்கு நான் சொன்னது. இதை பொதுவிலே ஜஸ்ட் பகிர்ந்து கொள்கிறேன்.
நெருக்கமான சுற்றம் நட்பு வட்டத்துலேந்து ஒரு நாலஞ்சு டிக்கெட்டுங்க இந்த வருஷம் எஞ்சினியரிங் கல்லூரிக்குப் போகுதுங்க.. அவ்வப்போது சொல்லிட்டு வந்த அறிவுரை மொக்கைகளிலே சில :
10. படிப்பை நிப்பாட்டுங்க - நல்ல எஞ்சினியரிங்க் கல்லூரிக்கு 'உள்ள' போகத்தான் 98% வேணும். ஆனா, வெளில வரதுக்கு மெனக்கெடல் தேவை இல்லை. அப்படி 98% மார்க்கு வேணும்ன்டு ஒக்காந்து முட்டி மோதிப் படிச்சா, அதுல கிடைக்கிற கோல்ட் மெடல் தவிர்த்து வாழ்க்கைல ஒண்ணும் கெடைக்காது. நல்ல வேலை வேணும்னா கூட, படிப்பத் தவிரவும் பல விஷயம் தெரிஞ்சிருக்கணும். எவ்ளோ மார்க் எடுத்தா safe ன்னு சொல்றாங்களோ, அதை மட்டும் மெய்ண்டைன் செய்யவும்.
20.இப்பமே, campus interview, வேலை பத்தி எல்லாம் யோசிக்காதீங்க. இந்த நாலு வருஷ கோர்ஸுல, 50% மட்டும் தான் வகுப்பு. மீதி அம்பது பர்சண்ட், கேம்பஸ் வாழ்க்கை. எஞ்சாய் பண்ணி படிங்க. இப்ப படிக்கிற ஏதாவது ஒரு சப்ஜெக்ட்தான், பெரும்பாலான சமயத்துல, நீங்க பாக்கப் போற வேலைக்கும் அடிப்படையா அமையும். அதை பிடிச்ச மாதிரி தேர்வு பண்ணிட்டம்னா, அத விட ஒரு சொகம் கிடையாது.
30. ஆஸ்டல் வாழ்க்கைங்கறது மாதிரி ஒரு குடுப்பினை கிடையாது. எல்லா மதத்துக்காரன் கூடவும் பழகலாம். துணி தோய்க்கிறது. நீச்சலடிக்கிறது, வெளயாடறது, மத்த ஊர்க்காரய்ங்க பத்தி தெரிஞ்சுக்கிறது, முள்ளு மாட்டிக்காம மீன்சாப்புடறது, , அவசரத்துக்கு பொண்ணுக கிட்ட செய்னை வாங்கி அடகு வெக்கறது இதல்லாம் இங்கதான் நான் கத்துக்கிட்டேன். நல்ல சான்ஸ் இது. நல்ல விஷயம் கத்துக்கிடுங்க. கெட்ட விஷயம் செஞ்சு பாத்து மறந்துருங்க.
40. சினிமா பாருங்க. அஜித் விஜய் தனுஷ் சிம்புன்னு ஏதாச்சும் ஒரு கோஷ்டில சேந்துக்கங்க. எதிர்கோஷ்டி கூட சண்ட போடுங்க. குறிபாத்து அடிக்க விஷயம் தெரியணும். விஷயம் தெரிஞ்சுக்க படிக்கணும். படிச்ச பாய்ண்ட்டைச் சொல்ல, பேச்சுத்திறமை வேணும். passion இருந்தா, பேச்சு திறமை தானா வரும். vocabulary வளரும். விவாதம் பண்ற நேக்
வரும். இந்தத் திறமையை வளர்த்துக்கிட்டோம்னா, க்ரூப் டிஸ்கஷன்ல, ம்வேலைக்குச் சேர்ந்தா business development side ல, க்ளையண்ட்டுகிட்ட பேரம் பேசறதுல அடிச்சு தூள்கிளப்பலாம்.
50. கேம்பஸ் இண்டர்வ்யூக்கு நாலு நாள் முன்னால, திடீர்னு கம்யூனிகேஷன் ஸ்கில் வளந்துராது. தொடர்புகொள் திறன்ஙறது, end product அல்ல. அது ஒரு process. அதுக்கு பாய்ண்ட்டு நம்பர் 40 தான் அடிப்படை. மேல சொல்லணும்னா, அடுத்த பாய்ண்ட்டைப் பார்க்கவும்.
60. communication skill அப்படின்ன உடனே, எல்லாரும் இசுடைலான இங்கிலீஸில் பேசறதுன்னு தப்பா நினைச்சுக்கறாங்க. நல்ல தெளிவான, இலக்கணச் சுத்தமான ஆங்கிலத்துல, ஒரு மண்ணும் புரியாமப் பேசறதுக்கு பர்க்கா தத், ராஜ்தீப் சர்தேசாய் ன்னு ரெண்டு பேர் இருக்காங்க. நமக்கு அந்த நாய்ப்பொழப்பு வேணாம். புரியும் படியா சொல்றது / எழுதறதுதான் நல்ல தொடர்புகொள் திறனுக்கு அடிப்படை. மொழி அல்ல. என்னதான் IIM A எம்பிஏ ன்னாலும், Hindustan Lever sales manager ஆ வாழ்க்கையத் துவங்கினா, ஸ்டாக் போட, ஒழுங்கா வித்துச்சான்னு பாக்க, ஃபீட்பேக் வாங்க ன்னு எல்லாத்துக்கும் முருகன் ஸ்டோர்ஸ் அண்ணாச்சி கிட்ட தமிழ்ல தான் மொக்க போட்டாவணும். ஆக, மேட்டர் தான் முக்கியம். என்ன மேட்டர்னு மனசுக்குள்ள யோச்சிச்சு, சரிபார்த்து, பளிச்சுன்ன்ட்டு சொல்லிறணும். இந்த பேச்சுத் திறமையை நல்லா வளத்துக்கிட்டம்னா, பின்னால, சீமான் மாதிரி கச்சி கிச்சி ல்லாம் ஆரம்பிச்சு பெரியாளாயிறலாம். ஆனா, இது மட்டுமே கம்யூனிகேஷன் ஸ்கில் அல்ல. இன்னும் ஒரு மேட்டர் இருக்கு. என்னன்னாக்க,
70. வேலை வெளம்பரத்துல பாத்திருப்பீங்க. communications skills - oral & written. தொடர்புகொள் திறன் ங்கறது தெளிவா பேசறது மட்டுமில்லை. எழுதறது மூலமா தொடர்பு கொள்றதும் சேர்ந்ததும்தான். நல்லா யோசிச்சுப் பாத்தீங்கன்னா, பேசக் கத்துக்கறது ரொம்ப சுலபம். நாலாங்க்ளாஸ் மட்டுமே படிச்ச, தமிழ் தவிர ஒரு மொழியும் தெரியாத சித்தி ஒருத்தங்களை, முப்பது வருஷம் முன்னால, மைசூர்ல கட்டிக் குடுத்தாய்ங்க. ஆறே மாசத்துல கன்னடம் பேச, புரிஞ்சுக்கக் கத்துக்கிட்டாங்க? எப்படி? சர்வைவல்.இல்லைன்னா உப்பு புளி மொளகா கூட வாங்க முடியாது. ( இதே நல்லா படிச்சு எம்என்சி வேலைபாக்க பெங்களூர் போற பசங்களில பாதிப்பேருக்கு கன்னடம் முழுசா ஒரு வாக்கியம் பேச வராது. ஏன்? அதுக்கான அவசியம் வரலை). ஆனா எழுத்துங்கறது வேற ஜாதி. அடிப்படை இலக்கணம் தெரியாம ஒழுங்கா எழுத வராது. பள்ளிக்கூடத்துல இலக்கணம் படிச்சுருப்பீங்க. ஆனா, அதைப் பயன்படுத்த வேண்டிய அவசியம் வந்துருக்காது. தட்டுத் தடுமாறி, சின்னச் சின்னதா எழுதப் பழகிட்டீங்கன்னா, க்ளீனா எழுத வந்துரும். இந்த இலக்கணச் சுத்தமாக எழுதும் திறன் அப்படிங்கறது, பிற்கால வாழ்க்கைக்கு மிக மிக அவசியம். எழுத வரலியா? அப்படி எழுத வந்தாலும் இலக்கணம், வாக்கிய அமைப்பு பத்தில்லாம் சந்தேகம் வருதா? அது ஒரு வழி இருக்கு. GOTO 80
80. படிக்கணும். ஆங்கிலத்துல, தமிழ்ல. கண்டதையும்.
இந்த கண்டபடி படிக்கறது, உண்மைல, ' ஒரே கல்லுல மூணு மாங்காய்' டெக்னிக்.
- முதல் மாங்காய் : இதுல தெரிஞ்சுக்கற நல்ல நல்ல வார்த்தைகளை நாம எழுதும் பொழுது யூஸ் பண்ணிக்கலாம் ( காசா பணமா) . படிச்சுப் பழக்கம் இருந்தாதான், நாம உட்கார்ந்து வாக்கியம் அமைக்கும் பொழுது, அதுல ஏதாச்சும் பிழை ( பொருட்பிழை / இலக்கணப் பிழை) இருந்தா, கொஞ்சம் நெருடும். சோதிச்சுப் பாத்துத் தவறு இருந்தா திருத்திக்கலாம். நிறையப் படிக்க படிக்க, நிறைய சொற்றொடர்கள், idioms எல்லாம் பழக்கமாகும். வேகமா படிக்க வரும். இதல்லாம் ரொம்ப நல்லது.
- ரெண்டாவது மாங்காய் : இந்த வாழ்க்கையின் சிக்கல்களுக்கான தீர்வுகள் எல்லாமே 90% எழுத்து வடிவில் தான் இருக்கு. ரேடியோ மெக்கானிசம் கற்றுக்கொள்வது எப்படில ஆரம்பிச்சு, வேர்ல்பூல் semi automatic வாஷிங்மிஷின் மேனுவல் வரைக்கும் எல்லாமே கருப்பு மையிலே பூச்சி பூச்சியா எழுத்துகள்தான். புதுசா வாங்கின, ஆண்ட்ராய்ட் ஃபோனை கைல வெச்சுகிட்டு 'ரூட்டிங்' செய்வது எப்படின்னு கூகிள்ட்ட கேட்டா, அது கொட்டும் தீர்வுகளில் பெரும்பாலானவை எழுத்து வடிவில் இருக்கிறவைதான். படிக்கிற பழக்கம் இல்லாம அத்தனாம் பெரிய வெப் பக்கங்களை எப்படி படிச்சு புரிஞ்சு பிரச்சனையைத் தீர்த்துக்கொள்ள? இது என்ன ட்விட்டரா ஃபேஸ்புக்கா? பொம்பிளப் பிள்ளய ஃபோட்டோ போட்டுகிட்டு கேள்வி கேட்டா, உதவிகள் வந்து குவிய?
-தேர்ட் மேங்கோ : புஸ்தகப் பிரியன்னா, கோஎஜுகேசன் காலேஜ்ல சில பல சௌகரியங்கள் உள்ளன. நல்ல 'மரியாதை' கிடைக்கும் ( he's a voracious reader you know!! - oh, really? ) . என்னடாது, வயசுக்குத் தொடர்பில்லாம விவஸ்தை கெட்டத்தனமாபேசறானேன்னு யோசிக்காதீங்க. காலேஜ்ல ஃபைன் போட்டாலும், டிசி குடுத்துருவேன்னு பிரின்சிபால் மிரட்டினாலும் ரகசியமாவாச்சும் கூடப் படிக்கிற பொம்பிளைப் பிள்ளைங்க கிட்ட பேசிப் பழகியே ஆகோணும்.
90. அப்படி இல்லைன்னா, கல்லூரி வாசம் முடிஞ்சு இண்டர்வியூக்கு, இல்லை வேற எதுக்காச்சமோ, ஒரு அலுவலகம் போனீங்கன்னா, நல்ல பளிச்சுன்னு லட்சணமா front office desk க்ல ஒரு அக்கா இருக்குமில்லே, அதுங்கிட்ட போறப்பவே உதறும். மிரட்சி பளிச்சுன்னு வெளில தெரியும். கிட்டப்போய் பேசினீங்கன்னா டங் ரோலிங் ஆவும். ஆனா, யோசிச்சுப் பாருங்க, காலேஜுல, இத விட அப்பாடக்கர் பொண்ணுங்கல்லாம் இருந்துருக்குமே...அதுங்க கிட்ட சாதாரணமாப் பேசிப் பழகியிருந்தோம்னா, இந்த inhibition ல்லாம் இப்ப இருந்திருக்காது இல்லையா? ( இதுக்கே இவ்ளோ சீனா? நாங்கலாம் காலேஜுலெயே.. அப்படின்னு மனசுக்குள்ள தைரியம் ஃபார்ம் ஆயிடும்.) தைரியமா யார்ட்ட வேணா பேசலாம். அதுவும் இல்லாம, அப்படிப் பேசிப் பழகினாதான், பொம்பிளைப் புள்ளைங்க கஷ்ட நஷ்டமல்லாம் லேஸ்பாஸா தெரிஞ்சுக்கலாம். இதுவும் நல்லது.
100. உங்களுக்குத் தெரியாதது ஒண்ணுமில்லை. தமிழ்நாட்டுல எல்லா ஊர்லயும் ஒரு புது பஸ்ண்டாண்ட் பழைய பஸ்ஸ்டாண்ட் இருக்கும். அது போல, எல்லா ஊர்லயும் மினிமம் அஞ்சு எஞ்சினியரிங் கல்லூரி. வருஷா வருஷம் லட்சக்கணக்கிலே புது எஞ்சினியருங்க பட்டம் வாங்கிகிட்டு வெளிய வராங்
க. அசம்பிளி லைன்ல உருவான injection moulded component போல எந்த தனிப்பட்ட ஐடெண்ட்டியும் இல்லாத இந்த கூட்டத்துலேந்து தனியாத் தெரியணும்னா எப்படி? ஏதாச்சும் தனிப்பட்ட இன்ட்ரஸ்ட் வளர்த்துக்கிட்டு அதையே வெறிபுடிச்ச மாதிரி pursue பண்ணுங்க. அது ஆட்டோமொபைல் எஞ்சினியரிங்ல ஒரு பெட் ப்ராஜக்டாக இருக்கலாம். கவிதை எழுதறதா இருக்கலாம். வரலாற்று ஆராய்சி செய்யறதா இருக்கலாம். வெளிநாட்டுப் பல்கலைக் கழகத்துல ஸ்காலர்ஷிப் வாங்கறதா, சிவில் சர்வீஸுக்குக் குறிவைக்கறதா, கையெழுத்துப் பத்திரிக்கை நடத்துவதாக .. எது வேணுமானாலும்... ஆனா நிச்சயமா ஏதாச்சும் ஒண்ணு...
குறைந்த பட்சம், " இவன் இருக்கானே, இவன், ச்சில்லுன்னு ஒரு பாட்டில் Foster's Beer கிடைக்கும்னா நாலு கிலோமீட்டர் வரைக்கும் நடந்தே கூடப் போவான் என்கிற அளவுக்காச்சும்,
ஒரு தனிப்பட்ட அடையாளம்...
அது போதும்... மத்ததெல்லாம் பட்டம் வாங்கினப்பிறகு வெச்சுக்கலாம்....
குட்லக்...Jaya Prakash
கருத்துகள்
கருத்துரையிடுக