- சரவணன் சந்திரன்

அவர் இளம் வயதிலேயே ஓய்வுபெற்ற சினிமா நடிகர். அரசியல் ஆசை உண்டு அவருக்கு. நல்ல நண்பரான அவரோடு பேசிக்கொண்டிருந்தபோது, “அங்க இங்க அலைஞ்சு பாத்துட்டோம். பேசாமல் கமல் சாரோடு போய் செட்டிலாகிவிடலாம் என்று நினைக்கிறேன்” என்றார். அதே நடிகர் கடந்த தேர்தலில் கொளத்தூர் தொகுதிக்கு வேறொரு கட்சிக்காக வேலை பார்த்தார். அப்போது நடந்த விஷயங்களை ஏற்கெனவே நிறையச் சொல்லியிருக்கிறார்.
தேர்தல் பணிமனை திறந்த அன்று மட்டும் 22 லெட்டர் பேட் அமைப்புகள் வந்து நின்றிருக்கின்றன. படித்தவர்கள் நிறைந்த அமைப்புகளும் அவற்றில் அடக்கம். அத்தனை பேரும் தங்களிடம் ஆயிரம் ஓட்டுக்கள் இருக்கின்றன / இரண்டாயிரம் ஓட்டுக்கள் இருக்கின்றன என்று சொல்லிப் பணம் கேட்டிருக்கிறார்கள். சாயாந்திரம் வரை காத்திருந்து விடாப்பிடியாக பணத்தைப் பெற்றுக்கொண்டு சென்றனராம். “உங்கள் கமல் சார் வந்தால் தந்துவிடுவாரா இப்படி?” என்று கேட்டேன். சந்தேகம்தான் என்று சொல்லி உதட்டைப் பிதுக்கினார் அவர்.
கள யதார்த்தம்
எல்லாவற்றையும் மாற்றப் போகிறேன் என்று சொல்லி வருபவரை நோக்கி இப்படி முட்டுக்கட்டை போடுவது சரியா என்று கேட்டால், சரியில்லை என்பதுதான் என்னுடைய பதிலும். ஆனால், கள யதார்த்தத்தை வேறு எப்படிச் சொல்லிப் புரியவைக்க முடியும்? பொதுவாகவே இங்கு ஏற்கெனவே இருக்கிற கட்சிகள், தேர்தல் அரசியல் செயல்பாடுகள் என்பதைத் தாண்டி மிகப் பெரிய பொருளாதாரத்தை நிர்வகிக்கிற மையங்களாக இருக்கின்றன. ஒவ்வொரு கட்சி சார்ந்தும் மறைமுகமாகத் தொழில் நிறுவனங்கள் இயங்குகின்றன. நேற்றுவரை கால்நடையாகப் போய்க்கொண்டிருந்த ஒருத்தர் திடீரென ஸ்கார்பியோவில் போவது எப்படிச் சாத்தியமாகிறது? இந்தப் பொருளாதார சங்கிலியில் இதுவரை மக்கள் விடுபட்டிருந்தனர். ஆனால், இப்போது இந்தப் பொருளாதாரத்தில் தங்களுக்கான பங்கை மக்கள் கேட்டுப் பெற ஆரம்பித்து விட்டனர். சில இடங்களில் அடித்துப் பிடுங்கவும் தயாராகிவிட்டனர்.
உதாரணத்துக்கு அரவக்குறிச்சி தொகுதி தேர்தலையே எடுத்துக்கொள்வோம். முதலில் இவர் ஐநூறு கொடுத்தார். வாங்கிக் கொண்டார்கள். அதற்குப் போட்டியாக அவர் எழுநூற்றைம்பது கொடுத்தார். அதையும் வாங்கிக்கொண்டார்கள். இப்படியே இந்த ஏலம் ஏறிக்கொண்டு போய் எங்கே நின்றது தெரியுமா? எங்கள் வீட்டில் பன்னிரண்டு ஓட்டுக்கள் இருக்கின்றன என்று சொல்லி ஒரு குடும்பம் ஏசி மிஷினை பேரம் பேசி வாங்கிக்கொண்டது. அரசியல்வாதிகளுக்காவது பணம் தருவது சம்பந்தமான அச்சங்கள், எரிச்சல்கள், குமைச்சல்கள் இருக்கின்றன. ஆனால், வாங்குவது குறித்த எந்தவித சங்கடமும் மக்களுக்கு இல்லை. இனி, குறைந்தது பத்து கோடி ரூபாய் இல்லாமல் ஒரு தொகுதியில் வேட்பாளராக நிற்கவே முடியாது என்பதுதான் நிலைமை.
கமல் முன்வைக்கும் அரசியல் எது?
இந்த நிலைமையை எப்படி எதிர்நோக்கப் போகிறார் கமல் என்று அந்த நண்பரிடம் கேட்டேன். “மாற்றத்தைக் கொண்டுவருவது என்று சொல்வது இதற்கும் சேர்த்துத்தான்” என்றார் அவர். “இந்த மாற்றத்தை உடனடியாகக் கொண்டுவந்துவிட முடியுமா?” என்று கேட்டேன். “நிச்சயம் முடியாது. ஆண்டுக்கணக்கில் ஆகும்” என்றார்.
இந்த இடத்தில்தான் கமலின் மனநிலை செயல்படும் விதத்தைப் பொருத்திப் பார்க்க வேண்டியிருக்கிறது. சமீபத்திய அவரது பேச்சுக்கள் எல்லாமே உன்னைப் போல ஒருவன் படத்தின் கதாபாத்திரம் பேசுவது போலவே இருக்கின்றன. பிக் பாஸ் மேடையில் நின்றுகொண்டு உள்ளே இருப்பவர்களை நோக்கி அவர் பேசும் தொனியிலேயே அரசியல் களத்தில் பேசிக்கொண்டிருக்கிறார். அப்படிப் பேசுவது அவரது இயல்பு என்றே வைத்துக்கொள்ளலாம். ஆனால் அவரை நம்பி வருபவர்களுக்கு என்ன விதமான அரசியல் புரிதலை அவர் கற்பிக்க விரும்புகிறார்?
நான் காவியல்ல, கம்யூனிஸ்ட் என்கிறார். இன்னொரு நாள் நான் கறுப்புச் சட்டை போட்டவன் என்கிறார். எல்லாவற்றையும் நல்ல விதமாகவே எடுத்துக்கொள்ளலாம். ரஜினி வந்தால் அவரோடு இணைந்து செயல்படத் தயார் என்கிறார். இதை எப்படி எடுத்துக்கொள்வது என்று புரியவில்லை. இருவரும் நேரெதிர் துருவங்கள். ஒருதடவை மலேசியக் கலை விழாவில் தன்னுடைய இமயமலைப் பயணம் குறித்து மேடையில் சிலாகித்துப் பேசினார் ரஜினி. அருகில் மைக் பிடித்து நின்றுகொண்டிருந்த கமல், உங்களுக்கு எப்படியோ எனக்கு டிஸ்கவரி சேனல் பார்த்த மாதிரி இருக்கிறது என்று மென்மையாய் கிண்டலடித்தார். இப்போதைய அரசியல் சர்ச்சைகள் தொடங்கிக்கொண்டிருந்த காலகட்டத்திலும் தன்மானம் இருப்பதால் வந்திருக்கிறேன் என்று நேரடியாகவே குத்திக் காட்டினார். கமல் இதுவரை பேசி வந்த அரசியலுக்கும் ரஜினிக்கும் என்ன சம்பந்தம்?

ஒரு தடவை விஜயகாந்த்திடம், ‘ரஜினியிடம் அரசியல் ஆலோசனை பெறுவீர்களா?’ என்கிற கேள்வி எழுப்பப்பட்டது. அவர் அதற்குக் கூர்மையாக எதிர்வினையாற்றினார். “நான் எம்.ஜி.ஆரிடம் அரசியல் பயின்றவன். கலைஞரிடம் பயின்றவன். ரஜினியிடம் ஏன் ஆலோசனை கேட்க வேண்டும்?” என்றார். நான் அவரோடு இருந்தவன், இவரோடு இருந்தவன் என்றெல்லாம் அடிக்கடி பேசும் கமலுக்கு, விஜயகாந்த்துக்கு இருக்கிற அரசியல் புரிதல் ஏன் வரவில்லை? துப்புரவுப் பணியாளர்களின் துயரத்தைப் பேசுபவராகத் தன்னை இதுவரை அடையாளப்படுத்திக்கொண்டிருந்த கமல், ‘தூய்மை இந்தியா’ பற்றி இப்போது பேசிக்கொண்டிருப்பதிலேயே அவருடைய புரிதல் எப்படிப்பட்டதென்று தெரியவில்லையா? பொத்தாம் பொதுவான ஒரு அரசியல் புரிதலை வைத்துக்கொண்டு தன்னுடைய புகழ் தன்னைக் கரை சேர்த்துவிடும் என நம்புகிறார் என்று தோன்றுகிறது.
கமலைச் சூழந்திருக்கும் மாயை
உடனடியாக நாளைக் காலையிலேயே நான் ஆட்சியைப் பிடித்துவிடுவேன் என்கிற மாயைப் பேச்சுகளில் இருந்து அவர் விடுபட வேண்டும். பிக் பாஸ் நிகழ்ச்சி வழியாக அவர் ஒட்டுமொத்த தமிழகத்தையும் கைப்பற்றிவிடுவதைப் போல பாவனைகள் செய்கிறார். இந்தத் துறை சார்ந்தவனாக ஓர் உண்மையைச் சொல்லவா? மிஞ்சிப்போனால் அந்த நிகழ்ச்சி பத்து டிவிஆர் (டி.ஆர்.பி கணக்கீடு) வாங்கலாம். ரஜினி நடித்த முத்து படத்தை இதுவரை ஆயிரம் தடவைக்கு மேலே தொலைக்காட்சியில் போட்டிருப்பார்கள். அது வெகு சாதாரணமாக இருபது டிவிஆர் வாங்கும். மிகச் சிறிய கூட்டத்தை நோக்கித்தான் கமல் சமத்காரமாகப் பேசிக்கொண்டிருக்கிறார் என்பது அவருக்கு விளங்கவே விளங்காது. விளங்குகிற இடத்திலும் அவர் தன்னை வைத்துக்கொள்ளவில்லை. பொதுவாகவே உச்சத்தை நோக்கிப் போகிறவர்களின் பிரச்னை அது.
முக்கியமான பிரச்னைகளின்போது யாருக்குமே புரியாத நான்கு வரி ட்வீட்களே போதும் என்று நினைப்பதே எவ்வளவு புரிதல் குறைபாடு என்பதை நினைத்துப்பாருங்கள். நான் படிக்காதவன் என்பதால் நீட் பற்றித் தெரியாது என்றார். கமல் பள்ளிக்கல்வி என்பதைத் தாண்டி அவர் எவ்வளவு படித்தவர் என்பது எல்லோருக்கும் தெரியும்.

கமல் ஒரு மாயையில் சிக்கிக்கொண்டிருக்கிறார். ஒரு தடவை இந்தியா டுடே சார்பில் கமலுக்குச் சிறப்பிதழ் கொண்டுவரப்பட்டது. அப்போது அதற்கு அவர் பேட்டியளிக்க மறுத்து விட்டார். அதற்கு அவர் சொன்ன காரணத்தை இங்கே சொல்வது பொருத்தமாக இருக்கும். “ரஜினி சிறப்பிதழில் ரஜினி பேட்டி கொடுத்தாரா? அப்புறம் என்னிடம் மட்டும் ஏன் பேட்டி கேட்கிறீர்கள்?” என்றார். இன்னொரு தடவை அவருடைய ரசிகர் மன்றத் தலைவரை அழைத்து, “ஏன் ரஜினி பின்னாலேயே ஓடுகிறீர்கள்?” என்று கேட்டார். கடந்த முப்பது ஆண்டுகளாக ரஜினி அவரைத் துரத்துகிறார். இதுதான் அடியாழத்தில் அவருக்குள் ஓடிக் கொண்டிருக்கிறது. திரையில் வசூல் சக்ரவர்த்தி என்கிற இடத்தை அவர் தட்டிப் பறித்துவிட்டார். அவரது அரசியல் பிரவேசத்துக்கு முன்பு இங்காவது முந்திக்கொள்ள நினைக்கிறார் கமல். இந்த டாம் அண்ட் ஜெர்ரி விளையாட்டுக்குத் தமிழகத்தை அடகுவைக்க முடியாது.
கமலுக்கு அதிமுக அரசோடு தனிப்பட்ட பகை இருக்கிறது. மோடியைப் பகைத்துக்கொள்ள அவர் விரும்பவில்லை. அதிமுககாரர்களிடம் பேசுவதுபோல திமுகவினரிடம் பேச முடியாது. போட்டு வெளுக்கிற அளவுக்கு விவரமானவர்கள் அங்கே நிறைந்திருக்கிறார்கள். அவர்கள்மீது கைவைக்க பயம். சினிமா தாண்டி உண்மையிலேயே அவர் தன்னை அடுத்த கட்டத்துக்கு நகர்த்திக்கொள்ள விரும்புகிறார். அரசியலில் ஏன் இறங்கிப் பார்க்கக் கூடாது எனத் தோன்றத் தொடங்கிவிட்டது. அதைத் தவறென்று ஜனநாயகத்தில் சொல்லவே கூடாது.
ஆனால், அதற்கு அவர் தேர்ந்தெடுக்கும் வழிமுறைகள் எல்லாமுமே குழந்தைத்தனமானவை எனத் துணிந்து சொல்லலாம். மேலிருந்து மேடையில் நின்றுகொண்டு பிக் பாஸ் வீட்டுக்குள் இருப்பவர்களைப் பார்த்துப் பேசும் தோரணையிலேயே அவர் தமிழக மக்களையும் அணுக நினைக்கிறார். அந்த வீட்டுக்குள் இருப்பவர்கள் பணத்தைப் பெற்றுக் கொண்டு அதைக் கேட்டுக்கொண்டிருக்கிறார்கள். தவிர, இவரது நடிப்பு, திரைத்துறைச் சாதனைகள், சினிமா அனுபவம் ஆகியவற்றால் அவர்களுக்கு இவர் மீது பிரமிப்பு இருப்பதும் இயல்புதான். ஆனால், அரசியல் என்பது வேறு களம். அங்குள்ளவர்களும் பிக் பாஸ் வீட்டில் இருப்பவர்கள் அல்ல. பிக் பாஸ் அரங்கில் அவருக்கு முன்னே அவர் சொல்வதையெல்லாம் கேட்டுக் கைதட்டும் கூட்டம் இருக்கிறது. ஆனால் அந்த வீட்டுக்கு வெளியே இருப்பவர்கள் அப்படி இல்லை.
வெளியே இருப்பது சிக்கலான கூட்டம். அந்தக் கூட்டத்தைப் பணத்தால் அடிக்க முடியும். அல்லது தரையில் இறங்கித் தோளில் கைபோட்டுத்தான் அணைக்க முடியும். தமிழக அரசியலில் இதுவரை வெற்றியே பெறாத ஓர் அம்சம் கண்ணுக்கு முன்னால் அடிவாங்கிப் படுத்துக் கிடக்கிறது. அதற்குப் பெயர் மேட்டிமைத்தனம். அரசியலில் இறங்குவதற்கு முன் அவர் தன் மன அரங்கில் இருக்கும் ‘பிக் பாஸ் மேடை’யை விட்டுக் கீழே இறங்க வேண்டும்.
கருத்துகள்
கருத்துரையிடுக