செவ்வாய் முதல், அதிமுகவின் முன்னணி அடிமைகள் டெல்லியில் முகாமிட்டு உள்ளார்கள். முதல் நாள் வர்த்தகத் துறை அமைச்சர் நிர்மலா சீத்தாரமனை சந்தித்தார்கள். அன்று மாலையே நிதியமைச்சர் அருண் ஜெய்ட்லியை சந்தித்தார்கள். புதனன்று காலை, உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்தார்கள். ஒவ்வொரு முறை சந்திப்புக்கு பிறகும் எதற்காக அமைச்சர்களை சந்தித்தீர்கள் என்று கேட்டால், தமிழகத்தின் நலனுக்காக என்கிறார்கள்.
இரண்டு அடிமைப் பிரிவுகளின் இணைப்புக்கு முன்னாலும், சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், நிர்மலா சீத்தாராமன் அலுவலகத்தின் வாசலிலேயே குடியாக இருந்தார். தன் சொந்த அமைச்சர்களைக் கூட பார்க்க முடியாத அளவுக்கு நாட்டை சீரழிப்பதில் மும்முரமாக இருக்கும் மோடியே, ஓ.பன்னீர் செல்வத்தை, வாரத்துக்கு நான்கு முறை சந்தித்துக் கொண்டிருந்தார்.
இறுதி நிமிடம் வரை இணைப்பு நிகழுமா, நிகழாதா என்ற சந்தேகம் நீடித்துக் கொண்டிருந்தபோதே, ஆளுனர் சென்னை வந்தடைந்தார். இணைப்பு விழா ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கையிலேயே, பதவிப் பிரமாணத்துக்கான பணிகளை கவனிக்க, தலைமைச் செயலாளர் ஆளுனர் மாளிகைக்கு சென்றார்.
இவர் உண்மையிலேயே ஆளுனர்தானா இல்லை வேறு பணி செய்கிறாரா என்று சந்தேகப்படும் வகையில், தமிழக பொறுப்பு ஆளுனர் வித்யாசாகர் ராவ், இரு அணிகளும் இணைந்ததில் அகமகிழ்ந்து இருவர் கரங்களையும் பற்றி இணைத்தார். மோடி சொன்னபடி கேட்டால், மத்திய அமைச்சரவையில் இடம் என்பன உள்ளிட்ட பல வாக்குறுதிகள் அளிக்கப்பட்டிருந்தன. ஆனால் இணைப்புக்கு பிறகு நடந்த பல்வேறு சம்பவங்கள், தமிழகத்தையும், சசிகலா குடும்பத்தின் பலத்தையும் மோடி குறைத்து மதிப்பிட்டதையே காட்டுகின்றன.
சசிகலா குடும்பத்தை எளிதாக சமாளித்து விடலாம் என்றே மோடி நினைத்தார். ஆனால் அவர்கள் இத்தனை வலுவாக சமர் செய்வார்கள் என்பதை அவர் சற்றும் எதிர்ப்பார்க்கவில்லை. பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி போன்ற சவலைக் குதிரைகளின் மீது பணம் கட்டியதை விட, டிடிவி தினகரன் என்ற குதிரையின் மீது மோடி பணம் கட்டியிருந்தாரென்றால் இந்நேரம் கையை கட்டிக் கொண்டு விட்டத்தைப் பார்க்க வேண்டிய அவலம் நேர்ந்திருக்காது.
ஜெயலலிதா இருந்தவரை, தமிழகத்தில் கால் பதிக்க முடியாமல் இருந்த மோடிக்கு, ஜெயலலிதாவின் உடல் நலக் குறைவும், மரணமும் வாராது வந்த மாமணியாய் வாய்ப்பை வழங்கியது. ஜெயலலிதாவின் உடல் எடுக்கப்படுவது முதல், நள்ளிரவில் பதவியேற்பது வரை, கூடவே இருந்து அனைத்து ஏற்பாடுகளையும் செய்து முடித்தவர் வெங்கையா நாயுடு. மோடியின் உத்தரவுகள் அனைத்தும் கன கச்சிதமாக நிறைவேறும்படி பார்த்துக் கொண்டார். ஆட்சி அமைதியாக போகும், ஜெயலலிதா இல்லாத நிலையில் இந்த அடிமைகளை கட்டுக்குள் வைத்திருந்து, 2019 தேர்தலில் 30 இடங்களை பெறலாம் என்ற திட்டத்தில் மண்ணை அள்ளிப் போட்டார் சசிகலா.,
டிசம்பர் 31, 2016 அன்று நடைபெற்ற பொதுக் குழுவில் சசிகலாவை பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்க வேண்டிய தீர்மானத்தை முன்மொழிந்தது யார் ? இதே பன்னீர்செல்வம்தானே ? பிப்ரவரி 5 அன்று, பன்னீர்செல்வத்தை அழைத்து முதல்வர் பதவியை ராஜினாமா செய்யச் சொன்னதும், அமைதியாக பதவியை ராஜினாமா செய்தது இதே பன்னீர்செல்வம்தானே ? சசிகலா முதல்வராகப் போகிறார் என்ற விவகாரம் தெரிந்ததுமே, அது வரை தமிழகத்தில் இருந்த பொறுப்பு ஆளுனர் திடீரென்று மாயமானார். பல மாதங்களாக, ஜெயலலிதா உயிரோடு இருந்தபோதெல்லாம் மீளா உறக்கத்தில் இருந்த உச்சநீதிமன்றம், சசிகலா முதல்வராகப் போகிறார் என்றதும் அவசர அவசரமாக தீர்ப்பை வழங்கியது. சசிகலா குற்றவாளி என்று தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், சசிகலா கொள்ளையடிக்க வசதி செய்து கொடுத்து, அதற்கு இடமளித்து, அவரை கடைசி வரை கூடவே வைத்திருந்த ஜெயலலிதா குற்றவாளி இல்லை என்று தீர்ப்பளித்தது.
உச்சநீதிமன்றத் தீர்ப்பு வந்த பிறகு, சசிகலா பதவியை ராஜினாமா செய்திருக்கலாம். ஆனால் அத்தீர்ப்பு வருவதற்கு முன்னால், பெரும்பான்மை எம்எல்ஏக்களின் ஆதரவைப் பெற்ற ஒரு கட்சியின் தலைவர் என்ற முறையில் அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்திருக்க வேண்டியதுதான் ஆளுனரின் கடமை. ஆனால் அவர் வசதியாக ஊரில் இல்லாமல் இருந்தார். இது போன்ற வசதிக்காகத்தான், ஆளுனரை பொறுப்பு ஆளுனராகவே வைத்திருக்கிறார் மோடி. 2014ல் பதவியேற்றதும், காங்கிரஸ் ஆளுனர்களாக இருந்த ஒவ்வொருவரையும் அழைத்து, கட்டாயமாக ராஜினாமா செய்ய வைத்த மோடி, கடந்த ஒரு வருடமாக தமிழகத்துக்கு நிரந்தர ஆளுனரை நியமிக்காமல் இருப்பது இது போன்ற சித்து விளையாட்டுக்களுக்குத்தான்.
இது வரை இல்லாமல் திடீரென்று பிப்ரவரி 8 அன்று பன்னீருக்கு திடீர் ஞானோதயம் வந்தது. பேச்சை கேட்காமல் கட்சியை கைப்பற்ற நினைத்த சசிகலா குடும்பத்துக்கு ஒரு பாடத்தை கற்பிக்க வேண்டும் என்ற முடிவுக்கு மோடி வந்த காரணத்தால்தான் பன்னீர் திடீர் தியானத்தில் ஆழ்ந்தார். தர்ம யுத்தம் என்ற பழைய ரஜினி படத்தை திடீரென்று கையில் எடுத்தார்.
சசிகலா குடும்பத்தை விலக்கி வைக்க வேண்டும் என்று பன்னீர் குரல் கொடுத்தாலும் அதை ஏற்றுக் கொள்ள எடப்பாடி தலைமையிலான அமைச்சர்களில் ஒருவர் கூட தயாராக இல்லை. தர்மயுத்தம், நீதிக்கான போராட்டம் என்று பன்னீர் உரக்க கத்திக் கொண்டே இருந்தார். ஆனால் முதலில் வந்த 11 பேரைத் தவிர ஒரு எம்எல்ஏ கூட அவர் பின்னால் வரத் தயாராக இல்லை. டிடிவி தினகரன் இருக்கும் வரை, இந்த இரு அணிகளும் இணையாது என்பதை உணர்ந்த காரணத்தினாலேயே டிடிவி மீது டெல்லி காவல்துறையில் ஒரு வழக்கு பாய்ந்தது. அந்த வழக்கு உண்மையானதா பொய்யானதா என்பதை நீதிமன்றம்தான் முடிவு செய்ய வேண்டும். ஆனால் உலகறிந்த ஒரு அயோக்கியன் தேர்தல் ஆணைய அதிகாரிகளை எனக்குத் தெரியும் என்று சொன்னதை நம்பி காவல்துறை வழக்கு பதிவு செய்தது. தினகரனை பல மாதங்கள் சிறையில் வைக்க வேண்டும் என்பதை மோடி விரும்பியபோதும், டெல்லி காவல்துறையால் போதுமான ஆதாரங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க முடியாத காரணத்தாலேயே 35 நாட்களில் டிடிவி தினகரன் விடுதலையானார்.
இந்த வழக்கு, எடப்பாடி அணியில் மன சஞ்சலத்தோடு இருந்த அத்ததனை பேரையும் டிடிவி பக்கமிருந்து அவர் பக்கத்துக்கு மாற்றியது. ஆனால் ஜாமீனில் டிடிவி தினகரன் விடுதலையான பிறகு, நிலைமை மாறியது. எடப்பாடியோடு இணக்கமாக இருந்த எம்எல்ஏக்கள் ஒருவர் ஒருவராக டிடிவி பக்கம் வரத் தொடங்கினர். ஒற்றைப் படையாக இருந்த எம்எல்ஏக்களின் எண்ணிக்கை 21ஐ எட்டியது.
இதை மோடியோ அமித் ஷாவோ சற்றும் எதிர்ப்பார்க்கவில்லை. வழக்கில் கைது செய்து டிடிவி தினகரன் சிறை சென்றதால், அவரது செல்வாக்கு கலகலத்துப் போகும் என்றே எதிர்ப்பார்த்திருந்தார்கள். ஆனால் அதிமுக போன்ற ஒரு கட்சிக்கு எப்போதும் தேவை ஒரு ரிங் மாஸ்டர் என்பதை புரிந்து கொள்ள தவறி விட்டார்கள்.
ஆறு மாதங்களாக காத்திருந்தும் பன்னீர்செல்வம் பக்கம செல்வதற்கு 11 எம்எல்ஏக்களை தவிர வேறு ஒரு எம்எல்ஏவும் தயாராக இல்லை. ஆனால் டிடிவி பக்கம் எம்எல்ஏக்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருந்தது. இப்படிப்பட்ட சூழலில், இரு அணிகளையும் இணைத்தால், டிடிவிதினகரன் தனிமைப்பட்டுப் போவார், அவர் பக்கம் ஒருவரும் இருக்க மாட்டார்கள் என்றே மோடி கருதினார். அந்த காரணத்தால்தான், முறுக்கிக் கொண்டிருந்த பன்னீர் செல்வத்தை மிகவும் கட்டாயப்படுத்தி இணைப்புக்கு சம்மதிக்க வைத்தார். ஒரு வாரத்துக்கு முன்னால், இந்த அரசு ஊழல் அரசு, இதற்கு எதிராக நான் போராட்டம் நடத்துவேன் என்று அறிவித்த பன்னீர்செல்வம், தன் முதலாளி அளித்த நெருக்கடியால், தன் மானம் மரியாதையை வீட்டிலேயே கழற்றி வைத்து விட்டு, காண்டாமிருகத் தோலை ஆடையாக உடுத்திக் கொண்டு அதிமுக அலுவலகத்துக்கும் பின்னர் ஆளுனர் மாளிகைக்கும் சென்று பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்.
இந்த இணைப்பு அனைத்து சிக்கல்களையும் தீர்க்கும் என்று கணக்கு போட்ட மோடி தனது கணக்கு முற்றிலும் தவறானது என்பதை உணர்ந்தார். இணைப்புக்கு முன்பு நீறுபூத்த நெருப்பாக இருந்த பிளவு, வெளிப்படையாக வெடிக்கத் தொடங்கியது. டிடிவி ஆதரவு எம்எல்ஏக்கள், ஆட்சிக்கு எதிராக கடுமையான விமர்சனத்தை வைக்கத் தொடங்கினார்கள். இதற்கு பிறகு என்ன செய்வது என்பது எடப்பாடிக்கும் தெரியவில்லை, பன்னீருக்கும் தெரியவில்லை. எடப்பாடியோ, பன்னீரோ, உயர்மட்ட திரைமறைவு அரசியலுக்கு பழக்கப்பட்டவர்கள் அல்ல. டெல்லியில் பேசுவதும், திரைமறைவில் உயர்மட்ட அரசியலை செய்வதும் இவர்களுக்கு தெரியாது. இந்த உயர்மட்ட அரசியல்களெல்லாம், ஜெயலலிதாவும் சசிகலாவும் மட்டுமே செய்வார்கள். இவர்களுக்கு தெரிந்ததெல்லாம் வசூல் செய்து கொடுப்பது. அதில் இவர்கள் பங்கை வாங்கிக் கொண்டு செல்வது. டயரை தொட்டுக் கும்பிடுவதையும், ஹெலிகாப்டரை பார்த்து கும்பிடுவதையும் தவிர, ஜெயலலிதா இவர்களுக்கு பெரிய பொறுப்பு எதையும் வழங்கவில்லை. ஆனால் டிடிவி தினகரன் இது போன்ற திரைமறைவு உயர்மட்ட அரசியலுக்கு பழக்கப்பட்டவர். எப்படி காய்களை நகர்த்துவது என்பதை அறிந்தவர். எம்எல்ஏக்களையும், எம்பிக்களையும் விலைக்கு வாங்குவது எப்படி, அவர்களுக்கு தேவையானவற்றை எப்போது அளிப்பது என்பதையும் அறிந்தவர். பன்னீரும், எடப்பாடியும் வாங்கிப் பழக்கப்பட்டவர்கள், கொடுத்துப் பழகியவர்கள் கிடையாது. இதனால்தான், டிடிவி தினகரனால் எம்எல்ஏக்களை தன் பக்கம் வரவைக்க முடிகிறது. ஆனால் பன்னீர்செல்வத்தால் ஆறு மாதம் இலவு காத்த கிளி போல காத்திருக்கத்தான் முடிந்தது.
இனி டிடிவி தினகரனோடு மோதி வெல்ல முடியாது என்பதை அறிந்த அதிமுக அடிமைகள் நேராக டெல்லி சென்று சரணாகதி அடைந்தார்கள். டெல்லி சென்று, இந்த அடிமைகள் வைத்த கோரிக்கை என்ன தெரியுமா ? டிடிவி தினகரன் மீது புதிய வழக்கு பதிவு செய்யுங்கள். உடனடியாக கைது செய்யுங்கள். அது ஒன்றுதான் வழி என்பதே. இதற்கு உடனடியாக எந்த பதிலையும் மத்திய அரசு தரப்பிலிருந்து தெரிவிக்கவில்லை.
இப்போது அடுத்து என்ன செய்வது என்று மோடிக்கும் தெரியவில்லை, அமித் ஷாவுக்கும் தெரியவில்லை. 2019 தேர்தலுக்குள், மாநில கட்சிகள் அனைத்தையும் இருந்த இடம் தெரியாமல் சிதைக்க வேண்டும் என்பதே மோடி அமித் ஷா கூட்டணியின் ஒரே நோக்கம். பீகார், மணிப்பூர், ஜம்மு காஷ்மீர், போன்ற மாநிலங்களிலெல்லாம் கால் பதிக்க முடிந்த பிஜேபியின் கண்ணை மிக அதிகமாக உறுத்திக் கொண்டிருப்பது தமிழகம். காங்கிரஸ் கட்சி, 2019ல், குறிப்பாக ராகுல் காந்தி தலைமையின் கீழ் தலை தூக்கவே முடியாது என்பதை பிஜேபி உறுதியாக நம்புகிறது.
நெருக்கடி நிலை காலத்தில் இந்திரா காந்திக்கு கூட இருந்திராத ஆணவம், மோடி மற்றும் அமித் ஷாவை பிடித்து ஆட்டுகிறது. இன்னும் 100 வருடங்களுக்கு பிஜேபி ஆட்சி என்பதாகவே நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். உத்தரப் பிரதேச தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு, பேசிய அமித் ஷா, இந்தியா முழுக்க பாராளுமன்றம் முதல் பஞ்சாயத்து வரை, அனைத்து இடங்களிலும் பிஜேபி வெற்றி பெற வேண்டும் என்றார். இது எத்தனை பெரிய இறுமாப்பு ? எதிர்க்கட்சிகளே இருக்கக் கூடாது என்பது எத்தனை மோசமான பாசிச மனநிலை ?
1998ல் பிஜேபி ஆட்சி இருந்தபோது கூட, இந்தியா முழுக்க படித்தவர்கள் படிக்காதவர்கள் என அனைவர் மத்தியிலும் இது போன்ற மதவெறியை கண்டதில்லை. ஒரு மூத்த பத்திரிக்கையாளர் பேசுகையில், நான் அப்போதும் பிஜேபியை எதிர்த்தேன். இப்போதும் பிஜேபியை எதிர்க்கிறேன். ஆனால் இந்தியா போன்ற நாட்டில் மதவெறி என் வீட்டு வாசலை தட்டும் என்பதை நான் ஒரு போதும் நினைத்துப் பார்க்கவில்லை. நான் வாழும் காலத்தில், என் நாட்டில் இப்படி மதவெறி தாண்டவமாடுவதை நான் கண்டதேயில்லை என்றார்.
இப்படி மதவெறியை இந்தியா முழுக்க பெரும்பாலான இடங்களில் பரப்பி முடித்து விட்டு, தமிழகத்திலும் இது போன்ற மதவெறியை பரப்ப வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில்தான் தமிழகத்தில் காலூன்ற வேண்டும் என்று பிஜேபி துடியாக துடிக்கிறது. இதற்கு உதவத்தான் அதிமுக அடிமைகள் தலைகீழாக நிற்கின்றன.

2016ல், பிஜேபியால் 2014 பாராளுமன்றத் தேர்தலில் அமைத்த கூட்டணியை கூ அமைக்க முடியவில்லை. தமிழகம் மோடிக்கும் பிஜேபிக்கும் எப்போதுமே ஒரு சவாலாகத்தான் இருந்து வருகிறது. ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதையும், கருணாநிதி உடல் நலிவடைந்ததையும், தமிழகத்தில் காலூன்ற ஒரு மிகப்பெரிய வாய்ப்பாக பிஜேபி பார்க்கிறது. பேராசை பிடித்த எடப்பாடி மற்றும் பன்னீர்செல்வம் பிஜேபியின் இந்த நோக்கத்துக்கு இரையாகியுள்ளார்கள். இவர்களின் பேராசைதான் பிஜேபிக்கு பட்டுக் கம்பள வரவேற்பை அளித்துள்ளது” என்றார் தி வீக் பத்திரிக்கையின் சிறப்பு செய்தியாளர் லட்சுமி சுப்ரமணியம்.
இந்தியாவில் வளர்ச்சியடைந்த ஒரு முக்கியமான மாநிலமான தமிழகத்தில் வலுவாக கால் பதிக்க முடியவில்லையே என்ற ஆதங்கம் மோடிக்கும், அமித் ஷாவுக்கும் வெறியாகவே மாறியிருக்கிறது. அதை நேரடியாக செய்ய முடியாது என்பதற்காகவே அதிமுக என்ற கட்சியை கபளீகரம் செய்து உள்ளே நுழைய வேண்டும் என்று முயற்சித்து வருகிறார்கள்.

2019ல், இந்தியாவில் எந்த பிராந்தியத் தலைவரும் இருந்து விடக் கூடாது என்பதுதான் மோடியின் நோக்கம். பிரதமர் வேட்பாளராக உருவாகக் கூடும் என்று கருதப்பட்ட நிதிஷ் குமாரையும் வளைத்து விட்டார். பிற மாநிலத்தவரால் ஏற்றுக் கொள்ளப்படக் கூடிய தலைவரான ஜெயலலிதாவும் தற்போது இல்லை. காங்கிரஸ் துணை பொதுச் செயலர் ராகுல் காந்தி நிச்சயம் மோடிக்கு ஒரு பெரிய எதிர்ப்பை அளிக்க முடியாது. சோனியாவுக்கும் உடல் நிலை சரியில்லை. இந்நிலையில், தமிழகத்தில், டிடிவி தினகரன் ஒரு பிஜேபி எதிர்ப்புத் தலைவராக உருவாகி விடப்போகிறாரோ என்ற அச்சம் மோடிக்கும் அமித் ஷாவுக்கும் இருக்கிறது. அதன் காரணமாகவே, அதிமுகவை இருந்த இடம் தெரியாமல் அழிக்க வேண்டும் என்பதில் தீர்மானமாக உள்ளார்கள்” என்றார்.
திராவிட அரசியல் விளைந்த பூமியான தமிழ்நாடு இன்று இத்தகைய அவலமான சூழலில் இருப்பது வேதனையானது. ஜெயலலிதாவும் கருணாநிதியும், ஆண்ட ஒரு மாநிலம், இன்று கோமாளிகளால் ஆளப்பட்டுக் கொண்டிருப்பது மிகவும் கொடுமையானது.
ஏ தாழ்ந்த தமிழகமே என்றார் அறிஞர் அண்ணா. இன்று இந்த கோமாளிகளால் வீழ்ந்த தமிழகமாக மாறிக் கொண்டிருக்கிறது.
மக்கள் இந்த கோமாளிகளையும், கோமாளித்தனங்களையும், அருவருப்போடும், கோபத்தோடும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். இந்த கோமாளிகள் அத்தனை பேரின் அரசியல் வாழ்க்கையையும் அஸ்தமிக்கும் வகையில் மக்கள் வலுவான தீர்ப்பை வழங்கத்தான் போகிறார்கள்
கருத்துகள்
கருத்துரையிடுக