
அரும்பாகி, மொட் டாகி, பூவாவாக மலர்வதைப் போலத்தான் காதலும் படிப்படியாக அரங்கேறும். அது மெல்ல கருவாகி உருவாவதை படிகமாக்கல் (Crystallization) என்று வர்ணித்திருக்கிறார் ஒரு ஆராய்ச்சியாளர்.
முதலில் ‘லஸ்ட்’ (Lust) என்று சொல்லப்படும் காமம். எதிர்ப் பாலினத்தைக் கண்டதும் ஏற்படும் கவர்ச்சி, ஈர்ப்பு, வெறி, மோகம், தாபம்... இதை எப்படி வேண்டுமானாலும் வைத்துக்கொள்ளலாம். அந்தச் சமாச்சாரங்களின் அடிப்படை இரண்டு ஹார்மோன்கள். ஒன்று ஆண் தன்மைக்குக் காரணமான டெஸ்டோஸ்டீரோன் (Testosterone). மற்றொன்று பெண் தன்மைக்குக் காரணமான ஈஸ்ட்ரோஜன் (Estrogen). இந்த வேதிப்பொருட்கள் நம் உடம்பில் பிரவாகமாகச் சுரந்து வரும்போது, பதின் பருவம் நம்மைத் தாலாட்டத் தொடங்கும். உடலில் ஏற்படும் பதின் பருவ வயதின் மாற்றங்கள் தொடங்கி இல்லறத் துணையைத் தேடுவதுவரை அனைத்துக்கும் இந்த இரண்டு ஹார்மோன்கள்தான் காரணம்.
இளமை ஊஞ்சலாடும் காலத்தில் எதிர்ப்பாலினத்தைக் கண்டதும் பிறக்கும் மோகமே அனைத்துக்கும் முதற்படி. புனிதமான காதலாகப் பூஜிக்கப்பட்டுப் பின் கல்யாணத்தில் முடிகிற வெற்றிக் காதலானாலும் சரி, அவசர அவசரமாக உடல் தேவையைப் பூர்த்தி செய்துவிட்டு எதுவுமே நடக்காததுபோல் ஆளுக்கொரு திசையில் நடையைக் கட்டும் வெற்றுக் காதலானாலும் சரி, ஆரம்பம் என்னவோ இந்த முதல் நிலைதான்.
வயிற்றுக்குள் பறக்கும் பட்டாம்பூச்சி
அடுத்தது எதிர்ப் பாலினம் மேல் ஏற்படும் ஈர்ப்பு (attraction). ‘காதலில் விழுந்தேன்’ என்பது இதுதான். கனவுகளில் மிதப்பது, பசி மறப்பது, படபடப்பது, உறக்கமின்மை, உறங்கத் தேவையின்மை, கை நடுக்கம், வயிற்றுக்குள் பட்டாம்பூச்சி பறப்பது… இப்படிப் பல உணர்வுகளின் கலவையாக நம்மை ஆக்கும் ‘காதல் காலம்’ இது. இந்த நிலையில் ஒருவர் மீது ஒருவர் கவர்ந்திழுக்கப்பட்டு நெருங்கி வருவார்கள்.
குறைகள் எதுவுமே கண்ணுக்குத் தெரியாது. கொஞ்சமாக அலைவரிசை ஒத்துப்போயிருந்தாலும், அதீதமாக மிகைப்படுத்திக் காற்றில் பறப்பார்கள். அடுத்தவரின் ‘பாசிடிவ்’ மட்டுமே தெரியும். ‘நெகடிவ்’ என்பதை சுத்தமாகக் கண்டு கொள்ள மாட்டார்கள். காரணம் ‘காதலுக்குக் கண் இல்லை’ என்று அனைவருமே அறிந்திருப்பீர்கள்!
வழிநடத்தும் வேதிப்பொருட்கள்
‘நாம் காதலிக்க ஆரம்பிக்கும் அந்த நொடிவரை, மூளை தொடர்ந்து வேலை செய்கிறது’ என்ற மேற்கோளைப் படித்தேன். நகைச்சுவையாகச் சொல்வதாக வைத்துக்கொண்டாலும், எவ்வளவு ஆழமான கருத்து இது! காதலிக்க ஆரம்பித்தவுடன் மூளை வேலை செய்வதில்லையாம். காதல் காலம் ஒரு கண்ணாமூச்சி காலம். ஹார்மோன்களால் ஆளப்படும் இந்தக் காலகட்டம் காதலில் மிகவும் முக்கியமானது.
ஒரு இசைக்கோவைக்கு எப்படி ஏழு ஸ்வரங்கள் தேவைப்படுகின்றனவோ அதுபோல காதலெனும் உணர்வுக்கோவைக்கும் சில வேதிப்பொருட்கள் தேவைப்படுகின்றன. அட்ரினலின் (adrenaline), டோபமைன் (dopamine) மற்றும் செரடோனின் (serotonin) என்ற மூன்று நியூரோ டிரான்ஸ்மிட்டர்கள்தான் காதல் காலத்தின் இயக்குநர்கள். நமது மூளை லட்சக்கணக்கான மூளை நரம்பு செல்களால் ஆனது. நியூரான் என்பது மூளை செல்லின் பெயர். ஒரு நரம்பு செல்லுக்கும் இன்னொரு நரம்பு செல்லுக்கும் தகவல் பரிமாற்றத்துக்குப் பயன்படுபவைதான் இந்த நியூரோ டிரான்ஸ்மிட்டர்கள்.
காதல் போதைக்குக் காரணம் என்ன?
காதலின் ஆரம்பத்தில் ஏற்படும் படபடப்பு, வியர்த்துக் கொட்டுவது, உள்ளங்கைகள் சில்லிட்டுப் போவது, நா வறண்டு போவது போன்ற நிகழ்வுகளுக்குக் காரணம் அட்ரினலின். மனம் கவர்ந்தவரின் நினைவே ஒரு போதையைப் போன்றதுதான். நினைத்தாலே இனிக்கும் அந்தப் பெருமகிழ்ச்சிக்கு டோபமைன் காரணம். அவரை நினைத்தாலே ஒரு சக்தி பெருகி தூக்கம், உணவு தேவைப்படாத நிலையிலும் இன்பம் ஊற்றெடுக்குமே, அதற்குக் காரணம் டோபமைன்.
இவை தவிரக் காதலில் இருக்கும்போது எந்நேரமும் அவரைப் பற்றிய நினைவு நம் உள்ள வெளியெங்கும் வியாபித்திருக்கும்; திரும்பத் திரும்ப அந்நினைவுகளே நம்மை ஆக்ரமித்திருக்கும் என்று முந்தைய அத்தியாயங்களில் சொல்லியிருந்தேன் அல்லவா? அந்த உணர்வுகளுக்கெல்லாம் காரணம் செரடோனின். பெரும்பாலான காதலர்கள் இந்தக் கட்டத்தில்தான் இருப்பார்கள். அந்தக் காதல் கல்யாணத்தில் முடிகிறதா இல்லை, ஆளுக்கொரு திசையில் கிளம்பிச் செல்கிறோமா என்பது முடிவாகும் கட்டம் இது.
உயிரும் நீயே உணர்வும் நீயே
கவர்ச்சிப் படலம் முடிந்த பிறகு வருவது அட்டாச்மென்ட் (Attachment) என்னும் இணைப்புப் படலம். எப்படியோ அந்தக் காதலர்களுக்குத் திருமணம் ஆகிவிடுகிறதென்று வைத்துக்கொள்வோம். காதல் தன் பூச்சைக் கழுவிக்கொண்டு காமக் கடலில் இருவரையும் தள்ளிவிடும். சம்சார சாகரத்தில் திளைக்கின்றனர் தம்பதியர். அப்படியான ஒரு உறவு உடலால் ஏற்படும்போது ஹார்மோன்கள் சுரக்காமலா விட்டுவிடும்? உறவின் உச்சத்தில் இருக்கும்போது சுரக்கும் முக்கியமான ஹார்மோன் ஆக்ஸிடோசின் (Oxytocin). கணவன் மனைவிக்கு இடையேயான ஜோடிப் பிணைப்புக்கு (pair bonding) மூலகாரணமாக இருப்பது இந்த ஆக்ஸிடோசின். இவள் என்னவள், எந்தச் சூழலிலும் இவளைப் பிரிய மாட்டேன், இவள் எனக்கு எப்போதும் வேண்டும் என்பன போன்ற சிந்தனைகளின் காரணகர்த்தா இந்த ஆக்ஸிடோசின்.
இல்லற உறவில் அடிக்கடி ஈடுபடும் தம்பதியினரிடையே அதிக அளவு நெருக்கமும் பிணைப்பும் ஏற்படும் என்பது உளவியல் உண்மை. அதற்குக் காரணமும் ஆக்ஸிடோசின்தான். தம்பதியினரின் உறவுப் பிணைப்பைத் தாண்டி இந்த ஹார்மோனின் இன்னொரு வேலையைக் கேட்டால் சிலிர்த்துப்போவீர்கள். குழந்தை பிறக்கும்போது வெளிப்படுகிற ஹார்மோனும் இதுதான். அதனால்தான் இயல்பாகவே தாய்க்குத் தன் சிசு மீதான நெருக்கமும் பிணைப்பும் வந்துவிடுகிறது. மாசற்ற தாய்ப்பாசத்துக்கே மூலகாரணமாக இருப்பதால் இந்த ஆக்ஸிடோசினுக்குத் தொட்டில் ஹார்மோன் (Cuddle Hormone) என்ற செல்லப்பெயரும் உண்டு.
நீடித்து நிலைக்கும் பிணைப்பு
ஒருவரைக் காதலித்து ஒன்றுசேர்வதோடு காதல் முடிவதில்லை. அவரோடு மட்டுமே என் வாழ்க்கை என்ற ‘ஒருவனுக்கு ஒருத்தி’ தத்துவத்துக்கும் அடிப்படை ஒரு ஹார்மோன்தான். நம் சிறுநீரகச் செயல்பாட்டில் முக்கியப் பங்கு வகிக்கும் வாசோபிரெஸின் (Vasopressin) என்ற ஹார்மோன் மன ரீதியான பிணைப்பிலும், துணையைப் பாதுகாப்பதிலும் அற்புதப் பங்காற்றுகிறது.
ஏற்பட்ட உறவை நீண்டகாலத்துக்குக் கொண்டு செல்லும் இன்னொரு அட்டாச்மெண்ட் ஹார்மோன் இது. காதலை இயற்கை எப்படி வழிநடத்துகிறது பாருங்கள்! வழி தெரியாமல்தான் பலரும் காதல் வாகனத்தை ஓட்ட ஆரம்பித்துவிடுகிறோம். வழியைப் புரிந்து, தெளிந்து வாகனத்தை ஓட்டிப்பாருங்கள். காதல் கைகூடும். ஏனெனில் காதலும் ஓர் அறிவியல்தான்!
கட்டுரையாளர், மனநல மருத்துவர்.
தொடர்புக்கு: drmohanv18@gmail.com
கருத்துகள்
கருத்துரையிடுக