மலர்ச்செண்டுகள் குப்பையில் வீசப்பட்டு, கழிவுகளால் அரியணைகள் அலங்காரம் செய்யப்படும் காலம் இது. பொன் ஆபரணங்கள் தூர வீசப்பட்டு துருப்பிடித்த தகரங்கள் அரிதாரம் பூசிக்கொள்ளும் காலம் இது. பேய்களின் அரசில் சாத்திரங்கள் பிணந்திண்ணும் என்றார் பாரதியார். ஒரு பேயின் மரணத்தால் கொடுங்கோல் ஆட்சியில் இருந்து விடுதலை என்று நம்பிக்கை கொண்டிருந்த வேளையில், பேயின் இடத்தில் ஒரு புளி மூட்டை அமர்ந்து நம்மையெல்லாம் வதைக்கும் ஒரு அவலமான சூழலில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
எடப்பாடி பழனிச்சாமியை நியமிக்கையில் சசிகலா ஒரு பொம்மையாகத்தான் அவரை நினைத்திருந்தார். 122 எம்எல்ஏக்கள் இருக்கையில், முன்னாள் புளி வியாபாரியான புளிமூட்டை பழனிச்சாமியை சசிகலா தேர்ந்தெடுத்ததன் காரணம், அவரின் சிறந்த நிர்வாகத் திறமையோ ஆளுமையோ அல்ல. காசை சரியாக வாங்கி கல்லாவில் போடுவார் என்ற நம்பிக்கையின் அடிப்படையிலேயே. நிர்வாக விதிகளுக்கும், நடைமுறைகளுக்கும், மரபுகளுக்கும் உரிய மரியாதை தருபவர்தான் கருணாநிதி. அதிகாரிகளை நியமிக்கையில், பணியில் இளையவரை மூத்த பதவிகளுக்கு நியமித்தால், அது அவருடைய மூத்த அதிகாரிகளை எப்படி பாதிக்கும், அதிகாரிகள் இடையே அது எப்படிப்பட்ட குழப்பத்தை விளைவிக்கும் என்பதையெல்லாம் நன்கு உணர்ந்தவர் அவர். அதிகாரிகள் நியமனத்தில் பணி மூப்புக்கு உரிய மதிப்பை அளிப்பார். தன்னை நள்ளிரவில் கைது செய்த அதிகாரிகளை கூட, ராமநாதபுரம் மண்டபம் அகதிகள் முகாமுக்கு நியமனம் செய்ததில்லை அவர். ஜெயலலிதாவால் பணி இடைநீக்கம் செய்யப்பட்ட முத்துக்கருப்பனின் பணி இடை நீக்கத்தை ரத்து செய்து, அவருக்கு பதவி உயர்வு அளித்தவர்தான் கருணாநிதி. அவரின் நள்ளிரவு கைதில் மிக முக்கிய பங்கு வகித்தவர் முத்துக்கருப்பன் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் ஜெயலலிதா இதற்கு நேர் எதிர். எடுத்தேன் கவிழ்த்தேன்தான். விதிகளோ, மரபுகளோ அதைப் பற்றியெல்லாம் கவலைப்படுபவர் அல்ல ஜெயலலிதா. அவற்றை காலில் போட்டு மிதிக்கக் கூடியவர். அலெக்சாண்டர் போன்ற ஒரு மூத்த ஐபிஎஸ் அதிகாரியை ஒரு உதவி ஆய்வாளர் பணியிடமான மண்டபம் அகதிகள் முகாமுக்கு நியமனம் செய்தவர்தான் ஜெயலலிதா. ஊரை கொள்ளையடித்து உலையில் போட்டவராக இருந்தாலும் ஜெயலலிதா தன்னுடைய அதிகாரிகளின் மீது வரும் ஊழல் புகார்களை பெரும்பாலும் புறந்தள்ளியதில்லை. ஆதாரத்தோடு சிக்கும் அதிகாரிகளை, குறிப்பாக அவருக்கு பங்கு கொடுக்காமல் ஊழலில் ஈடுபடும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க அவர் தயங்கியதில்லை.
2001 ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில், நெல்லை மாவட்ட எஸ்பியாக இருந்தவர் சாரங்கன். தற்போது திமுகவில் இருக்கும் அய்யாவு எம்எல்ஏவின் துணையோடு சாரங்கன் ஒரு சுரங்க நிறுவனத்தின் பங்குகளை அபகரிக்க முயன்றார். ஓய்வு பெற்ற சுரங்கத் துறை அதிகாரியான அவரை, சென்னையிலிருந்து கைது செய்து, நெல்லை அழைத்துச் சென்று அவரை மருத்துவமனையில் அனுமதித்து, மருத்துவமனையிலேயே வைத்து மிரட்டி அவர் பணியாற்றிய நிறுவனத்தின் பங்குகளை எழுதி வாங்கினார் சாரங்கன். இந்தத் தகவல் உளவுத்துறை மூலமாக ஜெயலலிதாவை எட்ட, சாரங்கனை சென்னை வரவழைத்து வெளுத்துள்ளார். சாரங்கன் நெல்லை திரும்பிச் சென்று அலுவலகத்தில் நுழைகையில் அவருக்கான பணி இடைநீக்க உத்தரவு காத்திருந்தது. லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டிருந்தது.
ஆனால் புளிமூட்டை பழனிச்சாமி, தனக்கு ஒரு தலைமைக்கான ஆளுமையும் இல்லை, நீதி நியாயம் என்ற உணர்வும் இல்லை, சூடு சொரணையும் இல்லை என்பதை முதல்வராக பதவியேற்ற முதல் நாள் தொடங்கி நிரூபித்துக் கொண்டிருக்கிறார். ஆட்சியிலிருக்கும் ஒவ்வொரு கணமும் எம்எல்ஏக்களின் ஆதரவு அவசியம். ஒரே ஒரு எம்எல்ஏ அணி மாறினால் கூட தனது முதல்வர் பதவி பறிபோய் விடும் என்பதை உணர்ந்து, ஏறக்குறைய எம்எல்ஏக்களின் அடிமையாகவே இருந்து வருகிறார். எம்எல்ஏக்களுக்கே அடிமையாக இருக்கும் பழனிச்சாமியை அமைச்சர்கள் என்ன பாடு படுத்துவார்கள் என்பதை உங்களுக்கு விளக்க வேண்டியதில்லை. பழனிச்சாமி தங்கள் தயவில்தான் ஆட்சி நடத்துகிறார் என்பதை நன்றாக உணர்ந்த எம்எல்ஏக்கள், தங்கள் தொகுதியில் நடக்கும் அரசின் ஒவ்வொரு திட்டத்திலும், திட்டத்தின் மொத்த ஒதுக்கீட்டையே கபளீகரம் செய்யும் அளவுக்கு சுரண்டிக் கொண்டிருக்கிறார்கள். திட்டங்களில் சுரண்டுவதோடு மட்டுமல்லாமல், உயர் அதிகாரிகள் பணி நியமனம் முதல், இளநிலை உதவியாளர் பணி நியமனம் வரை, புளிமூட்டை கவனத்துக்கு எடுத்துச் சென்று சிபாரிசு செய்யச் சொல்கிறார்கள். அவர்களின் தயவில் முதல்வர் பதவியில் ஒட்டிக் கொண்டிருக்கும் புளி மூட்டை பழனிச்சாமி, அவர்கள் சொல்வதற்கெல்லாம் ஆடிக் கொண்டிருக்கிறார்.
இந்த அயோக்கியத்தனங்களின் உச்சமாகத்தான் தமிழகத்தின் டிஜிபியாக டிகே.ராஜேந்திரனை நியமனம் செய்தது. உச்சநீதிமன்றம் பிரகாஷ் சிங் என்ற காவல்துறை அதிகாரியின் நியமனத்தில், டிஜிபி நியமனம் தொடர்பாக பிறப்பித்த வழிமுறைகளின் அடிப்படை நோக்கமே, காவல்துறையின் தலைமைப் பொறுப்பில் இருப்பவர், அரசியல்வாதிகளின் கைப்பாவையாக இருக்கக் கூடாது. அரசியல் வாதிகளின் விருப்பத்திற்கேற்ப டிஜிபிக்கள் பந்தாடப்படக் கூடாது. குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகளாவது பணியில் உறுதியாக நீடிக்க வேண்டும். அப்போதுதான் காவல்துறையை சரியாக வழிநடத்த முடியும். சட்டம் ஒழுங்கை சுதந்திரமாக பேணிக் காக்க முடியும் என்பதற்காகத்தான்.
இந்த விதிமுறையை வளைத்து ராமானுஜத்தை முதல் முறையாக சட்டவிரோதமாக இரண்டாண்டு பணி நீட்டிப்பு வழங்கி சட்டத்தை மீறினார் ஜெயலலிதா. ஒரு நேர்மையான அதிகாரி, ஊழலுக்கு அப்பாற்பட்ட அதிகாரி என்று அதுவரை பெயரெடுத்திருந்த ராமானுஜத்தின் நேர்மை அந்த பணி நீட்டிப்பை ஏற்றுக் கொண்டபோது பள்ளிளித்தது. ஒரு காவல்துறை அதிகாரியாக இல்லாமல் ஏறக்குறைய ஜெயலலிதாவின் அடிமையாகவே இருந்தார் ராமானுஜம். இரண்டு ஆண்டுகள் பணி நீட்டிப்பு முடிந்த பிறகும், ஆலோசகர் என்ற பதவியில் வெட்கமேயில்லாமல் தொடர்ந்தார் ராமானுஜம். இரண்டு ஆண்டு பணி நீட்டிப்பால், அவருக்கு பின்னால் உள்ள ஐபிஎஸ் அதிகாரிகளின் பதவி உயர்வு கடுமையான பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறது என்பது ராமானுஜத்துக்கு நன்றாகத் தெரியும். ஆனால் அவர் அது குறித்து கவலைப்படவில்லை. இந்த சட்டவிரோத பணி நீட்டிப்பை ஏற்றுக் கொண்ட காரணத்தால், ஓய்வு பெற்று ஐந்தாண்டுகளை கடந்தும், ராமானுஜத்துக்கு மத்திய அரசு இன்னும் ஓய்வூதியம் வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது தலைமைத் தகவல் ஆணையராக இருக்கும் ராமானுஜம், இந்தப் பதவியிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு, ஓய்வூதியம் இல்லாமல் சோற்றுக்கு என்ன செய்யப் போகிறார் என்பது தெரியவில்லை.
அதன் பிறகு நடந்த அப்பட்டமான விதிமீறலாக மட்டுமில்லாமல் ஒரு அயோக்கியத்தனமான செயலாகவே டிகே.ராஜேந்திரனின் நியமனம் அனைவராலும் பார்க்கப்படுகிறது. ராமானுஜம் பணி ஓய்வு பெற இருந்த நாளில் பணி நீட்டிப்பு வழங்கப்பட்டு டிஜிபியாக்கப் பட்டது சட்டவிரோதமான செயல்தான் என்றாலும் அயோக்கியத்தனமானது கிடையாது. ராமானுஜத்தின் மீது எவ்வித ஊழல் புகாரும் இருந்தது இல்லை. ஆனால் தற்போது டிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ள டிகே.ராஜேந்திரன் குட்கா வியாபாரிகளிடம் மாத மாமூல் பெற்றது அம்பலமாகியுள்ளது. ராஜேந்திரன் எந்தெந்த தேதிகளில் குட்கா வியாபாரியிடம் லஞ்சம் பெற்றார் என்பதற்காக வருமான வரித்துறையின் ஆவணங்கள் வெளியாகியுள்ளன. ராஜேந்திரனின் மீதான இந்தப் புகார்கள் யாரோ சாலையில் செல்பவரோ, அல்லது அவரால் பழிவாங்கப்பட்ட அதிகாரியோ கூறும் புகார்கள் அல்ல. வருமான வரித்துறை என்ற மத்திய அரசின் ஒரு துறை உரிய விசாரணை நடத்தி, ஒப்புதல் வாக்குமூலம் பெற்று அரசுக்கு அனுப்பிய அறிக்கை. இந்த அறிக்கையையே புளிமூட்டை பழனிச்சாமி உதாசீனம் செய்கிறார் என்றால் இது கடைந்தெடுத்த அயோக்கியத்தனமா இல்லையா ?
தகுதி வாய்ந்த உரிய அதிகாரிகள் பட்டியலில் இருந்தும் டிகே.ராஜேந்திரன் என்ற பெட்ரோமாக்ஸ் லைட்டேதான் வேண்டும் என்று புளிமூட்டை பிடிவாதம் பிடிப்பதற்கான காரணம், டிகே.ராஜேந்திரன் வரலாறு காணாத சிறப்பு வாய்ந்த காவல்துறை அதிகாரி என்பதற்காக அல்ல. சட்டம் ஒழுங்கை நிலை நாட்டுவதில் நிகரற்றவர் என்பதற்காக அல்ல. புலனாய்வுப் புலி என்பதற்காக அல்ல. கற்றறிந்த ஞானி என்பதற்காக அல்ல. நிர்வாகத்தில் ஈடு இணையற்றவர் என்பதற்காக அல்ல. சட்ட நுணுக்கங்களை விரல் நுனியில் வைத்திருக்கும் நிபுணர் என்பதற்காக அல்ல. கொடுத்த காரியத்தை செவ்வனே செய்து முடிக்கும் சிறந்த அதிகாரி என்பதற்காக அல்ல. டிகே ராஜேந்திரனைப் போல ஒரு சிறந்த சொம்பு கிடையாது என்பதற்காகவே அந்த பெட்ரோமாக்ஸ் லைட்டை நியமித்துள்ளார் புளி மூட்டை.
புளிமூட்டை பழனிச்சாமிக்கு செக்குக்கும் சிவலிங்கத்துக்கும் வேறுபாடு தெரியாது. பாம்புக்கும் பழுதுக்கும் வித்தியாசம் தெரியாது. அவருக்கு தெரிந்ததெல்லாம் கல்லாவில் காசை வாங்கிப் போடுவது மட்டுமே. இது போன்ற நியமனங்களில் புளிமூட்டையின் கண்களும் காதுகளுமாக செயல்படுபவர், உளவுத்துறையின் தலைவராக உள்ள கேஎன்.சத்தியமூர்த்தி என்ற கவுண்டர். அனைத்து அதிகாரிகளின் நியமனத்தையும் தீர்மானிப்பவர் சத்தியமூர்த்தி மட்டுமே. சத்தியமூர்த்தி பரிந்துரைத்தால், ஒரு கான்ஸ்டபிளை ஐஜியாக பதவி உயர்வு தரும் உத்தரவில் கையெழுத்து போடக் கூட புளி மூட்டை தயங்க மாட்டார். ஒரு கான்ஸ்டபிள் ஒரு நாளும் ஐஜியாக முடியாது என்ற விதிகளெல்லாம் புளி மூட்டைக்கு தெரியாது. சத்தியமூர்த்தி புளிமூட்டையிடம் அளித்த பரிந்துரை, சார் டிகே.ராஜேந்திரன் போன்ற விசுவாசமான அடிமையை நாம் தேடினாலும் கண்டு பிடிக்க முடியாது. இதர அதிகாரிகள், அதிகாரிகளைப் போல நடந்து கொள்வார்கள். ஆனால் ராஜேந்திரன் அடிமையாக நடந்து கொள்வார். சொன்னதை செய்வார். எதிர் கேள்வி கேட்க மாட்டார். இவரைப் போன்ற நல்ல அடிமை இருப்பதுதான் நமக்கு நல்லது என்பதை அவர் வலியுறுத்தி உள்ளார். அந்த அடிப்படையில்தான் புளிமூட்டை டிகேஆர் என்ற பெட்ரோமாக்ஸ் லைட்டை தேர்ந்தெடுத்துள்ளார்.
டிகே.ராஜேந்திரன் குறித்து காவல்துறையில் யாரிடம் வேண்டுமானாலும் விசாரியுங்கள். ஒரே ஒரு அதிகாரி கூட அவரை நல்லவர், நல்ல அதிகாரி என்று சொல்ல மாட்டார். அப்படி ஒரு தயாள குணம் நிறைந்த ஒரு தரமான அதிகாரி. உயர் பதவியில் உள்ள அதிகாரிகளுக்கு கண்டிப்போடு சேர்ந்து கருணையும் வேண்டும். அரசுப் பணியில், குறிப்பாக காவல்துறையில், பல்வேறு சூழல்கள் காரணமாக காவலர்கள், தலைமைக் காவலர்கள், உதவி ஆய்வாளர்கள், ஆய்வாளர்கள், காவல் துணை கண்காணிப்பாளர்கள் போன்ற பதவிகளில் உள்ளவர்கள் மீது பல்வேறு தண்டனைகள் நிலுவையில் இருக்கும். பல நேரங்களில் அவர்கள் தவறுகள் செய்திருப்பார்கள். சில நேரங்களில் உயர் அதிகாரிகளோடு ஏற்பட்ட மோதல் காரணமாகவும் இது நேரும். டிகே.ராஜேந்திரன் போன்ற உயர் பதவிகளில் இருப்பவர்கள், இது போல தண்டனை வழங்கப்பட்டவர்கள் மேல் முறையீடு செய்து வருகையில் பெரும்பாலும் கருணையோடு நடந்து கொள்வார்கள். பல நேரங்களில் தண்டனை குறைப்புகளையும், சில நேரங்களில் தண்டனைகள் ரத்துகளையும் செய்வார்கள். யாருக்காவது டிகே.ராஜேந்திரன் உதவியிருக்கிறாரா என்று கேளுங்கள்.
லஞ்ச ஒழிப்புத் துறையில் அவரிடம் ஐந்து ஆண்டுகள் ஒரு அதிகாரி பணியாற்றினார். அவருக்கு முழு நேர வேலை இணை இயக்குநராக இருந்த டிகே.ராஜேந்திரன் மகளை ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரியில் இறக்கி விட கார் உரிய நேரத்துக்கு சென்று விட்டதா, காலை காய்கறி வாங்க வாகனம் சென்று விட்டதா, டிகே.ராஜேந்திரன் தினந்தோறும் படிக்கும் 12 செய்தித்தாள்களுக்கான மாதாந்திர பில்லுக்கு ரகசிய நிதியிலிருந்து பணம் கொடுக்கப்பட்டதா, சேலத்திலும் திருவண்ணாமலையிலும் உள்ள டிகே.ராஜேந்திரனுக்கு சொந்தமான விவசாய நிலங்களில் விளையும் விளைபொருட்கள் சந்தைக்கு அடைந்து விட்டதா என்பதை பார்ப்பது மட்டுமே. ஐந்து ஆண்டுகள் அவர் இந்தப் பணியை மட்டுமே செய்து கொண்டிருந்தார். சில ஆண்டுகள் கழித்து டிகே.ராஜேந்திரன் சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபியாக பணியாற்றிக் கொண்டிருந்தார். அவரிடம் சென்ற அந்த அதிகாரி, சார் எனக்கு பதவி உயர்வு வருகிறது. என்னை சென்னையில் எந்தப் பிரிவில் வேண்டுமானாலும் நியமியுங்கள். குழந்தைகள் படித்துக் கொண்டிருக்கிறார்கள் என்று கேட்டார். சரி செய்கிறேன் என்று தலையாட்டி விட்டு, அவரை திருநெல்வேலிக்கு நியமித்தார் ராஜேந்திரன். இப்படிப்பட்ட அதிகாரிதான் டிகே.ராஜேந்திரன். சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபியாக இருந்தவரை, ஆய்வாளர் நியமனத்துக்கு 3 லட்சமும், டிஎஸ்பி நியமனத்துக்கு 5 லட்சமும் வாங்கிக் கொண்ட பிறகே நியமன உத்தரவுகளை வழங்குவார் ராஜேந்திரன். அவரிடம் பணம் கொடுத்து நியமனங்களை பெற்ற அதிகாரிகளே என்னிடம் இந்தத் தகவலை கூறியிருக்கிறார்கள். சென்னை மாநகர ஆணையராக இருந்தபோது குட்கா வியாபாரியிடம் டிகே.ராஜேந்திரன் பெற்ற மாமூல் ஒரு சிறு துளியே.
சென்னை மாநகர ஆணையாளராக 2001ம் ஆண்டில் முத்துக்கருப்பன் இருந்தபோது சென்னை சட்டக் கல்லூரி மாணவர் விடுதியில் பெரும் தடியடி நடந்தது. அப்போது இணை ஆணையராக இருந்த ஜார்ஜ், விடுதிக்குள் புகுந்து மாணவர்களை கண்மூடித்தனமாக தாக்க உத்தரவிட்டார். பல மாணவர்களின் கை கால் உடைக்கப்பட்டது. இது பெரும் போராட்டத்தை உருவாக்கியது. கருணாநிதியின் நள்ளிரவு கைது, அதன் பிறகு திமுக பேரணியில் நடந்த தாக்குதல் என்று அரசுக்கு தொடர்ந்து காவல்துறையால் அவப்பெயர் ஏற்பட்டிருந்த காரணத்தால் ஜெயலலிதா எரிச்சலடைந்து முத்துக்கருப்பனை அழைத்து விசாரிக்கிறார். அந்த தாக்குதலுக்கு முத்துக்கருப்பன் சற்றும் பொறுப்பு கிடையாது. அந்த சம்பவத்தை தவறாக கையாண்டதன் முழு பொறுப்பு ஜார்ஜையே சேரும். ஆனால் முத்துக்கருப்பன் நான்தான் தடியடி நடத்த உத்தரவிட்டேன் என்றே கூறினார். ஜார்ஜ் பெயரை போட்டுக் கொடுத்து தப்பிக்க முயற்சிக்கவில்லை. ஆனால் டிகே.ராஜேந்திரனாக இருந்திருந்தால், அதற்கும் எனக்கும் சம்பந்தமேயில்லை என்றுதான் கூறியிருப்பார். ஒரு தலைமைக்கான அடிப்படையான பண்பு, பொறுப்புகளை ஏற்றுக் கொள்வது. பொறுப்புகளை தட்டிக் கழிப்பதை மட்டுமே தனது வாடிக்கையாக கொண்டவர்தான் ராஜேந்திரன்.
சில மாதங்களுக்கு முன்பாக, ஜெயலலிதாவின் கொடநாடு எஸ்டேட்டுக்குள் கொள்ளையடிக்க முயன்று ஒரு காவலாளி கொலையுண்ட சம்பவம் நம் அனைவருக்கும் தெரியும். முதல் நாள் அதிகாலை அந்த சம்பவம் நடைபெறுகிறது. மறுநாள் மாலை ஏழு மணிக்கு ஒரு மூத்த பத்திரிக்கையாளர் டிஜிபியாக இருக்கும் ராஜேந்திரனை தொடர்பு கொள்கிறார். சார் என்ன நடந்தது என்று கேட்கிறார். ராஜேந்திரன், “சில சுற்றுலா பயணிகள் அந்த எஸ்டேட்டுக்குள் நுழைந்து பழம் பறிக்க முயன்றிருக்கின்றனர். அப்போது காவலாளிகளுக்கும் அவர்களுக்கும் மோதல் ஏற்பட்டு கொலை நடந்து விட்டது” என்று கூறியிருக்கிறார். சார், வந்தவர்கள் முகமூடி அணிந்து வந்திருக்கிறார்கள், எஸ்டேட் பங்களாவுக்குள் நுழைந்திருக்கிறார்கள் என்று கேட்டதற்கு, “அது ஊட்டிங்க. குளுருக்காக எல்லாரும் முகமூடி போட்டுருப்பாங்க” என்று பதிலளித்திருக்கிறார் ராஜேந்திரன். இப்படி கூசாமல் பொய் பேசும் ராஜேந்திரனை அந்த பத்திரிக்கையாளர் மதிப்பாரா ? ஒரு பத்திரிக்கையாளர் கேட்டால் அத்தனை விபரங்களையும் ஒரு அதிகாரி சொல்ல வேண்டுமென்ற அவசியம் இல்லை. விசாரணையில் இருக்கிறது. இப்போதைக்கு எதுவும் சொல்ல முடியாது என்று தாராளமாக கூறலாம். ஆனால் ஒரு கொள்ளை சம்பவத்தை, கொய்யாக்காய் பறிக்க வந்த சம்பவம் என்று ஒரு டிஜிபி கூறலாமா ? எதற்காக இந்த பொய் ? இப்படி ஒரு பொய்யை சொன்னால் சிரிக்க மாட்டார்களா ? இதுதான் ராஜேந்திரன்.
திமுக சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகன் இது குறித்து பேசுகையில் “ஓய்வு பெற்றவர்களை வைத்து அரசை நடத்துவதையே இந்த அரசு வாடிக்கையாக கொண்டிருக்கிறது. இந்த நடைமுறையால் பணியில் உள்ள பல்வேறு அதிகாரிகள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாக்கப் பட்டிருக்கிறார்கள். விதிமுறைகளையும் சட்டங்களையும் இந்த அரசு துளியும் மதிப்பதில்லை. தற்போது டிஜிபியாக நியமிக்கப் பட்டிருக்கக் கூடிய டிகே.ராஜேந்திரன் மீது கடுமையான ஊழல் புகார்கள் உள்ளன. இவர் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் இந்தியா முழுக்க விவாதிக்கப்பட்டுக் கொண்டுள்ளது. ஆனால் இப்படிப்பட்ட நேரத்தில் அவரை டிஜிபியாக நியமித்துள்ளது இந்த அரசு. இவர் மீதான குற்றச்சாட்டுகள் சட்டப்பேரவையில் விவாதிக்கப்பட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. முதல்வரே, இந்த ஊழல் குற்றச்சாட்டுகள் மீது லஞ்ச ஒழிப்புத் துறையின் விசாரணை நடைபெற்று வருகிறது என்று பதிலளித்துள்ளார். அதையும் மீறி ஊழல் விசாரணையில் உள்ள ஒரு நபரை டிஜிபியாக நியமித்துள்ளார்.

பணி இடைநீக்கம் செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டிய அதிகாரிதான் டிகே.ராஜேந்திரன். ஆனால் அவருக்கு பணி நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது கடுமையாக கண்டிக்கத்தக்கது. நேர்மையான அதிகாரிகளுக்கு இந்த அரசாங்கத்தில் அங்கீகாரமே இல்லை.
திமுக இந்த விவகாரத்தை எளிதில் விட்டு விடாது. வரும் திங்கட்கிழமை இந்த விவகாரம் குறித்து சட்டப்பேரவையில் மீண்டும் கேள்வி எழுப்புவோம். இது குறித்து நீதிமன்றத்திலும் வழக்கு தொடர உள்ளோம். ஊழல் அதிகாரிகளை கவுரவிக்கும் இந்த அரசு குறித்து மக்கள் மன்றத்திலும் தொடர்ந்து அம்பலப்படுத்துவோம்” என்றார்.
திமுக தொடர்ந்து எடப்பாடி அரசின் ஊழல்கள் குறித்து சட்டப்பேரவையில் கேள்வி எழுப்பிக் கொண்டுதான் உள்ளது. ஆனால் எருமைமாட்டின் மீது மழை பெய்தது போல இந்த அரசாங்கம் எது குறித்தும் கவலைப்படுவதாக தெரியவில்லை. தன்னை ஒரு தலித் என்று இழிவு செய்து விட்டார்கள் என்று நீலிக்கண்ணீர் வடித்த சபாநாயகர் தனபால், எந்த விவகாரத்தையும் பேச அனுமதிக்காமல் சட்டப்பேரவையை அடிமைகள் மன்றமாக நடத்தி வருகிறார்.
சென்னை நகரெங்கும் கிடைக்கும் குட்கா பாக்கெட்டுகளை வாங்கி சட்டப்பேரவையில் சபாநாயகர் முன்பாக கொட்டி ஆர்ப்பாட்டம் செய்ய வேண்டிய திமுக, புதிய யோசனைகள் இன்றி வெளிநடப்பு செய்வதோடு தனது கடமையை முடித்துக் கொள்கிறது. எதிர்க்கட்சிகளை பேசவே விடாமல் விவாதத்துக்கு இடமே தராமல் நடத்தும் சபையை 89 எம்எல்ஏக்களை வைத்திருக்கும் திமுக நடத்த விடலாமா ? கூட்டத் தொடர் முடிந்து விட்டால், ஆட்சிக்கு நெருக்கடி கொடுக்க எந்த வழியும் இல்லை என்பதை திமுக உணர்ந்ததாக தெரியவில்லை. அராஜகமாக நடத்தப்படும் சட்டப்பேரவையில் அராஜகம் செய்வதுதானே சிறந்த தந்திரம் ?
டிகே.ராஜேந்திரனின் நியமனம் குறித்து பேசிய ஒரு ஆங்கில ஊடக செய்தியாளர், “சமூகத்தை ஊழல் புற்றுநோய் போல அரித்து வருகிறது. குட்கா விற்பனையை ஒழிக்க வேண்டிய காவல்துறையினரே புற்றுநோய் பரவுவதற்கு உதவுகிறார்கள். குட்கா ஊழலில் டிகே.ராஜேந்திரனின் பெயர் சிக்கியது துரதிருஷ்டவசமானது என்றால், அவரின் டிஜிபி நியமனம் அதிர்ச்சியை அளிக்கிறது. குட்கா விற்பனையில் காவல்துறை அதிகாரிகள் பங்குதாரர்களாக இருந்தனர் என்பது ஆவணங்களின் மூலமாக வெளிப்பட்டுள்ளது.
டிகே.ராஜேந்திரனை காவல் துறை தலைமை இயக்குநராக நியமித்ததன் மூலம் தமிழக அரசு ஒரு செய்தியை வெளிப்படையாக உலகுக்கு சொல்கிறது. இந்த அரசில் ஊழல் ஏற்றுக் கொள்ளப்படும். ஊழல் புரிவோர் ஏற்றுக் கொள்ளப்படுவதோடு பாதுகாக்கவும் படுவர். அவர்களுக்கு பணி நீட்டிப்பும் வழங்கப்படும். கொள்ளையடிப்பதற்கு வழங்கப்பட்டிருக்கும் வெளிப்படையான லைசென்ஸ்தான் டிகே.ராஜேந்திரனின் நியமனம். மத்திய அரசின் உதவியோடு இது நடைபெற்றிருக்கிறது. ஊழலை எதிர்ப்போம், ஒழிப்போம் என்ற மோடி அரசின் முகமூடி கிழிந்து விட்டது. ஆனால் இவர்களின் பேராசைக்கு நாம்தான் பலிகடா ஆகப் போகிறோம் என்பதுதான் வேதனை” என்றார்.
டிஜிபி டிகே.ராஜேந்திரனுக்கு, தனக்கு கிடைத்த இந்த பதவி நீட்டிப்பு எத்தனை மதிப்புள்ளது என்பது தெரியும். எத்தனை தடைகளுக்கு இடையில் புளிமூட்டை பழனிச்சாமி தனக்கு இந்த பதவியை வழங்கியுள்ளார் என்பதும் தெரியும். இதற்காக அவர் தனது சுயமரியாதையை முற்றிலும் துறந்து, பல்வேறு சட்டவிரோதமான காரியங்களை செய்ய நிர்பந்திக்கப்படுவார் என்பதும் அவருக்கு தெரியும். ஆனால் இந்த பணி நீட்டிப்பை அடைவதற்கு எத்தகைய தியாகத்தையும் அவர் செய்வதற்கு தயாராகி விட்டார் என்பதையே அவரது நடவடிக்கைகள் உணர்த்துகின்றன. நியமன உத்தரவு வருவதற்கு கடும் தாமதமாகி, காலை 10 மணி முதல் இரவு 11.30 வரை தன் அலுவலகத்திலேயே காத்திருந்தார் டிகே.ராஜேந்திரன். ஓய்வு பெற 30 நிமிடங்களே இருந்த நிலையில்தான் நியமன உத்தரவு வந்து சேர்ந்தது. நள்ளிரவு வரை அவர், தனது அறையில் இருந்த ஃபேக்ஸ் மிஷினையே முறைத்துப் பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருந்ததாக கூறப்படுகிறது.
2001ல் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்த பிறகு லஞ்ச ஒழிப்புத் துறையின் இயக்குநராக விகே.ராஜகோபாலன் நியமிக்கப்பட்டார். அவருக்கு ஜெயலலிதா பிறப்பித்த உத்தரவு, 1996 ஆட்சியில் திமுக பதிவு செய்த வழக்குகள் அனைத்தையும் ரத்து செய்ய வேண்டும் என்பதே. அனைத்து கோப்புகளையும் பரிசீலித்த ராஜகோபாலன், வழக்குகளை ரத்து செய்ய முடியாது என்று மறுத்து விட்டார். ஜெயலலிதா கடும் கோபம் அடைந்தார். உடனடியாக போயஸ் தோட்டத்துக்கு வரவழைக்கப்பட்டார். உள்ளே அழைக்கப் படவில்லை. தனது காரிலேயே காத்திருந்தார். சிசிடிவி கேமரா வழியாக அவர் காரில் அமர்ந்திருப்பதை பார்த்த ஜெயலலிதா, அவரை காரை விட்டு இறங்கி வெளியே நிற்குமாறு உத்தரவிட்டார். ஒரு மணி நேரத்துக்கும் மேலாக காரில் கை வைத்தபடி காத்திருந்த விகே.ராஜகோபாலன், திரும்பி வந்ததும் முதல் வேலையாக விருப்ப ஓய்வு எழுதிக் கொடுத்தார். டிகே.ராஜேந்திரனாக இருந்தால் என்ன செய்திருப்பார் தெரியுமா ? காருக்கு பக்கத்தில் தரையில் அமர்ந்திருப்பார். தமிழகத்தில் எந்த அதிகாரியும் செய்யாத ஒரு காரியமாக, நியமன உத்தரவு வந்ததும், முதல்வர் புளிமூட்டை பழனிச்சாமிக்கு நன்றி தெரிவித்து பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளார் ராஜேந்திரன். அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு அவர் எப்படி இருக்கப் போகிறார் என்பதற்கு இது ஒரு சான்று.
இந்த நியமனம் குறித்து பேசிய காவல்துறையின் மூத்த அதிகாரி ஒருவர், “இந்த நியமனம், காவல்துறையின் ஒழுங்கமைவையே சிதைக்கும். படிச்சவன் சூதும் வாதும் பண்ணா, போவான் போவான் அய்யோன்னு போவான்” என்று பாரதியின் பாடலை மேற்கோள் கூறினார்.
இந்த பணி நீட்டிப்பை ஏற்றுக் கொண்டதன் மூலம் டிகே.ராஜேந்திரன் ஒரு மிகப் பெரும் தவறை செய்து விட்டார் என்றே தோன்றுகிறது. அவரின் பேராசை அவரை பெரும் சிக்கலில் மாட்டி விட இருக்கிறது. தமிழகத்தின் வரலாற்றில், சட்டம் ஒழுங்கு டிஜிபியாக இருந்தபோதே பணி இடைநீக்கம் செய்யப்பட்ட முதல் டிஜிபி ரவீந்திரநாத் ஐபிஎஸ். ஜெயலலிதாவின் 2001 ஆட்சியில் அவர் பணி இடை நீக்கம் செய்யப்பட்டார். ராஜேந்திரன் அந்த வரலாற்றை மீண்டும் படைப்பார் என்பதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. ராமானுஜம் ஓய்வு நாளன்று இரண்டு ஆண்டுகள் பணி நீட்டிப்பு வழங்கப்பட்டபோது அதனால் பாதிக்கப்பட்ட அதிகாரிகள் நீதிமன்றம் செல்லவில்லை. அதற்கு காரணம் ஜெயலலிதா. ஆனால் இன்று ஜெயலலிதா இல்லை. இன்று இந்த அதிகாரிகள் நிச்சயமாக நீதிமன்றத்தை அணுகுவார்கள். டிகே.ராஜேந்திரனின் வருமானத்துக்கு அதிகமான சொத்துக்களின் விபரத்தை தோண்டி எடுக்கப் போகிறார்கள்.
டிகே.ராஜேந்திரன் தனது நிம்மதியை 30 ஜுன் 2017 இரவு முதல் இழந்து விட்டார். அவர் எடுத்த இந்த தவறான முடிவுக்காக அவர் காலம் முழுவதும் வருந்தப் போகிறார் என்பது மட்டும் உறுதி.
கருத்துகள்
கருத்துரையிடுக