-சரவணன் சந்திரன்
எழுதுவதைப் பற்றி மட்டுமே சொல்லப்படுவதல்ல இது. ஒட்டு மொத்தமான சித்திரம் குறித்து, அனுபவக் குறிப்புகளைத் துணைக்கு வைத்துக் கொண்டு ஒரு திறந்த உரையாடல். இந்தக் கதையில் வரும் சம்பவங்கள் ஆட்கள் எல்லாமும் கற்பனையே. விலங்குகளும் துன்புறுத்தப்படவில்லை. ஆனால் விலங்குகளைப் போலத் துன்புறுத்தப்படும் சக விலங்குகளை நோக்கியே இதைப் பேச விழைகிறேன். அதுவாகவும் இருந்தவன் என்கிற முறையில் கூடுதல் பொறுப்புணர்வும் இருக்கிறது.
செயலின்மையை எதிர்த்துப் போராடுதல், படைப்பூக்கம் ஆகியவை குறித்து சமீபகாலமாக சற்றேறக்குறைய நிதமும் சிந்திக்கிறேன். சின்ன வயதில் இருந்தே எதையாவது போட்டு உடைத்து விடுகிற மாதிரியான பதற்றத்தோடுதான் இருந்தேன். ரேடியோ பெட்டியைப் போட்டு உடைத்த பெருமையும் உண்டு. படிப்படியாக அப்பதற்றம் குறைந்து கல்லூரி வந்த போது முற்றிலும் காணாமல் போயிருந்தது. திரும்பவும் அது எப்போது ஒரு சாத்தானைப் போல என்னை வந்து தொற்றிக் கொண்டது என்று ஆழமாக யோசித்துப் பார்த்தேன். தெளிவாக கண்ணுக்குத் தெரிகிறது இப்போது. இருக்கும் இடம் விட்டு இல்லாத இடம் தேடித் தவித்து விட்டேனே என் ஞானத் தங்கமே என உரக்கப் பாடத் தோன்றுகிறது.
மிகச் சரியாகச் சொல்வதென்றால் நான் வேலைக்குச் சேர்ந்த பிறகே இந்தப் பதற்றம் வந்து தொற்றிக் கொண்டது. இது எல்லோருக்குமே நடக்கும் என்பதால் இதைப் பற்றி அலட்டிக் கொள்ள வேண்டியதில்லை. இதில் உள்ள அடுத்த அடுக்கிற்குச் சென்று உரையாடலாம். இந்தப் பதற்றத்தின் அடியாழம் என்பது குற்றவுணர்வு. எதுவுமே செய்யவில்லையே என்கிற பதற்றம். கொஞ்ச நேரம் சும்மா இருந்தால்கூட பாலிடாயில் பாட்டிலை எடுத்துக் கவிழ்க்கிற அளவிற்குப் போகிற குற்றவுணர்வு. யார் உருவாக்கியது இதை?
மலை மனிதர்கள் பலரைப் பார்த்திருக்கிறேன். பச்சைச் சரிவு வயலின் காலடியில் உள்ள தேநீர்க் கடையில் சும்மா உட்கார்ந்திருப்பார்கள். என்னண்ணே என்றால், “சிக்கன அவ சமைக்கிறதுக்கு எப்டீயும் விடிஞ்சிடும். அதுவரைக்கும் பொழுதக் கழிக்க உக்காந்திருக்கேன் தம்பி” என்பார். கொஞ்சம் விவரமானவராக இருந்தால், அவ்வழியே வழி கேட்க வந்து நிற்கும் வண்டிக்காரன் எவனோ ஒருத்தனிடம் இருந்து கட்டிங்கை உஷார் பண்ணி விட்டு அமர்ந்திருப்பார். அது மாதிரியான மனிதர்களைக் கூர்ந்து பார்த்திருக்கிறேன்.
அக்கண்கள் சாந்தமான யானையின் கண்களைப் போலச் சுடர்விடும்.
அவர்கள் நகத்தை வெறி கொண்டு கடிப்பதில்லை. ஒரு காலை மட்டும் வெட்டுப்பட்டதைப் போல துண்டிக்கிற வெறியில் ஆட்டுவதில்லை. கழுத்தை எழுபது டிகிரியில் மேல்நோக்கிச் சாய்த்து மோன நிலையில்அமர்ந்திருக்கவில்லை.
அவர்கள் நகத்தை வெறி கொண்டு கடிப்பதில்லை. ஒரு காலை மட்டும் வெட்டுப்பட்டதைப் போல துண்டிக்கிற வெறியில் ஆட்டுவதில்லை. கழுத்தை எழுபது டிகிரியில் மேல்நோக்கிச் சாய்த்து மோன நிலையில்அமர்ந்திருக்கவில்லை.
எட்டுக்கு எட்டடி இடத்திற்குள் மாட்டிக் கொண்ட முயல் குட்டியைப் போலப் பரபரப்பாக அங்குமிங்கும் ஓடிக் கொண்டிருப்பதில்லை. ஆகாயத்தைப் பார்த்தபடி ஆனந்தமாய் அமர்ந்திருக்கிறார்கள் அவர்கள். அவர்களுக்கும் எல்லோரையும் போலவே சிக்கல்கள் இருக்கின்றன. அந்தச் சிக்கனை சாயாந்திரம் தந்து விடுகிறேன் என்று கடன் சொல்லிக்கூட வாங்கி வந்திருக்கலாம்.
அவர்களைப் படைப்பூக்கம் இல்லாதவர்கள் என பொறுப்பற்ற முறையில் ஒரு கையால் ஒதுக்கித் தள்ளி விட முடியாது. யாரைக் காட்டிலும் கடுமையாக உழைக்கிறவர்கள் அவர்கள் என்பதைச் சொல்லியும் தெரிய வேண்டுமா? பிறகென்ன சிக்கல் இதில்? சும்மா இருப்பதன் வழியாக நுகரும் ஆனந்தத்தைத் தடை செய்யும் குற்றவுணர்வு இல்லை அதில் என்பதைக் கூர்ந்து அவதானித்தேன்.
அதற்காக நிதமும் அப்படி வந்து தேநீர்க் கடையில் அமருபவரா என்ன? குடும்பம் குண்டானைத் தூக்கி விடும்.
இங்கே வந்த புதிதில் அந்தச் சிக்கல் என்னையும் தாக்கியது. அமைதியாக அமர்ந்திருக்கவே முடியவில்லை. எல்லோர் மீதும் எரிச்சல் மண்டும். சிவனேன் என பொன்னி அரிசி சாதத்தைக் கொத்த வரும் மைனாக்களைக் கல்லெறிந்து விரட்டுவேன்.
இங்கே வந்த புதிதில் அந்தச் சிக்கல் என்னையும் தாக்கியது. அமைதியாக அமர்ந்திருக்கவே முடியவில்லை. எல்லோர் மீதும் எரிச்சல் மண்டும். சிவனேன் என பொன்னி அரிசி சாதத்தைக் கொத்த வரும் மைனாக்களைக் கல்லெறிந்து விரட்டுவேன்.
செத்த மூதி என திட்டிக் கொண்டு அவை பறந்து போகும். பறவைகளின் மொழியில் கீ கீ என்றால் அந்த அர்த்தம் இல்லவே இல்லை என அடித்துச் சொல்ல முடியுமா? மொழிகளெல்லாம் ஒரு வட்டத்திற்குள்ளேயே சுற்றி வருகிறவைதானே? மெல்ல அந்த மைனாக்களிடம் திட்டு வாங்காத நாளொன்றும் வந்தது. இப்போதெல்லாம் அவை என் அருகிலேயே இரை எடுக்கின்றன.
இரை எடுக்கிற சக உயிர்களைத் துன்புறுத்தக்கூடாது என்கிற புரிதல் வந்திருக்கிறது. பதற்றம் இல்லாமல் அருகருகே இருக்கும் உயிரினங்களை உற்று நோக்க முடிகிறது. எது செய்யாதது குறித்தும் குற்றவுணர்வில்லை. இன்றில்லா விட்டால் நாளை செய்யலாம் என்கிற புரிதல் வந்து விட்டது. மழை பெய்கிற நேரத்தில்தான் பெய்யும் என்கிற உண்மை முகத்தில் அறைந்து காட்டி விட்டது. எதையும் இங்கே என்னால் திருப்பிப் போட முடியாது.
போன வாரம் வரை மேற்கிலிருந்து அடித்தது காற்று. இப்போது கிழக்கின் முறை. வட கிழக்குக் காற்றை வட்டிலை வைத்துத் தடுக்க முடியாது. அது வருகிற நேரத்தில் வந்தே தீரும். ஜாதகங்களைப் புரிந்து கொள்வது மாதிரி இல்லை இது. இயற்கையோடு இணைந்த புரிதல் என்கிற மாதிரி எடுத்துக் கொள்ளுங்கள்.
உண்மையைச் சொல்கிறேன்.
உண்மையைச் சொல்கிறேன்.
அலுவலகத்தில் உச்சகட்ட வெறியில் சுற்றிக் கொண்டிருந்த போது பேப்பரை திறந்தால் இடது பக்க மூலைக்கு கண் போய், மிதுன ராசிக்கு என்ன பலன் என மேயும். ஊக்கம் என்று போட்டிருந்தால், அன்றைக்கு அலுவலகத்திற்குப் போன கையோடு என் உயரதிகாரியாய் இருந்த நண்பனொருத்தனிடம் வம்பை போட்டு விடுவேன்.
அவன் என்னைக் குத்த காற்றில் கத்தியை மறைத்து வைத்திருந்தான். நான் அரிவாளை எப்போதும் நாக்கில் வைத்திருந்தேன். இருவருக்கும் இடையில் யார் பெரியவர் என்கிற போட்டி. இப்போது அதை யோசித்துப் பார்தால் அபத்தமாக இருக்கிறது. அந்த நண்பனும் நானும் இப்போது பணிபுரிந்த அமைப்பில் இருந்து வெளியே வந்து விட்டோம்.
என் கடைக்கு வெளியில் காரை நிறுத்தி விட்டு ஹார்ன் அடித்து நலம் விசாரித்து விட்டுப் போகிறான். நான்கூட அவனது திருமண நாளன்று அழைத்து வாழ்த்துக்களைக் கொட்டினேன். அந்த அன்பை அலுவலகத்தில் இருக்கும் போது இப்படி ஏன் கொட்டவில்லை? யோசித்துப் பார்த்தால் இந்தப் பிளவை உருவாக்கியது அலுவலகமே. பிளவுகள் வழியாகவே வேலைத் திறனை அவை திரட்ட முயல்கின்றன. ஒருகாலத்தில் இவை பலனளிக்கப்பட்ட அலுவலக உத்தியே. கே.ஆர்.ஏ என ஒன்று வைத்திருக்கிறார்கள். பட்ஜெட்டை குறைத்தால்தான் ஒருத்தனுக்கு ஊக்கத் தொகை. பிரியாணிக்குப் பதில் போடப்படும் தயிர்சாதத்தின் மீது கொலைவெறி வராமலா போகும்?
அதைத் தாங்கும் திறன் இந்தக் காலகட்டத்திற்கு முந்தைய தலைமுறையிடம் இருக்கவே செய்தது.
தவிரவும் அப்போதெல்லாம் மறைந்து நின்று புறணி பேச மட்டுமே செய்வார்கள். குத்தி ரத்தம் பார்க்கிற வெறியெல்லாம் கொஞ்சம் மட்டுப்பட்டே இருந்தது. ஆனால் இப்போது நவீன ரக ஆயுதங்கள் ராணுவத்தில் மட்டும் கொள்முதல் செய்யப்படுவதில்லை. அவை நவ நாகரீக அலுவலகங்களிலும் கொள்முதல் செய்யப்படுகின்றன.
தவிரவும் அப்போதெல்லாம் மறைந்து நின்று புறணி பேச மட்டுமே செய்வார்கள். குத்தி ரத்தம் பார்க்கிற வெறியெல்லாம் கொஞ்சம் மட்டுப்பட்டே இருந்தது. ஆனால் இப்போது நவீன ரக ஆயுதங்கள் ராணுவத்தில் மட்டும் கொள்முதல் செய்யப்படுவதில்லை. அவை நவ நாகரீக அலுவலகங்களிலும் கொள்முதல் செய்யப்படுகின்றன.
நாட்டுக் கோழி ரசம் குடித்த தலைமுறை தெம்பாய் இவற்றை எதிர்கொண்டார்கள். பிராய்லர் கோழியின் தலைமுறை நாட்டுக் கோழிகளைப் போல வெயில் தாங்காது. பொத் பொத்தென்று விழுந்து செத்துப் போகும் அவை.
ஒருத்தனை ஒருத்தன் உரசி வேலைத் திறன், படைப்பூக்கம் என்கிற பொறிகளை உருவாக்கத்தான் ஒவ்வொரு அலுவலகமும் வெளிப்படையாகவும் மறைமுகமாகவும் போராடுகிறது.
ஒருத்தனை ஒருத்தன் உரசி வேலைத் திறன், படைப்பூக்கம் என்கிற பொறிகளை உருவாக்கத்தான் ஒவ்வொரு அலுவலகமும் வெளிப்படையாகவும் மறைமுகமாகவும் போராடுகிறது.
ஒவ்வொருத்தருக்குள்ளும் தனித்த உறவுகள் உருவாகி விட முடியாதளவிற்கு ஒரு எல்லைக் கோடு வலிந்து போடப் படுகிறது. அதை மீறி மச்சான் என முத்தம் கொடுத்துக் கொள்பவர்களும் எல்லா காலங்களிலும் இருக்கத்தான் செய்வார்கள். எதைச் செய்தாலும் தவறில்லை. எல்லைக்கோடு ஒன்று மட்டுமே லட்சியம் என்கிற தலைமுறையை நோக்கித்தான் இதைச் சுட்ட வேண்டியிருக்கிறது.
அலுவலகம் அவர்களை மிரட்டத்தான் சொன்னது. பாம்பொன்று இருந்ததாம். அது எல்லோரையும் சகட்டு மேனிக்குக் கொத்தி வைத்துக் கொண்டிருந்தது. ஊரே திரண்டு அடித்துக் காயப்படுத்தி விட்டார்கள் அதை. அந்த வழியே போன முதியவர் ஒருத்தர், என்ன சமாச்சாரம் என்று கேட்டிருக்கிறார். “இனிமேல் புதிதாக யாரையும் நீ கொத்தாம இருந்தாலே போதும்” என அறிவுரை சொல்லி விட்டுப் போய் விட்டார். திரும்பவும் அவ்வழியே திரும்பி வந்த போது அதைவிட மோசமாய்க் காயம் பட்டுக் கிடந்திருக்கிறது. “அய்யா நீங்க சொன்ன மாதிரி தலையைக்கூடத் தூக்காம படுத்துக் கிடந்த போதும் பாவிக கல்ல விட்டு எறிஞ்சுட்டாங்க” என்றதாம். யாரையும் கொத்தி விடாதே என்றுதான் சொன்னேன். சீறி மிரட்டாதே என்று சொல்லவில்லை என்று சொல்லி விட்டுக் கடந்து விட்டார் அவர்.
இங்கே சீறுவது என்பதைத் தாண்டிக் கொத்தல்கள் என்கிற எல்லையில் நின்று நடமாடிக் கொண்டிருப்பதுதான் பிரச்சினை. ஒவ்வொரு அலுவலகத்திலும் பக்கத்தில் இருப்பவனைக் கருவறுத்து விட வேண்டும் என்ற நோக்கத்தை மட்டுமே சுமந்து கொண்டு நிதமும் அலுவலக படியேறுபவர்கள் நிறையப் பேர் இருக்கிறார்கள். சும்மா இருந்தாலும் கொத்திக் காட்டுவதில் அவர்களுக்கு ஒரு சுகம். இதை அதுவும் அதை இதுவும் கொத்துகிற போராட்டங்களே பல அலுவலகங்களில் நடக்கின்றன. அது சார்ந்த பதற்ற நோய்கள் பல இப்போது மருத்துவ மனைக் கதவுகளைத் தட்டவும் ஆரம்பித்து விட்டன.
காரணேமே இல்லாமல் ஒருத்தனைத் தூக்கி வெளியே போடுவது. அல்லது ஒருத்தனைத் தூக்கி உள்ளே போடுவது என்கிற விளையாட்டை சர்வ சுதந்திரமாய் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். என்னுடைய பழைய அலுவலகம் ஒன்றில் அக்டோபர் மாதம் வந்தாலே கலங்கிப் போய்க் கிடப்பார்கள். மும்பையில் இருந்து கிளம்பி வரும் அவர், வீடியோ கேம்ஸில் வெட்டுவதைப் போலச் சில தலைகளை வெட்டி விட்டுப் போவார்.
அதிலும் இப்போதெல்லாம் புதிய நவீன முறை அலுவலகங்களில் மூன்று ஆண்டுகளுக்கு மேல் யாரையும் ஒரே இடத்தில் வைக்கக்கூடாது என கொள்கை நெறிமுறையே வைத்திருக்கிறார். நீங்கள் ஐந்தாண்டுகளுக்கு ஒருதடவை ஒருத்தரைத் துரத்தினால் அது திரும்பவும் உங்களை வந்து சேரத்தானே செய்யும்?
இந்த ஓட்டத்தில் யார் சிறந்தவன் என்பதே தலைவிதியைத் தீர்மானிக்கிறது. தினமும் எதையாவது யாருக்காவது நிரூபித்தபடியே இருக்க வேண்டும். காரணமே இல்லாமல் இருந்தாலும் அலுவலக உயரதிகாரியின் கேபினிற்குள் தலையை விட்டு, “சார் இன்னைக்கு நான் பத்து புல்லப்ஸ் எடுத்தேன்” எனச் சொல்லி விட்டுப் போக வேண்டியிருக்கிறது. பலசாலியால் ஒரு பெரிய அலுவலகத்தைத் தூக்கிச் சுமக்க முடியும் இல்லையா? இந்த நிரூபித்தலுக்கான போராட்டங்களே மிகையான குற்றவுணர்வை உருவாக்குகின்றன. அதன் வழியாகவே பெரும் பதற்றமும் உருவாகிறது.
தேனிலவுக்குப் போன இடத்தில்கூட அக்கறையாய் அமர்ந்து மெயில் போட வேண்டியிருக்கிறது. தூரத்தில் வெளிச்சம் விழுகிற சன்னலுக்கு அருகே திரைச் சீலையை ஒருகையால் இழுத்து மறுகையில் உள்ள நகத்தைக் கடித்துக் கொண்டிருப்பார் அந்தப் பெண். ஆணென்றால், கெட்டிலில் தண்ணீரைக் கொதிக்க வைக்கப் போராடிக் கொண்டிருப்பார். அவ்வளவுதான் வித்தியாசம். என்னுடைய அலுவலகத்தில் எனக்கு லேப்டாப் கொடுத்திருக்கிறார்கள் என புளகாங்கிதம் அடைந்தவர்தானே நீங்கள்? இப்போது அதே லேப்டாப் குறித்து என்ன கருத்து வைத்திருக்கிறீர்கள்?
அலுவலகம் விட்டு வரும்போதே புதிய சங்கிலி ஒன்று கட்டப்பட்டு விட்டது என்பதை ஆரம்ப காலத்தில் உணரத் தவறியிருக்கிறோம்தானே?
அதைப் போலத்தான் பல சங்கிலிகள் கண்ணுக்குத் தெரியாமல் பின்னப்பட்டிருக்கின்றன. அவர்கள் ஒரு சுற்றுச் சுற்றிப் போட்டுத்தான் கட்டிப் போட்டார்கள். யாருடைய கருவை அறுக்கும் எண்ணமும் அவர்களுக்கில்லை. பேலன்ஸ் ஷீட் தள்ளாடாமல் இருக்கிறதா என்கிற கவலை மட்டுமே அவர்களுக்கு.
அதைப் போலத்தான் பல சங்கிலிகள் கண்ணுக்குத் தெரியாமல் பின்னப்பட்டிருக்கின்றன. அவர்கள் ஒரு சுற்றுச் சுற்றிப் போட்டுத்தான் கட்டிப் போட்டார்கள். யாருடைய கருவை அறுக்கும் எண்ணமும் அவர்களுக்கில்லை. பேலன்ஸ் ஷீட் தள்ளாடாமல் இருக்கிறதா என்கிற கவலை மட்டுமே அவர்களுக்கு.
அதன் நிமித்தம் சில எல்லைக் கோடுகளை அவர்கள் வரைகிறார்கள். ஆனால் வெறிகொண்டு தாங்கிப் பிடிப்பது என்னவோ நாம்தான். கொத்தாமல் இருந்தால் கேவலம் என்கிற உச்ச நிலைக்கு நகர்ந்திருக்கிறது சூழல்.
செயலின்மை என்பதே ஆபத்தானது என்கிற புள்ளி அது. ஆனால் குற்றவுணர்வு கொண்ட, பதற்றங்கள் நிறைந்த மனத்தில் படைப்பூக்கத்திற்கு வாய்ப்பே இல்லை என்பதை அலுவலகங்கள் உணரத் தவறுகின்றன.
செயலின்மை என்பதே ஆபத்தானது என்கிற புள்ளி அது. ஆனால் குற்றவுணர்வு கொண்ட, பதற்றங்கள் நிறைந்த மனத்தில் படைப்பூக்கத்திற்கு வாய்ப்பே இல்லை என்பதை அலுவலகங்கள் உணரத் தவறுகின்றன.
நான் பதற்றங்களுக்கு ஆட்பட்டிருந்த போது இருந்ததைவிட இப்போது மிகச் சிறப்பாய் செயல்பட முடியுமென்று நம்புகிறேன். இப்போது யோசித்தால் அந்த அலுவலக நண்பன் சொன்ன யோசனைகளைக் கேட்டிருக்கலாம் என்று தோன்றுகிறது. பொறுமையாக இருந்திருந்தால் அவனுக்கு அடுத்து அந்தப் பதவி எனக்குக் கிடைத்திருக்கக்கூடச் செய்யலாம். மைனா இரையெடுக்கிற போது கல்லை வீசக் கூடாது என்கிற புரிதல் வந்து விட்டது.
செயலின்மையை எதிர்த்துப் போராடுகிற வேளையில் என் படைப்பூக்கம் நிறையவே மட்டுப்பட்டிருந்ததாக இப்போது உணர்கிறேன். இப்போது அந்த வாய்ப்பு திரும்பவும் அமைந்தால் பெரும் படைப்பூக்கத்துடன் செயல்படுவேன் என உறுதியாகத் தெரிகிறது. என்னுடைய ஆசான் ஒருத்தர், “ஃபன் இல்லாத இடத்தில கிரியேட்டிவிட்டி சுத்தமா இருக்காது” என்பார் அடிக்கடி. அதைத்தான் நவீன அலுவலகங்களும் ஒரு சடங்கைப் போல வருடம் தோறும் நிகழ்த்த நினைக்கின்றன. சுற்றுலா கூட்டிப் போனாலும், தனித் தனியாகக் குழுவாக பிரிந்து கிடப்பவர்களை என்ன செய்ய?
அங்கே போயும் சதி ஆலோசனையில் ஈடுபடுவார்கள்.நானே அதைச் செய்திருக்கிறேன் என்ற முறையில் சொல்கிறேன். ஒருத்தனுக்கு நிறைய ஊற்றிக் கொடுத்து அலுவலக உயரதிகாரிகள் முன்பு அசிங்கப்பட வைக்க வேண்டுமென சதி ஆலோசனை செய்த குழுவில் நானும் அங்கத்தினன். பயல் பதினைந்து லார்ஜ் அடித்தும் கம்பாய் அலுவலக அதிகாரியின் பக்கத்தில் பவ்யமாக பார்ட்டி முடிகிற வரை நின்று கொண்டிருந்தான். அவர் கோப்பை காலியாக காலியாக ஊற்றிக் கொடுத்துக் கொண்டிருந்தான்.
அதற்கடுத்த வாரம் நடந்த ஒரு சம்பவம் ஒன்றுதான் முத்தாய்ப்பு. அந்த உயரதிகாரியை அதிகாரம் இல்லாத அறையில் தூக்கிப் போட்டார்கள். அவரைப் போய் நான் பார்த்த போது, “போன வாரம் வரைக்கும் இந்தப் பயல்க என்னைத் தெய்வம்ன்னாங்க. இன்னைக்கு பாரு ஒரு பய வந்து எட்டிப் பாக்கலை. அதில அவன்லாம் என் போன பிறந்தநாளுக்கு நைட் பன்னெண்டு மணிக்கு ஒரு பூசாரிய நேர்லயே கூப்டு வந்து உங்களுக்காக அர்ச்சனை பண்ணேன் சார்னான்” என்றார். பதினைந்து லார்ஜ் பார்ட்டிதான் அது.
இப்படித்தான் ஐ.டி கார்ட் பார்த்துப் பாசம் வைக்கும் தலைமுறை உருவாகி விட்டது. தமிழகமெங்கும் நிறைந்து கிடக்கிற அத்தனை கம்பெனிகளை நோக்கியும் சொல்லப்படுவதுதான் இது. இப்படியான மிகையான சூழல் நல்லதிற்கில்லை. பலூனை அது அனுமதிக்கப்பட்ட அளவை விட சற்று அதிகமாக ஊதினாலும் வெடிக்கவே செய்யும். இந்தப் போர்ச் சூழலினால் உற்பத்தி என்பது பாதிக்கவே செய்யும். பதற்றமடையும் மனங்களால் ஒரு கூட்டு மனத்தின் சொற்களை அது தரும் அர்த்தத்தில் உள்வாங்கிக் கொள்ள இயலாது. ஒரு அலுவலகத்தின் கூட்டு மனம் என்பதே விரைவில் கனவாய்க்கூடப் போய்விடலாம். படைப்பூக்கம் கொண்ட மனங்களால் மட்டுமே கூட்டு வெற்றியை நிகழ்த்த முடியும்.
இன்னொரு கோணத்தில் இவை வேறு மாதிரியான விளைவுகளை உண்டு பண்ண ஆரம்பித்திருக்கின்றன. மும்பையில் இருந்து வந்திருந்த நண்பரொருத்தர் ஒரு விஷயம் சொன்னார். வட இந்தியாவில் பெரும்பாலான உயரதிகாரிகளுக்கு நாற்பத்தைந்து வயதில் மாரடைப்பு வர ஆரம்பித்திருக்கிறது என்று சொன்னார். முப்பது வயதிலேயே ரத்தக் கொதிப்பிற்கு மாத்திரை எடுத்துக் கொள்ளும் கூட்டமும் பெருகி விட்டது. பதற்றங்களின் நிமித்தமாக குடும்ப உறவுகள் சிக்கலுக்கு உள்ளாக ஆரம்பித்திருக்கின்றன. நீதிமன்ற படியேறுகிறவர்களின் எண்ணிக்கை அதிகரித்தபடியே இருக்கிறது. தெளிவாய் அமர்ந்து திட்டமிட்டு இதற்கு அணைப் போட வேண்டிய நேரம்கூடி வந்திருக்கிறது.
குடி மட்டும் இளையவர்களைக் கொல்லவில்லை. குற்றவுணர்வு கொப்பளிக்கிற பதற்றங்கள்தான் அதற்குப் பின்னணியில் வரிசை கட்டுகின்றன. ஊக்கத்தை இழந்த மனிதர்களையா அலுவலகம் உற்பத்தி செய்ய வேண்டும்? இரையெடுக்கிற விலங்கை கல்லெடுத்து எறியச் சொல்வதா ராஜ தந்திரம்? பதற்றங்கள் இல்லாமல் இது குறித்துச் சிந்தித்துப் பாருங்கள். பச்சை போர்த்தியிருக்கிற மலையின் காலடியில் அமர்ந்திருக்கிற தேநீர்க் கடைகூட அப்படிச் சிந்திப்பதற்குத் தோதான இடமாகவும் இருக்கக்கூடும். மைனாக்கள் உங்கள் குறித்த அச்சம் ஏதும் இல்லாமல் உங்களுக்கு அருகிலேயே இரை எடுக்கிற காட்சியைக்கூட காண முடியும்.
கருத்துகள்
கருத்துரையிடுக