சமகால இலக்கிய உலகில் வளர்ந்து வரும் முக்கிய இளம் எழுத்தாளர்கள் பட்டியலில் தவிர்க்க முடியாதவராய், அடுத்தடுத்த தனது மூன்று படைப்புகளின் மூலம் இலக்கிய வெளிச்சத்தை தன் மீது விழச் செய்திருக்கிறார் சரவணன் சந்திரன்.
ஹாக்கி ப்ளேயர், பத்திரிக்கையாளர், சுயதொழில் முனைவோர் என பல்வேறு அடையாளங்களைக் கொண்டுள்ள சரவணன் சந்திரன, தன்னை வளர்ந்து வரும் ஓர் எழுத்தாளராக இலக்கிய உலகில் நிலைநிறுத்திக் கொள்ள கடந்து வந்த பாதையும் அவரது படைப்புகளைப் போலவே அத்தனை யதார்த்தங்களை கொண்டுள்ளது.
குறுகிய காலங்களிலே 'ஐந்து முதலைகளின் கதை', 'ரோலக்ஸ் வாட்ச்', 'வெண்ணிற ஆடை' என மூன்று புத்தகங்களை எழுதிய சரவணன் சந்திரன் தனது நான்காவது படைப்பான 'அஜ்வா' நாவலை முடித்த மகிழ்ச்சியில் நம்மிடையே பேசினார்.
ஓர் எழுத்தாளராக நமக்கு அறிமுகமான சரவணன் சந்திரன் முதலில் தன்னை அறிமுகப்படுத்தி கொண்டது ஒரு ஹாக்கி ப்ளேயராகதான். சரவணன் சந்திரனுக்கு பள்ளிப் பருவம் முதல் தான் ஒரு ஹாக்கி ப்ளேயராக இந்தியாவுக்காக விளையாட வேண்டும் என்பதே விருப்பமாக இருந்ததாம்.
வாழ்க்கையின் பாதை எங்கு, எப்படி மாறும் என்பது சொல்லப்படாத ரகசியம் என்பது போல, சென்னை கிறித்தவக் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தபோது ஒரு விபத்தில் தோள் பட்டையில் ஏற்பட்ட காயத்தால் தனது ஹாக்கி கனவுக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார் சரவணன்.
ஹாக்கி விளையாட்டு வீரருக்கு பேனாவைப் பிடிக்கும் சூழல் எப்படி நேர்ந்தது என்று கேட்டேன். "ஹாக்கி விளையாடிக் கொண்டிருக்கும்போதே எங்கள் கல்லூரியில் நடக்கும் 'வனம்' என்ற கவிதை, சிறுகதை வாசிப்பு நிகழ்வுகளில் கலந்து கொள்வேன். அந்த ஆர்வம்தான் நான் எழுத அடித்தளமாகவும் அமைந்தது.
அதன்பின் கல்லூரி படிப்பை முடித்தவுடன் சினிமா, வேலை என்ற இரு பாதைகள் என் கண்முன்னே இருந்தன. பொருளாதார நெருக்கடியால் வேலையைத் தேர்ந்தெடுத்து விட்டேன். 'ஆறாம்தினை' என்ற இணைய இதழில்தான் முதல்முதலாக வேலைக்குச் சேர்ந்தேன். பிறகு காலச்சுவடு, இந்தியா டுடே, கதையல்ல நிஜம் போன்ற நிகழ்ச்சிகளில் பணிபுரிந்தேன். சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியின் இயக்குனராகவும் பணிபுரிந்தேன்" என்று தொடர்ந்த சரவணன் சந்திரன், பத்திரிகையில் பயணித்துக் கொண்டிருக்கும் போதே இடையிடையே மீன் தொழில், பட்டாசுக் கடை, பிபிஓ என பல தொழில்களை செய்து வந்திருக்கிறார்.
இலக்கிய உலகில் தொடர்ந்து பயணப்பட்டிருந்தும் புத்தகம் என்று ஒன்றும் வராமலிருந்தது ஒருவிதக் குற்றவுணர்ச்சியை அவருக்குள் ஏற்படுத்தியதாக கூறுபவர், தனது முதல் நாவலான 'ஐந்து முதலைகளின் கதை' எப்படி உருவானது என்பதை சுவாரசியம் மிகுந்த குரலில் பகிர்ந்தார்.
"நான் தொழில்ரீதியாக ஒருமுறை தைமூர் நாட்டிற்கு பயணம் சென்றிருந்தேன். அங்கு கிடைத்த அனுபவத்தை கவிஞரும், எழுத்தாளருமான மனுஷ்யபுத்திரனிடம் சொல்லும்போது ''நீ எவ்வளவோ விஷயங்களை செய்கிறாய். ஆனால் அது எதுவுமே நிலைக்காது. உன் அனுபவங்கள் மூலம் நீ எழுதும் புத்தகங்கள்தான் கடைசி வரை உன்னை நினைவுபடுத்தும்'' என்றார். அதில் உருவானதுதான் 'ஐந்து முதலைகளின் கதை'.
'ஐந்து முதலைகளின் கதை' நாவலில் உலகமயமாக்கலின் விளைவு குடும்ப உறவுகளை எப்படிப் பாதிக்கிறது. வெளிநாட்டிற்கு வேலைக்கு செல்பவர்கள் அவர்களது வாழ்க்கையில் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை அந்தந்த கதாபாத்திரங்களின் வாயிலாக தத்ரூபமாக விளக்கப்பட்டிருக்கும்.
இவ்வாறு இயல்பு நிறைந்த படைப்புகளைத் தருவதற்கு எழுத்தை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் பத்திரிகை உலகில் பணியாற்றியது உதவியதா? என்றதற்கு, "பணியின் நிமித்தமாக இதுவரை கிட்டத்தட்ட 5000 பேரையாவது சந்தித்து அவர்களது வாழ்க்கையைக் கேட்டறிந்திருப்பேன். எழுதுவதற்கு நிறைய அனுபவமும், கதைகளும் என்னுள் இருந்தன. இதனால் களத்துக்குச் சென்று ஆராய்ச்சி செய்து ஒரு நூலை எழுத வேண்டிய நிலை எனக்கு ஏற்படவில்லை. அதனாலேயே ஒரு வருடத்திலேயே 'ஐந்து முதலைகளின் கதை' உட்பட 'ரோலக்ஸ் வாட்ச்', 'வெண்ணிற ஆடை' என மூன்று படைப்புகளை வெளியிட முடிந்தது" என்றார்.
எளிய நடையில் தனது படைப்புகளை வாசகரிடம் சேர்க்கும் சரவணன் சந்திரனிடம் எழுத்தாளராவதற்கு வலிமையான இலக்கியப் பின்னணி அவசியமா என்பதற்கு, நிதானமாக தனது பேச்சைத் தொடர்ந்தார்.
"அப்படி ஒன்றும் இல்லை. எழுத்தின் மீது ஆர்வம் இருந்தால் போதும். பெரும்பாலான மூத்த எழுத்தாளர்கள் எனது படைப்பைப் பாராட்டிதான் எழுதினார்கள். இலக்கியத் தரம் என்பதற்கு ஒவ்வொருவரும் ஒவ்வொரு கோட்பாடு, கொள்கையும் வைத்திருக்கிறார்கள். இதில் நிறைய குழுக்கள் உள்ளன. அது மிக சிக்கலானது. என்னுடைய பாதை வெரி சிம்பிள். எனக்குத் தெரிந்த வாழ்க்கையை எனக்குத் தெரிந்த மொழியில் வாசகனிடம் எளியமையாக சொல்ல வேண்டும்" என்று கூறும் சரவணன் சந்திரனின் முதல் படைப்பான 'ஐந்து முதலைகளின் கதை' என்ற நாவலுக்கு 2016ஆம் ஆண்டுக்கான சுஜாதா விருது வழங்கப்பட்டுள்ளது.
கேரளா, மேற்கு வங்கம்போல் எழுத்தாளர்களை தூக்கிப் பிடிக்கும் சமூகமாக தமிழகம் இல்லையே, இந்த நிலை மாற எழுத்தாளர்கள் தங்களை சுய திருத்தம் செய்து கொள்ள வேண்டுமா என்ற கேள்வியை முடிக்கும் முன்பே, "எழுத்தாளர்கள் சுய திருத்தம் செய்து கொள்ள வேண்டும் என்று நான் கூற மாட்டேன். ஆனால் நான் என்னை சுயதிருத்தம் செய்து கொண்டேன். என்னுடைய ஆரம்ப நாட்களை சில புத்தகங்களின் விலையைக் கண்டு வாங்கமுடியாமல் தவிர்த்திருக்கிறேன். என் புத்தகங்களை பக்கங்களையோ, விலையையோ வைத்து யாரும் தவிர்த்து விட கூடாது என்பதில் கவனமாக இருந்தேன். அதனால் என்னை சுய திருத்தம் செய்து கொண்டேன்" என்று வாசகர் தந்த நம்பிக்கையுடன் தனது பேச்சைத் தொடர்ந்தார்.
"தமிழகத்தில் ஆரம்ப காலகட்டத்தில் இருந்தே காட்சி ஊடகத்துக்கு அளித்த முக்கியத்துவத்தை எழுத்துக்கு அளிக்கமால் போனதுதான் முக்கிய காரணம். நமது தமிழ் சமூகத்திடம் எதையும் பதிய வைக்கும் பழக்கம் இல்லை. உ.வே. சாமிநாதையர் இல்லையென்றால் சங்க இலக்கியமே நமக்கு கிடைத்திருக்காது. வரலாற்றைப் பதிவு செய்யும் மரபு நம்மிடையே முறையாக இருந்ததா என்ற குழப்பம் எனக்கு உண்டு. இன்றும் எழுத்தாளர்கள் கொண்டாடப்பட்டுதான் இருக்கிறார்கள் அவர்களது காலத்துக்குப் பிறகு அதுதான் வேறுபாடு" என்று தனது நிலைப்பாட்டை கூறினார்.
சரவணன் சந்திரனுடனான கலந்துரையாடலின் இறுதியாக வளரும் இளம் எழுத்தாளர்களுக்கு நீங்கள் கூற விரும்பும் ஆலோசனை என்ன என்று வழக்கமான கேள்வி ஒன்றை கேட்டபோது, "ஒன்றே ஒன்றுதான். எழுத்தை முழு நேரத் தொழிலாளாக ஆக்கிக் கொள்ள வேண்டாம். வருமானத்துக்கான வாய்ப்பை உருவாக்கிக் கொண்டு தொடர்ந்து எழுதுங்கள், பயணப்படுங்கள்" என்று அன்பான இயல்பு மீறாத அறிவுரையை முன்வைக்கிறார் சரவணன் சந்திரன்.
சரவணன் சந்திரனின் நூல்கள்:
ஐந்து முதலைகளின் கதை - உயிர்மை பதிப்பகம் | ரோலக்ஸ் வாட்ச் - உயிர்மை பதிப்பகம் | வெண்ணிற ஆடை- உயிர்மை
கருத்துகள்
கருத்துரையிடுக