சரவணன் சந்திரன் வாழ்த்து
கருணாநிதியின் 94-வது பிறந்தநாளை ஒட்டி அவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், "ஆண்டுக் கணக்கீடுகளின் பார்த்தால் இப்போது கலைஞரின் வைரவிழா நடத்துவது முறையா என்றெல்லாம் ஆங்காங்கே கேள்விகள் எழுகின்றன.
இத்தனை ஆண்டுகள் புதைந்து கிடக்க வேண்டுமென என வைரத்திற்கும் தங்கத்திற்கும் யாராவது அதிகாரப்பூர்வமான துல்லியமான கணிப்பு ஏதாவது வைத்திருக்கிறார்களா என்ன? தேவையிருந்தால் கொண்டாடிவிட்டுப் போகவேண்டியதுதானே? திமுகவைப் பொறுத்தவரை அப்படிக் கொண்டாட வேண்டியதற்கான தேவை இருப்பதாகவே தெரிகிறது. அதன் செயல் தலைவர் தமிழ்நாட்டில் யாரை எதிர்த்து அரசியல் செய்வது என்று யோசித்துப் பாருங்கள்? மாதவனையும் தீபாவையுமெல்லாம் எதிர்த்து அரசியல் செய்ய முடியுமா? பிரதான எதிர்க்கட்சியாக இருக்கும் அதிமுகவின் இருவர்களும் அவரது அரசியல் அனுபவத்தைப் பொறுத்தவரை, மேற்குறிப்பிட்ட இருவருக்கு, ஒப்பானவர்கள்தான் என்கிற போது ஸ்டாலினும் என்னதான் செய்வார்?
ஒரு பலமான எதிர்க்கட்சி, பலமான ஆளுங்கட்சியை எதிர்த்துத்தானே அரசியல் செய்ய வேண்டும். அப்படிப் பார்த்தால் தமிழகத்தை இன்றைய தேதியில் மறைமுகமாக பிஜேபிதான் ஆட்சி செய்கிறது. எனவே அதை எதிர்த்து அரசியல் செய்ய இந்த வைரவிழா ஒரு வாய்ப்பு. இதைத் தவறென்று சொல்லவே முடியாது. திமுகவின் செயல் தலைவரை பொறுத்த வரை பல நேரங்களில் அவர் சென்சிபிலாக அரசியல் காய் நகர்த்தல்களைச் செய்கிறார். மறுக்க முடியாது. ஆனால் சில நேரங்களில் அவர் செய்யும் அரசியல் ஒவ்வாமையை ஏற்படுத்தி விடுகிறது. கலைஞர் வைரவிழாவிற்கான அழைப்பிதழை கலைஞரிடம் கொடுத்த காட்சியை பொதுமக்கள் ரசிக்கவில்லை. நானும்கூட பொதுஜனங்களில் ஒருத்தனே? திராவிடக் கட்சி ஆட்சிகளின் விளைவாக எல்லோரும் வயதிற்கு வந்துவிட்டோம். கூகிளைத் தேடி விஷயங்களை அறிந்து கொள்ளவும் செய்யத் துவங்கி விட்டோம்.
கலைஞருக்கு வந்திருக்கிற முதுமை சம்பந்தப்பட்ட நோய், அதற்கான மருத்துவங்கள், பின் விளைவுகள், அதன் பாதுகாப்பு நடைமுறைகள் எல்லாவற்றையும் கூகிளில் தட்டினாலே தெரிந்துவிடும். இப்படி இருக்கையில் அவரை அமர வைத்து போஸ் கொடுக்க வைப்பதெல்லாம் சரியா என்று தெரியவில்லை. அவர் விழாவிற்கு வரலாம் என்றெல்லாம் சொன்னார்கள். வரவே கூடாது என்பதுதான் என்னுடைய கருத்து. தொற்றுநோய் சம்பந்தப்பட்ட ஆராய்ச்சிகள் செய்பவர்களுக்கு நான் சொன்ன அர்த்தம் விளங்கும். ஆனால் இன்றையே தேதியில் கலைஞர் என்ன நிலையில் இருந்தாலும் அவர் தேவையாக இருக்கிறார். அதைத்தான் இந்தப் போக்கு உணர்த்துகிறது என்பதால் அதைப் புரிந்து கொள்ள முடிகிறது.
நாடு முழுவதும் மாட்டுக் கறிக்காக மாடுகளை விற்பதற்குத் தடை என்கிற அறிவிப்பு வந்திருக்கிறது. இந்த நேரத்தில் கலைஞர் இருந்திருந்தால் என்ன செய்திருப்பார்? அவருக்கு மாட்டுக் கறி சாப்பிடும் பழக்கம் இருக்கிறதா என்பதெல்லாம் எனக்குத் தெரியாது. ஒருமுறை பேட்டியின் போது தனக்குப் பிடித்த விரால் மீனைக்கூட இப்போதெல்லாம் அஜீரண பிரச்சினை காரணமாகச் சாப்பிடுவதில்லை என்று எங்களிடம் சொல்லியிருந்தார். முருங்கைக் காயைக்கூட வழித்துவைத்துத்தான் அவரிடம் கொடுத்துக் கொண்டிருந்தார்கள் அப்போது. இது நடந்து பத்து வருடங்கள் இருக்கலாம். ஆனால் இப்போது என்ன அஜீரணம் என்றாலும் சும்மா எதிர்ப்பிற்காகவாவது ஒரு துண்டு மாட்டிறைச்சியை எடுத்து வாயில் போட்டிருப்பார் என்றுதான் தோன்றுகிறது. தவறாகச் சொல்லவில்லை என்பதை அவருடன் இருப்பவர்கள் அறிவார்கள்.
இப்படி அடிக்கடி கலைஞர் இருந்திருந்தால், கலைஞர் இருந்திருந்தால் என்று சொல்வது சங்கடமாகத்தான் இருக்கிறது. ஒரு கட்சிக்கு செயல் தலைவர் என்று ஒருத்தரை நியமித்த பிறகு இப்படியெல்லாம் சொல்லிக் கொண்டிருக்கக்கூடாதுதான். ஆனால் என்ன செய்ய? செயல் தலைவர் அவர்களே கலைஞர் இருந்திருந்தால் என்றுதான் சொல்லிக் கொண்டிருக்கிறார். இன்றைய தேதியில் அவர் இன்னமும் தேவை ப்படுபவராக இருக்கிறார் என்பதன் அடையாளம்தான் அவரைச் சுற்றிய இந்தப் பேச்சுக்கள் எல்லாமும். அந்த வகையில் இந்த வைரவிழா கண்டிப்பாக நடைபெற வேண்டிய ஒரு நிகழ்வு. காலத் தேவை கருதியது.
அவர் தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதே தெரியாத நிலையில் இருப்பதாகச் சொல்லப்பட்டாலும், அவர் இன்னமும் தேவையாக இருக்கிறார் என்பதை உணர்ந்தால் உண்மையில் சந்தோஷப்படத்தான் செய்வார். அவர் பல பாத்திரங்களை வகித்திருக்கிறார். எனக்குப் பிடித்தது அவர் வகித்த பத்திரிகையாளர் பாத்திரம்தான். குச்சி ஐஸ் சாப்பிடுகிற வயதில் இன்றைய செய்தி நாளைய வரலாறு என்று அவரால் மட்டுமே எழுத முடியும். அதிகாலையில் அவர் எழுந்து கொள்வதன் அவசியம் பற்றி எனக்கு வகுப்பு எடுத்தார் ஒருமுறை. இன்றளவும் நான் பின்பற்ற நினைக்கும் அறிவுரை அது. ஒரு பத்திரிகையாளனாக அவருடன் நிறைய அனுபவங்கள் இருக்கின்றன. அதில் ஒரு அனுபவம் எப்போதும் என் நினைவில் நிற்கும். அடிக்கடி இதைச் சொல்லவும் செய்கிறேன்.
“வீல் சேரில் போகிற கஷ்டம் உங்களுக்கு எல்லோரையும் விட நல்லா தெரியுமே?” இந்தக் கேள்வியை அந்தப் பெண் அப்போது தமிழக முதலமைச்சராக இருந்த கலைஞரை நோக்கி கேட்டதும் அந்த அறையில் இருந்த அதிகாரிகள் உட்பட அத்தனை பேரும் அதிர்ந்து போனார்கள். ஒருநிமிடம் அந்த அறையில் நிசப்தம் நிலவியது. அதைக் கண்டு கொள்ளாத கலைஞர் அந்தப் பெண்ணைப் பார்த்து உனக்கு என்ன வேண்டும் அம்மா? என்று கேட்டதும் அந்தப் பெண் தனக்கு வசதியான வீல் சேர் ஒன்று வேண்டும் என்றதும் மெல்லியதாக சிரித்துக் கொண்டார்.
அந்தப் பெண்ணிற்கு என்னவெல்லாம் வேண்டுமோ அதையெல்லாம் செய்து தருமாறு உத்தரவிட்டார். மஸ்குலர் டிஸ்ரபி என்னும் விநோத நோயால் பாதிக்கப்பட்ட அனுராதா என்கிற பெண்மணி இன்று நம்மிடையே இல்லை என்றாலும், அன்று கலைஞரை சந்தித்து நான் என் நிலைமையை விளக்கி என்னைப் போன்றவர்கள் வாழ்வில் மறுமலர்ச்சியைக் கொண்டு வர வேண்டும் என ஆசைப்பட்டதும் கலைஞருடனான சந்திப்புக்கு ஏற்பாடுகளைச் செய்தோம்.
விஜய் டீவியில் ஒளிபரப்பான ‘கதையல்ல நிஜம்’ நிகழ்ச்சிக்காக இந்தச் சந்திப்பு நடந்தது. அப்போதுதான் கலைஞர் வீல் சேரில் உலவ ஆரம்பித்த காலம் என்பதால், அரசல்புரசலாக அப்போது விமர்சனங்கள் வந்து கொண்டிருந்தன. அந்தக் கட்டத்திலும் தன்னை வீல் சேரில் பயணிப்பதாக அந்தப் பெண் சுட்டிக் காட்டியபோதும் கோபப்படாமல் அந்தப் பெண்ணை கலைஞர் எதிர்கொண்ட விதமும் அவருடைய மனிதாபிமானமும் அங்கு இருந்தவர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது. ஏதோ இந்த அனுபவத்தை இப்போது சொல்லத் தோன்றுகிறது.
எதற்காக இதைச் சொல்கிறேன் என்றால் ஒரு சாமானியரின் பிரச்சினைக்குக்கூட அவரது கதவைத் தட்ட முடிந்த தூரத்திலேயே அவர் தன்னை வைத்துக் கொண்டிருந்தார். ஒரு மிகப் பெரிய கட்டுரைக்கு இரண்டு வரிகள் மட்டுமே தேவைப்படும் கருத்திற்காகக்கூட அவரைத் தொலைபேசியில் அழைக்க முடியும். அந்தத் தேதியில் அவர் பத்திரிகையாளர்கள் மீது நல்ல மனநிலையில் இருந்தால், ரெண்டு வரிக்கு கூப்டறது நியாயமாப்பா என்றெல்லாம் கேட்காமல், தயங்காமல் லைனுக்கு வந்துவிடுவார் என்பதுதான் உண்மை. அவரிடம் என்ன கேள்விகள் வேண்டுமானாலும் கேட்டுவிட முடியும்.
”என் வீட்டு நாய்கூட அந்த வாசல மிதிக்காது” என அவர் சீறுவார். அது ஆப் தி ரெக்கார்டு என சண்முகநாதன் பின்னாடியே ஓடிவருவார் என்பது முன்னாடியே கலைஞருக்குத் தெரியும். ஆனாலும் எதிரே இருப்பவர்கள் ஒரு கணம் பயந்து போவோம். அடுத்த நிமிடமே ’அடுத்தத கேளு’ என அசால்ட்டாக கையை ஆட்டுவார் பாருங்கள். அதற்கே நானெல்லாம் ரசிகன். அவர் பெயர் இல்லாத செய்தித்தாளை இத்தனை வருடத்தில் ஒருநாள் காட்டுங்கள் பார்ப்போம். அவர் உரக்கப் பேசுபவராக இருந்தார். பேசப்படுபவராக இருந்தார். இதுதான் பத்திரிகையாளன் என்பவனின் பொதுக் குணம். “தூங்கறப்பகூட கால ஆட்டிக்கிட்டே இருக்கணும். இல்லாட்டி முடிஞ்சிருச்சுன்னு தூக்கிப் போட்டுருவாங்க” என விளையாட்டாக இந்தக் குணத்தைப் பற்றிச் சொல்வார்கள். இந்த அடிப்படையிலும்கூட, இந்தச் சூழலின் போதுகூட அவர் பேசப்படுபவராகவே இருக்கிறார். எங்களைவிட மூத்த பத்திரிகையாளர்கள் நிறைய விஷயங்களைச் சொல்வார்கள். ஒரு பத்து முறை சந்தித்த எனக்கே பல்வேறு அனுபவங்கள் கிடைத்திருக்கின்றன என்கிற போது, அவருடன் இருந்தவர்கள் இன்னமும் நிறைய அனுபவங்களைச் சொல்ல முடியும்.
எனக்குத் தெரிந்து ஒரே வரியில் சொல்ல வேண்டுமெனில் அவர் பத்திரிகையாளர்களிடம் குறுக்குக் கேள்வி கேட்கும் நிலையில் இருக்கும் போதெல்லாம் அவருக்கும் பத்திரிகையாளர்களுக்கும் சுமூகமான உறவு இருக்கும். அவரை நோக்கி பத்திரிகையாளர்கள் கேள்வி கேட்கும் நிலை வந்த போது அவர் தன்னுடைய கடைசி காலச் செயல்பாடுகளின் போது வழக்கத்தை மீறி நிதானத்தைத் தவற விட்டிருக்கிறார். தீக்குளிக்கலாம் வர்றீய்யா போன்ற வார்த்தைகளை அவரேகூட கற்பனை செய்திருக்க மாட்டார்.
பத்திரிகையாளர்கள் கொளுத்தப்பட்ட வழக்கில் அவர் கையறு நிலையில் நின்றதை அவர் யோசித்திருப்பாரா என்பது அவருடைய மனசாட்சிக்கு மட்டுமே தெரிந்த விஷயம். ஆனால் இன்றைக்கு பத்திரிகையாளர்கள் பெற்றிருக்கிற அரசு சார் சிறு சலுகைகளுக்குக்கூட அவர்தான் காரணம் என்பதை மறுக்கவே முடியாது. அவர் தன்னை மட்டும் உற்சாகமாக இந்த விஷயத்தில் வைத்துக் கொள்ளவில்லை. ஒட்டுமொத்த பத்திரிகையாளர்களையும் அப்படி வைத்திருந்தார். இத்தனை வருடமும் அவரைச் சுற்றியே பத்திரிகைகளும் சுற்றின. பத்திரிகையாளர்களும் சுற்றினார்கள். அந்த வகையில் அவர் வகித்த பாத்திரங்களுள் பத்திரிகையாளர் என்கிற பாத்திரமே நெஞ்சில் இன்னமும் பதிகிறது" எனக் குறிப்பிட்டுள்ள்ளார்.
கட்டுரையாளர்
சரவணன் சந்திரன் இந்தியா டுடே தமிழ் பதிப்பில் மூத்த பத்திரிக்கையாளராக இருந்தவர்
கருத்துகள்
கருத்துரையிடுக