1996ம் ஆண்டில் முதல் பதிப்பாக வெளியாகி 2016ல் இருபத்தி மூன்றாம் பதிப்பு கண்டிருக்கும் நூல். ஜனரஞ்சகப் புதினம். 90களின் ஜனரஞ்சக வாசகத் தரத்திற்கேற்றார் போலவும், வைரமுத்து வாசகர்களின் வாசிப்பிற்கேற்பவும் வார்க்கப்பட்டுள்ள புதினம்.
ஐம்பூதங்கள் என்று சொல்லப்படும் நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம் ஆகியவற்றை தனது பாடல்கள் மற்றும் கவிதைகளின் வெளிப்பாட்டுச் சாதனமாகப் பயன்படுத்தக் கூடிய வைரமுத்து, நெய்தல் களத்தில் களமாடியிருக்கிறார் என்றே சொல்லலாம். கதைக் கரு எளிமை என்ற போதும், வாசக முத்துக்கள் ஏராளம்..தாராளம்.
பாண்டி, இசக்கி, சலீம், பரதன் என்ற மீனவ நண்பர்களின் படகுப் பயணத்தில் பத்திரிக்கையாளரான கலைவண்ணணும் அவரது காதலி தமிழ் ரோஜாவும் ஒரு அகதிப் பயணம் மேற்கொள்கிறார்கள். தமிழ் ரோஜா 'Thalassophobia' எனும் ‘கடல் அச்சம்’ நோயால் பாதிக்கப்பட்டவள். தனது இலக்கிய, பயண வாழ்விற்கு காதலியின் ‘கடல் அச்சம்' தடையாகி விடக் கூடாது என்பதாக அதைக் களையும் விதத்தில் ஆரம்பமாகும் கலைவேந்தனின் பயணம் வெற்றியடைந்ததா அதற்கு ஏற்பட்ட இயற்கை சார்ந்த இடையூறுகள் எவையெவை.. அவை எங்ஙனம் தமிழ் ரோஜாவின் மனதைப் பக்குவப்படுத்தின என்பதே மையக் கதை. இந்த மையக் கதையின் மற்றொருபுறம் அகவாழ்வின் தத்துவார்த்தங்களையும் அழகு மொழியில் சொல்லியிருக்கிறார்.
‘கடலியலை இலக்கியப்படுத்தும் ஒரு பிள்ளை முயற்சி' என கதையின் கடற்கரையாக தனது முன்னுரையில் சொல்லியிருக்கிறார். மேலும், தமிழில் ஒரு விஞ்ஞானக் காவியம் என்று பின்னட்டையில் குறிப்பிடப்பட்டிருப்பதற்கேற்றார் போல் கடல் சார்ந்த அறிவியல் உண்மைகளும், தரவுகளும், புள்ளிவிவரங்களும் இடம்பெற்றிருக்கின்றன.
//கடிதம் என்பது காகிதங்களின் தூர வடிவம்//
//அனுபவங்கள் தடுப்பூசிகள்; போட்டுக்கொள்.//
//கடல், பூமித்தாயின் திரவச் சேலை// - இவ்வரியை வாசிக்கையில் 'திரவச் சீலை' என்ற பதம் தன்னுணர்வால் மனதில் தோன்றுகிறதெனில் அதுவே வைரமுத்து!
//திட உணர்வுகளின் திரவமொழி கண்ணீர்//
ஓரிடத்தில், பௌர்ணமி இரவில் கடல் பொங்குவதேன் என தமிழ் கேட்கிறாள்.. //பிரிந்துபோன மகளைப் பார்த்தால் பெற்றத்தாய் பொங்கமாட்டாளா// என கலை சொல்கிறான்
//இதயம் கொதித்து ஆவியாகும்போது இமைகளின் மூடி திறந்து கொள்கிறதே.. அதுதான் கண்ணீர்// போன்ற பல கவித்துவ வாசகங்கள் நூலின் எங்குமெங்கும்!
ஆண்-பெண் சமம், காதல் சீண்டல்கள், மொழியுணர்வு, திராவிடச் சிந்தனை என வைரமுத்து சிந்தனை தெரியுமிடங்கள் அநேகம். போலவே, மறுமணம், திருமணத்தை மீறிய காதல்கள் என 'கள்ளிக்காட்டு காவிய’ சமாச்சாரங்களையும் தவறாமல் சொல்லியிருக்கிறார்.
//தனிமை அவள் தனக்கு தேவைப்படுகிறது என்றாள்// என்ற இடத்திலும், இன்னும் இரு இடங்களிலும் வாக்கிய உருவாக்கப் பிழைகள் தென்பட்டன.
இக்கதையை ஒரு தேர்ந்த திரைக்கதாசிரியரைக் கொண்டு திரைப்படமாக்கினால் உலகப்படங்களை அதிகம் கொண்டாடும் சப்டைட்லுலகினர் (சொல் உருவாக்கம் — நர்சிம்) காலத்தில் இன்னுமதிக கவனம் பெற வாய்ப்பிருக்கிறது.
வைரமுத்து புதினங்களின் இறுதி வாக்கியங்களை அழுத்தந்திருத்தமாகச் சொல்பவர், இதில் //இனி, தமிழுக்கு மரணமில்லை// என்பதோடு முடித்திருக்கிறார்.
வாழ்வில் வரும் துன்பங்களெதும் நிரந்தரமல்ல என்பதே இக்கதையின் சாரமாக நாம் எடுத்துக்கொள்ள வேண்டியது.
-முற்றும்.
கருத்துகள்
கருத்துரையிடுக