விஷால் ரெட்டி. தமிழகத்தில் திடீர் திடீரென்று தோன்றும் புரட்சியாளர்களில் இவரும் ஒருவர். கண்ணெதிரே மைக்கை நீட்டினால் உணர்ச்சிமயமாக பீறிட்டு எழுவார். இப்படி இவர் தொலைக்காட்சிகளில் கதறுவதை மக்கள் ஒரு மவுனப் புன்னகையோடு பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
இப்போது திடீரென்று விஷால் ரெட்டி பற்றிய ஆராய்ச்சி என்ன என்ற கேள்விக்கு பதில் கட்டுரையின் இறுதியில் விடை.
விஷால் ரெட்டியின் தந்தை ஜி கிருஷ்ணா ரெட்டி, பெங்களுரை பூர்வீகமாக கொண்டவர். பெங்களுரில், க்ரானைட் தொழில் செய்து வந்தார். எண்பதுகளின் இறுதியில், கதாநாயகன் ஆகும் கனவோடு சென்னை வந்து வாய்ப்பு தேடுகிறார். அப்போது இவரோடு வாய்ப்பு தேடி பின்னால் பெரிய நடிகராக வளர்ந்தவர் அர்ஜுன்.
திரைப்பட வாய்ப்புகள் கிடைக்காததால், வழக்கம் போல, திரைத்துறையில் சிக்கும் முதலைகளிடம் கிருஷ்ணா ரெட்டியும் சிக்குகிறார். கிரானைட் தொழிலில் கிடைத்த பணத்தை வைத்து, சென்னையில் சொந்தமாக திரைப்படம் தயாரிக்கிறார். அவர் முதன் முதலில் தயாரித்த படத்தின் கதாநாயகன் சரத்குமார். அவர் தயாரித்த முதல் படம், ஐ லவ் இந்தியா. சரத்குமார் மற்றும் சுகன்யா நடித்தனர். இப்படம் அக்டோபர் 1993ல் வெளியாகிறது.
படம் மரண அடி. அதற்கு முன் சரத்குமார் நடிப்பில் பவித்ரன் இயக்கத்தில் வெளியாகி சூப்பர் ஹிட்டான சூரியன் படத்தை நம்பி, ஐ லவ் இந்தியா எடுக்கப்படுகிறது. படம் மரண அடி. வெளியிட்ட இடங்களிலெல்லாம், கடும் நஷ்டத்தை சந்திக்கிறது. விநியோகஸ்தர்கள் நெருக்குகிறார்கள். உங்களால் நஷ்டமாகி விட்டது என்று கூறி, சரத்குமார் கால்ஷீட்டில் மகாபிரபு என்ற அடுத்த படத்தை எடுக்கிறார். அது சுமாராக போகிறது. ஆனால், ஐ லவ் இந்தியாவில் ஏற்பட்ட கடனை அவரால் சமாளிக்கவே முடியவில்லை. ஒரு கட்டத்தில், மஞ்சள் நோட்டீஸ் (Insolvency Petition) கொடுத்து விட்டு, கர்நாடகாவுக்கே போய் விடுகிறார்.
கர்நாடகாவுக்கு போனாலும், இவருக்கு சினிமா ஆசை விடவேயில்லை. மீண்டும் சினிமா தயாரிக்க ஆசை. ஆனால் அதே பேனரில் மீண்டும் படம் எடுத்தால், கடன்காரர்கள் கழுத்தைப் பிடிப்பார்கள் என்று தெரிந்து, தன் மகன் பெயரில் புதிய தயாரிப்பு நிறுவனத்தை தொடங்குகிறார் கிருஷ்ணா ரெட்டி. அந்த நிறுவனம்தான் ஜிகே பிலிம்ஸ். அந்நிறுவனத்தின் முதல் தயாரிப்பு, லவ் மேரேஜ். அதில் கிருஷ்ணா ரெட்டியின் முதல் மகன் விக்ரம் கிருஷ்ணாவே அஜய் என்ற பெயரில் ஹீரோவாக அறிமுகம் ஆகிறார். அதன் பின் அவரது நடிப்பிலேயே, சிவாஜி ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க பூக்களைப் பறிக்காதீர்கள். அதுவும் சுமாராக ஓடுகிறது. இந்த கட்டத்தில், மூத்த மகன் மும்பைக்கு ஒரு நடிகையோடு ஓடிப் போகிறார். இதில் தந்தை ஜிகே ரெட்டிக்கு
மூத்த மகன் பெரிய அளவில் நடிப்பில் சோபிக்கவில்லை என்பதை உணர்ந்து, அடுத்த மகனை நடிப்பில் இறக்க முடிவு செய்கிறார். அந்த அடிப்படையில் எடுக்கப்பட்ட படம்தான் செல்லமே. இதில்தான் விஷால் கதாநாயகநாக அறிமுகமாகிறார். இந்த திரைப்படத்தை ஞானவேல் மற்றும் ஜெயப்பிரகாஷ் ஆகியோர் தயாரிக்கிறார்கள். படத்துக்கான பணத்தை கொடுப்பது, விஷாலின் தந்தை. ஆனால் படம வேறு நிறுவனத்தின் பெயரில் உருவாகிறது. இந்தப் படம் சுமாராக போகிறது. ஆனால் படத்தின் இறுதியில் தயாரிப்பாளர்களுக்கும் விஷால் தந்தைக்கும் பண விவகாரத்தில் தகராறு ஆகிறது. இனி இன்னொருவரை வைத்து படம் தயாரிப்பதில்லை என்று முடிவெடுத்த ஜிகே.ரெட்டி, அந்த தகராறில் ஏற்பட்ட கோவத்தின் காரணமாகவே அடுத்த படத்தை எடுப்பது என்று முடிவெடுக்கிறார். அந்த கோவத்தின் அடிப்படையில் எடுத்த திரைப்படம்தான் சண்டக் கோழி. இது பிரம்மாண்டமான வெற்றியடைகிறது. சரி படம் நன்றாகப் போகிறதே என்று, ஒரு விளையாட்டுக்கு தெலுங்கில் டப் செய்து பந்தம் கோழி என்று வெளியிடுகிறார்கள்.
தெலுங்கு மக்கள், விஷால், ராஜ்கிரண் கேரக்டர்களை ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டி மற்றும் அவர் மகன் ஜெகன்மோகன் என்று உருவகித்துக் கொள்கிறார்கள். படம் அதகள ஹிட். அடுத்து விஷால் நடிப்பில் வெளியான படம் திமிரு. இது தமிழிலும், தெலுங்கிலும் சூப்பர் டூப்பர் ஹிட். வசூலை அள்ளிக் கொட்டுகிறது. அடுத்ததாக வெளி நிறுவன தயாரிப்பில் வெளியான தாமிரபரணி திரைப்படமும், தமிழ் மற்றும் தெலுங்கில் சூப்பர் ஹிட். அந்த நேரத்தில், விஷால் மற்றும் அவர் அண்ணனிடம் இருந்த தொகை 100 கோடி.
விஷால், மூன்று வெற்றிப் படங்கள் கொடுத்த களிப்பில் ஆந்திராவில் வெற்றி யாத்திரை செல்கிறார். இது தெலுங்கு ஹீரோக்கள் பலரை கோபமடையச் செய்கிறது. இந்த கட்டத்தில்தான் விஷாலுக்கு தலைக்கனம் ஏறுகிறது. தலைகால் புரியவில்லை.
இனி டப்பிங் படம் கிடையாது. நேரடி தெலுங்கு படம் என்று சத்யம் என்ற படத்தை தமிழ் மற்றும் தெலுங்கில் எடுக்கிறார். பெயருக்கு ராஜசேகர் என்ற இயக்குநரை போட்டு விட்டு, பர்மா பஜாரில் வாங்கிய ஆங்கில, மற்றும் தைவான் படங்களின் சண்டைக் காட்சிளை அப்படிய படத்தில் வைக்க வேண்டும் என்று பிடிவாதம் பிடிக்கிறார். இயக்குநர் ராஜசேகர் டம்மி இயக்குநர் என்பதால், விஷால் சொன்னதையெல்லாம் கேட்கிறார். படத்தின் பட்ஜெட் 22 கோடி. படம் மரண அடி.
இழந்ததை ஈடுகட்ட, அடுத்ததாக தோரணை என்ற படம். அதுவும் மரண அடி. இதன் பட்ஜெட் 18 கோடி. சொந்த தயாரிப்பு வேண்டாம் என்று முடிவெடுக்கிறார். அந்த நேரத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடித்தால் படத்தை ஓட வைப்பார்கள் என்பது தகவல். பல படங்களை அப்படி ஓடவைத்தும் இருந்தார்கள். யாருமே பார்க்காத படங்களை, திரைப்பட வரிசையில் நம்பர் ஒன் என்று கூசாமல் போடுவார்கள் சன் டிவியில். 13 கோடி தயாரிப்பில் தீராத விளையாட்டுப் பிள்ளை என்ற படத்தை எடுத்து, அதை அதே 13 கோடிக்கு சன் டிவிக்கு விற்கிறார். சன் டிவியின் வியாபார உத்தியையும் மீறி, படம் அடி வாங்குகிறது. சன் டிவி கூட்டணியில் வெடி என்ற படம். அதுவும் மரண அடி.
இந்த நேரத்தில்தான், விஷாலுக்கும், அவர் சகோதரர் விக்ரம் கிருஷ்ணாவுக்கும் மோதல் வெடிக்கிறது. இனி நான் படத் தயாரிப்பில் ஈடுபடப் போவதில்லை என்று விக்ரம் கிருஷ்ணா ஒதுங்கி, பாகப்பிரிவினைக்கு கோரிக்கை விடுகிறார். சொத்துக்கள் பங்கு பிரிக்கப்படுகிறது. விஷாலின் தந்தையின் க்ரானைட் தொழில் அண்ணனுக்கு செல்கிறது.
பிடிவாதத்துக்காக விஷால் பிலிம் ஃபேக்டரி என்ற நிறுவனத்தை தொடங்குகிறார். ஏற்கனவே ஏற்பட்ட தொடர் நஷ்டத்தால், கடும் பண நெருக்கடி. இந்த நேரத்தில் பிலிம் பைனான்சியர் மதுரை அன்பு செழியனிடம் கடன் வாங்குகிறார்.
கடன் வாங்கி எடுத்த முதல் படம், பாண்டிய நாடு. இது சுமாராக போகிறது. அடுத்த்தாக 2014ம் ஆண்டு எடுத்த படம் நான் சிகப்பு மனிதன். 15 கோடி பட்ஜெட். மரண அடி. அடுத்தது பூஜை. பட்ஜெட் 26 கோடி. மரண அடி. 2015ல் ஆம்பள. பட்ஜெட் 25 கோடி. படுதோல்வி. 2016ம் ஆண்டு கதகளி. 12 கோடி பட்ஜெட். தோல்வி. 2017ம் ஆண்டு துப்பறிவாளன் படத்தை மிஷ்கின் தயாரிக்கிறார். அதிகரித்த தயாரிப்பு செலவுகள் காரணமாக, மிஷ்கின் இந்தப் படத்தை விஷாலிடமே கொடுத்து விடுகிறார். 15 கோடி பட்ஜெட். அதுவும் எதிர்ப்பார்த்த வெற்றியை பெறவில்லை.
தற்போது விஷாலின் கடன் 60 முதல் 70 கோடி என்கிறது திரைத் துறை வட்டாரம்.
இந்தக் கட்டத்தில், சசிகுமாரின் உறவினர் அஷோக் குமார், பைனான்சியர் அன்புசெழியன் நெருக்கடி கொடுத்தார் என்று கடிதம் எழுதி விட்டு தற்கொலை செய்து கொள்கிறார். அப்போது பத்திரிக்கையாளர்களை சந்தித்த, விஷால், வழக்கம் போலவே மைக்கை கடித்துக் கொண்டு, வீர வசனம் பேசுகிறார். அன்பு செழியனை கடுமையாக தண்டிக்க வேண்டும். கைது செய்ய வேண்டும் என்று பேட்டியளிக்கிறார்.
உயர்நீதிமன்ற உத்தரவால், கைது நடவடிக்கையிலிருந்து தப்பித்த அன்புசெழியன், விஷாலுக்கு கொடுத்த பணத்தை திருப்பிக் கேட்கிறார். கடும் நெருக்கடியில் சிக்குகிறார் விஷால்.
இந்த இடத்தில்தான் கட்டுரையின் நோக்கம் வருகிறது.
மார்ச் 2017ல், விஷால், தயாரிப்பாளர் கவுன்சிலின் தலைவராக தேர்தலில் போட்டியிட்டு வெல்கிறார். வென்றதுடம், விஷால் அளித்த முதல் வாக்குறுதி, சினிமா பைரசியை ஒழிப்பேன் என்றதே. இந்த வாக்குறுதியின் அடிப்படையில்தான் விஷால் தேர்தலில் வென்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
வென்றதும், விஷால், மே 2017ல், ஒரு தனியார் நிறுவனத்தை அணுகுகிறார். அந்த தனியார் நிறுவனத்திடம் விஷால் கூறிய முதல் புகார், இணையதளங்களில் புதிய திரைப்படங்களை வெளியிடுவதில் முன்னணியில் நிற்கும் இணையதளங்கள் இரண்டு. ஒன்று தமிழ் ராக்கர்ஸ், மற்றொன்று, தமிழ்கன். இந்த இரண்டு இணையதளங்களின் பின்னணியில் உள்ளவர்களை கண்டறிந்து சொல்ல வேண்டும் என்பதே விஷால் வைத்த கோரிக்கை. இந்த நிறுவனம், விசாரணைக்காக கேட்ட கட்டணம், 30 லட்ச ரூபாய். விஷால், அந்தத் தொகைக்கு ஒப்புக் கொள்கிறார்.
அந்த தனியார் நிறுவனம், விரிவான புலன் விசாரணையை நடத்துகிறது. இந்த இரண்டு இணையதளங்களும், எந்த மின்னஞ்சல் முகவரியை வைத்து, பதிவு செய்யப்பட்டுள்ளன என்பது முதலில் கண்டறியப்படுகிறது. அந்த முகவரி tamilan@asia.com.
இந்த மின்னஞ்சல் முகவரியை வைத்து, எந்தெந்த இணைய தளங்களெல்லாம் பதிவு செய்யப்பட்டுள்ளன என்பது கண்டறியப்படுகிறது. ஏறக்குறைய 40 இணைய முகவரிகள் (domain names) பதிவு செய்யப்பட்டது கண்டறியப்படுகிறது. இதில் சில இணையதளங்கள், தனிப்பட்ட தொழில்கள் தொடர்பானவை.
dixanheatinglimited.com |
eetamil.com |
funma.info |
imgohan.com |
indianmovie.me |
lycaestate.com |
lycamovie.com |
mesflims.com |
mp3bix.com |
myeuroads.com |
nkheating.com |
photosree.com |
saavu.net |
sncoubertin.com |
tamil.games |
tamilbix.com |
tamilcopy.com |
tamilgun.cam |
tamilgun.com |
tamilgun.lol |
tamilgun.net |
tamilgun.org |
tamilgun.pro |
tamilgun.us |
tamilgun.vip |
tamilgunnews.com |
tamilmanitha.com |
tamiltax.com |
tamiltrend.com |
totamil.com |
totamils.com |
woowfunny.com |
woowtamil.com |
xn--k-eka.com |
இந்த 40 இணையதளங்களில் இரண்டு மிக முக்கியமானவை. ஒன்று, lycamovies.com மற்றொன்று, lycaestate.com. இப்போது, lycamovies.com இணையதளத்துக்கு சென்றால், லைக்கா மூவீஸ் தயாரிக்கும் அனைத்து திரைப்படங்களின் விளம்பரங்களும் அதில் இடம் பெற்றிருக்கும். அதில் முக்கியமான படங்கள், ரஜினிகாந்தின், 2.0, கமல்ஹாசனின் சபாஷ் நாயுடு. மணி ரத்தினத்தின் செக்கச் சிவந்த வானம். வடிவேலுவுன் 24ம் புலிகேசி. கமல்ஹாசனின் இந்தியன் 2 படத்தை தயாரிப்பதும், லைக்காவே. காலா படத்தின் சர்வதேச விநியோகஸ்த உரிமையையும் பெற்றிருப்பது லைக்காவே.
Lycamovies.com இணைய முகவரியின் வரலாறை பின்னோக்கி தேடுகிறது அந்த தனியார் நிறுவனம் (reverse search). தேடியபோது, அந்த இணையதளத்தின் முகவரியாக 201ம் ஆண்டிலேயே பதிவு செய்யப்பட்ட முகவரி, 3rd Floor, Wallbrook Building, No.195, Marshwall, London. லைக்கா நிறுவனத்தின் முக்கிய தொழிலான லைக்கா தொலைத் தொடர்பு நிறுவனம் இந்த முகவரியில்தான் இயங்கி வருகிறது.
தமிழில் வெளியாகும் அனைத்துத் திரைப்படங்களின் நல்ல ப்ரிண்டுகளும், தமிழ் கன் இணையதளத்தில் அதே நாள் வெளியாகும். ஆனால் லைக்கா தயாரிக்கும் படங்கள் மட்டும் ஒன்றிரண்டு நாட்கள் தாமதமாகவே வெளியாகும்.
Lycamovies.com என்ற இணையதளம், பைரசி திரைப்படங்களை வெளியிடுகிறது என்ற காரணத்தால், மத்திய தொலைத் தொடர்புத் துறை, லைக்காமூவிஸ் டாட் காம் இணையதளத்தை முடக்கி உத்தரவிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்த அனைத்து விபரங்களும் தொகுக்கப்படுகின்றது. தமிழ் கன் மற்றும் தமிழ் ராக்கர்ஸ் இணைய தளத்தை நடத்துவது சுவிட்சர்லாந்து, மற்றும் லண்டனில் வசிக்கும் இரண்டு இலங்கை தமிழர்கள் என்பதும், அவர்களின் பெயர், புகைப்படம், தொழில், வீட்டு முகவரி உள்ளிட்ட அனைத்து விபரங்களையும் ஒரு அறிக்கையாக தயார் செய்து, அந்த தனியார் நிறுவனம், விஷாலிடம் அளிக்கிறது. விஷால் அந்த அறிக்கையை பெறுகையில் அவரோடு இருந்தவர், ஸ்டுடியோ க்ரீன் நிறுவனத்தைச் சேர்ந்த மற்றொரு பெரும் முதலை ஞானவேல் ராஜா.
விஷால் நடிப்பில் துப்பறிவாளன் திரைப்படம் வெளியாகும் தருணம் அது. விஷால் அந்த அறிக்கையில் குறிப்பிட்ட ஒரு பகுதியை மட்டும் பயன்படுத்திக் கொள்கிறார். அந்த பகுதி என்னவென்றால், தமிழ் கன் நிறுவனத்தின், தமிழக முகவராக, கவுரிசங்கர் வெங்கட் என்பவர் திருப்பத்தூரில் பணியாற்றி வருகிறார். அவர்தான் தமிழ் கன் இணையதளத்தின் அட்மின் என்று விஷால் பேட்டியளிக்கிறார்.
அவர் மீது புகார் அளிக்கப்படுகிறது. அந்த கவுரிசங்கர் வெங்கட் கைது செய்யப்படுகிறார். இதெல்லாம் நடக்கையில், விஷால், லைக்கா நிறுவனம் பற்றி ஒரு வார்த்தை கூட பேசவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தனியார் நிறுவனம், புலனாய்வு செய்து தந்த அறிக்கையை, தனது துப்பறிவாளர் படத்துக்கான விளம்பரமாக விஷால் பயன்படுத்திக் கொள்கிறார். அதோடு நின்றால் பரவாயில்லை.
விஷால் மற்றொரு காரியத்தை செய்கிறார்.
தனியார் நிறுவனம் லைக்கா மூவீஸ் பற்றி அளித்த விபரங்களை எடுத்துக் கொண்டு, நேராக லைக்கா மூவீஸையே அணுகுகிறார். அவர்களிடம் இந்த விபரங்களை கூறுகிறார். லைக்கா மூவீஸ், ரஜினியின் பிரம்மாண்ட படத்தை தயாரித்துக் கொண்டு இருக்கிறது. கமல்ஹாசனின் இரண்டு திரைப்படங்களை தயாரித்துக் கொண்டு இருக்கிறது. இந்த நேரத்தில், திருட்டு விசிடியின் ஊற்றுக் கண்ணாக இருப்பதே லைக்கா நிறுவனம் என்பது தெரிந்தால் எத்தகைய சிக்கல் உருவாகும் என்பதை லைக்கா நிறுவனம் நன்றாகவே உணர்ந்திருந்தது.
உடனடியாக விஷாலை வளைத்துப் போடுகிறது. விஷால் அவரது விஷால் பிலிம் பேக்டரி சார்பாக தயாரித்து வரும் இரும்புத் திரை படத்தை வாங்கிக் கொள்கிறது லைக்கா. அடுத்ததாக விஷால் தயாரிக்க திட்டமிட்டு வரும் சண்டக் கோழி 2ம் பாகத்தையும் லைக்காவே தயாரிக்க முன்வருகிறது.
மதுரை அன்பு செழியனின் நெருக்கடியில் சிக்கி விழி பிதுங்கிக் கொண்டிருக்கும் விஷாலுக்கு இது என்ன கசக்கவா போகிறது ? உடனடியாக ஒப்புக் கொண்டார்.
இப்படித்தான் இன்று விஷால் நடிப்பில் வெளியாகும் இரும்புத் திரை திரைக்கு வந்துள்ளது.
லைக்கா நிறுவனம், இலங்கையின் முன்னாள் அதிபர் ராஜபக்சவின் பினாமி நிறுவனம் என்று நீண்ட நாட்களாக ஒரு புகார் இருந்து வருகிறது. அது பற்றிய விரிவான ஆராய்ச்சிக் கட்டுரை, வீக்என்ட்லீடர் இணையதளத்தில் வெளியாகி இருந்த்து. இணைப்பு
ரியல் எஸ்டேட், தொலைத் தொடர்பு, டிஜிட்டல் மீடியா, லாஜிஸ்டிக்ஸ், திரைப்படத் தயாரிப்பு, ஸ்போர்ட்ஸ் என்று லைக்கா நிறுவனம், இந்தியாவில் மட்டும் 45க்கும் மேற்பட்ட நிறுவனங்களை நடத்தி வருகிறது.
ஏறக்குறைய தமிழ்த் திரையுலகை ஒட்டுமொத்தமாக லைக்கா தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளது. இன்று லைக்காவை பகைத்துக் கொண்டு, எந்த நடிகரும் தொழில் நடத்த முடியாது. எந்த தயாரிப்பாளரும் படம் தயாரிக்க முடியாது.
இது மட்டும் லைக்காவின் ஆபத்து கிடையாது. இன்று தலா இரண்டு படங்களில் நடிக்கும் கமல்ஹாசன் மற்றும், ரஜினிகாந்த் ஆகிய இரண்டு பேருமே, தமிழக முதல்வர் கனவில் இருக்கிறார்கள். இருவருமே அரசியலில் குதிப்பதாக அறிவித்துள்ளார்கள். இவர்கள் இருவருக்கும் கோடிக்கணக்கில் அரசியலுக்காக பணம் தேவைப்படும்.
அவர்களின் பணத் தேவையை லைக்கா போல, கோடிகளில் புரண்டு கொண்டிருக்கும் ஒரு நிறுவனத்தால் எளிதாக வழங்க முடியும் அப்படி வழங்கி விட்டு, லைக்கா நிறுவனம் சும்மாவா இருக்கும் ? ஆங்கிலத்தில் There is no free lunch என்று ஒரு வழக்கு உண்டு. அது லைக்காவுக்கும் பொருந்தும்.
ரிசர்ச் அன்ட் அனலிசிஸ் விங், மத்திய உளவுத் துறை ஆகியன, ஒரு வெளிநாட்டு நிறுவனம், தமிழகத்தில் ஆக்டோபஸ் போல வளர்ந்து, ஒரு துறையையே கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதை எப்படி வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் புரியாத புதிராக இருக்கிறது.
இதில் பெரிய வேடிக்கை என்னவென்றால், ஆர்கே நகர் இடைத்தேர்தலில் போட்டியிட்டு விட்டு, வேட்புமனு நிராகரிக்கப்பட்ட பிறகு, விஷால் பேசிய வீர வசனங்கள்தான்.
ரஜினிகாந்தும், கமல்ஹாசனும், லைக்கா பற்றித் தெரியாமலா அந்நிறுவனத்தை தங்கள் படத்தை தயாரிக்க அனுமதித்தார்கள் ?
திரைப்படத் தயாரிப்பாளர்கள், நடிகர்கள், ஆகிய அத்தனை பேருக்கும் ஒரே ஒரு நோக்கம்தான். பணம், பணம், மேலும் பணம். இவர்கள் சமூக நலன், பொதுமக்கள் நலன், நாட்டு நலன், விவசாயிகள் நலன், உழைப்பாளர் நலன், தமிழ் மொழியின் நலன், தமிழர்களின் நலன் என பேசிக் கொண்டு நம் முன் வருகையில், கவனமாக இருக்க வேண்டியது நாம்தான்.
குறிப்பு : அந்த தனியார் நிறுவனத்துக்கு 30 லட்ச ரூபாயை கடைசி வரை விஷால் கொடுக்கவேயில்லை.
கருத்துகள்
கருத்துரையிடுக