கலைஞர் தன்னுடைய அரசியல் புற வாழ்வில், வெற்றிகள் பலவற்றைப் பார்த்துவிட்டார். அதில் அவர் தொடாத உச்சங்கள் இல்லை. ஆனால் அவருடைய கடைசிக் காலகட்டத்தில் அவருடைய அகவாழ்வும் துலங்கிட வேண்டும் என்பதே எல்லோருடைய விருப்பமும்.
- Saravanan Chandran
- ambiarchives Contributor
கலைஞரைப் பற்றி புதிதாக என்ன சொல்லி விட முடியும்..? லட்சம் பக்கங்களில் அவருடைய புற வாழ்வு குறித்த வெற்றிச் செய்திகள் குவிந்து கிடக்கின்றன. அள்ள முடியாத அளவிற்குப் பெருமைகளும் சிறுமைகளும் அதில் விரவிக் கிடக்கின்றன. துலாக் கோல்கள் கொண்டு அதில் எவை அதிகம் என எண்ணிப் பார்க்கிற நேரமில்லை இது. பொதுவாகவே முழுமையான மனிதன் என்பதற்கான அளவீடாக ஒரு விஷயத்தைச் சொல்வார்கள். ஒரு மனிதனின் வாழ்வை அகவாழ்வு - புறவாழ்வு என இரண்டாகப் பிரித்து, இரண்டிலும் வெற்றி பெற்றவர்களையே முழுமையான மனிதன் என்பார்கள்.
வரலாறு நெடுகிலும் எடுத்துப் பார்த்தால், புறவாழ்வில் வெற்றி கண்ட பல சாதனையாளர்கள் தங்களுடைய அகவாழ்வில் தோல்வியைத் தழுவியிருக்கின்றனர். அகவாழ்வில் மட்டும் வெற்றி கண்டவர்களை வரலாறு எப்போதும் கணக்கில் வைப்பதில்லை. குடும்ப அரசியல் என்கிற வாள் கலைஞரின் முதுகைச் சுற்றியே இத்தனை ஆண்டுகளும் சுற்றி வந்திருக்கிறது. ஒருவகையில் வேலியில் போன ஓணான்களை எல்லாம் வேட்டிக்குள் இழுத்துப் போட்டது அவர்தான். தவிர்க்க முடியாத சூழலிலும் அவர் இருந்தார் என்பதையும் புரிந்து கொள்ள முடிகிறது. இந்திய அரசியலில் குடும்ப அரசியல் என்கிற குற்றச்சாட்டுக்கள் எல்லாம் காந்தி காலத்தியவை என்பதைச் சொல்லியும் தெரிய வேண்டுமா..?

’கனியிருப்ப காய் கவர்ந்தற்று’ என ஒரு வாரிசின் அரசியல் பிரவேசத்தை அவர் மறுத்துக் கொண்டிருந்த காலகட்டமது. பேட்டியொன்றிற்காக அவரைச் சந்தித்தபோது, இதைப் பற்றிய கேள்வியொன்றை கேட்டபோது, வழக்கம் போலவே மழுப்பலான பதிலையே அதற்கும் தந்தார். பேட்டி முடிந்து லிப்ட்டில் கீழே வந்தபோது, அவர் எதிரே நின்றிருந்த அந்த வாரிசிடம் சொன்னார், “நீ கேக்க சொன்ன கேள்விய அவங்க என்ட்ட கேட்டுட்டாங்க.” அவரது குடும்பத்தின் அரசியல் அபிலாஷைகளை அவர் அறிந்தேயிருந்தார்.
“அவர் இன்னைக்கு முதலமைச்சராக காலை ஆட்டிக்கிட்டு இருக்காருன்னா அதுக்கு காரணம் நாங்கதான்” என்றார் இன்னொரு வாரிசு. அந்த வாரிசு பற்றி அவர் ஒருமுறை கூறியபோது, “என் மருமகன் எப்போதும் நான் உக்காந்திருக்கிற நாற்காலிக்கு ஆசைப்பட்டதில்லை” என்றார். இதையும்கூட அவர் அறிந்தேயிருந்தார். இந்த விஷயத்தில் முதுகிற்குப் பின்னாலும் அவருக்குக் கண்கள் இருந்தன. ஆனாலும் அதையெல்லாம் மீறி, ஒருத்தரிடமிருந்து மீள இன்னொருத்தர். இன்னொருத்தரின் அழுத்தத்திற்காக வேறோருத்தர் என அவர் களத்தில் ஒவ்வொருவராக இறக்கினார்.

நிறுவனமாகிவிட்ட எதன் மேலும் மிகையான குடும்ப அழுத்தங்கள் வரத்தான் செய்யும். இந்தியளவில் மட்டுமல்லாமல் உலக அளவிலான பொதுப்போக்கு அது. அது தவறுதான் என்ற போதிலும், குடும்ப அரசியல் என்று விமர்சனத்தை எளிதாக எறிந்துவிட்டுப் போய்விட முடியும். சாதாரண ஒரு எலெக்ட்ரிக்கல் கடை போட்டாலே, கல்லாவில் மனைவி வழி மச்சானைக் கொண்டு வந்து அமர வைக்கும் பாரம்பரியத்தில் அவர் மட்டும் விதிவிலக்கா என்ன..?
தவிர, வேட்டிக்குள் புகுந்த ஓணான்களை இனி அப்புறப்படுத்தவும் முடியாது. தவிர்க்க முடியாத பட்சத்தில் சகித்துக் கொண்டு வாழப் பழகிக் கொள்வதுதான் இயற்கை. அவை கட்சியில் இரண்டறக் கலந்தும் விட்டன. பலவீனங்களைவிட அதனால் பலங்களும்கூட அதிகமாக இருக்கத்தான் செய்கின்றன. வெற்றி தோல்வி என்பதையெல்லாம் மக்கள் முடிவு செய்யட்டும்.
இந்த இடத்தில்தான் இன்னொரு கோணம் குறித்துச் சொல்ல வேண்டியிருக்கிறது. விவரம் புரியாமல் உடன் பிறப்புகள் கம்பு சுற்றக் கிளம்பி வந்தாலும் பரவாயில்லை. மனச்சார்புகள் இல்லாத தேர்தல் அரசியல் நோக்கர்கள் இதற்குப் பின்னால் இருக்கிற அபாயத்தை உணர்வார்கள். கலைஞர் தனது சக்கர நாற்காலிப் பருவத்தில் ‘கண்கள் பனித்து இதயம் இனிக்கவே’ ஆசைப்பட்டார். தன்னால் உருவாக்கிய பிளவுகளைச் சரிசெய்யவே அதிகம் முயன்றார் என்பதை அவரோடு தொடர்பில் இருந்த மூத்த பத்திரிகையாளர்கள் மற்றும் தோழமை கட்சித் தலைவர்கள் அறிவார்கள்.

திமுக என்கிற இயக்கத்தில் இருக்கிற இரண்டாம் கட்டத் தலைவர்கள் பலர் இந்தக் குடும்ப அரசியல் பிளவுகளால் அதிகமும் வெறுத்துப் போயிருக்கின்றனர். யாருக்கு வணக்கம் வைப்பது..? யாரோடு தோள் தொட்டு நிற்பது..? என்றெல்லாம் மருகிப் போய்க் கிடக்கின்றனர். கலைஞர் இல்லாத நிலை என்ற ஒன்று வருகிற கட்டத்தில் இந்தப் பிளவு, அரசியல் எதிரிகளிடமிருந்து பாரதூரமான விளைவுகளை உருவாக்கி விடும். அதற்காகத்தான் அவர்கள் பகடைக் காய்களை உருட்டிக் கொண்டு காத்தும் கிடக்கிறார்கள். “செயல்படாத தலைவர் சென்னையில் இருக்கிறார்” என அழகிரி மார்தட்டுவதும் செய்திகளில் வரத்தானே செய்கிறது..?
செயல் தலைவர் அந்த நாற்காலியில் அமர முடியாத அன்றைக்கு கேக் வெட்டிக் கொண்டாடியவர்களும் இருக்கிறார்கள். எதிர்காலத்தில் இவர்களைக் கொண்டு அரசியல் எதிரிகள் கேக் வெட்டி விளையாடி விடக்கூடாது. திமுகவில் இன்றைய நிலையில் எல்லோராலும் ஒப்புக் கொள்ளப்பட்ட தலைவராக ஸ்டாலின் உருவாகி நிற்கிறார். அரசியலில் தவிர்க்க முடியாத அந்தக் குடும்பத்தின் பிற உறுப்பினர்கள் செயல் தலைவரின் பின்னால் சத்தம் காட்டாமல் அணிவகுப்பதே அந்தக் கட்சிக்கும் அவர்களுக்கும் நல்லது. ஒருவகையில், தமிழக அரசியலுக்கும் நல்லது. இதைத்தான் அவர்கள் சார்ந்த தோழமைக் கட்சிகளும் விரும்புகிறார்கள்.

கலைஞர் தன்னுடைய அரசியல் புற வாழ்வில் வெற்றிகள் பலவற்றைப் பார்த்துவிட்டார். அதில் அவர் தொடாத உச்சங்கள் இல்லை. ஆனால் அவருடைய கடைசிக் காலகட்டத்தில் அவருடைய அகவாழ்வும் துலங்கிட வேண்டும் என்பதே எல்லோருடைய விருப்பமும். தமிழக மக்கள் பல்வேறு நெருக்கடியான சமயங்களில் அவருக்குத் தோள் கொடுத்து அவருடைய புறவாழ்வை அர்த்தம் மிக்கதாக மாற்றிக் காட்டியிருக்கின்றனர். அவருடைய சொந்தக் குடும்பம், கட்சியின் நலன் கருதி ஒற்றுமையாக ஒருகுடையின் கீழ் நின்று அவரது அகவாழ்வையும் வெற்றிக் கணக்கில் வைக்க வேண்டும். அவரை முழுமையான மனிதனாக வரலாற்றில் நிறுத்தும் கடமையில் தமிழக மக்கள் ஒருபோதும் தவறியதில்லை. ’அவருடைய சொந்தக் குடும்பம் அதில் தவறிவிட்டது’ என்கிற வரலாற்றுப் பழிக்கு ஆளாகி விடக்கூடாது. மருத்துவமனையில் தொடரும் இந்த ஒற்றுமை பிற்காலங்களிலும் தொடர வேண்டும். காலத்தின் கட்டளை இது என எடுத்துக் கொண்டாலும் தப்பில்லை..!
கருத்துகள்
கருத்துரையிடுக