ஆட்டுக்குட்டியும் (2013) – Tamil
’மிஷ்கினின் திறமை மேல் எனக்கு நம்பிக்கை இன்னமும் குறையவில்லை. அஞ்சாதே & யுத்தம் செய் போன்ற ஒரு படத்தை அவசியம் அவர் அளிப்பார் என்ற பலமான நம்பிக்கை எனக்கு இருக்கிறது. ஆகவே, I will wait for Mysskin. And I hope he would bounce back too’ – ஒரு ’பிரபல’ பதிவர்.
இன்று ‘ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’ வரப்போகிறது என்பது எனக்கு இரண்டு நாட்களுக்கு முன்னர்தான் தெரியும். உடனடியாக ஆன்லைனில் டிக்கெட் கிடைக்கிறதா என்று தேடியதில், பெங்களூரில் படமே ரிலீஸ் இல்லை என்று தெரிந்தது. சென்ற வருடம் எனது பிறந்தநாளன்று (செப் 1) வெளியான ‘முகமூடி’ படம்கூட இங்கே அதே நாளில் வந்திருந்தது. அதனால்தான் அதை தியேட்டரில் பார்த்து, பயங்கர கடுப்பில் என் பிறந்தநாளை கழித்திருந்தேன். பிற ஊர்களிலும் லிமிடட் ரிலீஸ்தான் என்று தெரிந்தது. இங்கே பெங்களூரில் இன்று காலைவரை முக்கியும் எங்குமே ரிலீஸ் ஆகவில்லை என்றே தெரிந்தது. ஆனால், சக்திவேல் என்ற நண்பர், மொத்தம் நான்கு தியேட்டர்களில் அந்தப்படம் ரிலீஸ் ஆகியிருப்பதை ஃபேஸ்புக்கில் சொல்லியிருந்தார். அவை: Ravi theatre Ejipura, Savitha theatre Malleswaram, Amruth theatre Lingarajapuram, Madeshwara theatre Banashankari 3rd stage. இவற்றில் நான் இன்று பார்த்தது, அம்ருத் தியேட்டர். லிங்கராஜபுரத்தில் உள்ளது (இந்த நான்குமே பழைய தியேட்டர்கள். ஒரு மல்டிப்ளெக்ஸில் கூட இந்தப்படம் வரவில்லை).
இந்த தியேட்டர் காம்பவுண்டில் நுழைந்ததுமே, கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கு முன்னர் கோவையில் நான் படம் பார்த்த சில தியேட்டர்களை இது நினைவுபடுத்தியது புரிந்தது (டிலைட், நாஸ், கென்னடி). மாலை ஐந்து மணி ஷோவுக்கு நான் தான் முதல் ஆள். இத்தனைக்கும் நான் உள்ளே சென்றது 4:50. அப்போது நான் எடுத்த ஃபோட்டோ கீழே. இங்கு தம்மடித்துக்கொண்டிருப்பவர், டிக்கெட் கொடுக்கும் ஆசாமி. ’தீ.வே.செ.குமாரு’ படத்துக்கும் இதே அசம்பாவிதம் நடந்திருந்தது நினைவு வந்தது (புஷ்பாஞ்சலி – மொத்த தியேட்டரிலும் 5-6 பேர் மட்டுமே). இருந்தாலும், தியேட்டர் அமைப்பு கொஞ்சம் நாஸ்டால்ஜியாவை கிண்டியது. டிக்கெட் கிழிப்பவர், சாவகாசமாக தம் அடித்து டாய்லெட் போய்விட்டு மறுபடியும் என் பக்கத்தில் வந்து நின்றுகொண்டார். ‘ஷோ இருக்கும்ல?’ என்று கேட்டேன். ‘ம்ம்’ என்று முனகிவிட்டு உள்ளே சென்று குட்டி ஜன்னலை திறந்து, கம்பி வலைக்கு நடுவே கையை விட்டு தட்டி என்னை அழைத்தார். பால்கனி டிக்கெட் வாங்கிக்கொண்டு பால்கனியை முதல் ஆளாக ஓப்பன் செய்தேன்.
இத்தனை பெரிய முன்னுரைக்கு ஒரு காரணம் இருக்கிறது. ஊரில் படமே இல்லை என்ற நிலையில் இருந்து, படம் ஓடுகிறது என்ற தகவல் வந்து, உடனடியாக அடித்துப்பிடித்து தியேட்டர் வந்தவனுக்குதான் அந்த ஜாலி புரியும்.
படம் எப்படி?
படத்தைப்பற்றி மிஷ்கினே இங்கே சொல்கிறார். இந்த வீடியோவை முதலில் பார்த்துவிடுங்கள். அதன்பின் விமர்சனத்துக்குள் செல்லலாம்.
மிஷ்கினுக்கு என்று ஒரு பாணி இருக்கிறது. ஒரு படத்தை ஐந்தே நிமிடங்கள் பார்த்தாலும், அது மிஷ்கின் படம் என்பதை மிகத்தெளிவாக சொல்லிவிடலாம். அவர் படங்களின் முதல் ஷாட்கள் பெரும்பாலும் வித்தியாசமான கோணங்களில் இருப்பதை கவனித்திருக்கலாம். ‘அஞ்சாதே’வில் உடற்பயிற்சி செய்யும் அஜ்மலை காண்பித்துவிட்டு அப்படியே கேமரா ந……..கர்ந்து அவரை தாக்க வருபவர்களை காட்டும். ‘யுத்தம் செய்’யில் டாப் ஆங்கிள் ஷாட்டுடன் படம் தொடங்கும். உடனே மழை. ’முகமூடி’யில் இருட்டுக்குள் இருக்கும் கேமரா, மிகத்தொலைவில் இருந்து வரும் லாரியை காட்டும். அந்த ஷாட், இருளும் ஒளியும் கலந்து, ஒரு Noir ஸ்டைலில் இருக்கும் (Noir = மொத்த படத்திலும் அந்த ஷாட் மட்டும்தான்). அதேபோல் இந்தப் படத்திலும் முதல் ஷாட் ஒரு டாப் ஆங்கிள் ஷாட்தான்.
மிஷ்கினுக்கு என்றே இன்னும் சில ஷாட்கள் உள்ளன. ஒரு ஷாட்டில் வசனங்களை பேசாமல், கதாபாத்திரங்களின் உடல்மொழியாலேயே நடப்பதைப் புரியவைக்கும் விதமான ஷாட்கள். உதாரணம்: அந்த ஷாட்டுக்குள் இருக்கும் கதாபாத்திரம், தலையை மெதுவாக தொங்கப்போட்டுக்கொள்ளும். அல்லது மெதுவாக தலையை உயர்த்தும். இல்லையேல் வலது, இடது பக்கங்களை இதேபோல் மெதுவாக கவனிக்கும். அந்த ஷாட்டும் அந்த செய்கை முடிந்தபின்னரும் ஓரிரு நொடிகள் அப்படியே கட் ஆகாமல் இருக்கும். இந்த ஷாட்களில் நடிக்கும் நடிகர்கள் சொதப்பினால், அந்த ஷாட் நகைச்சுவை ஷாட் ஆகிவிடும். சொதப்புகிறார்கள். அப்படியே ஆகிறது. குறிப்பாக, போலீஸாக நடித்திருக்கும் ஷாஜி. அவரது உடல்மொழி மிகவும் விசித்திரமாக இருக்கிறது. அவரது உடைகள், அவரது வசனம் பேசும் பாணி ஆகியவை சரியாக வரவில்லை. சில காட்சிகளில் நன்றாக நடித்தும், பல காட்சிகளில் மனிதர் கோட்டை விட்டுவிட்டார். முதல் படம் என்பதால் அந்த பதற்றம் தெரிகிறது. ஷாஜி மட்டும் இல்லாமல், படத்தில் வரும் பலரின் உடல்மொழியும் ஆங்காங்கே செயற்கையாகவே இருப்பது படத்தின் ஒரு மைனஸ் பாயிண்ட்.
மிஷ்கினின் இன்னொரு மிகப்பெரிய டெம்ப்ளேட் – வரிசையாக வந்து ஒவ்வொருவராக அடிவாங்கி செல்வது. ஃபேஸ்புக்கில் இது பயங்கர நகைச்சுவை ஆகி, மிஷ்கின் என்றாலே இதைத்தான் எல்லோரும் சொல்வதாக இருக்கிறது. ஆனால் அது இந்தப்படத்தில் இல்லை.
வசனங்கள் இந்தப்படத்தில் மிகவும் குறைவு. முழுப்படமும் இரவிலேயே எடுக்கப்பட்டிருக்கிறது. ஒரே இரவில் நடக்கும் ஒரு கதைதான் ஓநாயும் ஆட்டுக்குட்டியும்.
படத்தின் கதை ஆரம்பிப்பது, முதல் ஷாட்டிலேயே. அனாவசியமாக எந்த ஷாட்டையும் விரயம் செய்யாமல் எடுத்திருப்பது நல்ல விஷயம். ஆனால், படத்தின் இண்டர்வல் வரை நடக்கும் எந்த சம்பவத்திலும் என்னால் ஒன்ற முடியவில்லை. எமோஷனலாக ஆடியன்ஸை படத்தின் உள்ளிழுக்கும் தன்மை இதன் முதல் பாதியில் இல்லை. ஆனால், முதல்பாதியில்தான் பல சம்பவங்கள் நடக்கின்றன. கண்முன் ஒவ்வொன்றாக சம்பவங்கள் செல்கின்றன. இருந்தாலும் அவற்றில் ஒன்றிப்போய் படத்தின் கதையை ஃபாலோ செய்யமுடியாமல், கதைக்கு வெளியே நின்று வெறுமனே காட்சிகளை கவனிக்க மட்டுமே தோன்றுகிறது. இதுதான் முதல்பாதியின் பெரிய குறை (ஒருவேளை டெலிபரேட்டாகவே அப்படி இருந்திருக்குமோ என்று யோசித்துப்பார்த்தேன். அதற்கு வாய்ப்பில்லை).
இதற்குக் காரணம், படத்தில் நடித்திருக்கும் மிஷ்கினின் கதாபாத்திரத்தின்மீதும் சரி, ஸ்ரீயின் கதாபாத்திரத்தின் மேலும் சரி, முதல் பாதி முடியும்வரை எந்த அட்டாச்மெண்ட்டும் வரவில்லை. படத்தின் துவக்கத்திலேயே மிஷ்கினின் பாத்திரத்தைப்பற்றி போலீஸ் மூலமாக நமக்குத் தெரிந்துவிடுகிறது. கதையில் ஒரு சிறிய துணுக்காக, ஒரு சமூக விரோதிக்கு சிகிச்சை செய்து போலீஸில் மாட்டிக்கொள்ளும் ஸ்ரீயின் கதை இருந்தாலும், அதனால்கூட அவர் பாத்திரத்தின் மேல் எந்தவித உணர்ச்சிகளும் வரவில்லை.
ஸ்ரீயின் கதாபாத்திரம் சித்தரிக்கப்பட்டிருக்கும் விதம் நன்றாக இருந்தது. அவரது reactionகள் நன்றாக உருவாக்கப்பட்டிருக்கின்றன. இறுதியில் என்ன நடக்கப்போகிறது என்பது முதலிலேயே தெரிந்துவிட்டால்கூட, ஸ்ரீயின் கதாபாத்திரத்தின் justification புரிகிறது.
எப்போது சட்டென்று கதைக்குள் என்னால் நுழைய முடிந்தது என்றால், படத்தில் கோயில் வாசலில் அமர்ந்திருக்கும் பார்வையில்லாத பிச்சைக்காரியைப் பார்த்தபோது கூட அல்ல. அந்தப் பெண் பேச ஆரம்பித்தபோதுதான். அவரது குரல்தான் என்னை படத்தினுள் தள்ளியது. அவரது குரல் அத்தனை பொருத்தம். அதில் தெறிக்கும் உணர்ச்சிகள் மனதைப் பிழிகின்றன. அவர் பேசும்போது கவனித்துப் பாருங்கள். அது சொந்தக்குரலா அல்லது பின்னணிக்குரலா என்று தெரியவில்லை. எதுவாக இருந்தாலும் சரி. அந்தக் குரலில் எதுவோ இருக்கிறது. தனக்கு மிகவும் நெருக்கமான ஒரு மகனையோ அல்லது குழந்தையையோ அழைக்கும் குரல் அது. அந்தக் குழந்தையிடம் ஒரு உதவி கேட்கும்போது அது எப்படி இருக்கும்? செல்லமாக, இறைஞ்சி, கோபமே இல்லாமல் ஒரு வித blissful உணர்ச்சியோடு பேசியிருக்கிறார் அந்தக் குரலுக்கு சொந்தக்காரப்பெண். அந்தக் குரல்தான் இந்தப்படத்தின் தலையாய நடிகர். (ஞாநி ஸ்டைலில்) அந்தக் குரலுக்கு ஒரு பூங்கொத்து. அந்தக் குரலை கேட்கும்போதெல்லாம் அதில் இயல்பாக வெளிவரும் எமோஷன்களை மறக்கவே முடியாது.
அதேபோல், அந்த நடிகை ஒரு குறிப்பிட்ட காட்சியில் தரையில் விழுந்து கும்பிட்டுக் கதறுவதுபோல் வரும். பலமுறை. அந்தக் காட்சியின் இயல்புத்தன்மை எனக்குப் பிடித்தது. அந்தப் பெண்ணும் நன்றாக நடித்திருக்கிறார்.
கூடவே, படத்தில் மிக அருமையான காட்சிகளும் இல்லாமல் போகவில்லை. உதாரணம் – போலீஸ் சுடும்போது ஸ்ரீயின் கதாபாத்திரம் அதை தேமேயென்று பார்த்துக்கொண்டிருப்பது. அதனால் ஏற்படும் சாவு. அதற்கு ஸ்ரீயின் இறுதி reaction. இந்த இடத்தில், ஸ்ரீ அழும்போது, மிஷ்கினின் முகம் டக் டக்கென்று மாறுகிறது. முதலில் கோபம் – பின்னர் கருணை என்ற உணர்ச்சிகளை மிகச்சரியாக பிரதிபலித்திருக்கிறார் மிஷ்கின் என்ற நடிகர். இதைப்போல் மிஷ்கினின் நடிப்பை சொல்ல இன்னும் சில காட்சிகள் உண்டு. அதில் ஒன்று – பிறகு.
இதன்பின் தொடங்கும் இரண்டாவது பாதியும் பல சம்பவங்களால் செல்கிறது. ஆனால், இரண்டாம் பாதியில் ஓரளவு ஒன்ற முடிகிறது. குறிப்பாக, படத்தில் வுல்ஃப் கதாபாத்திரம் பேசும் ஒரு வசனம். கிட்டத்தட்ட 3-4 நிமிடங்கள், ஒரே ஷாட்டில் இருக்கும் வசனம் இது. ‘நந்தலாலா’வில் இப்படி ஒரு வசனம் ஸ்னிக்தா பேசுவதாக வரும். அந்த வசனத்தை கேட்கும்போதெல்லாம் எரிச்சல் பிய்த்துக்கொண்டு வரும். இந்தப்படத்தில் அந்த ஒரே ஷாட் வசனம் ஆரம்பித்தபோதே அது அவசியம் அட்லீஸ்ட் 5 நிமிடங்கள் வரும் என்று தெரிந்துவிட்டது. ‘செத்தோம்’ என்று மனதில் நினைத்துக்கொண்டேன். தன்னிச்சையாக இரண்டு கைகளாலும் தலையை அழுந்தப் பிடித்துக்கொண்டேன். ஆனால், அந்த வசனம்தான் இந்தப்படத்தின் moodஐ மாற்றுகிறது. அந்த வசனத்தால்தான் இந்தப் படம் பலருக்கும் பிடிக்கப்போகிறது. படமே அதனால்கூட ஓடலாம். சிலர் தாரைதாரையாக கண்ணீர் விட்டுக் கதறிக்கூட அழ நேரிடலாம். கபர்தார். அந்த முழு வசனமுமே அட்டகாசம் என்று சொல்லமாட்டேன். ஆனால் அந்த வசனத்தில் ஓரிரு இடங்களில், நெஞ்சில் எதுவோ அசைந்தது.
படத்தின் இரண்டாம் பாதி எனக்குப் பிடித்ததற்கு இன்னொரு காரணம் – இளையராஜா. வெகுநாட்கள் கழித்து (வருடங்கள்), அவரது பின்னணி இசை இந்தப் படத்தில் கதையோடு ஒன்றியிருக்கிறது. எண்பதுகளில் மௌனராகம், நாயகன், அக்னி நட்சத்திரம், அபூர்வ சகோதரர்கள் போன்ற படங்களில் பின்னணி இசை எப்படி இருந்தது? அந்தப் படங்களை மறந்தாலும், இசையை மறக்கமுடியாது (ஹே ராமையும் சேர்த்துக்கொள்ளலாம். பிதாமகனில் ஓரிரு காட்சிகள்). இந்தப்படத்தின் இரண்டாம் பாதியில் அந்த அனுபவம் கிட்டியது. இளையராஜாவுக்கு இதுபோன்ற படங்கள்தான் தேவை. மிஷ்கின் ராஜாவை பெண்டு நிமிர்த்தியிருக்கிறார் என்பது தெரிகிறது. அப்படிப்பட்ட நபரால்தான் ஒரு இசையமைப்பாளருக்குள் இருக்கும் திறமையை வெளியே பிடுங்கிப்போட முடியும். இந்தப் படத்தின் இசையை படம் பார்க்கையில் காட்சிகளோடு சேர்ந்து கேளுங்கள்.
வழக்கமாக மிஷ்கின் படங்களில் இருக்கும் அதே குறைபாடுகள் அப்படியப்படியே இந்தப்படத்திலும் இருக்கின்றன. அவைகளை மிஷ்கின் மாற்றுவதாகத் தெரியவில்லை. இதற்கு இன்னொரு உதாரணம் – படத்தில் வரும் சொங்கி வில்லன். இந்த வில்லனின் உடல்மொழியை கவனியுங்கள். எத்தனை செயற்கையாக இருக்கிறது என்பது தெரியும். குறிப்பாக அவன் கைகளை ஆட்டி ‘யெஸ்ஸ்ஸ்’ என்று சொல்லும்போது. அதேபோல் அவனது வசனங்கள். ஆஃப்டரால் நம்மாலேயே இது கவனிக்கப்படும்போது, மிஷ்கின் ஏன் இதை கவனிக்கத் தவறுகிறார்? இத்தகைய செயற்கையான ஷாட்களை குறித்து வைத்துக்கொண்டு காண்பிக்கக்கூட முடியும். அவ்வளவு இருக்கின்றன.
இருந்தாலும், ‘முகமூடி’ போன்ற ஒரு படத்தை அளித்த மிஷ்கினிடமிருந்து இது ஒரு வேறுபட்ட படம். தற்போது ஓடிக்கொண்டிருக்கும் எந்தத் தமிழ்ப்படத்தை விடவும் இந்தப் படம் நன்றாக ஓடுவதற்குத் தகுதியானது.
மிஷ்கினை நேரில் சந்திக்கும்போது ஒரு கேள்வி இருக்கிறது.
அது ஏங்க எல்லா கேரக்டருமே திடீர்னு பயங்கர ஸ்லோவா ரியாக்ட் செய்யிறாங்க? ஒண்ணு அசையாமல் நிக்கிறது; இல்லாட்டி வானத்தையோ பூமியையோ பார்க்குறது; இல்லாட்டி மெதுவா மூஞ்சியை அந்தப்பக்கம் இந்தப்பக்கம் திருப்புறது.. இதுனால நீங்க சொல்லவரும் செய்திதான் என்ன? இதன் உபகேள்வி – ‘நீங்க இந்த மாதிரி ஷாட்களை வைக்க நினைக்கும்போது அதன் அடிப்படை காரணம் என்ன? ஒருவேளை தகாஷி கிடானோவின் பாதிப்பா? ஆனா அவரு படங்களில் இந்த ஷாட்கள் செயற்கையா தெரியாதே? ஒருவேளை உங்க படங்களில் சில காட்சிகள் வேணும்னே செயற்கையா தெரியணும்னு நினைச்சே அப்படி வெக்கிறீங்களா?’
இன்னொன்று – ‘நடிக்கவைக்கும்போதே நடிகர்கள் செயற்கையா நடிக்கிறது உங்களுக்கு தெரியாதா? ஆம் எனில் ஏன்?’
பி.குக்கள்
1. இந்தப்படத்தின் தீம் தமிழ்ப்படங்களில் ஏற்கனவே கையாளப்பட்டிருக்கிறது. 1972ல் சிவாஜி நடித்த ‘நீதி’ படம் அப்படிப்பட்டதே (அந்தப்படம் அதே வருட ஆரம்பத்தில் ஹிந்தியில் வெளிவந்த ராஜேஷ் கன்னாவின் ‘துஷ்மன்’ படத்தின் ரீமேக் என்று நினைக்கிறேன். ‘காப்பி’ என்று சொல்லாமல் ரீமேக் என்று சொன்னதன் காரணம், தயாரித்திருப்பவர் பாலாஜி).
2. படத்தின் டைட்டில், மிஷ்கின் அந்த வீடியோ பேட்டியில் சொல்வதுபோல, ஸ்ரீயின் கதாபாத்திரத்தையும் மிஷ்கினின் பாத்திரத்தையும் குறித்தால் கூட, அதைவிட நெருக்கமான காரணம் வேறொன்று உண்டு. அது என்ன என்பதை தியேட்டரில் பாருங்கள்.
3. படத்தைப்பற்றிய வேறு சில விஷயங்களை மிஷ்கினே சொல்லியிருக்கிறார். நான் பார்த்ததிலேயே இதுதான் அவரது சற்றே ‘அடக்கமான’ பேட்டி. ‘சற்றே’ என்று சொல்லியிருப்பதன் காரணம் பேட்டியை பார்த்தால் தெரியும்.
நன்றி :தினகரன் நாளிதழ் ScorpRajesh Da
கருத்துகள்
கருத்துரையிடுக