36 ஆண்டுகாலமாக தொடந்து வெளிவந்த சினிமா எக்ஸ்பிரஸ் இதழ், தனது நீண்ட நெடிய பயணத்தை 2016, பிப்ரவரி 16-29 இதழோடு நிறுத்திக்கொண்டுள்ளது.
1980-ம் ஆண்டு ஜனவரி மாதம் 10-ம் நாள் சினிமா எக்ஸ்பிரஸின் முதல் இதழ் வெளிவந்தது. அந்த இதழை அப்போதைய தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர். வெளியிட்டார்.
ஒரு லட்சம் பிரதிகள் விற்ற முதல் சினிமா பத்திரிகை என்கிற பெருமை சினிமா எக்ஸ்பிரஸுக்கு மட்டுமே உண்டு. தேசிய விருதுக்கு நிகராகக் கலைஞர்கள் சினிமா எக்ஸ்பிரஸ் விருதுக்கு மதிப்பு அளித்தார்கள்.
தமிழில் வருடத்துக்கு பத்து படங்கள் வந்துகொண்டிருந்த காலத்திலேயே சினிமாவுக்கென்று பிரத்யேக இதழ்கள் வரத் தொடங்கி விட்டன.
ஆனால்-
வருடத்துக்கு சராசரியாக 250 படங்கள் வந்துகொண்டிருக்கும் சூழலில் போதுமான சினிமா பத்திரிகைகள் தமிழில் இல்லை.
இன்று தமிழில் சினிமாவுக்கென்று இருக்கும் வார இதழ்கள் இரண்டே இரண்டுதான் என்றால் ஆச்சரியமாக இருக்கும். ‘சினிக்கூத்து’, ‘வண்ணத்திரை’.
மாதமிருமுறையாக வந்துகொண்டிருந்த ‘சினிமா எக்ஸ்பிரஸ்’ தன்னுடைய முப்பத்தாறு ஆண்டுகால பயணத்தை இந்த மாதத்தோடு முடித்துக் கொண்டு விட்டது. ‘பேசும் படம்’, ‘பிலிமாலயா’, ‘கலைப்பூங்கா’, ‘பொம்மை’ ‘ரஜினி ரசிகன்’ என்று என் பால்யகாலம் சினிமா இதழ்களின் பொற்காலமாக இருந்த சூழலை எண்ணிப் பார்க்கிறேன்.
’குமுதம்’ ‘விகடன்’ ‘குங்குமம்’ போன்ற இதழ்களிலேயே சினிமா செய்திகள்தானே அதிகம் வருகிறது? தனியாக சினிமா பத்திரிகைகளுக்கு என்ன தேவையிருக்கிறது என்கிற சந்தேகம் உங்களுக்கு வரலாம்.
அது போன்ற பெரிய பத்திரிகைகளில் பெரிய நட்சத்திரங்கள், பெரிய படங்கள் பற்றிய செய்திகள்தான் வரும். இருபது ஆண்டுகள் கழித்து ‘நாளை முதல் குடிக்க மாட்டேன்’ மாதிரியான படம் குறித்த செய்திகளை ஒரு சினிமா ஆய்வாளர் தெரிந்துக் கொள்ள வேண்டுமானால், ‘வண்ணத்திரை’யைதான் referenceக்கு வாசித்தாக வேண்டும். புலமைப்பித்தனின் பேரன் சினிமாவில் நடிக்கிறார் என்கிற தகவல் வேறெந்த பத்திரிகையில் வெளிவரும்? தமிழ் திரையுலக இசை வரலாற்றை முழுமையாக தெரிந்துகொள்ள வேண்டுமானால் நெல்லை பாரதி எழுதும் ‘பாட்டுச்சாலை’தான் ஒரே வழி. வாமனன் எழுதிய இத்துறை குறித்த தகவல்கள் கூட 90ஆம் ஆண்டோடு முடிந்துவிடும். 90களுக்கு பிறகு தமிழ் திரையிசை துறையில் பங்குபெறும் பாடலாசிரியர்கள், பாடகர்கள், இசையமைப்பாளர்கள் பற்றியெல்லாம் வேறு யார் விலாவரியாக எழுதுகிறார்கள்? பரவை முனியம்மாவை எல்லாருக்குமே தெரியும். அவர் யார், எப்படி சினிமாவுக்கு வந்தார் என்றெல்லாம் மீரான்தானே விவரமாக எழுதியிருக்கிறார். யார் யாரோடு டேட்டிங் மாதிரி தகவல்களை தேவராஜோ, சக்திவேலோ எழுதாவிட்டால் தமிழ் சினிமாவுக்கு எதிர்காலத்தில் வரலாறே இருக்காதே? வீ.கே.சுந்தர், அந்தணன், முத்துராமலிங்கமெல்லாம் எழுதிய கட்டுரைகளும், துணுக்குகளும்தான் இருபது, முப்பது ஆண்டுகள் கழித்து இன்றைய சினிமாவை புரிந்துகொள்வதற்கான ஆவணங்கள்.
இன்று சிறுபத்திரிகைகளில் சினிமா குறித்த ஆய்வுரைகளை எழுதுகிறவர்களுக்கு ’சித்ராலயா’, ’பேசும்படம்’, ‘குண்டூசி’ மாதிரி இதழ்கள்தான் ஆதாரமே தவிர, அந்தகால சிறுபத்திரிகை கட்டுரைகள் அல்ல.
இப்போதுதான் இணையத்தளங்கள் வந்துவிட்டனவே? சினிமா இதழ்கள் எதற்கு என்றொரு கேள்வியும் வரலாம். இணையத்தளங்களில் தகவல்களை தேடுவது என்பது கொல்லன் பட்டறையில் குண்டூசியை கண்டுபிடிக்கும் கதைதான்.
சினிமா குறித்த வெகுஜன இதழ்கள் தொடர்ச்சியாக செயல்பட வேண்டும். ‘சினிமா எக்ஸ்பிரஸ்’ மூடப்படுகிறது என்றால் அப்பத்திரிகையின் வாசகர்கள், அதை நடத்தியவர்களைவிட நஷ்டம் அடையக்கூடியவர்கள் சினிமாத்துறையினர்தான். இந்த இதழ்களை பாதுகாக்க வேண்டிய கடமை எல்லோரையும் விட சினிமாத்துறையினருக்கே கூடுதலாக இருக்கிறது. அவர்களுக்கு இதை புரிய வைக்க வேண்டியது மக்கள் தொடர்பாளர்களின் வேலை.
சினிமா எக்ஸ்பிரஸ் முதல் இதழின் அட்டைப் படத்தில் இடம்பெறும் மாபெரும் வாய்ப்பைப் பெற்றவர் ரதி அக்னிஹோத்ரி. நவீனன் என்பவரை ஆசிரியராகக் கொண்டு, 1980 பிப்ரவரி 1-ம் தேதியிட்டு, 1.50 ரூபாய் விலையில் 32 பக்கம் கொண்டதாக வெளியான இந்த இதழின் நடுப்பக்க வண்ணப் படத்தை அலங்கரித்தவர் நடிகர் ரஜினிகாந்த், பின் அட்டையில் இடம் பெற்றவர் நடிகை தீபா.
கருத்துகள்
கருத்துரையிடுக