சமகால இதழியலில் எல்லோரும் எழுத்து கூட்டி பத்தி எழுதுகிறார்கள். எல்லோரும் பத்தி கட்டுரைகளை தொகுப்பாக்குகிறார்கள். ஆனால் பத்தி எழுத்தாளர்களில் எத்தனை பேர் என்னைப் போல் பிரபலத்தை அனுபவிக்கிறார்கள்? நான் பல முக்கிய நாவல்களை எழுதியிருக்கிறேன். குழந்தைகளைக்கூட விட்டு வைக்காமல் அவர்களுக்கும் புத்தகம் எழுதியிருக்கிறேன். எனினும் எனது பிரபலத்திற்கு பத்திதான் காரணம். குறைந்த உழைப்பில் நிறைந்த வருமானம் பத்தி எழுத்தில்தான் கிடைக்கிறது. இந்தப் பிரபலம் எல்லோருக்கும் வாய்க்காத காரணம் அவர்கள் நான் அல்ல என்பதே. எனது வெற்றியால் உந்தப்பட்டு பத்தி எழுத துவங்குபவர்கள் என்னைப் போலவே எழுதினால் ஓரளவு வெற்றியடையலாம். இப்போது அரிச்சுவடியை கற்போமா?
முதலில் ஏதோ ஆழமாக சொல்ல முயல்வது போன்ற வரிகளுடன் தொடங்க வேண்டும். ஆனால் ஆழமாக இருந்துவிடக்கூடாது. அது பத்தி எழுத்துக்கு எதிரானது. அந்த வரிகளில் இல்லாத கருத்தை விளக்கிசொல்ல சொந்த அனுபவத்திலிருந்து சப்பையான ஒரு சம்பவத்தை நினைவு கூற வேண்டும். அது சமீபத்தில் நடந்ததாக இருப்பது நல்லது. சம்பவத்தை கூறி முடித்தபின் மீண்டும் ஏதோ ஆழமாக சொல்ல முயல்வது போன்ற வரிகளில் முடிக்க வேண்டும். உதாரணமாக ஒரு துவக்கம்:-
வாழ்க்கையை எல்லோரும் ஒரே விதமாக வாழ்வதில்லை. ஒவ்வொருவர் மனதிலும் வெவ்வேறு அபிலாஷைகள் கனன்றுகொண்டிருக்கின்றன. கடந்த மாதம் ரயிலில் திருப்பூரை நோக்கி பயணித்துக் கொண்டிருந்தபோது ஒரு சகபயணி* என்னை அடிக்கடி உற்றுப் பார்த்தபடி இருந்தார். அவர் என்னிடம் பேச விரும்பி கூச்சத்தால் தயங்குவது போல் தெரிந்தது. நானே அவரிடம் மெல்லப் பேச்சு கொடுத்தேன். நான் அவரது பள்ளி ஆசிரியர் ஒருவரை போல் இருந்ததாகவும் ஆனால் அந்த ஆசிரியருக்கு ஏழு கண்கள் என்றும் அவர் கூறினார்.
பேசிக்கொண்டிருந்தபோது என் சகபயணி தன்னை பற்றிய விவரங்களை பகிர்ந்துகொண்டார். அவர் திருச்சியில் விவசாயம் செய்துவந்தார். வருமானம் மிக குறைவு. செலவுக்கு காசில்லை. வசதியான பின்னணி இருந்த மனைவிக்கு வங்கியில் கணிசமான அளவு பணம் இருந்தது. ஆனால் மிகுந்த ஆன்மீக ஈடுபாடு கொண்ட அந்தப் பெண்மணி தன் பணத்தை கோவில் குளங்களுக்கு வாரி வழங்குவதிலேயே செலவிட்டார். சொத்து மட்டும் கணவர் பெயருக்கு எழுதி வைத்திருந்தார். சகபயணி சொத்துக்காக மனைவியை ஏர் பில்லோவால் கொல்ல பலமுறை முயன்று தோல்வியடைந்திருக்கிறார். திருப்பூரில் கூடுதல் பஞ்சு வைத்த கனத்த தலையணைகள் கிடைக்கும் என்று கேள்விப்பட்டு பயணத்தை மேற்கொண்டிருக்கிறார்.
அவர் கூறியது முழுவதையும் வியப்புடன் கேட்டேன். மனைவியை கொலை செய்ய காற்று தலையணையை பயன்படுத்தும் அளவிற்கு சமகால கணவர்கள் நிதர்சனத்திலிருந்து விலகி இருக்கிறார்களா? மனைவியை கொல்ல வேறு வழிகள் தெரியாதவனை சமூகம் அங்கீகரிக்க வேண்டுமா? (இப்படியே இன்னும் இரு பாராக்கள்)
கணவனுக்கும் மனைவிக்கும் இடையில் சச்சரவுகள் திருமணம் என்கிற சடங்கு தோன்றிய காலத்திலிருந்தே புழங்கி வருகிறது. பல சமயங்களில் மனைவியின் கொலையே சுமுகமான தீர்வாக இருக்கிறது. அவ்வாறு கொலை செய்த பின் ஒரு கணவனுக்கு ஏற்படும் போலீஸ் நடவடிக்கை போன்ற நடைமுறை சிக்கல்கள் எண்ணற்ற புத்தகங்களின் கருவாகியிருக்கின்றன. (இப்படியே இன்னும் சுமார் ஆறு பாராக்கள்)
* உங்களுக்கு சகபயணி யாரும் இல்லாதிருந்தால் மட்டுமே இப்படி எழுத வேண்டும். நீங்கள் அந்த பயணத்திற்கே சென்றிருக்கவில்லை என்றால் இன்னும் நல்லது.
மனைவியை கணவன் கொல்வது பற்றி உலக இலக்கியம் என்ன சொல்கிறது? உங்களுக்கு தெரியவில்லை என்றால் வலைதளத்தில் தேடுங்கள். எடுத்துக்காட்டாக டபிள்யூடபிள்யூ டாட்காம் கூகுளில் male person killing wife latin american literature only என தேடுங்கள். தேடலில் தானாக வந்து மாட்டும் தகவல்களையும் சேர்க்கலாம். தகவல் கிடைத்தபின் அதை மேற்கண்ட சம்பவத்துடன் இணைக்க வேண்டும். கதையின் முடிவில் ஆழமான கருத்துகளை மறக்கக்கூடாது….
அமெரிக்க எழுத்தாளர் வில்லியம் பரோஸின் ‘நேக்கட் லஞ்ச்’ (Naked Lunch) என்கிற நாவலில், நாயகன் வில்லியம் லீ-க்கு பூச்சி மருந்து அடிப்பதால் ஏற்படும் மூச்சு திணறல் அவனுள் போதை மற்றும் காம உணர்வை கிளறுகிறது.
இத்தகைய புலனின்பம் சார்ந்த அக தேடலின்போது தனது மனைவியை தவறுதலாக பூச்சி மருந்தால் கொல்கிறான். இதனால் ஏர் பில்லோவால் அவளை அமுக்கி கொல்லும் திட்டம் முறியடிக்கப்படுகிறது (ஏர் பில்லோவால் கொல்ல முடியாது என்றாலும் சர்ரியலிச நாவல் என்பதால் இதில் யதார்த்தம் தவிர்க்கப்படுகிறது). வில்லியம் மனைவியை திட்டமிட்டு கொன்றதாக போலீஸ் சந்தேகிக்கிறது. காவல் துறை பெரிய அதிகாரி அவன் வீட்டிற்கு வந்து, ‘உங்கள் மனைவிக்கு யாராவது எதிரிகள் இருக்கிறார்களா?’ என்று கேட்கிறார்.
போலீசிடமிருந்து தப்பிக்க நாயகன் தேசாந்திரம் போகிறான். பிடிபடும் கோர அச்சத்தின் தீவிரம் தந்த வேதனை அவனை ஒருபுறம் நெருக்க, மறுபுறம் வாழ்க்கை அவனுக்கு பலவித அனுபவங்களை புகட்டியபடி இருக்கிறது.
இந்தப் பாடங்களை நாமும் தினமும் கற்றுக்கொண்டுதான் இருக்கிறோம். வாழ்க்கை கற்பனை கதாபாத்திரங்களுக்கும் நிஜமனிதர்களுக்கும் வித்யாசம் பார்ப்பதில்லை. சூரிய ஒளி தெருவிலுள்ள மழைநீர் குட்டைகளில் பிரதிபலிப்பது போல் என் சகபயணியின் கனவு பல கணவர்களின் மனதில் புழங்குகிறது. அடைய இயலாத ஒரு குதிரைத் தந்தமாகவே அந்த கனவு ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் உறங்குகிறது. (இதே ரீதியில் இன்னும் இரு பாராக்கள்)
இலக்கிய கதை முடிந்தது. இப்போது உலக சினிமா படத்தை பற்றி எழுத வேண்டும். தரமான படமாக இருக்க தேவையில்லை. வெளிநாட்டவரால் வெளிநாட்டில் எடுக்கப்பட்ட படமாக இருந்தால் போதும். அழகியல் நேர்த்தி துடித்து வெளிக்கிளப்பும் உளவியல் ஒருங்கிணைப்புக்காக அதே பார்முலாவை பின்பற்றுங்கள்….
1991-ம் ஆண்டு ஷோஹை இமமுரா இயக்கி டோக்கியோவில் வெளிவந்த ‘த ஈல்’ (The Eel) என்ற படம் கணவர்களின் தீராத கொலையுணர்வைப் பற்றியது. கோஜி யகுஷோ நடித்த இந்தப் படம், மனைவியின் ரகசிய சுரோணித சிநேகிதத்தை கண்டுபிடிக்கும் ஒரு கணவன் அவளை கொன்றுவிட்டு சிறைக்குச் சென்று பின்னர் ஜாமீனில் வெளிவந்து முடிதிருத்து நிலையம் அமைத்து இயல்பு வாழ்க்கையை மீட்க முயல்வதையும் அவன் கடையில் வேலைசெய்ய வரும் ஒரு பெண் அவன்பால் ஈர்க்கப்படுவதையும் பற்றியது.
டகுரோ யமாஷிட்டா …. (இரண்டு பாராக்களில் கதையை விளக்குங்கள்)
டகுரோவும் கெய்கோவும் சுய வாழ்க்கையின் அக நெருக்கடிகளை தத்தமது வழிமுறைகளில் எதிர்கொள்ளும் மனப்பான்மையின் இரண்டு மாறுபட்ட வடிவங்கள். சமூகம் அவர்கள் பலவீனத்தை அறிந்து பந்தாடுகிறது. உலக சினிமா பாத்திரங்கள் என்பதால் அவர்களுக்கு அக தேடல், அடையாள சிக்கல்களும் உள்ளன. (முடிந்தால் வளர்த்துங்கள்)
அடுத்து பெட்டிச் செய்தி இருந்தால் அதில் உங்களுக்கு பிடிக்காத யாரை பற்றியாவது எழுதுங்கள். அவர்களைப் பற்றி எழுதி கேவலப்படுத்த வேறு சந்தர்ப்பம் வாய்க்காது. எடுத்துக்காட்டாக எனக்கு சிட்னி ஷெல்டனை பிடிக்காது. அவரைப் புகழ்ந்து பதினைந்து வரிகள் எழுதினால் வேலை முடிந்தது.
இடம் இருந்தால் – அனேகமாக இருக்காது – ஒரு ஜென் கதையை சேர்த்துக்கொள்ளுங்கள். வலைதளத்தில் தேடினால் கிடைக்கும். கிடைக்கவில்லை என்றால் நீங்களே எழுதிவிடலாம். மாதிரிக்கு:-
“குருவே, முரண்களை சேர்க்கமுடியுமா?” என ஓர் இளந்துறவி லி மு பாயிடம் கேட்டார்.
தேநீர் தயாரித்துக் கொண்டிருந்த லி மு பாய் கொதிக்கும் வெந்நீரை அவர் முகத்தில் விட்டெறிந்து, “முடியாமலா?” என்றார்.
யார் வேண்டுமானாலும் பத்தி எழுதலாம். ஆனால் ஒரு ஒழுங்கு இருக்க வேண்டும். பத்திதானே என்று அலட்சியமாக எழுதக்கூடாது. எழுத்து எளிமையாகவும் காத்திரமாகவும் இருக்க வேண்டும். சிலருக்கு எளிமை பிரம்ம பிரயத்தனம் செய்தாலும் கைவராது. வேறு சிலருக்கு சிக்கலான எழுத்து மட்டுமே கைவரும். இதற்கு உதாரணங்களை எனது புத்தகங்களின் பின்னட்டை விளக்கங்களில் பார்க்கலாம்.
வெளிநாட்டவர்களின் பெயர்களை ஒவ்வொரு இடத்தில் ஒவ்வொரு விதமாக எழுத வேண்டும். உதாரணமாக, அன்னா கிரிகோரிவ்னா, அன்னா கிரிகோர்வினா, அன்னா கிரிகிரிவேனா ஆகிய மூன்று பெயர்களும் ஒரே நபரைக் குறிக்கின்றன. அதே சமயத்தில் மூன்று பெயர்களும் தவறாக எழுதப்பட்டுள்ளன. இது முக்கியம்.
தகவல் பிழைகளில் கவனம் தேவை. ஆங்கிலத்தில் Authenticity என்கிறார்கள். ஒரு கட்டுரைக்கு ஆதண்டிசிடி தருவது தகவல் பிழைகளே. ஆகவே உங்கள் பத்தியிலோ அல்லது கட்டுரையிலோ குறைந்தது இரண்டு தகவல் பிழைகளாவது இருக்க வேண்டும். தகவல் பிழைகள் இல்லை என்றால் கட்டுரை திருப்பி அனுப்பப்படலாம். இது என்னுடைய அனுபவம். இலக்கணப் பிழைகளும் எழுத்து நடையை மெருகேற்றும், ஆனால் அவை கட்டாயமல்ல.
இறுதியாக, மிதமிஞ்சிய தன்னம்பிக்கையைக் கைகொள்ளுங்கள். அது என்னைப் போன்ற ஒரு எழுத்தாளனுக்கு மிகப்பெரிய சொத்து. எனக்கு எல்லாம் தெரியும் என முகம் பார்க்கும் கண்ணாடியை பார்த்து சொல்லிக்கொள்ளுங்கள். என்னைப் போல் எழுத அபிலாஷித்தால் உங்களை உலக எழுத்தாளர்களின் வரிசையில் ஒருவராக நினைத்துக்கொள்ள வேண்டும்.
எல்லாவற்றுக்கும் அடித்தளமான ஒரு விதிமுறை உண்டு. அது:- பத்தி எழுத்து பத்தி எழுத்தாக இருக்க வேண்டும்.
கருத்துகள்
கருத்துரையிடுக