நோ பிரா டே (No Bra Day) october 13– மார்புக்கச்சை மறுப்பு தினம். சிலர் பதிவு எழுதியதைப் பார்த்திருப்பீர்கள். ஏன் பிரா அணியக்கூடாது? எதற்காக இந்த தினம்? பெண்கள் இறுக்கமான பிரா அணிவதால் மார்பகப் புற்றுநோய் வருகிறது, அதைப்பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தத்தான் நோ பிரா டே. சரிதானே?
விவரம் அறியாதவர்கள் உடனே சரி என்றுதான் நினைப்பார்கள். உண்மையில், பிராவுக்கும் புற்றுநோய்க்கும் தொடர்பில்லை. நோ பிரா டே என்பது, பெண்களுக்கு வரும் மார்பகப் புற்றுநோய் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகத்தானே தவிர, பிரா எதிர்ப்புக்காக அல்ல. இது எப்போது யாரால் துவக்கப்பட்டது என்று தெரியாது, 2011இல் துவங்கி, இப்போதுதான் பரவி வருகிறது. nobraday என்ற ஹேஷ்டேக் பயன்படுத்தி சமூக ஊடகங்களில் மார்பகப் புற்றுநோய் குறித்த பிரச்சாரம் செய்வது, பரிசோதனை செய்துகொள்ள ஊக்குவிப்பது, பிரச்சார நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வது போன்றவை இதன் நோக்கம். இன்று பிக் பிங்க் டே (Big Pink). மார்பகப் புற்றுநோய் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளுக்காக நிதி திரட்டும் தினம்.
இங்கே இன்னொரு விஷயத்தையும் சுட்ட வேண்டியிருக்கிறது. கேன்சர் ஒரு நோய் அல்ல என்ற கட்டுரை எவ்வளவு அபத்தமோ, அதே அளவுக்கு அபத்தம்தான் பிரா அணிவதால் புற்றுநோய் வரும் என்பதும். பிராவுக்கும் புற்றுநோய்க்கும் எந்தத் தொடர்பும் இல்லை ஆனாலும் இன்றும் அதே கட்டுக்கதை சுற்றிக்கொண்டிருக்கிறது. பிராவில் மார்பகத்தை மூடும் கூம்புப் பகுதியை வடிவமைப்பதற்காக உள்ளே இரும்பு அல்லது பிளாஸ்டிக்கினால் செய்யப்பட்ட பட்டைகள் பொருத்தப்படுகின்றன. அவற்றின் இறுக்கம் காரணமாகவே பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய் வருகிறது என்று ஒருவர் எழுத, அது பரவ... அறிவியல்ரீதியாக மறுக்கப்பட்ட பிறகும் அந்த வதந்தி ஆரோக்கியமாக உலவிக் கொண்டிருக்கிறது.
நோ பிரா டே தினத்தில் எதற்காக பிரா இல்லாமல் இருக்க வேண்டும்? மார்பகப் புற்றுநோய்க்கு ஆளானவர்களுக்கு மார்பகம் நீக்கப்பட வேண்டியிருக்கலாம். அதை மறைப்பதற்காக அவர்கள் செயற்கையாக மார்பகம் போன்ற சிலிக்கான் அமைப்பைப் பொருத்தியிருக்கலாம், அது தெரியாமல் இருப்பதற்காக பிராக்கள் அணிந்திருக்கலாம். மார்பகம் நீக்கப்பட்டது என்பதைக் காட்ட வெட்கப்பட்டு, பிராவை அணிய வேண்டிய அவசியமில்லை. நோய் கண்ட உறுப்பு ஒன்று நீக்கப்பட்டது, அவ்வளவுதானே தவிர அதில் வெட்கப்பட ஏதுமில்லை என்று காட்டுவதற்காகத்தான், பிரா அணியாமல் இருக்கும் தினம் - நோ பிரா டே.
கருத்துகள்
கருத்துரையிடுக