-சரவணன் சந்திரன்
பார்பி பொம்மையைப் பார்த்திருப்பீர்கள். உடன் வைத்திருக்க விரும்பியிருக்கிறீர்களா? என்று கேட்டால் ஆமாம் என்றுதான் சொல்வேன். எல்லோருக்குள்ளும் ஒரு பார்பி பொம்மை கனவாய் உறைந்து கிடக்கிறது. பார்பி என்பதே ஒரு குறியீடுதான். வாழநினைக்கிற வாழ்க்கை என்பதன் குறியீடுதான் அது. என்னிடமிருக்கிற பார்பி பொம்மையில் அப்படி என்ன விஷேசம்? உலகம் முழுக்க லட்சக்கணக்கான விலைகளில் பார்பி பொம்மைகள் இருக்கின்றன. என்னுடைய பார்பி பொம்மை திருடப்பட்டதுதான். ஆனால் கன்னத்தில் பருக்கள் இருக்கிற பார்பி பொம்மை எங்களிடம் மட்டுமே இருக்கின்றன. உலகில் யாரோ ஒரு சிறுவனிடமும் இதைப் போலவொரு பார்பி பொம்மை இருக்கவும்கூடும்.
இந்தப் பொம்மை எங்களுக்கு ஏற்றாற் போல வளைந்து கொடுத்தது. எங்களோடு இரவுகளில் படுத்துக் கிடந்தது நட்சத்திரங்களை எண்ணியபடி. பிறத்தியார் பார்வைக்குப் படாதபடி இந்தப் பார்பி பொம்மையை ஒளித்து வைக்கிறோம். ஒருநாள் அந்த பார்பி பொம்மை எங்களிடம் இருந்து விலகி இன்னொரு கைகளுக்குச் சென்று விடுகிறது. பார்பி தன்னோடே இருந்து விடமாட்டாளா என்பது ஒரு தலைமுறையின் ஏக்கம். முட்டி மோதி தப்பிப் பிழைக்கிற புளியம் விதையொன்றின் துயரம். ஒரு வகையில் நாங்கள் கடந்து வந்திருக்கிற வாழ்க்கையின் வழியாக மாவிலக்கிற்கு உருட்டுவதைப் போலத் திரட்டித் தொகுத்த துயரம். புலம்பல்கள் இல்லை இதில்.
கடந்து வந்த பாதையைத் திரும்பிப் பார்க்கத் துடிக்கிறோம். இந்தத் துயரத்தின் வழியாக அடுத்த தலைமுறையைத் துடுப்புப் போட்டு வெளியே கொண்டு வர முயற்சி செய்கிறோம்.
எழுபதுகளின் பிற்பகுதியில் பிறந்த தலைமுறை ஊரை விட்டு வெளியேறியே ஆகவேண்டும் என சத்தியம் வாங்கிக் கொண்டு பூமியைத் தொட்டவர்கள். கிராமங்களை விட்டு நகரங்களுக்கு புலம்பெயர்ந்த வாழ்க்கை.
எழுபதுகளின் பிற்பகுதியில் பிறந்த தலைமுறை ஊரை விட்டு வெளியேறியே ஆகவேண்டும் என சத்தியம் வாங்கிக் கொண்டு பூமியைத் தொட்டவர்கள். கிராமங்களை விட்டு நகரங்களுக்கு புலம்பெயர்ந்த வாழ்க்கை.
தொண்ணூறுகளுக்குப் பிறகு உலகம் வெகுவாக மாறி விட்டது. பிழைக்க வழியில்லை ஊரில். பிழைக்கலாம்தான். ஆனால் காட்சி வடிவங்களில் காட்டும் வாழ்க்கை குறித்த கனவுகளில் இருப்பவர்கள், தீக்குச்சியைக் கட்டிப் பிடித்துக் கொண்டு தூங்க முடியாது. அப்படி நினைத்தவர்கள் ஹாக்கி என்கிற மட்டையைப் பிடித்துக் கொண்டு அந்தக் கிராமங்களை விட்டுத் தவ்வி வெறொரு இடத்திற்குச் செல்லப் பிரியப்பட்டார்கள். கோவில்பட்டி என்பது ஒரு ஊர்தான். அங்கு ஹாக்கி விளையாடப்படுகிறது. உலகில் ஹாக்கி மட்டும்தான் முற்றும் முழுதான விளையாட்டா என்ன? இந்தியா முழுக்க இப்படி பல்வேறு கிராமங்கள் இருக்கின்றன.
தான் நம்பும் ஒரு விஷயத்தை நம்பிக்கைக் கல் போலக் கையில் வைத்துக் கொண்டு இன்னொரு நிலத்தில் நல்ல மேய்ச்சலைப் பார்த்து விடலாம் என்கிற சாகசத்தில் திளைக்கும் சாண்டியாகு போல, உலகெங்கும் மனிதர்கள் கிளம்பி வருகிறார்கள். அப்படி அந்த கந்தக பூமியிலிருந்து கிளம்பி மேலெழுந்த பல வாழ்வுகளை நான் பார்த்திருக்கிறேன். ஒருவகையில் ஒட்டுமொத்த நிலத்தில் தூவப்பட்ட பருத்தி விதைகளைப் போலத்தான் எல்லாமும். சில விதைகள் பீம புஷ்டி அல்வா மாதிரி ஓங்கி வளர்கின்றன. சில விதைகள் பற்றாக்குறைகளின் காரணமாக எழுவதற்கு முன்பாகவே மண்ணில் மடிகின்றன. பீமனின் கரங்களாய் தன்னைக் கற்பித்துக் கொண்டு முட்டி மோதி மேலே வருகிற ஒரு விதையின் கதைதான் இந்த நாவல்.
இந்த நாவலின் ஆன்மா இதுதான். பார்பியின் ஆன்மா இதுதான். உலகம் வெவ்வேறு உடையை பார்பிக்கு அணிவிக்கிறது. நான் எனக்கு நன்றாகத் தெரிந்த கண்டங்கிச் சேலையை பார்பிக்கு அணிவிக்க முயன்றேன். அந்தச் சேலையில் சுற்றி மடித்து வைக்கப்பட்டிருக்கிறது எங்களது வெக்கை வாழ்க்கை. அந்தச் சேலையில் சொருகப்பட்டிருக்கிற சுருக்குப் பையில் இருக்கிறது எங்களுக்கான மகிழ்ச்சி. பார்பியை எல்லாமுமாக நாங்கள் பார்க்கிறோம். எங்கள் சித்திகள், அத்தைகள், ஆச்சிகள் அவர்களைச் சுற்றியிருக்கிற மனிதர்கள் என எல்லோரும் ஒரு வகையில் பார்பிகள்தான். அவர்கள் வழியாக கடந்து வந்த வாழ்க்கையை முன்னிறுத்த பிரயத்தனப்பட்டேன்.
நியாயமாக இதுதான் என்னுடைய முதல் நாவலாக வந்திருக்க வேண்டும். அடியாழத்தில் இன்னமும் விளையாட்டை கக்கத்தில் தூக்கிக் கொண்டு ஓடுகிற ஒருத்தனின் முதல் படைப்பு அந்தக் களமாகத்தான் இருந்திருக்க வேண்டும். ஆனால் எல்லா களங்களிலும் நான் விளையாட்டுக் காரன் போலத்தான் தலைதெறிக்க ஓடியிருக்கிறேன் என்பதால் அது இடராகவும் தோன்றவில்லை. நான் வாழும் சமகாலம் முன்னோர்களுக்கு இருந்ததைக் காட்டிலும் எங்களுக்குச் சிக்கலாக இருக்கிறது.
மூச்சு முட்ட வைக்கும் சங்கிலிகளுக்கு மத்தியில் தப்பி வெறொரு இடத்திற்குப் போய்விட வேண்டும் என்கிற முனைப்பில் தட்டலைகிறோம். சுருக்கமான வாழ்க்கை இதுவென்கிற ஞானம் சின்ன வயதிலேயே புகட்டப்பட்டும் விட்டது.
மூச்சு முட்ட வைக்கும் சங்கிலிகளுக்கு மத்தியில் தப்பி வெறொரு இடத்திற்குப் போய்விட வேண்டும் என்கிற முனைப்பில் தட்டலைகிறோம். சுருக்கமான வாழ்க்கை இதுவென்கிற ஞானம் சின்ன வயதிலேயே புகட்டப்பட்டும் விட்டது.
அப்படித் தப்பிக்கிற முயற்சியில் தடைகளாய் வருபவை எவையெவை என்பதைத்தான் இந்த நாவலில் விரிவாகப் பேசியிருக்கிறேன். செவ்வக வடிவிலான ஹாக்கி மைதானத்திற்குள் நின்று கொண்டு ஒட்டுமொத்த எங்கள் வாழ்க்கையையும் திரும்பிப் பார்த்திருக்கிறேன். ஹாக்கி மைதானத்தில் ஸ்ப்ரிங்லர் என்ற ஒன்று இருக்கும். மலையடிவார பழத் தோப்புகளில் இதைப் பார்த்திருப்பீர்கள். சுற்றிச் சுழன்றடித்து மழைநீரை மைதானங்கள் எல்லாம் பரப்பும். ஒருவகையில் செயற்கை மழை. அப்படியான மழை நீரைத்தான் இந்த நிலத்தில் நான் பீய்ச்சியடித்திருக்கிறேன். வந்து விழுகிற ஒவ்வொரு துளியும் நாங்கள் கடந்து வந்த வாழ்க்கை.
அதில் கந்தக வாசனையைப் பார்த்திருக்கிறோம். டிசம்பர் பூக்களின் வாசனையைப் பார்த்திருக்கிறோம். மலைப் பலாவின் வாசனையைப் பார்த்திருக்கிறோம். நாவல் பழங்களின் வாசனையைப் பார்த்திருக்கிறோம். கோடை வெள்ளரியின் வாசம் எங்களை மூடிக் கொண்டு கடந்து போயிருக்கிறது. நிலக்கடலையை அவித்துத் தின்று பசியாறிய வாசனையும் இன்னமும் பக்கத்திலேயே இருக்கிறது.
எங்களுடைய அண்ணன்களும் தம்பிகளும் பக்கத்தில் வெட்டிக் கொண்டு சரிந்தபோது காலுக்குக் கீழே ஓடிய சிங்கர் பொட்டு நிற செங்குருதியின் அடர்த்தியான வாடை இரவெல்லாம் கூடவே இருந்திருக்கிறது.
ஆட்டு இரத்தம் வேண்டி ஏந்திய கைகளில் எங்களது அண்ணன்களில் இரத்தம் ஊற்றப்பட்டது. இரண்டு கைகளிலும் ஏந்தி நிமிர்ந்து பார்த்தால், எதிரிகள் முன் விருந்தொன்றை ஆயத்தம் செய்யுகின்றார் என ஏசுராஜா பாடிக் கொண்டிருப்பார். மதம் எங்களை ஒன்றும் செய்யவில்லை. காய்ச்சல்காரனுக்கு முகத்தில் தண்ணீர் அடித்து தலையை மயிலிறகால் விசிறி விடுகிற இஸ்மாயில் தாத்தாக்கள் இருந்தார்கள்.
ஆட்டு இரத்தம் வேண்டி ஏந்திய கைகளில் எங்களது அண்ணன்களில் இரத்தம் ஊற்றப்பட்டது. இரண்டு கைகளிலும் ஏந்தி நிமிர்ந்து பார்த்தால், எதிரிகள் முன் விருந்தொன்றை ஆயத்தம் செய்யுகின்றார் என ஏசுராஜா பாடிக் கொண்டிருப்பார். மதம் எங்களை ஒன்றும் செய்யவில்லை. காய்ச்சல்காரனுக்கு முகத்தில் தண்ணீர் அடித்து தலையை மயிலிறகால் விசிறி விடுகிற இஸ்மாயில் தாத்தாக்கள் இருந்தார்கள்.
அவர்கள் பகல் வேலைகளில் ஊரெல்லாம் சாம்பிராணியைக் கையிலேந்தி நடந்து மணக்க வைத்தார்கள். செண்பகவல்லி அம்மன் கோவிலுக்குள்ளும் இதே சாம்பிராணி வாடையைத்தான் உணர்ந்திருக்கிறேன். பிரித்துப் பார்க்கத் தெரியவில்லை எனக்கு. மூளைக்கு பிரித்துப் பார்க்கத் தெரியும். மூக்கிற்குத் தெரியாது அது பாவம்.சாதி சகலமும் செய்து விட்டது எங்களுக்கு.
எல்லா வாடைகளையும் அடக்கி ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் ரத்த வாடை மட்டுமே ஒரு நகரத்தில் அடர்த்தியான கரும்புகை போல சுற்றிக் கொண்டிருந்தது. கொசு மருந்தடிக்கும் இயந்திரம் கடந்து போன பிறகு வரும் கரும்புகை போல அது. தென்மாவட்டங்கள் அந்தக் கரும்புகை வாடையில் சாதிச் சண்டைகளின் காரணமாக மிதந்தன. மனிதர்கள் எறும்புகள் போல பதற்றமடைந்து நகரங்களிலும் கிராமங்களிலும் தட்டழிந்து அலைந்து கொண்டிருந்தார்கள்.
தென்மாவட்ட சாதிக் கலவரம் பல உயிர்களைக் கேட்டு வாங்கிக் கொண்டது. அந்தக் கலவரத்திற்கு வீட்டிற்கு ஒரு ஆண்மகன் போருக்கு அனுப்புவதைப் போல அனுப்பி வைக்கப்பட்டனர். புறநானூற்றுப் போர் அதுவென கருதிக் கொண்டார்கள். அப்படிக் கிளம்பிப் போய்த் திரும்ப வரவே வராத என் நண்பர்கள் பலரைப் பார்த்திருக்கிறேன். அதைப் பதிவு செய்து விடவேண்டும் என்பது அடியாழத்து ஊக்கம்.
அந்தச் செவ்வக வடிவ மைதானத்தில் மனிதர்கள் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். அந்தச் செவ்வக வடிவத்தைச் சுற்றியும் தீ எரிகிறது. ஒருவகையில் ஒருவேள்வி நடப்பதைப் போலத்தான் அந்தச் செந்நிறக் காட்சியும். வெளியே இருந்து நிறையப் பேர் மைதானத்திற்குள் விழுகிறார்கள்.
மைதானம் தன்னிலிருந்து பிரித்து அந்தத் தீக் கங்குகளுக்குள் தன் மைந்தர்களை எறிகிறது. தப்பிப் பிழைத்தவர்கள் மைதானத்திற்கு அடங்கி லாயத்தில் கட்டப்பட்ட மாடுகளைப் போல அதற்குள்ளே சுற்றி வருகிறார்கள். உலகத்தின் உச்சியில் ஒரு மலை இருக்கிறது. அந்த மலையில் ஒரு சமதளம் இருக்கிறது. அந்த சமதளத்தில் ஆழமான ஒரு அமைதி இருக்கிறது. அங்கே ஒரு மைதானத்தில் கைப்பிடித்து வழிநடத்த ஒரு குள்ளச் சித்தன் நின்று கொண்டிருக்கிறான்.
சுற்றிப் பற்றியெறிகிற அம் மைதானத்தில் இருந்து தப்பி மலை மைதானத்தில் விளையாட நினைக்கிற ஒருத்தனின் கதைதான் பார்பி. அது ஒருத்தனின் கதை மட்டுமல்ல. எங்கள் எல்லோருடைய கதையும்தான் இது. இந்தக் கதையைச் சொல்லும்போதுகூட என் பக்கத்தில் இருக்கும் பார்பி பொம்மையின் கண்ணில் இருக்கிற குன்றி மணிகள் சேல் அகட்டுகின்றன. அதன் கண்ணில் உறைந்திருக்கிற கருப்பு எங்களது வாழ்க்கை. சுற்றிப் படர்ந்திருக்கிற சிவப்பு நாங்கள் வாழ நினைக்கிற வாழ்க்கை. எங்களைச் சுற்றி ஏராளமான நிறங்கள் இறைந்து கிடக்கின்றன. வண்ணங்களின் போர்வையில் கத்தரிப்பூ நிற உடையணிந்த பார்பி ஓங்கி மேலெழுந்து நிற்கிறாள். ஒரு ஜாடையில் அவள் எங்களூர் செண்பக வல்லியம்மனைப் போலக்கூடத் தெரிகிறாள். அரசிகள் முறைதவறாமல் நகர்வலம் போவார்கள் எங்கள் நிலத்தில்!
கருத்துகள்
கருத்துரையிடுக