அன்பின் சரோ..
முதலில் மன்னித்துவிடு. உன் கேள்விக்கு சரியான பதில் இல்லாமல் சொல்லாமல் உன்னோடு பேச்சை நிறுத்திவிட்டமைக்கு.
ஞாபகமிருக்கிறதா உனக்கு நம் அறிமுகம்?. தோழி சுந்தரியின் திருமணத்திற்கு வந்திருந்த போது என்னைச்சுட்டி உன் தங்கையிடம் சொன்னாய் ''அவள் சேலை கட்டிருக்கற ஸ்டைலப்பாரேன்.. உடம்பு முழுக்கத் திமிர்'' எனக்கு நன்றாகத் தெரியும் சரோ நீ என்னைக் கவனித்தாய்.. உன் தங்கை எனக்கு சுந்தரி மூலம் கொஞ்சம் பழக்கம்.. அவள் ஒரு சுட்டிக்குழந்தை..அவளுக்கு முத்தங்கள் தரலாம். அவள்தானே உன்னை என்னிடம் இழுத்து வந்து அக்கா நீங்க திமிர் பிடிச்சவங்கன்னு அண்ணன் சொல்றான் என்று உன்னை என்னிடம் காட்டித்தந்தாள்.. ''ஐயோ அப்படியெல்லாம் நான் இல்லைங்க'' என்றதும் உனக்குள் நீயே ஒரு கணம் பின்வாங்கி வெளிவந்தாயே அது உன் கண்களில் தெரிந்தது. நான் திமிர்பிடித்தவளா இல்லையா என்பதெல்லாம் தெரியாது, ஆனால் அந்த நேரத்தில் உன்னிடம் என் திமிரை வெளிக்காட்ட விரும்பவில்லை என்பது மட்டும் நிஜம்.
திமிர்பிடித்த தோற்றம் என்பது ஒருவகையில் பெண்களுக்குப் பாராட்டு. என்னைப்பார்த்தால் அப்படியா தெரிகிறது? பார்த்த உடனே அப்படிதான் இருந்துச்சு இப்ப பேசுனதும் அப்படித் தெரியல என்றாய். அட என் அறிவு நண்பனே நான் மட்டுமல்ல எல்லா பெண்களுமே இப்படிதான். திமிர் என்பது காட்டக்கூடியவர்களிடம் மட்டும்தான் காட்டப்படும். முகாந்திரம் இல்லாத இடத்தில் திமிரைக்காட்டுவது எத்தனை முயற்சித்தாலும் வராது. ஆச்சர்யமாகத்தான் இருக்கிறது, திமிர் பிடித்தவள் என்று நீ சொன்னதும் மகிழ்ந்த மனம், நான் அப்படி அல்ல என்று நீ சொன்னதும் இன்னும் மகிழ்கிறது. நாம் நெருக்கமாவதற்கு சிரமமே படவில்லை.. மிக எளிதாக நிகழ்ந்தது அது. சம்பிரதாயப் பேச்சுக்கள் முடிந்து பின் மண்டபம் விட்டு வெளியேறும் வரை சின்னசின்னப் புன்னகையில் அடிக்கடி சந்தித்துக்கொண்டோம். கடைசியாக விடைபெறுவதற்குச் சொல்ல வந்தாய்.. ''சரிங்க பார்க்கலாம்'' என்றதும் ''எப்போ?'' என்ற உன் கேள்வியில் தான் தடுமாறிப்போனேன்.. யாரும் என்னிடம் இப்படிக்கேட்டதில்லை உன் கேள்விக்கான சரியான பதிலும் என்னிடம் இல்லை. ''மொபைல் யூஸ் பண்ற பழக்கம் இருக்கா?'' என்றாய்.. அலைபேசி எண்ணை உன்னிடம் சொல்லிவிட்ட பின் சொல்லலாமா வேண்டாமா என்று யோசிக்கும் என்னை என்ன செய்வது சொல்.!
நான்கு நாட்களில் 14 ஆயிரம் மெசேஜ் சென்ட் ,14800 மெசேஜ் ரிசீவ்ட் என்று கணக்குக்காட்டியது வாட்சப் ஹிஸ்டரி. இன்றோடு உலகம் அழிந்துவிடும் அதற்குள் வாழ்வின் சுவாரஸ்ய தருணங்கள் எல்லாவற்றையும் பகிர்ந்துவிட வேண்டும் என்ற முனைப்பு இருவருக்குமே இருந்தது.. என் மீது சந்தேகப்பட்டான் என்னை முன்முடிவு செய்தான் என்பதற்காக தோற்ற காதல் பற்றி சொன்னேன் அல்லவா உண்மையில் அப்படி ஒரு காதல் என் வாழ்வில் இல்லவே இல்லை.. நீ என்னை எப்படி ட்ரீட் செய்யவேண்டும் என்ற பாடம் அது.. இப்படி நிறைய சொல்லி இருக்கிறேன்.. எனக்கு பிடிக்காதவைகளை யாரோ செய்தது போலவும் அதற்கு நான் வருந்தியது போலவும் உன்னிடம் சொன்னேன்.. நீ அவற்றை மறந்தும் செய்துவிடக்கூடாது என்பதற்காக.. அப்போதைய மனநிலையில் எந்தக் காரணத்திற்காகவும் நானுன்னை இழக்க விரும்பவில்லை.
பணியிடத்தில் ஒருவனின் தவறான அணுகுதல் பற்றிச் சொன்னதும்.. உலகின் அத்தனை கெட்ட வார்த்தைகளும் சொல்லி அவனை திட்டினாய்.. தமிழில் இவ்வளவு கவுச்சி வார்த்தைகள் இருக்கிறதென்றே அன்றுதான் தெரியும். பெண்பார்க்க வந்தவன் என்னை பிடிக்கவில்லை என்ற போது அவனைத்திட்ட வேண்டும் என்று ஆசை, அவனுடைய செல்போன் நம்பர் உன்ட்ட கொடுத்து நீ அவன நாறக்கிழி கிழிச்சு வாய்ஸ் ரெகார்ட் செஞ்சு அனுப்பினாயே..! எப்பா டேய்.. அவன் வம்சத்தையே கேவலப்படுத்தி வச்சிருந்தடா. என் மேல் என்னைவிட அதிக உரிமை எடுத்துக்கொண்டாய்.. ஒருவேளை இது காதலா என்றால் இல்லை.. நீ என்னை காதலிப்பதாக சொன்னதே கிடையாது.. என்னைக் கல்யாணம் செய்பவன் என்னை சந்தோசமாக வைத்துக்கொள்ளவில்லை என்றால் அவனைக் கொன்றுவிடுவேன் என்பாய். அவ்வளவு பிடிக்குமாடா என்னை ?!!!
உடல் குறித்த புகழ்ச்சிகளை விரும்பியதில்லை யாரும் சொன்னதுமில்லை.. முதன்முதலில் கேட்டது உன் வாயிலிருந்துதான் ''மூவ் விளம்பரத்தில் நடிக்க ஏற்ற இடுப்பு'' சனியனே ச்சீ நீ ஏன்டா அங்கல்லாம் பார்த்த.. அத்தோடு நீ நிறுத்தி இருக்கலாம் clovia bra வரைக்கும் பேச்சை இழுத்தாய். நெஞ்சுக்கூட்டிற்குள் வெப்பம் பரவி தேகம் மொத்தமும் அனலில் தகித்து கால்விரல் இடைவெளிகள் ஊறின அன்று. அதற்குப் பின்னான நாட்களில் நாம் அதிகமாகக் காமத்தைப் பற்றிதான் பேசினோம். ஒரு ஆண் ஒரு பெண்ணை எப்படியெல்லாம் கையாளவேண்டும் என்று அந்த இரவில் படிப்படியாக அலைபேசியில் சொல்லிக்கொண்டிருந்தாய். ''டேய் நிறுத்து! இது செக்ஸ்சாட் தான?'' ச்சே இல்லடி செக்ஸ்சாட் வேற. அது எப்படி இருக்கும்ன்னா?! முதல்ல நீ கட்டில்ல படுத்துக்க ''ஹ்ம்ம்ம்'' இப்ப நான் உன் பக்கத்தில இருக்கறதா நினைச்சுக்க.. ''ஹ்ம்ம்ம்'' ஹஹாஹஹா டேய் பொறுக்கி ராஸ்கல் என்ன அழகா பிக்கப் செஞ்சடா என்னைய!!! உனக்கொன்னு தெரியுமா? நான் நீ சொல்லித்தரதுக்கு முன்னமே ஃபிங்கரிங்லாம் பண்ணுவேன்.. சரி இருந்தாலும் நீ ஆர்வமா சொல்லித்தரியே!! அதான் ஒன்னும் தெரியாத பாப்பா மாதிரியே கேட்டுக்கிட்டேன்.. நாம் சந்தித்துக்கொள்ளும் வாய்ப்புகள் ரொம்பவே குறைவு.. காரணங்களும் குறைவு.. ஒரு வேளை சந்திக்கும் சந்தர்ப்பம் வெகுவாக வாய்த்திருந்தால் இந்த இரண்டு வருடங்களில் நாம் நிஜமாகவும் பலமுறை புணர்ந்து இருப்போம் என்றே நினைக்கிறேன். அதற்கான வாய்ப்புகளை நாம் வாழும் சூழல் கட்டுப்படுத்தி வைத்துவிட்டது.
எனக்கு நிச்சயதார்த்தம் முடியும் வரைக்கும் நாம் இருவரும் வாழ்ந்தோம் என்றே சொல்லலாம்.. அதற்குப்பின் நாம் பேசுவதும் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்துவிட்டது குறைத்துக்கொண்டாய். திடீரென்று ஒரு நாள் போன் செய்து.. ''நான் உன்னை ஏதாவது கஷ்டப்படுத்திட்டேனா? நாம ரெண்டு பேரும் பேசிய பேச்சுக்கள் இப்ப எனக்கு guilt feel தருது. என்னோட வசதிக்காக நான் mastrubate செய்ய உன்னை யூஸ் செஞ்சுக்கிட்ட மாதிரி தோணுதுடி. என்னைய தப்பானவனா நினைச்சிடாத அயம் சாரி அயம் சாரி'' என்று அரற்றினாய்.. உண்மையில் எனக்கும் அன்று குற்ற உணர்ச்சியே மேலோங்கி இருந்தது.. உனக்கு என்ன பதில் சொல்ல என்று தெரியாமல் இனி நாம் பேசிக்க வேண்டாம் என்று அத்தோடு நம் தொடர்பை முறித்துக்கொண்டோம்..
கல்யாணம் குழந்தை என்று நாட்கள் ஓடிவிட்டது.. அவ்வவப்போது நீ நினைவிற்கு வருவாய். கணவனிடம் எப்போதெல்லாம் சண்டை வருகிறதோ அப்போதெல்லாம்''உன்னை சந்தோசமா வச்சிக்கலன்னா உன் புருசன கொன்னுடுவேன்'' என்று நீ சொல்லியது நினைவிற்கு வரும் சிரித்துக்கொள்வேன். நீ கேட்ட கேள்விக்கு இப்போதுதான் எனக்கு பதில் சொல்ல மனமும் பக்குவமும் வாய்த்திருக்கிறது. வாழ்வில் சூனியமும் வெறுப்பும் கலந்திருந்த கட்டத்தில்தான் நாம் சந்தித்தோம்.. கூடப்படித்த தோழிகள் அனைவருமே திருமணம் ஆகி அவரவர் வாழ்க்கை என்று போய்விட இன்னும் சிலர் காதலில் இருக்க நான் மட்டும் தனிமையில் இருந்தேன். தனிமையில் இருப்பது எவ்வளவு கொடுமை தெரியுமா? அதுவும் நம்மைச்சுற்றி இருப்பவர்கள் ஜோடியாக இருக்கும் போது நாம் மட்டும் தனிமையில் இருப்பது பெருங்கொடுமை. வரிசையாக வரன்கள் தட்டிச்செல்ல எனக்குள் நானே புதைந்துகொண்டேன்.. திருமணத்தில் எனக்கு பெரிய ஈர்ப்போ நாட்டமோ இல்லை ஆனால் அப்போது நான் வாழ்வு சலித்து ஏதாவது புதிய ஒரு மாற்றத்திற்கு காத்திருத்தேன். ஒரே விதமான துயரை எத்தனை காலம்தான் கட்டி அழுவது. திருமணம் வேறு ஒரு புதிய துயரைத் தருமே என்றுதான்.
இரண்டு வார்த்தைகளுக்குப் பிறகு எப்போது கல்யாணம்? என்பார்கள் உறவுகள்.. இதுதான் நம் சமூக அமைப்பு.. இதற்குள் இருந்து தப்புவது கடினம் தப்பிக்க நான் தனிமையை தேர்ந்தெடுத்தேன் தனிமை என்னை தற்கொலைக்கு உந்தியது.. அப்போதுதான் நீ என் வாழ்வில் வந்தாய் என் தனிமைக்குத் துணையாய்.. என் தேவை வெறும் பேச்சுத்துணை மட்டுமல்ல. காமமும்தான்.. துணையிருப்பது என்று ஆகிவிட்டது அதில் நட்பென்ன! காதலென்ன! காமமென்ன!.
மனம் வெறுத்து இருந்த காலகட்டத்தில் துணையாய் இருந்த உன்னை எந்த காலத்திலும் மறக்கமாட்டேன். என்னை மீட்ட யட்சனடா நீ.. எந்தக் குற்றஉணர்ச்சியும் கொள்ளாதே.. லவ் யூ நண்பா
மனம் வெறுத்து இருந்த காலகட்டத்தில் துணையாய் இருந்த உன்னை எந்த காலத்திலும் மறக்கமாட்டேன். என்னை மீட்ட யட்சனடா நீ.. எந்தக் குற்றஉணர்ச்சியும் கொள்ளாதே.. லவ் யூ நண்பா
பிரியங்களுடன் - மது
கருத்துகள்
கருத்துரையிடுக