திராவிட அரசியல் சித்தாந்தங்களால் கவரப்பட வில்லையென்றால் கம்யூனிஸ்ட் ஆகியிருப்பேன் என்று கலைஞர் கருணாநிதி ஒரு பேட்டியில் குறிப்பிட்டு சொல்லியிருப்பதை வாசித்திருக்கிறேன்.
By Leena Manimekalai at Monday, August, 20, 2018 4:34 PM

-லீனா மணிமேகலை
முதன்முதலில் கலைஞர் மு.கருணாநிதியின் பெயர் என் மனதில் பதிந்தது எனக்குப் பசுமையாக நினைவிருக்கிறது. மறைந்த எனது தந்தை தமிழ்ப் பேராசிரியர் இரகுபதி, சிறுமியான என் மழலைத் தமிழைத் திருத்தி பிழையில்லாமல் தமிழ்த் தாய் வாழ்த்தைப் பாட கற்றுக் கொடுத்த போது, இரண்டு கேள்விகள் கேட்பார். அந்தக் கேள்விகளுக்கு பதில்களையும் அவரே சொல்லி, என்னை மீண்டும் மீண்டும் ஒப்புவிக்க சொல்வார். ‘தமிழ்த் தாய் வாழ்த்தை எழுதியவர் யார்? மனோன்மணியம் சுந்தரம் பிள்ளை’. ‘அதை தமிழ் நாட்டின் தேசிய கீதமாக மாற்றியவர் யார்? கலைஞர் மு. கருணாநிதி’. நானும் கேள்வி பதிலை அப்படியே ஒப்புவிப்பேன். தொலைக்காட்சியில் கரகர குரலும் கறுப்புக் கண்ணாடியுமாய் அவர் தோன்றி பேசும்போதெல்லாம் அப்பா அவரைக் காட்டி "யார் இவரு?" என்று கேடடால் "நீராடும் கடலுடுத்த" பாடலை ராகமெடுத்து நான் பாடிய ஞாபகங்கள் நிழலாடுகின்றன.
திராவிட அரசியல் சித்தாந்தங்களால் கவரப்பட வில்லையென்றால் கம்யூனிஸ்ட் ஆகியிருப்பேன் என்று கலைஞர் கருணாநிதி ஒரு பேட்டியில் குறிப்பிட்டு சொல்லியிருப்பதை வாசித்திருக்கிறேன். இடதுசாரி குடும்பத்தில் பிறந்திருந்தாலும் என்னைப் பெரிதும் ஈர்த்த - பாதித்த சிந்தனையாளராக தந்தை பெரியார் தான் இருந்தார் . இளவயதில், கம்யூனிஸ்ட் புத்தகங்களை விட திராவிட இயக்கத்தின் புத்தகங்கள் தான் எனக்கு இலகுவாகவும் புரியும்படியாகவும் இருந்தன. ஒரு சூத்திர கருப்பு தமிழ்ப் பெண்ணாக இந்த உலகத்தை தன்னம்பிக்கையோடு எதிர்கொள்ளும் தைரியத்தை திராவிட இயக்கப் போராட்ட வரலாற்றை வாசித்து தான் பெற்றுக்கொண்டேன். இடதுசாரி திராவிடம் என்ற எனக்கான ஒரு வெளிச்சத்தை தேடிக் கொண்டேன். தந்தை பெரியார் தன் தம்பிகளாக அரவணைத்துக் கொண்ட அண்ணாவும் கலைஞரும் அந்த வெளிச்சத்தை விசாலப் படுத்த உதவினார்களா என்று யோசித்துப் பார்க்கிறேன். திராவிட இயக்கம் விதைத்ததை யெல்லாம் அரசியல் விளைச்சல் நிலமாக மாற்றியதில் இருவரும் ஓரளவு வெற்றியடைந்தார்கள் என்பது தான் வரலாறு.
சூத்திரர், மிகச் சாதாரண குடும்பத்தில் பிறந்தவர், நாத்திகர், பகுத்தறிவாளர், "அம்பாள் எந்தக் காலத்திலடா பேசினாள்" என்று சினிமாவுக்கு கதை வசனம் எழுதுபவர், வீதிதோறும் அரசியல் நாடகம் போடுபவர், பத்திரிகையாளர் என்ற அடையாளங்களோடு "பார்ப்பனிய ஹிந்தியாவில்" அறுபதாண்டுகாலம் சட்டமன்ற உறுப்பினராகவும், ஐம்பதாண்டு காலம் கட்சித் தலைவராகவும், ஐந்து முறை தமிழ்நாட்டு முதல்வராகவும் அரசியல் செய்த சாணக்கியம் என்பது அசுர சாதனை. நான் பேசும்- எழுதும்- சிந்திக்கும் தமிழிலும், கற்ற கல்வியிலும், சமூகத்தில் பெண்ணாக எனக்கு கிடைத்திருக்கும் இடத்திலும், நம்பும் கடவுள் மறுப்பு கொள்கைகளிலும், பங்கெடுக்கும் சமூக நீதி போராட்டங்களிலும், எடுக்கும் சினிமாவிலும் கலைஞர் கருணாநிதியின் வியர்வை வாசம் அடிப்பது அந்த சாதனையின் விளைவு தான். அதனால் தான் அவருடைய சமரசங்களும் என்னை மிகவும் காயப்படுத்தியிருக்கின்றன. பா.ஜ.க. தலைமையிலான ஆட்சியில் தி.மு.க. பங்கேற்றதை, வெறும் அரசதிகாரத்தில் நிறுவனமயமாதலால் நடந்த வீழ்ச்சியென என்னால் கடந்துப் போக முடிந்ததில்லை. தவிர, கட்சியிலும் ஆட்சியிலும் தன் குடும்பத்தினருக்கு அவர் அளித்த முக்கியத்துவமும், தொடரும் ஊழல் குற்றச்சாட்டுகளும் ஆகப்பெரும் சனநாயகவாதியாக கொண்டாடப்படும் அரசியல் தலைவர் அனுமதித்திருக்க கூடாதவை. இலங்கையில் இனஅழிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியிருந்த சமயத்தில் தமிழக முதல்வராக இருந்தபோதும், தன் நாற்காலியைப் பிடித்துக் கொண்டு நின்ற பிழைப்புவாத அரசியல், அவர் என்னுள் உரம்போட்டு வளர்த்த இன உணர்வையும், மொழி உணர்வையும் வஞ்சித்தது. இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்களுள் ஒருவராக, சாகும்வரை விருதுநகர் மாவட்ட செயலாளராக இருந்து காலம் தவறிய என் தாத்தா வெங்கடசாமி தோழரிடம் 'எமர்ஜென்சிக்கு ஆதரவாக உங்கள் கட்சி இருந்ததற்காக எங்கள் தலைமுறையிடம் நீங்கள் மன்னிப்பு கேட்க வேண்டும்' என்று தகராறு செய்வேன். அரசியல் கட்டமைப்புக்குள் இலட்சியங்களுக்கு நடக்கும் சித்ரவதைகளை சொல்லி ஆதங்கப்படுவார். பதின்ம வயதில் சிவப்புத் துண்டு தாத்தாவை புரிந்துகொள்ள சிரமப் பட்டேன். "உயிரினும் மேலான உடன்பிறப்புகளே" என்று மஞ்சள் துண்டு கலைஞர் பேசும்போது, பாசமும் எரிச்சலுமாக மனம் பொங்குவதையும் புண்படுவதையும் புரிந்துக் கொள்வதற்கு முப்பதுகளின் இறுதியிலும் சிரமப்படுகிறேன்.
ஆனாலும் மீண்டும் மீண்டும், தமிழ்த்தாய் வாழ்த்தைக் கேட்கும்போதும், பார்ப்பனிய இந்து இந்தியாவுக்கு எதிராக குமரியில் கம்பீரமாக நிமிர்ந்து நிற்கும் திருவள்ளுவரைக் காணும்போதும், தமிழகம் முழுவதும் பரவியிருக்கும் பெரியார் சமத்துவபுரங்களைக் கடந்து செல்லும்போதும், அண்ணா நூலகத்தில் அமர்ந்திருக்கும்போதும் அவரிலிருந்து துண்டித்துக் கொள்வது முடியாது என்பதை உணர்கிறேன். அரசாங்க வேலைகளில் இருப்பவர்கள் மற்றும் சிறுபான்மை மக்களின் தலைவராக கலைஞர் தொடர்ந்து முன்வைக்கப்படுகிறார். ஆனால் விளிம்புநிலை மக்களோடு தொடர்ந்து வேலை செய்பவளாக, திரைப்படங்கள் இயக்குபவளாக எனக்கு கிடைத்த அனுபவத்தில், அவரை உழைக்கும் பெண்கள், திருநங்கைகள், அருந்ததியர்கள், குறவர்கள், புதிரை வண்ணார்கள், ஊனமுற்றவர்கள், குடிசை வாழ்மக்கள் போன்ற புறக்கணிக்கப்படட மக்கள் கூட்டங்களின் தோழராக, அவர்களின் சமூக அங்கீகாரத்திற்கான போராட்ட்ங்களுக்கு நெருக்கமானவராகப் பார்க்கிறேன். விவசாயத்திற்கு இலவச மின்சாரத்தை அமுல்படுத்தியதற்காக விவசாயியான என் தாயார் ரமாவும், "திருநங்கை" என்ற கம்பீர அடையாளத்தை தந்ததற்காக மாநிலத்தின் முதல் திருநங்கை பொறியியல் பட்டதாரி தோழி கிரேஸ் பானுவும், அருந்ததியர்களுக்கான உள் ஒதுக்கீட்டை சாத்தியப்படுத்தியதற்காக அருமை நண்பன் கவிஞர் மதிவண்ணனும், "ஆதி திராவிடர் புதிரை வண்ணார் நல வாரியம் அமைத்ததற்காக"- பார்த்தாலே தீட்டு என்ற ஒதுக்கிவைக்கப்பட்டிருக்கும் சமூகத்தில் பிறந்து முதல் தலைமுறையாக படித்து தாசில்தாராக ஒய்வு பெற்றிருக்கும் என் குடும்ப நண்பர் மூர்த்தி அய்யாவும், குடிசை மாற்று வாரியம் அமைத்ததற்காக நண்பன் பத்திரிகையாளர் தமிழ்ப்பிரபாவும், கலைஞருக்கு தெரிவிக்கும் நன்றிகள், உதிரி மக்களின் நலனுக்காக அவர் உண்மையான பரிவுடன் செய்த பணிக்கு கிடைத்த சான்றுகள்.
“கருணாநிதி நமக்கு கிடைத்தற்கரிய வாய்ப்பு” என்று வாழ்த்தினாராம் தந்தை பெரியார். திராவிட அரசியல் அரசியல் வாய்த்திருக்காவிட்டால் இந்தியா என்ற காலனிய உருவாக்கத்தில் தமிழர்கள் இரண்டாம் தர குடிமகன்களாக நசுக்கப்பட்டிருப்போம். விடுதலைக்கு முன் பிறந்து, உலகமயமான இந்தியா வரை ஏறக்குறைய எண்பது ஆண்டுகள் அசராமல் அரசியல் செய்த கலைஞர் தன்னையே பரிசோதனைக் களனாக மாற்றிக்கொண்டதால் தான் தொடர்ந்து இயங்க முடிந்திருக்கிறது. முரண்களின் தொகுப்பாக அவர் நமக்கு தெரிவதையும் அந்தப் புள்ளியிலிருந்தே அவதானிக்க முயற்சிக்கிறேன். அவசர நிலையை எதிர்த்த கருணாநிதி, "மாநிலங்கள் என்ன உள்நாட்டு காலனியா" என்று கேள்வி எழுப்பிய கருணாநிதி, ஈழப் பெண்களை சூறையாடிய இந்திய அமைதிப்படை எனும் ஆக்கிரமிப்புப் படையை வரவேற்க மறுத்த கருணாநிதி, "ராமன் என்ன எஞ்சினீயரா" என்று சேது சமுத்திர திட்டம் குறித்த விவாதத்தில் சடடமன்றத்திலேயே கிண்டலடித்த கருணாநிதி என அவரைத் தமிழினத் தலைவராக நினைத்துப் பெருமை கொள்ள, அழியாத வரலாற்று தடயங்களை விட்டு சென்றிருப்பதோடு ஒரு மிகப்பெரிய வெற்றிடத்தையும் ஏற்படுத்தியிருக்கிறார். "திராவிடத்தால் வீழ்ந்தோம்" என்று பேசும் தமிழ் பாசிஸ்டுகளும், "திராவிட இயக்கங்களின் ஆட்சி தமிழகத்தை குட்டிச்சுவராக்கி விட்டது" என்று பேசும் பார்ப்பன தேசியவாதிகளும் புற்றீசல் போல பெருகியிருக்கும் இந்த கால கட்டம் அவரைப் போன்ற அசைக்க முடியாத தலைவரைக் கேட்டு நிற்கிறது. இந்துத்துவப் பாசிசமும், மாநிலங்களை அடிமைப்படுத்தும் மத்திய எதேச்சதிகாரமும், இந்தி திணிப்பும், மத துவேஷங்களும் தலையெடுத்திருக்கும் சூழல் அவர் விட்டு சென்றிருக்கும் போராட்டப் பாதையை விடாமல் தொடரப் பணிக்கிறது. இரங்கலைக் கூட "எழுந்து வா தலைவா" என்று முழக்கங்களாக கோஷமிடும் திராவிட முன்னேற்ற கழகத் தொண்டர்கள் சூரியனை அஸ்தமிக்கவிடக் கூடாது. ”தலைவர் கலைஞர் தொடர்ந்து 14வது முறையாக வெற்றி; தொகுதி-மெரினா; பெற்ற வாக்குகள்-ஏழரை கோடி; 'என் ஆறடி நிலம்கூட நீ தந்ததாக இருக்க கூடாது , நான் போராடி வென்றதாக இருக்க வேண்டும்' - கலைஞர்” என்றொரு ட்வீட்டை மிகவும் ரசித்துப் படித்தேன். பேரியக்கங்கள் எப்போதும் யாருக்காகவும் நிற்பதில்லை. இன்னும் செய்வதற்கும், தொடர்வதற்கும் போராடடக் களன் கொதி விடாது காத்துக் கிடக்க, வரலாறு கண்கொத்திப் பாம்பாக பார்த்துக் கொண்டிருக்கிறது.
கருத்துகள்
கருத்துரையிடுக