ஜி 8 கூட்டத்தில் கருப்பு பணம் குறித்த விவாதம்-வரி ஏய்ப்பைத் தடுக்க நாடுகள் உறுதி
நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு விவகாரம்-காசியாபாத் பகுதிகளில் சிபிஐ சோதனை.
ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய தாசில்தார் கைது..
சுகாதார ஆய்வாளர் மீது லஞ்சப் புகார்
என உலக அளவில் இருந்து உள்ளூர் முறைகேடு வரை விலாவாரியாகச் நேற்று செய்தி வெளியிட்ட புதிய தலைமுறை தொலைக்காட்சி, தனது தொலைக்காட்சி அலுவலகம் மற்றும் கல்வி நிறுவனங்கள் அனைத்திலும் கல்வி முறைகேடு தொடர்பாகவும் அதில் நன்கொடை என்ற பெயரில் பெற்ற கணக்கு வழக்கற்ற பணம் தொடர்பாகவும், திரைப்படத் தயாரிப்பில் முதலீடு செய்யப்பட்ட கருப்புப் பண பரிவர்த்தனைகள் தொடர்பாகவும் வருமானவரித்துறையினர் நேற்று (18--06-2013)நடத்திய சோதனை மற்றும் விசாரணை குறித்து நேற்று காலையில் வெளியிட்ட ஒருவரிச் செய்தியுடன் சில நிமிடங்களில் நிறுத்திக் கொண்டது.
'புயலைத் தொடரும் புதிய தலைமுறை' என்ற தலைப்பில் நீலம் புயல் குறித்து, புயல் அங்கு கரையைக் கடக்கிறது,அங்கே பலத்த சேதம்,இங்கு பெரும் பாதிப்பு என பல பரிமாணத்தில் சில மாதங்களுக்கு முன்பு செய்தி வழங்கிய பு.த.தொ.,தனது அலுவலகம் மற்றும் சகோதர குழுமங்களில் நடந்த சோதனை குறித்து ஒரு பதிவும் செய்யவில்லை.
அதிகம் கூடச் சிரமப்பட்டிருக்க வேண்டாம்.
ஹெலிகாப்டரை வாடகைக்கு எடுத்து புயல் சீற்றத்தை விலாவாரியாக ஒளிபரப்பியவர்கள் தனது தொலைக்காட்சி அலுவலகத்தில் நடந்த சோதனையை பைசா செலவில்லாமல் விலாவாரியாக காட்டியிருக்கலாம்.
250 ந்பர்கள் பல்வேறு குழுக்களாகப் பிரிந்து நடத்திய சோதனையை அமைதியாக ஒன்றுமே நடக்காதது போலக் கடந்து சென்றார்கள்.
6.75 கோடிப் பணத்தை எஸ்.ஆர்.எம்.குழுமத்தில் இருந்து கைப்பற்றினோம் என்ற வருமான வரித்துறையின் அறிக்கையை வெளியிடாத பு.த.தொ., அதற்கு எஸ்.ஆர்.எம்.குழுமத்தின் மறுப்பை நேற்று (19-06-2013)இரவில் இருந்து ஒளிபரப்பிக் கொண்டு இருக்கிறது.
'உண்மை உடனுக்குடன்' என்பது ஊருக்கு மட்டும் தான் என்பது நாம் அறிந்த செய்தி தானே..!
மாணவர்களிடமிருந்து நன்கொடை என்ற பெயரில் ரத்தத்தை உறிஞ்சிய பணத்தில் உருவான புதிய தலைமுறை தொலைக்காட்சி இப்படி நடந்து கொள்ளும் என எதிர்பார்த்தது தான்.நாம் ஆரம்பம் முதலே இதனைப் பலமுறை சுட்டிக் காட்டியிருக்கிறோம்.
இதில் புதிதாய் ஒன்றுமில்லை.நேற்றும் இன்றும் நடைபெற்ற வருமானவரிச் சோதனைகளின் விசாரணை இறுதிவரை உண்மையாகவும் சரியான திசையில் சென்றால் பு.த. நிறுவனமே கருப்புப் பணத்திலும் முறைகேட்டிலும் சம்பாதித்த பணத்தில் நடைபெறுவது தான் என்று உறுதிப்படுத்தப்படும்.
அப்படி எல்லாம் நடைபெற்றுவிடுமா என்ன.?
இந்தச் சோதனையை ஊத்தி மூட இனி என்ன சமரசங்கள் நடைபெறுமோ அது பகிரங்கமாக நடைபெறாது.ஆனால் ஊத்தி மூடப்படும் என்பது உறுதி.
ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாய்ச் செய்திகளை வெளியிட்டமையால் காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் இளங்கோவன் எங்களை மிரட்டுகிறார் என்று,சில மாதங்களுக்கு முன்பு 'புரட்சி' முகம் காட்டி வாசகர்களைப் பரவசப்படுத்திய ,அவர்களின் உரோமம் துடிக்கும் அளவுக்கு ஆதரித்து இணையத்தில் எழுதச் செய்தபுதிய தலைமுறை தொலைக்காட்சி இந்த முறை அப்படி 'புரட்சி' அரிதாரம் பூசாது.
குறைந்த பட்சம் புதுப்புதுஅர்த்தங்கள் அல்லது நேர்படப் பேசு போன்ற நிகழ்ச்சியிலாவது வருமான வரித்துறையின் 'அத்துமீறல்' குறித்து போகிற போக்கில் ஒற்றை வரி கூடப் பேசவில்லை.
இப்பொழுது அப்படி 'புரட்சி' வேடம் கட்டினால் மக்களிடம் அது எடுபடாது என்பதைத் தாண்டி,அது பிரச்சனையை இன்னும் சிக்கலாக்கி அட்மிஷன் கொள்ளையை மட்டுமல்ல,திரைப்படத் தயாரிப்பு உட்பட இருக்கும் அனைத்துப் பிழைப்பையும் கெடுத்து விடும் என்பது நன்கு தெரியும். ஆகவே அமைதியாய் 'காரியம்' சாதிக்க எண்ணுகிறது.
ஏனென்றால் எப்பொழுது எதைச் செய்ய வேண்டும்..?
எப்பொழுது எதைச் செய்தால் வெற்றி கிட்டும் என்பது கொள்கைவாதிகளைக் காட்டிலும் பிழைப்புவாதிகளுக்கு நன்கு தெரியும்.
தொடர்புடைய இணைப்புக்கள்
http://www.dinakaran.com/News_Detail.asp?nid=52789
கருத்துகள்
கருத்துரையிடுக