.
மே 15 கர்நாடக தேர்தல் முடிவுகள் வெளியான பின்னால், பல்வேறு ஊடகங்களில் பல ஆராய்ச்சிக் கட்டுரைகள் வந்துள்ளன. காங்கிரஸின் தோல்வி, அதில் சித்தாராமைய்யாவின் பங்கு, பிஜேபியின் திடீர் வெற்றி, மோடியின் செல்வாக்கு, கர்நாடகத்தில் உள்ள பெரும்பான்மை சாதிகளான ஒக்கலிகா மற்றும் லிங்காயத் சாதி சமன்பாடுகள், மதச்சார்பற்ற ஜனதா தளம் மற்றும் தேவேகவுடா குமாரசாமியின் செல்வாக்கு, அமித் ஷாவின் தேர்தல் யுக்தி உள்ளிட்ட பலவற்றை ஆராய்ந்து பல கட்டுரைகள் வெளியாகியுள்ளன.
இந்த கட்டுரைகள் அத்தனையும் படித்துப் பார்த்தால், ஒவ்வொரு காரணமும் சரியான காரணங்களாகவே தோன்றும். ஆனால் இந்த ஆராய்ச்சிகளிலும், காரணங்களிலும் எனக்கு நம்பிக்கை இல்லை. ஓரளவு உத்தேசமாக ஒரு ஊகத்துக்கு வர மட்டுமே இத்தகைய ஆராய்ச்சிகள் உதவும். 1991 தேர்தலில், அடித்த ராஜீவ் காந்தி மரண அனுதாப அலை, 1996ல் ஏற்பட்ட ஜெயலதா மீதான கோப அலை, 2004ல் ஏற்பட்ட ஜெயலலிதா எதிர்ப்பு அலை போன்ற சமயங்களில் மட்டுமே தேர்தல் முடிவுகளுக்கான உறுதியான காரணங்களை கண்டறிய முடியும்.
சாதாரணமாகவே, இந்திய வாக்காளர்கள், தாங்கள் யாருக்கு வாக்களித்தோம் அல்லது வாக்களிக்கப் போகிறோம் என்பதை வெளிப்படையாக சொல்ல விரும்புவதில்லை. கருத்துக் கணிப்பு நடத்துபவர்களிடம் தவறான தகவல்களை சொல்லி, அவர்களை குழம்ப வைப்பதில் மக்களுக்கு ஒரு அலாதியான மகிழ்ச்சி உள்ளது என்றே சொல்லலாம். இதனால்தான் பெரும்பாலான கருத்துக் கணிப்புகளும், எக்சிட் போல்களும் தவறாகப் போகின்றன.
ஆகையால், இந்த ஆராய்ச்சிகளுக்குள் முழுவதும் போக வேண்டாம். ஆனால், இந்த ஆராய்ச்சிக் கட்டுரைகளில், சித்தாராமைய்யா உருவாக்கிய அஹிந்தா என்ற கூட்டமைப்பு அல்லது, கருத்தியல் குறித்து ஒரு கட்டுரை இருந்த்து. அஹிந்தா என்றால், தாழ்த்தப்பட்ட, பழங்குடியின, பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மையினர் கூட்டணி என்று பொருள். சித்தாராமைய்யாவின் இந்த அமைப்பு, இந்தப் பிரிவினரிடையே ஒரு கணிசமான ஆதரவை ஏற்படுத்தியிருந்தது உண்மையே. ஆனால், இந்தப் பிரிவினரில், சிறுபான்மையினரைத் தவிர, இதர பிரிவினர் முழுமையாக காங்கிரசுக்கு வாக்களித்தார்கள் என்ற உறுதியாக சொல்ல முடியாது. ஏனென்றால், ரெட்டி சகோதரர்களின் நெருங்கிய நண்பராக உள்ள ஸ்ரீராமுலு, பழங்குடியினத்தைச் சேர்ந்தவர்.
ஆனால் அதே நேரத்தில், கர்நாடகாவின் செல்வாக்கான, அதிக எண்ணிக்கையில் உள்ள இரண்டு சாதிகளான, ஒக்கலிகா மற்றும் லிங்காயத்துகள் தலித் மற்றும் பழங்குடியின கூட்டணிக்கு எதிராக வாக்களித்தார்கள் என்பதை மட்டும் நம்ப முடிகிறது. மற்றபடி, காங்கிரசுக்கோ, பிஜேபிக்கோ வாக்களித்த மக்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு காரணத்தை மனதில் வைத்திருக்கலாம்.
104 இடங்களை வென்றுள்ள பிஜேபியின் வெற்றி மக்களின் தீர்ப்பா என்றால் மக்களின் தீர்ப்புதான். ஆனால் அதே நேரத்தில், பிஜேபி பெற்ற மொத்த வாக்குகளின் சதவிகிதம், 36.2 சதவிகிதம். பிஜேபிக்கு வாக்களிக்காமல் காங்கிரஸ், ஜனதா தனம், சுயேட்சைகள் மற்றும் இதர கட்சிகளுக்கு கிடைத்துள்ள வாக்குகளின் சதவிகிதம் 62.5. இதை அடிப்படையாகக் கொண்டால் மாநிலத்தில் 62.5 சதவிகித மக்கள் பிஜேபிக்கு எதிராக வாக்களித்திருக்கிறார்கள் என்றுதானே பொருள் கொள்ள முடியும் ? ஆனால் நமது தேர்தல் முறைகளின்படி, 10 வாக்குகள் வேறுபாட்டில், ஒருவர் வென்றாலும் அவர் எம்எல்ஏதான்.
இந்தத் தேர்தல் முறை குறித்து, ஜெயகாந்தன் இவ்வாறு கூறுகிறார்.
“சட்டசபை பாராளுமன்றத் தேர்தல்கள் கொள்கை அறிக்கைகளை முன்வைத்து நடத்தப்பட வேண்டும். மாநில அளிவிலும், தேசிய அளவிலும் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுக்கு எல்லாத் தொகுதிகளிலும் போட்டியிட வாய்ப்பு தர வேண்டும். எந்தத் தனி நபரும் வேட்பாளராக நிற்கக் கூடாது, அங்கீகரிக்கப்பட்ட கட்சியின் சின்னங்கள் மட்டும் ஓட்டுச் சீட்டில் இருக்க வேண்டும். அப்போது போடப்படுகிற ஓட்டுக்கள் கொள்கையின் அடிப்படையில் இருக்கும். எந்த்த் தனி நபரின் முகமும் கைகூப்பிக் கொண்டு குறுக்கே வந்து பல் இளித்து நிற்காது. இவ்வாறு சேகரித்த ஓட்டுக்களை மொத்தமாக எண்ணி எவ்றொரு கட்சிக்கும் கிடைத்த ஓட்டுக்களின் அடிப்படையில் விகிதாச்சார பிரதிநிதித்துவம் தருதல் வேண்டும்.
கம்யூனிஸ்ட் கட்சிக்கு கிடைத்த ஓட்டுக்களின் அடிப்படையில் பாராளுமன்றத்துக்கு பத்து ஸ்தானமும் (இடமும்) சட்டசபைக்கு ஐம்பது ஸ்தானமும் வருகிறது என்று வைத்துக் கொள்வோம். தேர்தல் ஆணையம் இந்த விகிதாச்சாரத்தின்படி, உங்கள் எம்எல்ஏக்களையும், எம்பிக்களையும் தேர்ந்தெடுத்து அனுப்புங்கள் என்று கம்யூனிஸ்ட் கட்சியைக் கேட்டுக் கொள்ளும். கட்சி, எந்தக் கொள்கையின் அடிப்படையில் மக்களிடம் ஓட்டுப் பெற்றதோ, அந்த கொள்கைத் திட்டங்களைச் செயல்படுத்த அல்லது அதற்காக வாதிடத் திறமை மிகுந்த நபர்களை பொறுக்கி எடுத்து அனுப்பும். கட்சிக் கொள்கைகளை சம்பந்தப்பட்ட துறைகளில் பார்லிமென்டரி முறையில் எடுத்துச் சொல்லத் திறமை படைத்தவர்கள் என்ற அடிப்படையில் இந்த்த் தேர்வு நிகழ வேண்டும். இப்படி அனுப்பப்படுகிறவர்கள் தங்கள் கடமையைச் சரிவரச் செய்யாதிருந்தால் அல்லது தவறாக செய்திருந்தால், அவருக்கு பதிலாக வேறு ஒருவரை அனுப்பும் அதிகாரம் கட்சிக்கு இருக்க வேண்டும். இப்படிச் செய்வதன் மூலம் கட்சியின் மீது தனி நபர் செல்வாக்கு தவிர்க்கப்படும். பதவியை பயன்படுத்திக் கொண்டு வேறு கட்சிக்குத் தாவுகின்ற அரசியல் சோரத்துக்கு இதில் இடமிராது. ஒரு அங்கத்தினர் இறந்து போனால் மறு தேர்தல் நடத்த வேண்டிய அவசியமில்லை. இந்தியாவின் ஏழ்மைப் பொருளாதாரத்தில் தேர்தலுக்கென்று விரயமாகும் பெரும் செலவு கணிசமாக குறைக்கப்படும். ஓட்டுக்காக யாரும் பணம் கொடுக்க மாட்டார்கள். தேர்தல் கலவரங்களும் பரபரப்புகளு ஏற்படாமல் வழி இல்லாமல் போகும்.
எல்லாவற்றுக்கும் மேலாக எந்த ஒரு வாக்கும், வெற்றி தோல்விக்கு இடமில்லாமல் பயன் பெறும். ஒரு ஓட்டும் வீணாகாது. என் ஓட்டு எனக்கு விருப்பமாக கட்சிக்குப் போய்ச் சேரும் என்ற நம்பிக்கை ஒவ்வொரு வாக்காளருக்கும் ஏற்படும்.” என்றார் ஜெயகாந்தன் தனது இலக்கியவாதியின் அரசியல் அனுபவங்கள் நூலில்.
அவரது கருத்தின் அடிப்படையில், இந்திய தேர்தல் முறையில் அடிப்படை மாற்றங்களை செய்ய வேண்டியது மிகவும் அவசியம். ஆனால் அத்தகைய மாற்றங்களை செய்ய, பெரிய கட்சிகள் ஒன்றும் முன்வராது. ஒத்துழைக்காது. ஏனென்றால், கம்யூனிஸ்ட் கட்சிகளைத் தவிர, வெறும் தனி நபர் துதிபாடலின் அடிப்படையில் மட்டுமே 98 சதவிகித கட்சிகள் நடைபெறுகின்றன. இன்று மோடி என்ற நபரை நீக்கி விட்டு பிஜெபியை பாருங்கள்…. ஸ்டாலினை நீக்கி விட்டு திமுகவை பாருங்கள். சோனியா ராகுலை நீக்கி விட்டு, காங்கிரஸை பாருங்கள். இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். அது ஒரு நீண்ட விவாதம். அதை பின்னொரு நாளில் பார்க்கலாம்.
தற்போது, மீண்டும் கர்நாடக தேர்தலுக்கு வருவோம். கர்நாடக தேர்தல் முடிவுகளை எந்த கட்சிக்கும் கிடைத்த வாக்கென்று எடுத்துக் கொள்ள முடியாது. அப்படி இருக்கையில், சமீபத்தில் நடந்த சட்டப்பேரவை தேர்தல்களில் தொங்கு சட்டசபை அமைந்த இடங்களில், அந்த மாநில ஆளுனர்களும், பிஜேபியும் எப்படி நடந்து கொண்டது என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். குறைந்த எண்ணிக்கையில் எம்எல்ஏக்களை வைத்திருந்த பிஜேபி, ஜனநாயக மரபுகளையோ, உச்சநீதிமன்றத் தீர்ப்புகளையோ துளியும் மதிக்காமல், உள்ளுர் கட்சிகளோடு கூட்டணி அமைத்துக் கொண்டு, ஆளுனரை வளைத்து, ஆட்சியை பிடித்த்து. இந்த மாநிலங்களில் தனிப் பெரும் கட்சியாக தேர்ந்தெடுக்கப்பட்ட காங்கிரஸ், செய்வதறியாது விழித்த பின்னர், தற்போது எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது.
ஆனால் இம்முறை அந்தத் தவறு நடக்கக் கூடாது என்பதில் ராகுல் காந்தி தெளிவாக இருந்தாரென்று டெல்லி வட்டாரத் தகவல்கள் கூறுகின்றன. ஒரே ஒரு சீட் பிஜேபியை விட அதிகமாகப் பெற்றாலும், உடனடியாக ஆளுனரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோர வேண்டும் என்று கர்நாடக காங்கிரஸ் கட்சியினருக்கு உத்தரவிட்டிருந்தார்.
15 மே அன்று காலை 10 மணிக்கெல்லாம் தேர்தல் முடிவுகள் பிஜேபிக்கு 22 சீட்டுகள் கிடைக்கும் என்று கூறின. அப்போது நிச்சயம் அறுதிப் பெரும்பான்மையோடு பிஜேபி ஆட்சி அமைக்கப் போகிறது என்றே நம்பப் பட்டது. பிஜேபி தலைமை, மதியம் 3.30 மணிக்கு, பிஜேபி நிர்வாகிகள் கூட்டம் நடைபெறும் என்றும், வெற்றி விழா என்றும் அறிவிக்கப்பட்டது.
அந்த நேரத்தில்தான், சோனியா காந்தி, மதச்சார்பற்ற ஜனதா தளத் தலைவர் தேவேகவுடாவை தொலைபேசியில் அழைத்து, பிஜேபிக்கு பெரும்பான்மை கிடைக்காமல் போனால், ஜனதா தளத்துக்கு முதலமைச்சர் பதவியை விட்டுத் தர காங்கிரஸ் கட்சி தயாராக இருப்பதாகவும், கூட்டணி ஆட்சி அமைக்கலாம் என்றும் பேசுகிறார். சோனியாவே பேசியதும், மறு வார்த்தை பேசாமல், தேவேகவுடா ஒப்புக் கொள்கிறார். குமாரசாமியும் ஒப்புக் கொள்கிறார். ஆனால், இந்த நேரத்தில் பிஜேபி வெற்றி மிதப்பில் இருந்தது.
இதற்குள், குமாரசாமி, காங்கிரஸ் அளித்த ஆஃபரை ஏற்றுக் கொள்வதாக அறிவித்து விட்டார். முழுப் பெரும்பான்மை கிடைக்காது என்பதை பிஜேபி உணர்ந்தபோது காலம் கடந்திருந்தது.
மூத்த பத்திரிக்கையாளர், ஆர்.மணி கர்நாடக தேர்தல் குறித்து பேசினார். “இந்த தேர்தல் முடிவுகள் நான் எதிர்ப்பார்த்த முடிவுகள் அல்ல. காங்கிரஸ் தனிப் பெரும் கட்சியாக வரும் என்று எதிர்ப்பார்த்தேன். ஆனால், 2016 தேர்தலில் திமுக தோற்றது போலவே, கர்நாடக தேர்தலிலும் சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் பல தொகுதிகளில் வெற்றி தோல்விகள் அமைந்துள்ளன. இது ஒரு கண்ணாடி போல உடைந்த தீர்ப்புதான்.
ஆனால், தன்னிடம் அதிகாரமும் ஆளுனரும் இருக்கிறார்கள் என்ற ஒரே காரணத்துக்காக ஜனநாயக நெறிமுறைகளையும், மரபுகளையும் குழிதோண்டி புதைத்துக் கொண்டுள்ளது பிஜேபி. மேகாலயாவிலும், மணிப்பூரிலும், கோவாவிலும், குறைந்த எண்ணிக்கையில் தேர்தலை வென்றாலும், மக்கள் பிஜேபியை புறக்கணித்தாலும், புறவாசல் வழியாக, ஆட்சியை பிடித்துள்ளது பிஜேபி.
பிஜேபியினர், ஜனநாயகத்தின் குரள்வலையை வளைக்கிறார்கள், நெறிக்கிறார்கள், அரசியல் அமைப்புச் சட்டத்தை துச்சமாக மதிக்கிறார்கள்.

பிஜேபியின் இத்தகைய நடவடிக்கைகள், முடைநாற்றம் எடுக்கும் வகையில் ஆபாசமாக மாறி விட்டது. ஜனநாயகத்தின் மீதும், அரசியல் அமைப்புச் சட்டத்தின் மீதும் நம்பிக்கை கொண்டோர், பிஜேபியின இத்தகைய நடவடிக்கைகளைப் பார்த்து, அயற்சி கொள்கிறார்கள். விரக்தி அடைகிறார்கள்.
ஆயிரம் குறைகள் இருந்தாலும், இந்தியா ஒரு அற்புதமான ஜனநாயகம். இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் மக்கள் பேசக்கூடிய எத்தனையோ மொழிகள் இருந்தாலும், ஏழு சதவிகித மக்களே பேசக் கூடிய வங்காள மொழியில் பாடப்பட்ட ஒரு பாடலை, எத்தகைய மனக்குறையுமின்றி, தயக்கமின்றி, ஏற்றுக் கொண்ட நாடு இந்தியா. அத்தகைய இந்தியாவின் சிறப்பை, குதறி எரிந்து கொண்டிருக்கிறது பிஜேபி.
பிஜேபியின் நடவடிக்கைகள் இன்று ஒரு மிகப்பெரிய ஆபத்தை உருவாக்கிக் கொண்டிருக்கிறது. கோவா, மேகாலயா மற்றும் மணிப்பூர், மாநிலங்களில் பிஜேபி ஆட்சியை பிடித்தது கட்சித் தாவல் மூலம் மட்டுமே.
கட்சித்தாவலை தடுப்பதற்கென்றே இருக்கும் சட்டம்தான் அரசியல் அமைப்பு சாசனத்தின் பத்தாவது அட்டவணை. அந்த அட்டவணையின்படி, இரண்டில் ஒரு பகுதி எம்எல்ஏக்கள், அணி மாறினால் மட்டுமே, அதை கட்சியில் ஒரு பிளவாகக் கருதி தனி அணியாக அங்கீகரிக்க முடியும். அதற்கு குறைந்த எண்ணிக்கையில் எம்எல்ஏக்கள், மாற்றி வாக்களித்தால் கட்சித் தாவல் தடைச் சட்டத்தின்படி, அவர்கள் தங்கள் பதவிகளை இழப்பார்கள்.
ஆனால் இதில்தான் சூட்சுமம் அடங்கியிருக்கிறது. இப்படி மாற்றி வாக்களிக்கும், எம்எல்ஏக்களை தகுதிநீக்கம் செய்யும் அதிகாரம் சபாநாயகரிடம் மட்டுமே உள்ளது. சபாநாயகர் எப்படியும், பெரும்பான்மை கட்சியான ஆளுங்கட்சியைச் சேர்ந்தவராகவேதான் இருப்பார். மாற்றி வாக்களித்தவரை, தகுதிநீக்கம் செய்யாமல், சபாநாயகர் ஆட்சி முடியும் வரை, அல்லது முடிந்தவரை காலம்தாழ்த்துவார். இதனால், எந்த பாதிப்பும் இன்றி அந்த ஆட்சி நடக்கும். உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சபாநாயகர் மீது எந்த அழுத்தமும் கிடையாது.
இது மிகுந்த ஆபத்தான போக்கு. சட்டத்தில் உள்ள இந்த ஓட்டையை பயன்படுத்தி, இந்தியா முழுக்க பிஜேபி அரசுகளை நிறுவ பிஜேபி தொடர்ந்து முயன்று வருகிறது. இது மிக மிக ஆபத்தானது” என்றார் ஆர் மணி.
மணி சொல்வதை உறுதிப்படுத்தும் வகையில் பல்வேறு சம்பவங்கள் நடைப்பெற்று உள்ளன. தமிழகத்தையே எடுத்துக் கொண்டால், ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட, 11 எம்எல்ஏக்களின் வழக்கில் முக்கியமாக எடுத்து வைக்கப்பட்ட வாதமே, தகுதிநீக்கம் செய்யப்பட வேண்டிய 11 எம்எல்ஏக்களை தகுதிநீக்கம் செய்யாமல் ஒரு வருடத்துக்கு மேல் சபாநாயகர் காலம் தாழ்த்துவது பாரபட்சமான செயல். நீதிமன்றமே 11 எம்எல்ஏக்களையும் தகுதிநீக்கம் செய்ய வேண்டும் என்பதுதான் கோரிக்கை.
உச்சநீதிமன்றம், ராஜேந்திர சிங் ராணா என்ற வழக்கில், இதே போன்ற நேர்வில், சபாநாயகரின் அதிகாரத்தை கையில் எடுத்து, மாற்றி வாக்களித்த எம்எல்ஏக்களை தகுதிநீக்கம் செய்து உத்தரவிட்டது. ஐந்து நீதிபதிகளைக் கொண்ட உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு வழங்கிய தீர்ப்பு அது. இணைப்பு ஆனால், தலைமை நீதிபதி இந்திரா பேனர்ஜி, விசித்திரமக அந்த வழக்கு 11 எம்எல்ஏ வழக்குக்கு பொருந்தாது என்று தீர்ப்பளித்தார்.
சபாநாயகருக்கு நீதிமன்றம் உத்தரவிட முடியுமா, முடியாதா என்பது குறித்த வழக்கு உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றப்பட்டு, எட்டு மாதங்கள் முடிந்து விட்டது. இது வரை, அரசியல் சாசன அமர்வும் உருவாக்கப்படவில்லை. வழக்கும் விசாரணை செய்யப்படவில்லை.

பிஜேபியால் செய்யப்பட்ட திட்டமிட்ட ஜனநாயகப் படுகொலை இது. ஆளுனர் பதவியை எவ்வளவு துஷ்பிரயோகம் செய்ய முடியுமோ அவ்வளவு துஷ்பிரயோகம் செய்து வருகிறது பிஜேபி. பிஜேபி ஆளுனர்களின் இது போன்ற நடவடிக்கைகளை, இது வரை, எந்த ஆளுனரும் கையாண்டது கிடையாது. இது கடுமையாக கண்டிக்கத்தக்கது” என்றார்.
ஆளுனர் மாளிகையை காங்கிரஸ் அரசும் மோசமாக பயன்படுத்தியிருக்கிறது என்பது உண்மைதான் என்றாலும், பொம்மை வழக்கில் உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு தீர்ப்புக்குப் பின், சொல்லிக் கொள்ளும் அளவுக்கு காங்கிரஸ் அரசு ஆளுனர்களை அதிகார துஷ்பிரயோகம் செய்ய வைத்தது இல்லை.
ஆனால், பிஜேபி அரசு, ஆளுனர்களை துஷ்பிரயோகமாக பயன்படுத்தி பல்வேறு அரசுகளை கவிழ்த்ததோடு மட்டுமல்லாமல், அப்படி அரசுகளை கவிழ்த்தது தவறு என்று தீர்ப்பளித்த உயர்நீதிமன்ற நீதிபதிகளையும் பழிவாங்கி வருகிறது. உத்தரகாண்ட் மாநில அரசை கவிழ்த்து தவறு என்று தீர்ப்பளித்த ஒரே காரணத்துக்காக நீதிபதி கேஎம்.ஜோசப்பை உச்சநீதிமன்றத்துக்கு நியமனம் செய்ய விடாமல், பிஜேபி அரசு பல தந்திரங்களை கையாண்டு வருகிறது.
மூத்த பத்திரிக்கையாளர் ஆர்கே.ராதாகிருஷ்ணன் இது குறித்து கருத்து தெரிவித்தார்.
“நிச்சயமாக கர்நாடக தேர்தல் முடிவுகள் எந்தக் கட்சிக்கும் ஆதரவான தீர்ப்பு கிடையாது. அப்படி இருக்கையில், பொம்மை வழக்கின் தீர்ப்பின்படி, தனிப் பெரும்பான்மை பெற்ற கட்சியை அழைக்க வேண்டும். அதே நேரத்தில் வேறொரு கூட்டணி, முழுப் பெரும்பான்மையோடு இருக்குமென்றால் அதைத்தான் அழைக்க வேண்டும். ஆனால் இந்த நேர்வில், போதுமான எண்ணிக்கை இல்லாத பிஜேபியை ஆளுனர் அழைத்திருப்பது, ஆளுனர் அரசியல் சாசனத்துக்கு எதிராக செயல்பட்டுள்ளார் என்பதை தெளிவாக காட்டுகிறது.

அரசியல் சாசனம் உருவாக்கப்பட்டபோது, ஆளுனர்கள், பாரபட்சமில்லாமல், நேர்மையாக செயல்படுவார்கள் என்ற நோக்கிலேயே அவர்களுக்கு அதிகமான அதிகாரங்கள் வழங்கப்பட்டன. ஆனால் பல ஆண்டுகளாக, ஆளுனருக்கான அதிகாரங்கள் உறுதியாக, தெளிவாக வரையறை செய்யப்படாத காரணத்தால், பல துஷ்பிரயோகங்கள் நடைபெற்று வருகின்றன. அரசியல் சார்புடைய ஆளுனர்கள், ஆளும் அரசாங்கங்கள், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளை கலைக்கவும், சிதைக்கவும் பயன்படுத்தப்பட்டு வருகிறார்கள்.
ஆளுனர்களின் அதிகாரம் என்ன, எத்தகைய சூழலில் என்ன நடவடிக்கையை எடுக்க வேண்டும், என்ன செய்யக் கூடாது (Dos & Don’ts) என்பதை வரையறுக்க வேண்டிய நேரம் வந்து விட்டது. இதை செய்யத் தவறினால், நாளை கர்நாடகத்தில் நடைபெற்றது போன்ற பல்வேறு சம்பவங்கள் தொடர்ந்து நடக்கும்” என்றார்.
காங்கிரஸ் செய்த்து சரியா, பிஜேபி செய்தது நேர்மையான செயலா, என்று ஆராயும் காலங்களை கடந்து விட்டோம்.
1922ம் ஆண்டு, காந்தி ஒத்துழையாமை இயக்கத்தை அறிவித்தார். அது வரை நடந்த சுதந்திரப் போராட்டங்களையெல்லாம் விட, ஒத்துழையாமை இயக்கம் பெரும் வீச்சை எட்டியது. நாடெங்கும் போராட்டங்கள் வெடித்தன. அத்தகைய ஒரு போராட்டத்தின்போது, உத்தரப் பிரதேசத்தின் கோரக்பூர் மாவட்டத்தில் சவுரி சவுரா காவல்நிலையதிலிருந்து, போராடிய பொதுமக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. ஆவேசமடைந்த காவல் நிலையத்தை முற்றுகையிட்டு தீயிட்டுக் கொளுத்தினர். அதில், 23 காவல் துறையினர் எரிந்து செத்தனர்.
அந்த போராட்டம் அப்படியே தொடர்ந்திருந்தால், இருபதுகளிலேயே இந்தியா சுதந்திரம் அடைந்திருக்கக் கூடும். ஆனால், காந்தி உடனடியாக அந்த சம்பவத்துக்கு வெட்கப்பட்டார். அந்த சம்பவத்துக்கு தானே காரணம் என்று எண்ணினார். தன் குற்றத்துக்காக 5 நாட்கள் உண்ணாவிரதம் இருந்தார். ஒத்துழையாமை இயக்கத்தை காங்கிரஸ் வாபஸ் பெற்றது.
அத்தகைய நேர்மையா இருக்கிறது இப்போது ? தற்போது நடக்கும் அரசியல் விளையாட்டின் விதிகள் மாற்றப்படுகின்றன. பலமோடு இருக்கும் அணி, அந்த அணி வெற்றி பெறுவதற்கு ஏற்ற வகையில், ஒவ்வொரு போட்டிக்கும் விதிகளை மாற்றியமைக்கிறது.
இங்கே வெற்றி பெற்றவன் சொல்வதே வேதம். வல்லான் வகுத்ததே வாய்க்கால். இதில் நாம் இந்தத் தரப்பு செய்வது சரி. அந்தத் தரப்பு செய்வது சரி என்று நிலைபாடு எடுக்க முடியாது. ஆனால், எந்த கட்சி வெற்றி பெறும். அது வெற்றி பெற்றால் என்ன நிகழும் என்பதைத்தான் உன்னிப்பாக கவனிக்க வேண்டும்.
பிஜேபி ஆட்சியமைத்தால் என்ன நடக்கும் என்பதை நாடு முழுக்க நடக்கும் சம்பவங்களை வைத்து அவதானித்து வருகிறோம். 2019 தேர்தலை மனதில் வைத்து, கர்நாடக மாநிலத்தில் எங்கெங்கெல்லாம் முடியுமோ, அங்கேயெல்லாம் மத கலவரத்தை தூண்ட பிஜேபி சற்றும் தயங்காது. தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட மறு நாளே, மங்களுரில் மூன்று மசூதிகளில் கல் வீசப்பட்டுள்ளது. உடனடியாக காவல்துறையினர் தலையிட்டு அமைதியை நிலைநாட்டியுள்ளனர்.
கர்நாடகத்தில் அமைதியாக மக்கள் வாழும் இடங்களில் சென்று, இஸ்லாமியர்களை ஏதாவது ஒரு காரணம் காட்டி, வம்பிழுப்பார்கள். அவர்கள் திருப்பி அடிப்பார்கள். அது கலவரமாக மாறும். கர்நாடக மக்கள், என்ன உணவு உண்ண வேண்டும் என்பதற்கு உத்தரவு பிறப்பிப்பார்கள். கப்பன் பார்க்கிலும், லால் பாக் பார்க்கிலும், காதலர்கள் வரக் கூடாது என்பார்கள். பிரசித்தி பெற்ற பெங்களுர் பப்க்களுக்குள் பெண்கள் வரக் கூடாது என்பார்கள். பெண்கள் என்ன உடை உடுத்த வேண்டும் என்று கட்டளை பிறப்பிப்பார்கள்.
வாய்ப்பு கிடைக்கும் இடத்தில், தனியாக சிக்கும் இஸ்லாமியரை பிடித்து, அடித்து ஜெய் ஸ்ரீராம் சொல் என்று தாக்குவார்கள். மெட்ரோ ரயிலில் ஏறுவதற்கு முன் வந்தே மாதரம் பாட வேண்டும் என்பார்கள். நல்ல பதவிகளில் உள்ள பெண்களை, நீ உயர் பதவியில் உள்ள ஆண்களோடு படுத்துதான் இந்தப் பதவிக்கு வந்தாய். வாழ்வில் நல்ல பதவி மற்றும் பொறுப்புகளில் உள்ள பெண்கள் தேவடியாள்கள் என்பார்கள்.
நீ எதற்கு வேலைக்கு வருகிறாய். வீட்டிலேயே மாட்டு சாணம் மெழுகி, மாட்டு மூத்திரத்தை வீட்டை சுற்றித் தெளித்துக் கொண்டிரு. எதற்காக வேலைக்கு போகிறாய் என்பார்கள்.
எல்லாவற்றுக்கும் மேலாக, பெண்களை வாய்ப்பிருக்கும் இடங்களிலெல்லாம் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்குவார்கள். அதில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் கைது செய்யப்பட்டால் குற்றவாளிகளை காப்பாற்ற ஊர்வலம் செல்வார்கள். பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தையை அடித்தே கொல்வார்கள். அப்பெண்ணுக்கு ஆதரவாக வழக்காடும் வழக்கறிஞரை தாக்குவார்கள்.
உங்கள் வீட்டு சமையலறையில் நுழைந்து, ப்ரிட்ஜில் என்ன மாமிசம் இருக்கிறது என்று பார்த்து, அது மாட்டுக் கறி என்று சந்தேகம் என்று கூறி உங்கள் தந்தையை நடு ரோட்டில் அடித்துக கொல்வார்கள்.
பெல்லாரி மாவட்டத்தையே சூறையாடிய ரெட்டி சகோதரர்களை அமைச்சர்களாக்கி அழகு பார்ப்பார்கள். எதிர்க்கும் அதிகாரிகளை கொலையும் செய்வார்கள்.
சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால், நம் வாழ்வின் ஒவ்வொரு அம்சத்தையும் அவர்கள் தீர்மானிப்பார்கள்.
இந்த அடிப்படையிலும், நம் அனுபவத்திலும்தான் நாம் எந்தப் பக்கம் நிற்க வேண்டும் என்பதை முடிவு செய்ய வேண்டும்.
தனது வெற்றியை மனதில் வைத்து, ஆட்ட விதிகளை ஒவ்வொரு போட்டிக்கும் மாற்றி வரும் பிஜேபியை எதிர்கொள்ள, காங்கிரஸ் கட்சி எந்த தந்திரத்தையும் கையாளலாம். பிஜேபி எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கி அந்தக் கட்சியை உடைப்பது உட்பட. பிஜேபி எம்எல்ஏக்களுக்கு லஞ்சம் கொடுத்து, அவர்களை அமைச்சர்களாக்குவது உட்பட.
போட்டிதோறும் மாறும் ஆட்ட விதிகளை எதிர்கொள்வதற்கு ஏற்றார்ப்போன்ற உத்திகளை எதிரில் ஆடுவோரும் கையாளவே வேண்டும்.
அதை காங்கிரஸ் கட்சி இது வரை சரியாவே கையாண்டு வருகிறது.
கொலைமேற்கொண் டாரிற் கொடிதே அலைமேற்கொண்டு
அல்லவை செய்தொழுகும் வேந்து.
மக்களை வருத்தும் தொழிலை மேற்கொண்டு, முறையல்லாத செயல்களைச் செய்து நடக்கும் அரசன் கொலைத் தொழிலைக் கொண்டவரை விடக் கொடியவன்.
அத்தகைய அரசனின் ஆட்சியின் கீழ் நாம் இருக்கிறோம் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
கருத்துகள்
கருத்துரையிடுக