கல்விக்கூடங்களில் காத்திருக்கும் கொக்குகள்!
இந்தியா டுடே செக்ஸ் சர்வே 2018 மார்ச்
பல்கலைக்கழகப் பெண் கணிதப் பேராசிரியர் ஒருத்தர் நான்கு மாணவிகளிடம் பேசியதாக உலாவரும் அந்த ஆடியோவை முழுமையாகக் கேட்டேன். எங்களுக்கு அதில் இஷ்டமில்லை என்று சொல்லிய பிறகும்கூட அந்தப் பேராசிரியர் விடாப்பிடியாக வற்புறுத்துவதன் பின்னணியில் சில சமூகப் பொருளாதாரக் காரணிகள் இருக்கின்றன. செருப்பாலடிக்கிற விஷயம் ஒன்றை வைத்துக்கொண்டு இப்படிச் சுற்றிவளைத்துப் பேசுவது சரியா என்கிற கேள்வியும் உடனடியாக மேலெழுந்து வருகிறது. அதேசமயம் இதற்குப் பின்னால் இருக்கிற மோசடி வலைப்பின்னல் ஒன்றை அடையாளப்படுத்தும் முயற்சியாகவும் இந்த விஷயத்தைச் சொல்லிப் போகலாம் என்றும் தோன்றுகிறது.
‘குற்றம் நடந்தது என்ன?’ காலத்தில் இருந்து இந்த மோசடியைப் பின்தொடர்ந்து போகிறோம் என்கிற வகையில் இதை முக்கியமானதாகவும் கருதுகிறேன். சென்னை ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள பேருந்து நிலையம் ஒன்றுக்கு இந்தத் தொழிலில் இருக்கும் ‘சோர்ஸ்’ ஒருத்தர் அழைத்துப் போய்க் காண்பித்தார். நடுத்தர வயதுப் பெண்மணி அவர். பாரகான் செருப்புப் போட்டுக்கொண்டு ஏதோ அலுவலகத்தில் வேலை பார்க்கிற தோற்றத்தோடு நின்றுகொண்டிருந்தார். அங்கு வரும் பிற அலுவலகங்களில் வேலை பார்க்கும் பெண்களிடம் பழக்கமாகி மெல்ல அவர்களை இந்த வணிகத்துக்கு ஒப்புக்கொடுப்பதுதான் அந்தப் பெண்மணியின் வேலை. முழுநேர வேலையாகவே அதைச் செய்துகொண்டிருந்தார்.
பல நேரங்களில் அலுவலக வேலை நிமித்தமாக அந்தப் பகுதியைக் கடக்கும்போதுகூட அந்தப் பெண்மணி அங்கே நின்றுகொண்டிருப்பதைப் பார்த்திருக்கிறேன். மீனிருக்கும் இடங்களில்தான் கொக்குக்கு வேலை. சமூகம் நேர் எதிரானது என்று வரையறுக்கிற வேலையை அவர் செய்துகொண்டிருந்தார்.
அழைத்துப்போன சோர்ஸிடம் கேட்டபோது, “இன்றைக்குத் தேதியில் குடும்பப் பெண்கள் அதிலும் இளம் பெண்களுக்குத்தான் மார்க்கெட்டில் கிராக்கி. கஸ்டமர்கள் எவ்வளவு வேண்டுமானாலும் கொடுக்கத் தயாராக இருக்கிறார்கள்” என்றார்.

காமத்தின் கரங்கள்
ஒழுக்க அளவுகோல்களை விலக்கிவைத்துவிட்டுச் சொல்வதென்றால், தமிழ்நாட்டில் இந்த வணிகம் இப்போது வீங்கிவிட்டது. சென்னையில் பாலியல் தொழிலுக்கு அத்தனை நாட்டுப் பெண்களும் குவிகிறார்கள். இந்தத் தொழிலில் விக்கி என்கிற முதலை இருக்கிறது. அது எந்நேரமும் நாற்பது, ஐம்பது சர்வதேசப் பெண்களுடன் சர்வதேச விமான நிலையங்களில் நீந்திக்கொண்டிருக்கிறது. எல்லாவற்றிலும் சலிப்படைகிற மனங்கள் காமம் என்று வரும்போது எல்லா இலைகளிலும் வாய் வைக்க நினைக்கின்றன. அலுவலகங்களில் வாய்ப்புக் கிடைப்பவர்கள் அதிகாரங்களைப் பிரயோகிக்கிறார்கள். பல அலுவலகங்களில் இந்த அதிகார மையங்கள்தான் விசாகா கமிட்டியை அமைக்கத் தடையாக இருக்கின்றன என்பதைக்கூடத் துணிந்து சொல்லலாம். கண்ணுக்குத் தெரியாத சல்லடைகள் எங்கும் இருக்கின்றன. அதில் நம்முடைய கண்ணுக்குத் தெரியாத கசடு வந்து கொட்டிவிடக் கூடாது. அவ்வளவுதான்.
இயல்பாக அல்லது சில நேரங்களில் அதிகாரத்தின் துணைகொண்டு இதுபோல் நடக்கும் அலுவலகங்களில் இப்படி இந்தத் தொழிலில் இருக்கிற புரோக்கர்கள் இருப்பார்களா? இருப்பார்கள் என்பதுதான் நிஜம். தி.நகரில் உள்ள சூப்பர் மார்க்கெட் ஒன்றில் வேலை பார்த்த பெண் ஒருத்தர் இப்படித்தான் அலுவலகத்தில் வேலை பார்த்த பெண் புரோக்கர் ஒருத்தரிடம் மாட்டிக்கொண்டு வாழ்க்கையைத் தொலைத்தார். அந்தப் பெண்ணுக்கு அவசரத் தேவைக்குப் பத்தாயிரம் கொடுத்துவிட்டு அந்த சூப்பர் மார்க்கெட்டுக்கு வந்து போகும் கஸ்டமர் ஒருத்தருக்கு அனுப்பிவைத்தார். அந்தப் பெண் அந்தச் சுழலில் மாட்டிக்கொண்டு சிக்கிச் சின்னாபின்னப்பட்ட பிறகு அந்தக் கதையை வந்து சொன்னார். கறிகாய் வாங்குகிற இடத்திலேயே இவர்கள் நுழைந்துவிட்டால் மற்ற இடங்களில் கேட்கவும் வேண்டுமா? விரும்பிப் போகிறவர்களை இதில் சேர்க்கவே இல்லை.
இப்படியான வறுமையில் இருக்கும் பெண்களைப் பயன்படுத்தி உள்ளே இழுப்பதற்கென்றே ஒரு கூட்டம் இருக்கிறது. அதென்ன வசியப்படுத்தி எனக் கேள்விகள் கேட்கலாம். நெருங்கிப் போய்ப் பார்த்தால் இந்த வசியம் படிப்படியாக நடப்பது புரியும். ராயலாக காரில் ஏற்றி அழைத்துக்கொண்டு போவது வேறு. அப்பனின் கழுத்தில் மருத்துவமனை வயர்கள் தொங்கும்போது அழைத்துச் செல்வது என்பது வேறு. எல்லோருமே இது மாதிரிப் பெண்களுக்கு அக்காவாகிறார்கள் முதலில். அப்புறம் பிரா, பேண்டி உள்ளாடைகள் வாங்கித் தருகிற இடத்துக்கு நகர்ந்து இறுதியில் பேரம் பேசுகிற இடத்துக்கு நகர்கிறார்கள். இது அவர்களுக்கு முழு அளவிலான வேலைத் திட்டம். இதில் நினைத்ததைவிட அதிகப் பணம் கிடைக்கிறது. பத்தாயிரம் வியாபாரம் நடக்கிற இடத்தில் இது போன்றவர்களுக்குத் தூண்டில் போடும் வழியில் ஐம்பதாயிரம் என்கிற புள்ளியை எட்டிவிடுகிறார்கள். அதற்காகக் கொட்டிக் கொடுக்கவும் தயாராக இருக்கிற மனிதர்கள் நகரச் சாலைகளில் அலைந்தபடி இருக்கிறார்கள்.

தூண்டிலோடு அலையும் புரோக்கர்கள்
வேட்டையாடப்படுகிற விலங்கின் கண்களில் பயம் தெரிய வேண்டும். பல வேட்டைகளைப் பார்த்த விலங்குகளை விரும்பாதவர்களும் இருக்கிறார்கள். வேட்டையில் ஆணென்ன, பெண்ணென்ன?
அதையெல்லாம் ஒரே எட்டில் எப்போதோ எகிறிக் குதித்துவிட்டார்கள். ஆண்களை ஏற்பாடு செய்து தருபவர்களும் இருக்கிறார்கள். சென்னை, கோவை உள்ளிட்ட பெருநகரங்களில் இப்படிக் கொத்துக் கொத்தாகப் புரோக்கர்கள் இறக்கிவிடப்பட்டிருக்கின்றனர். தூண்டிலோடு அலையும் அவர்களின் வலையில் மீன்களும் சிக்கிக்கொண்டுதான் இருக்கின்றனர். தடுப்பது/அறிவுறுத்துவது என்பதையெல்லாம் தாண்டி இது ஒரு நெட்வொர்க் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். காவல் துறைக்கு மிக நன்றாகவே தெரிந்த நெட்வொர்க் இது.
அதையெல்லாம் ஒரே எட்டில் எப்போதோ எகிறிக் குதித்துவிட்டார்கள். ஆண்களை ஏற்பாடு செய்து தருபவர்களும் இருக்கிறார்கள். சென்னை, கோவை உள்ளிட்ட பெருநகரங்களில் இப்படிக் கொத்துக் கொத்தாகப் புரோக்கர்கள் இறக்கிவிடப்பட்டிருக்கின்றனர். தூண்டிலோடு அலையும் அவர்களின் வலையில் மீன்களும் சிக்கிக்கொண்டுதான் இருக்கின்றனர். தடுப்பது/அறிவுறுத்துவது என்பதையெல்லாம் தாண்டி இது ஒரு நெட்வொர்க் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். காவல் துறைக்கு மிக நன்றாகவே தெரிந்த நெட்வொர்க் இது.
இந்தக் கல்லூரிச் சம்பவத்தை எடுத்துக்கொண்டால், அது நெட்வொர்க் இல்லைதான். அந்தப் பேராசிரியரின் முதல் முயற்சி இது என்பதாகவும் தெரிகிறது. அல்லது இதற்கு முன்னர் வேறு சில முயற்சிகளில் அவர் வெற்றிகூட அடைந்திருக்கலாம். அது தெரியவில்லை நமக்கு. ஆனால் அவர் குறிவைத்திருக்கிற மாணவிகளின் பின்புலத்தை வைத்துப் பார்க்கையில் அவர் திட்டமிட்ட வலையைப் பின்னியிருக்கிறார் என்பது தெரிகிறது. இதில் அவர் வெற்றி பெற்றிருந்தால், புதிதாய்த் தொடங்குகிற ஒவ்வொரு கல்வியாண்டும் தொட்டுத் தொடருகிற செயலாகவே இது அமைந்திருக்கும். சில மாதங்களாகவே பேச நினைத்தேன் என்பதை அவர் பேச்சினூடாகச் சொல்வதையும் கவனிக்க வேண்டும்.
எல்லாத் துறைகள் சார்ந்த அலுவலகங்களிலும் உயரதிகாரிகள், அதிகாரம் பொருந்தியவர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு புரோக்கர்கள் அவசியமாக இருக்கிறார்கள். வேலை பார்ப்பவர்களுக்குக்கூட புரோக்கர்கள் புரமோஷனை அளித்துவிட முடியும். அதைத்தான் அந்தத் தொலைபேசி உரையாடலில் இருந்த அந்த ஆசிரியரும் செய்திருக்கிறார். விட்டால் மற்ற இடங்களில் இருக்கிற நெட்வொர்க் பல்கலைக்கழகங்களில்கூட உருவாகக்கூடும். அப்படி நடக்கிற இடங்களும் தமிழகத்தில் இருக்கின்றன. இனிமேல் இவை ஒவ்வொன்றாகச் செய்திகளில் அடிபடக்கூடச் செய்யலாம்.
வணிகம் என்று சொன்னால் அதில் கறுப்பு வணிகமும் இருக்கும். அதில் புரோக்கர்களும் இருப்பார்கள். அது கல்விக்கூடமாக இருந்தால் என்ன? கசாப்புக் கடையாக இருந்தால் என்ன? ஒட்டுமொத்த மதிப்பீடுகளின் சரிவில், பிறரைப் போல் அல்லாமல் குற்ற மனம்கொண்ட கணக்கு டீச்சர் கணக்கு பண்ணாமல் என்ன செய்வார்?
(கட்டுரையாளர் பற்றிய குறிப்பு: சரவணன் சந்திரன், ஊடகவியலாளர், எழுத்தாளர். நான்கு நாவல்களை எழுதியிருக்கிறார். பயணமும் வேளாண்மையும் இவரது செயல்பாடுகளின் மையம். தொடர்புக்கு: saravanamcc@yahoo.com
கருத்துகள்
கருத்துரையிடுக