Sunday, September 15, 2013
ஆடை கட்டுப்பாடு
தமிழகத்தின் கலை அறிவியல் கல்லூரிகளில் இனி மாணவர்களுக்கு உடைக் கட்டுப்பாடு கொண்டு வரப்போவதாக உயர்கல்விக்கான கல்லூரி கல்வி இயக்குநரகம் அறிவித்துள்ளது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. இன்றைய மாணவர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள ஜீன்ஸ் மற்றும் டி-சர்டுகளை அணியக்கூடாது என்கிற கட்டுப்பாட்டை மாணவர்கள் வரவேற்கவில்லை. இந்திய மாணவர் சங்கம்(எஸ்.எஃப்.ஐ) இந்த முடிவை கடுமையாக எதிர்த்து அறிக்கை வெளியிட்டிருக்கிறது. ஆனால் மாணவர் காங்கிரஸ், அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் ஆகிய மாணவர் அமைப்புகள் இதை வரவேற்றிருக்கின்றன. மாணவர் காங்கிரஸ் செயலாளர் சுனில் ராஜாவை இந்தியா டுடே தொடர்புகொண்டபோது ''இதை வரவேற்பதால் எங்களை குறுகிய மனப்பான்மை உடையவர்கள் என்கிறார்கள். பள்ளிகளில் மாணவர்களிடையே ஏற்றத்தாழ்வு இல்லாமல் இருக்கத்தான் சீருடை கொண்டுவரப்பட்டது. அதுபோலத்தான் இதையும் பார்க்கவேண்டும். கிராமப்புறத்தில் இருந்து நகருக்கு வந்து படிப்பவர்கள், நகரில் அணியும் ஸ்லீவ்லெஸ், டி-சர்ட், ஜீன்ஸ் போன்றவற்றைப் பார்த்து தாழ்வு மனப்பான்மை கொள்ள் வாய்ப்பு உண்டு. நகரங்களிலிருந்து கிராமப் பகுதி கல்லூரிகளில் இடம் கிடைத்துச் செல்பவர்கள் இந்த உடைகளை அணிந்தால் அவர்களை வித்தியாசமாகப் பார்ப்பார்கள். அத்துடன் நம் கலாசாரத்தின்படி உடை அணிவதை ஏன் எதிர்க்கவேண்டும்?'' என்கிறார்.
ஜீன்ஸ் பொருளாதாரத்தில் உயர்ந்தவர்கள் அணியும் உடை என்பதையே மறுக்கிறார் எஸ்.எஃப்.ஐ.யின் மாநிலத் தலைவர் ராஜ்மோகன். ''ஏழை மாணவர்களுக்கு ஜீன்ஸ்தான் வசதி. வாரம் ஒரு முறை துவைத்தால் போதும். ஆனால் பேண்ட் - சர்ட் போட்டால் தினமும் மாற்றவேண்டி இருக்கும். ஜீன்ஸ் அணியக்கூடாது என்று சொல்வதன் மூலம் அவர்களுக்கு சிரமம்தான் ஏற்படுகிறது. இந்தியாவில் வேறெந்த உயர்கல்வி நிறுவனத்திலோ, பல்கலைக்கழகத்திலோ இப்படி நடைமுறை கிடையாது. உடைக்கும் அறிவுக்கும் தொடர்பு இல்லை. இது பிற்போக்குத்தனமான நிலப்பிரபுத்துவத்தனத்தின் வெளிப்பாடாகவே நாங்கள் பார்க்கிறோம்.'' என்கிறார்.
எஸ்.எஃப்.ஐ. நிர்வாகிகள் கல்லூரி கல்வி இயக்ககத்துக்குச் சென்று சமப்ந்தப்பட்ட அதிகாரிகளை சந்தித்து உடைக் கட்டுப்பாட்டை நடைமுறைப்படுத்துவது குறித்து மறுபரிசீலனை செய்யுமாறு வேண்டுகோள் விடுத்திருக்கின்றனர். மாணவர்கள் இப்போது கண்ணியமாகத்தான் உடை உடுத்துகிறார்கள்; எங்கேயோ இருக்கும் விதிவிலக்குகளை வைத்துக்கொண்டு ஒட்டுமொத்த மாணவர் சமுதாயத்தையும் கட்டுப்படுத்தக்கூடாது என்கிறது எஸ்.எஃப்.ஐ.
சென்ற ஆண்டு இதேபோல பெண் ஆசிரியர்களுக்கு மட்டும் உடைககட்டுப்பாடு கொண்டு வந்தது தமிழக அரசு. சேலை மட்டுமே அணிந்து வரவேண்டுமென்றும் சுடிதார் அணிந்து வரக்கூடாது என்றும் சுற்றறிக்கை எல்லா பள்ளிகளுக்கும் வந்தது. அதை மீறி சுடிதார் அணிந்து வந்தவர்களுக்கு மெமோ கொடுத்த சம்பவங்களும் நடந்தன. இதற்கான எதிர்ப்பு என்பது சிறிய அளவிலேயே இருந்தது. ஆனால் மாணவர்களுக்கு விதிக்கப்பட்டிருக்கும் இந்த உடைக்கட்டுப்பாடு மாணவர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி இருப்பதைக் காண முடிகிறது. சென்னையைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர் ''இது எங்கள் தனிமனித சுதந்திரத்தில் தலையிடும் செயல். இதை அனுமதிக்கமுடியாது'' என்கிறார் காட்டமாக.
எது நாகரிகம், எது கலாசாரம் எது கண்ணியம் என்கிற கேள்விகள் எல்லாமே வரையறுத்துக் கூற முடியாதவை. நீ இதைத்தான் உண்ண வேண்டும் என்று ஒருவருடைய உணவு விஷயத்தில் எப்படி கட்டுப்படுத்த முடியதோ அதுபோலவேதான் உடை விஷயத்திலும் ஒருவரை கட்டுப்படுத்த முடியாது என்பதை அரசு உணரவேண்டும். தனக்கு எந்த உடை வசதியோ அந்த உடையை அணிவதில் வேறெவரும் தலையிடுவதை இன்றைய இளைஞர்கள் விரும்புவதில்லை. ''உடையினால்தான் தவறுகள் நிகழ்கின்றன என்பதில் எங்களுக்கு உடன்பாடு இல்லை. தவறு செய்பவர்கள் எந்த உடையிலும் தவறு செய்வார்கள். அதிகாரிகளின் அறிவிப்புடன் இதை நிறுத்திக்கொள்ளவேண்டும். மறுபரிசீலனை செய்து உடைக் கட்டுப்பாட்டை நடைமுறைப்படுத்தக்கூடாது என்று அரசை கேட்கிறோம். அப்படியும் எங்கள் கோரிக்கைக்கு செவிசாய்க்கவில்லை என்றாலும் மிகப்பெரிய அளவில் மாநிலம் தழுவிய போராட்டத்தை நாங்கள் முன்னெடுப்போம்'' என்கிறார் ராஜ்மோகன்.
இந்தித் திணிப்பு, கல்விக்கட்டண உயர்வு, ஈழத் தமிழர்களுக்கு ஆதரவு என்று சமூக அக்கறையுடன் சமூகம் சார்ந்த விஷயங்களுக்காக போராடிவந்த மாணவர்களை இன்றைக்கு தங்கள் தனிமனித உரிமைகளுக்காக போராடவேண்டிய நிலைக்கு அரசு தள்ளியிருக்கிறது.
(நன்றி : இந்தியா டுடே)
(நன்றி : இந்தியா டுடே)
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
கருத்துகள்
கருத்துரையிடுக