-
சமீப காலமாக தொலைக்காட்சிகளைப் பார்த்துக் கொண்டிருக்கும் போது, ஒரு அபாயகரமான போக்கைக் கண்கூடாகப் பார்க்க முடிகிறது. பணியில் இருக்கும் பத்திரிகையாளர்களின் மீது எரிந்து விழுந்து பாயும் அரசியல் வாதிகளின் காணச் சகிக்காத சித்திரங்கள் அவை. பத்திரிகையாளர்களின் பணியல்லவா இதுவென்கிற குறைந்தபட்ச புரிதல்கூட இல்லாத எகிறிக் குதித்தல்கள் அவை.
இன்னும் சில படிகள் மேலே போய் தங்களை விமர்சிக்கும் பத்திரிகையாளரைப் பணியிலிருந்து தூக்க முயற்சிக்கும் போக்கும் சமீபகாலமாக தலைதூக்கியிருக்கிறது.
சில மாதங்களுக்கு முன்புகூட முக்கியமான பத்திரிகைகளில் பணிபுரிந்த மூத்த ஊடகவியலாளர்கள் சிலரை குறிப்பிட்ட கட்சியொன்று, அவர்களது அலுவலக உரிமையாளர்களிடம் முறையிட்டு பணியிலிருந்து அப்புறப்படுத்தியதாகச் செய்திகள்கூட வந்தன.
சில மாதங்களுக்கு முன்புகூட முக்கியமான பத்திரிகைகளில் பணிபுரிந்த மூத்த ஊடகவியலாளர்கள் சிலரை குறிப்பிட்ட கட்சியொன்று, அவர்களது அலுவலக உரிமையாளர்களிடம் முறையிட்டு பணியிலிருந்து அப்புறப்படுத்தியதாகச் செய்திகள்கூட வந்தன.
இப்படியான மிகையான அச்சம் சூழ்கிற பின்னணியில் இருந்தே கலைஞருக்கும் பத்திரிகையாளர்களுக்கும் இடையில் இருந்த சுகப் போக்கை அசை போட வேண்டியிருக்கிறது.
குறைவான ஆண்டுகள் கொண்ட என்னுடைய பத்திரிகையுலக அனுபவத்தில் முதன் முதலாக அவரைச் சந்தித்த நாளில் கிடைத்த அனுபவம் மேலெழுந்து வருகிறது.
குறைவான ஆண்டுகள் கொண்ட என்னுடைய பத்திரிகையுலக அனுபவத்தில் முதன் முதலாக அவரைச் சந்தித்த நாளில் கிடைத்த அனுபவம் மேலெழுந்து வருகிறது.
முதல்வராக இருந்த அவரைச் சந்திப்பது குறித்த பயத்தில் உதடுகள்கூட ஆடிக் கொண்டிருந்தன எனக்கு. எதிரே அமர்ந்த அவர் கூர்ந்து பார்த்துவிட்டு, “ஒரு பத்திரிகையாளனுக்கு இருக்கக்கூடாதது பயமும் தயக்கமும்” என்றார் சகஜப்படுத்தும் தொனியில். அவர் சொன்னதாலோ என்னவோ, பயமும் தயக்கமும் இல்லாமல் பல தடவை அவரிடம் கேட்கக்கூடாத கேள்விகளையெல்லாம் கேட்டிருக்கிறேன்.
ஒருதடவை அவரோடு முரண்பட்டிருந்த தலைவர் ஒருத்தர் அவரை தொலைக்காட்சிப் பேட்டிகளில் தரக்குறைவாக விமர்சனம் செய்து கொண்டிருந்தார். இரவு பத்து மணிக்கு ஒளிபரப்பான அந்தப் பேட்டியைப் பார்த்துவிட்டு கலைஞர் பதினோரு மணி அளவில் அந்தத் தலைவரைத் தொலைபேசியில் பிடித்து சமாதானப்படுத்தினார் என அதிகாரப்பூர்வமல்லாத தகவல் ஒன்று அப்போது பத்திரிகையாளர் மட்டத்தில் உலவிக் கொண்டிருந்தது.
மூத்த பத்திரிகையாளர் என்றால், உறுதிப்படுத்தாத தகவலைக் கொண்ட அந்தக் கேள்வியைக் கேட்டிருக்கவே மாட்டார்கள். துணிந்து கேட்டு விட்டேன். “அந்தத் தலைவரை நீங்கள் கெஞ்சி சமாதானப்படுத்த முயன்றதாக சொல்கிறார்களே” என்றதும் முகம் சிவந்து விட்டது அவருக்கு.
“என் வீட்டு நாய்கூட அவன் வீட்டு வாசல்ல நிக்காது” என்று சொல்லி விட்டு, பேட்டியை முடித்துக் கொள்ளும் தோரணையில் முகத்தைப் பார்த்து விட்டு அமைதியாக இருந்தார்.
“என் வீட்டு நாய்கூட அவன் வீட்டு வாசல்ல நிக்காது” என்று சொல்லி விட்டு, பேட்டியை முடித்துக் கொள்ளும் தோரணையில் முகத்தைப் பார்த்து விட்டு அமைதியாக இருந்தார்.
உடன் இருந்த அவரது உதவியாளர் சூடாகி, “எதைக் கேக்கணும்னு ஒரு வரைமுறை இல்லையா” என்றார். பயத்திலும் சங்கடத்திலும் தலையைக் குனிந்து கொண்டேன். சில நிமிடங்கள் கழித்து ஒரு புன்முறுவலை உதிர்த்து விட்டு, மேலே கேள் என்பதைப் போல சைகை காட்டினார். சகஜமாக அதற்கப்புறம் தொடர்ந்தது உரையாடல். இது ஒரு உதாரணம்தான். பல்வேறு சந்தர்ப்பங்களில் அவரை சங்கடப்படுத்தும் படியாக நிறைய காரியங்களைச் செய்திருக்கிறேன்.
அதிகமும் ’ஆப் தி ரெகார்ட்’ ஆன கேள்விகளை அவர் முன் வைத்திருக்கிறேன்.
அதிகமும் ’ஆப் தி ரெகார்ட்’ ஆன கேள்விகளை அவர் முன் வைத்திருக்கிறேன்.
அப்படியான கேள்விகளை வைத்து விட்டு, ’ஆப் தி ரெகார்டாக சொல்ல முடியுமா’ என்று கேட்பேன். சிரித்துக் கொண்டே அவர், “பத்திரிகையாளனுக்கு எல்லாமே ஆன் தி ரெகார்ட்தான்” என்பார். இப்போதுகூட இதையெல்லாம் இப்படி வெளிப்படையாக எழுதுவதை அவர் முன்னுணர்ந்தவர் இல்லையா? இந்தியாடுடே பத்திரிகை சார்பாக கலைஞர் சிறப்பிதழ் கொண்டு வரப்பட்டது. எங்களது தமிழ் பதிப்பு ஆசிரியர் ஆனந்த் நடராஜனின் மேற்பார்வையில் அந்த இதழைத் தொகுக்கும் பொறுப்பு என் வசம் இருந்தது.
அப்போது பத்திரிகையாளர் ஞாநி கலைஞரைக் கடுமையாக விமர்சித்துக் கொண்டிருந்த நேரம். கலைஞரது அலுவலகத்தில் இருந்து யாரெல்லாம் கட்டுரை எழுதுகிறார்கள் என்று பட்டியல் கேட்டார்கள். அதில் சிலரது பெயரை வேண்டாமென்று அப்புறப்படுத்தி இருந்தார்கள். அத்தனையும் அவருக்குச் சாமரம் வீசும் அவர் கட்சி அடிப்பொடிகள். பட்டியலைக் கூர்ந்து பார்த்த போது ஞாநி பெயர் விடுபடவில்லை.
ஆனாலும் அவர்கள் நினைத்ததை விட மோசமான அனுபவமே கலைஞர் தரப்பிற்குக் கிடைத்தது. ’கலைஞர் ஏன் அரசியலை விட்டு விலக வேண்டும்’ என்கிற தலைப்பில் மூன்று பக்க கட்டுரையை எழுதியிருந்தார் ஞாநி. கடைசி மூன்று பக்க கட்டுரை அது. படித்து விட்டு கலைஞர் வருத்தத்தோடு சொன்னதை பிற்பாடு சொன்னார்கள். “தலைவாழை விருந்து வைத்து விட்டு கொஞ்சம் அதைப் பிட்டு வைத்து விட்டார்கள்” என்று அவர் சொன்னதாகச் செய்தி வந்த போது உண்மையில் சங்கடப்பட்டேன்.
இந்த இடத்தில் இன்னொரு சம்பவத்தையும் சொல்லத் தோன்றுகிறது.
இந்த இடத்தில் இன்னொரு சம்பவத்தையும் சொல்லத் தோன்றுகிறது.
அந்தச் சிறப்பிதழுக்காக மிகப் பெரிய எழுத்தாளர் ஒருத்தரிடம் கட்டுரை கேட்ட போது, அசிங்கமான ஒரு வார்த்தையை உதிர்த்து விட்டு எழுதித் தர மறுத்துவிட்டார். அந்த எழுத்தாளர் அப்படித்தான் செய்வார் என கலைஞருக்கும் தெரியும் என்பது எங்களுக்கும் தெரியும். ஆனாலும் அந்த எழுத்தாளரின் இறுதிக் காலத்தில் அவரை வைத்து விழா எடுத்து கௌரவப்படுத்திய போது அந்தச் சம்பவத்தை நினைத்துக் கொண்டேன்.
பொதுவாகவே கலைஞர் தன்னை ஆதரிப்பவர்களை விட எதிர்ப்பவர்களையே வலையில் விழ வைக்க வாழ்நாள் முழுவதும் முயற்சித்துக் கொண்டே இருந்தார் என்று தோன்றுகிறது. அதை ஒரு வியூகமாகவே வைத்திருந்தார் என்றுகூட துணிந்து சொல்லலாம். எதிர்த்த வாய்களில் இருந்து தாம்பூல மணத்தைப் பார்த்து விட வேண்டுமென்பதில் அலாதிப் பிரியம் போல அவருக்கு.
மிகச் சில சந்தர்ப்பங்களிலேயே அவர் பத்திரிகையாளர்களிடம் எரிந்து விழுந்திருக்கிறார். ஒரு தொலைக்காட்சி விரட்டி விரட்டி அவரை எரிச்சல்படுத்த முயன்ற போது, “சேர்ந்து தீக்குளிக்கலாம் வர்றீயா” என்று கேட்டார். அதைக்கூட திரும்பத் திரும்ப எடுத்துப் போட்டார்கள்.
இப்படியாகப்பட்டவரின் பிள்ளைகள் பத்திரிகை அலுவலகத்தை கொளுத்திய போது, உண்மையில் உள்ளார்ந்த துயரத்தை அடைந்திருப்பார் என்றுதான் இப்போது சொல்லத் தோன்றுகிறது. ஒரு ஆட்சியாளராக இல்லாவிட்டாலும் ஒரு பத்திரிகையாளராக கையறு நிலையில்தான் இருந்திருப்பார். அவரது நினைவு தப்புவதற்கு முன்பு பேட்டியெடுக்க வாய்ப்புக் கிடைத்திருந்தால், நிச்சயம் இந்தக் கேள்வியைக் கேட்டிருப்பேன்.
அப்படி துணிந்து எதை வேண்டுமானாலும் கேட்பதற்கான வெளியை அவர் உருவாக்கி வைத்திருந்தார் என்பது முக்கியமானது. அவரால் பத்திரிகை பணியிலிருந்து வேட்டையாடப்பட்டவர்கள் இருக்கிறார்களா என்பதை என்னுடைய குறைந்த ஆண்டுகள் அடங்கிய பத்திரிகை உலக அனுபவத்தில் சொல்லி விட முடியாது. மூத்த பத்திரிகையாளர்கள்தான் இதுபற்றியெல்லாம் சொல்ல வேண்டும். ஆனால் என்னுடைய தனிப்பட்ட
அனுபவத்தில் அதிகமும் அவரை விமர்சித்தே எழுதியிருக்கிறேன். கலைஞர் சிறப்பிதழில்கூட ’மாலைகளும் வசைகளும்’ என்ற தலைப்பில்தான் நான்கு பக்க கட்டுரை எழுதியிருந்தேன். அவரிடமிருந்து அன்பு மிரட்டலோ அதிருப்தியோ என்னை வந்து அடைந்ததில்லை. அலுவலகத்தின் உயரதிகாரிகளிடமும் என் குறித்த புகார்கள் அறிவாலயத்தில் இருந்து வாசிக்கப்பட்டதும் இல்லை.
உண்மையில் அவர் தொடர்ந்து உரையாடுகிறவராகவே இருந்தார். முழுநீள பேட்டி எடுத்தால்தான் பேசுவேன் என பல தலைவர்கள் வெளிப்படையாகவே சொல்லியிருக்கிறார்கள்.
உண்மையில் அவர் தொடர்ந்து உரையாடுகிறவராகவே இருந்தார். முழுநீள பேட்டி எடுத்தால்தான் பேசுவேன் என பல தலைவர்கள் வெளிப்படையாகவே சொல்லியிருக்கிறார்கள்.
ஆனால் ஒரு கட்டுரைக்குத் தேவையான இரண்டு வரிகள் மட்டுமே வரும் கருத்திற்காகக்கூட அவரைத் தொலைபேசியில் பிடிக்க முடியும். பத்திரிகயாளனின் அடிப்படை குணமென்பது எது குறித்தும் உரையாடுவது. அந்தத் துறையின் முன்னோடியாக அந்தப் பொறுப்பை உணர்ந்திருந்தார் அவர். அவரைப் பின் தொடகிறவர்களுக்கும் கடத்தினார் அவர். அவருடைய அரசியல் வாரிசு அதைக் கற்றுக் கொள்ளாமல் போனது துரதிர்ஷ்டம்தான்.
தன்னுடைய அரசியல் எதிரிகள் குறித்த செய்திகளின் உண்மைத் தன்மையைக்கூட விசாரிக்கிறவராக இருந்தார். சிவகாசி ஜெயலட்சுமி என்கிற பெண் முன்னாள் முதலமைச்சர் ஒருத்தருக்கு பெட்டியில் வைத்துப் பணம் கொடுத்தேன் என்று சொன்ன பேட்டி வெளியான போதுகூட, அதில் உண்மை இருக்கிறதா என்று விசாரித்துத் தெரிந்து கொண்டவர் அவர். பா.ம.க- திமுக இடையிலான ஒரு பிளவு எங்களுடைய பேட்டியின் விளைவாக ஏற்பட்டது. அவருடன் இருந்தவர்களெல்லாம் எகிறிக் குதித்தார்கள். ஆனால் அதில் உண்மை இருக்கிறதா என்று கேட்டவர் கலைஞர்தான்.
போற்றியோ தூற்றியோ எதை எழுதினாலும் சம்பந்தப்பட்டவர் படிப்பார்களா என்கிற கவலை எப்போதும் ஒரு பத்திரிகையாளனுக்கு இருக்கும். ஆனால் கலைஞர் விவகாரத்தைப் பொறுத்தவரை எப்போதும் தன் குறித்தவற்றைத் தவறாமல் படித்து விடுவார். எழுதும் போதே நம்முடைய முதுகை அவருடைய கண் உற்றுப் பார்த்துக் கொண்டிருப்பதைப் போல ஒரு பிரமை இருந்து கொண்டே இருக்கும்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாகூட பல நேரங்களில் தன்னை நோக்கி எழும் பல கேள்விகளுக்குப் பதிலளிக்காமல் கடப்பார். அமைதியாக விட்டால் கிணற்றில் போட்ட கல் மாதிரி சம்பவம் ஆகி விடும் என்பது சின்னப் பையன்களான எங்களுக்கே தெரியும். ஆனாலும் ”பெரிசு எல்லாத்துக்கும் எதுக்கு விழுந்து விழுந்து வாயை சும்மா வைக்காம பதில் சொல்லுது” என செல்லமாகச் சின்ன வயதில் கூடிப் பேசிக் கொள்வோம்.
”இன்றைய செய்தி நாளைய வரலாறு” என அவர் சின்ன வயதில் எழுதியதைக் கடைசி வரை கட்டிக் காப்பாற்றினார். சிறு விஷயங்களுக்கூட அதனால்தான் எதிர்வினை ஆற்றினார். அதனால்தான் அவர் வரலாறாகவும் காலத்தில் நிற்கிறார். அவர் சொத்தாய் பலருக்கு பல விஷயங்களை விட்டுச் சென்றிருக்கிறார்.
தனிப்பட்ட முறையில் ஒருதடவை சொன்னதைத்தான் அவர் எனக்குக் கொடுத்த சொத்தாக இன்றளவும் நினைத்துச் செயல்படுத்த முனைந்து கொண்டிருக்கிறேன். “சூரியன் எழுந்திருக்கறதுக்கு முன்னாடியே நாம எழுந்திருச்சிரணும். அப்பதான் அதைக் காட்டிலும் வேகமாக ஓட முடியும்” என்று சொல்லி விட்டு அர்த்தம் பொதிந்த சிரிப்பொன்றை உதிர்க்கும் போது அவரது முகம் சூரிய காந்தியைப் போல மஞ்சளாய் விரிந்து ஒளிர்ந்தது.
சரவணன் சந்திரன்
கருத்துகள்
கருத்துரையிடுக