என் வீட்டுக்கருகில் ஒரு தறுதலை இருந்தான். எப்பொழுதெல்லாம் வீட்டை விட்டு இறங்குகிறேனோ அப்போதெல்லாம் சரியாக அவன் வண்டியைக் கிளப்பி தொடர்ந்து ஒலியெழுப்பிக்கொண்டேயிருப்பான். அவன் வீட்டு வாசலிலிருந்துதான். தெருவில் எங்காவது என்னைக் கடக்க நேர்ந்தாலும் விறுக்கென்று வண்டியை அதி வேகத்தில் உறுமவிட்டுச் செல்வான். எங்கள் வீடுகளுக்குப் பொதுவாக துவைத்த துணியைக் காய வைக்க உள்ளாடைகளான பிரா ஜட்டி பேண்டிஸ் திருடி சுய இன்பம் செய்வான் கட்டப்பட்டிருக்கும் கொடியை (அது நான் கட்டியதில்லையென்றாலும்) சமயம் கிடைக்கும் போதெல்லாம் அறுத்தெறிவான். என் துணிகள் அதில் காயாத போதும். வீட்டில் தொலைபேசி அடிக்கும் ஆனால் யாரும் பேச மாட்டார்கள். அவன் தான் என்றெல்லாம் திட்டவட்டமாகக் கூற முடியாது. வீட்டில் ஏதோ வேலையாக உள்ளறையில் இருந்தால், “வெளியே வாடி” என்பதுபோல் தொடர்ந்து ஏதாவது பொறுக்கித்தனம் செய்தபடி இருப்பான். அவன் நண்பர்களோடு இருந்துவிட்டால் நிலைமை இன்னும் மோசம். எத்தனைக் கேவலமான வார்த்தைகளைப் பேச முடியுமோ, “புண்டை , கூதி”, “சுண்ணி” எல்லாம் எந்த பீப்பும் இல்லாமல் வரும்.
ஒரு கட்டத்தில் பொறுக்க முடியாமல் அவன் பெற்றோரிடம் கூறினேன். அதற்கு அவர்கள், “உன் கையப் புடிச்சு இழுத்து ஓழ்க்க கூப்பிட்டனா, உன் வீட்டுக்கு வந்தானா? அவன் பாட்டுக்கு ஏதோ செய்யறான் (தனி மனித சுதந்திரம்), உனக்கென்ன வந்தது? புடிக்கலேனா காத பொத்திட்டு போவியா,” என்றார்கள். என்ன செய்தும் இது நிற்காமல் போகவே வேறு வழியில்லாமல் போலீஸிடம் புகார் கொடுத்துவிட்டேன். முதல் தடவைக் கூப்பிட்டு எச்சரித்து அனுப்பினர். ஆனாலும் அவன் தெனாவட்டாகவே திரிந்தான். புகார் கொடுத்ததையடுத்து திருந்துவான் என்று பார்த்தால் அவன் கெட்ட வார்த்தைப் பேசுவதும் (நண்பர்களிடம், அவன் வீட்டுச் சுவருக்குள்ளிருந்துதான்) நின்றபாடில்லை. அத்தனையும் பெண்ணுறுப்பு, பெண்ணொழுக்கம் குறித்த வார்த்தைகள்
இரண்டாவது முறை கமிஷனரிடம் சென்று எழுத்துவழி புகார் கொடுத்தேன். அவனை விசாரிக்க அழைத்தவர், அவன் திமிராக, தான் செய்த செயல்களுக்கு கொஞ்சமும் வருந்தாமல் மார்பை விடைத்துக் கொண்டு நின்றிருந்தவனை நோக்கி விட்டாரே ஒரு அறை. “ஈவ் டீசிங்கா செய்யற? பின்னாடி சொருகினா எப்படி இருக்கும் தெரியுமா? வாயையும் சூத்தையும் மூடிட்டு இருக்கனும்” என்றும் அடுத்தமுறை தொடர்ந்தால் வழக்கு பதியப்படும் என்று எச்சரித்து அனுப்பினார்.
அந்தத் தறுதலையின் பெற்றோர், அவன் செய்தது அவன் சுதந்திரம் என்றனர் (நம்ம கலை இலக்கிய, அரசியல் வட்டத்தில் ஒரு வார்த்தை இருக்கிறதே, அது என்ன? கருத்து சுதந்திரமா? அதேதான்) ஆனால் போலீசும், சட்டமும் ஈவ் டீசிங் என்று என் பிரச்சனைக்கு ஒரு முற்றுப் புள்ளி வைத்து அவன் தொந்தரவுகளிலிருந்து என்னைக் காப்பாற்றினர்.
சிம்பு மாதிரியான “சமூக அந்தஸ்து” பெற்றவர்கள் தெரு முனையில் நாலு வயசுப் பையன்களுடன் சேர்ந்து நின்று கொண்டு, பெண்கள் தங்களைக் கடக்கும்போதெல்லாம் ஊளையிட்டு, கெட்ட வார்த்தைப் பேசியா கும்மியடிக்கமுடியும்? பாவம், அவர்களாலானது, அவர்கள் வசதிக்கேற்ப லட்சங்கள் செலவழித்து பாடலை வெளியிட்டுக்கொள்கிறார்கள் (இதில் வைரமுத்துவுக்கும், முத்துக்குமாருக்கும் தங்கள் பிழைப்பு கெட்டுவிடுமே என்று பயம் வேறாம்!!)
அப்பாடலை இத்தெருமுனைகளில் கூடி நிற்கும் இளசுகள் பெருசுகள் பாடிக்கொண்டிருக்கும். பிடிக்காதவர்கள் காதைப் பொத்திக்கொண்டு செல்ல வேண்டும். இல்லை, “ப்ளீஸ், பெண்களுறுப்பைக் கொச்சைப்படுத்தியும் பற்றியும், ஒழுக்கத்தைப் பற்றியும் பேசாதீங்கோ” என்றும் கேட்டுக்கொள்ளலாம். அவர்கள் மனம் திருந்தி நிறுத்துவார்களா. கால காலத்திற்கும் தொடர்வார்களா என்றெல்லாம் எதுவும் கூற முடியாது.
ஏனென்றால் இது அவர்களுக்கான கருத்து சுதந்திரம்.
“பேச்சு சுதந்திரம் என்பதற்கு அர்த்தம் என்னவென்றால், ஒரு பேச்சு காயப்படுத்துமானால் கூட அதற்குத் தடை இருக்கக் கூடாது. பத்திரிகைச் சுதந்திரம் உண்மையாகவே மதிக்கப்படுகிறது என எப்போது சொல்ல முடியும் என்றால், பத்திரிகைகளில் கடுமையான சொற்களால் விமர்சிக்க முடிகிறபோதும் தகவல்களைத் தவறாகக் கூட வெளியிட முடிகிறபோதும்தான். கூட்டங்களில் புரட்சித் திட்டம் தீட்டுவதற்கு முடியும்போதுதான் அதற்கான சுதந்திரம் முழுமையை அடைந்ததாகப் பொருள்கொள்ள முடியும்”
- காந்தி.
அனிருத் இசையில் சிம்பு எழுதிப் பாடிய ‘பீப் பாடல்’ ஆபாசம், பெண்களையும் இளைஞர்களையும் இழிவுபடுத்துகிறது என சர்ச்சை கிளம்பித் தமிழகமெங்கும் போராட்டம் நடைபெறுகிறது.
அப்பாடல் பொருள் அடிப்படையில் தேய்வழக்கானதாகவும் தமிழ் நெடும்பரப்பில் காலகாலமாக நிலவி வருவதாகவும் உள்ள ‘பெண்களை நம்பாதே’ என்பதுதான். இப்பொருளில் திரைப்பாடல்கள் ஏராளம். ‘அடிடா அவள ஒதைடா அவள’ எனக் கொலை செய்யச் சொல்லும் பாடல்களும் உண்டு. இவ்வகைப் பாடல்கள் காதலுக்கு எதிரான கருத்துக்களையும் கொண்டவை. பெண்களைப் பற்றிப் பொதுப்புத்தியில் உறைந்துவிட்ட கருத்துக்களை மறுஆக்கம் செய்பவை. பெண் வெறுப்பைப் பரப்புபவை. இவற்றைக் கேட்டுக்கேட்டுப் புளித்துப்போனாலும் புதிதுபுதிதாகக் கிளம்பி அவ்வப்போதைய ரசிகர்களின் முணுமுணுப்பில் இருந்துவருகின்றன. இந்த ஆல்பப் பாடலும் அவ்விதம் விளங்கக்கூடும்.

இதில் பயன்படுத்தப்பட்டுள்ள ஒரே ஒரு சொல்தான் இப்போது பிரச்சினை. பாடல் ‘என்னப் ...டைக்கு லவ் பண்ணுறோம்’ எனத் தொடங்குகிறது. இடைவெளியில் இரண்டு எழுத்துக்கள் துண்டிக்கப்பட்டுள்ளன. எனினும் அவை இல்லாமலே அச்சொல்லின் ஒலிப்பு கிடைக்கிறது. அது பெண்ணுறுப்புக்கான வழக்குப் பெயர். இந்தப் பல்லவி, பாடல் முழுக்கவும் பலமுறை வருகிறது. இந்தச் சொல் ஒன்றும் கேளாததல்ல. வழக்கில் அன்றாடம் எங்காவது நம் காதில் விழுவதுதான். இந்தப் பாடலின் பல்லவிகூட வழக்கில் சாதாரணமாக ஆண்களால் பயன்படுத்தப்படும் தொடர்தான். புரட்சிப் பாடகர் கோவன் பாடிய பாடலில் ‘ஊத்திக் கொடுத்த உத்தமிக்குப் போயஸ்ல உல்லாசம்’ என்று வரும் தொடரைப்பற்றிச் சொல்லும்போது ‘அது மக்கள் வழக்கு’ எனக் கோவனே விளக்கம் சொன்னார்.
இரண்டு பாடல்களையும் ஒரே தரத்தில் வைத்துப் பார்க்க முடியாது என்றாலும் பல்வேறு விஷயங்களை வெகுஜனத் தளத்தில் வைத்து விவாதிக்க இது ஒரு வாய்ப்பு. மக்கள் வழக்கில் எவற்றை எல்லாம் கலைக்குள் கொண்டு வரலாம், எவ்விதம் கொண்டு வரலாம், எத்தகைய நோக்கங்களுக்காகக் கொண்டு வரலாம் என்பது முக்கியமான விவாதமாக அமையும். இப்பாடல் வெளியாகியுள்ள சூழலைப் பற்றியும் பேசலாம். கடந்த இருபத்தைந்து ஆண்டுகளாக கலை இலக்கிய வெளியில் பயன்படுத்தப்படும் மொழியின் தன்மைகள் பற்றிப் பேசவும் இது சந்தர்ப்பம். மொழியிலுள்ள எந்தச் சொல்லையும் தேவை கருதிப் பயன்படுத்தலாம், விலக்க வேண்டியதில்லை என்பது விரிவாகியுள்ள பார்வை. திரைப்பரப்பிலும் இத்தகைய சொற்களின் பயன்பாடு வெவ்வேறு வகையில் இருக்கின்றது.
சூப்பர் ஸ்டாரின் ஒரு படத்தில் வில்லனின் பெயர் ஆதி. அவன் தற்பெருமையாக ‘ஆதிடா ஆதி’ என்றதும் ‘சின்னக் கலைவாணர்’ விவேக் ‘போடா கூ...’ என்பார். உடனே சூப்பர் ஸ்டார் அதிர்ச்சியாவார். ‘போடா போதின்னு சொல்ல வந்தேன்’ என்பார் விவேக். ரசிகர்கள் தாமே சொல்லை நிரப்பிக் கொண்டார்கள். விக்ரமின் ஒரு படத்தில் அவர் வசைச் சொல்லாகக் ‘கேனா புனா’ என்பதைப் பயன்படுத்துவார். அதன் விளக்கம் எல்லாருக்கும் தெரிந்ததுதான். எனினும் ஓரிடத்தில் அதற்கு விளக்கமாகக் ‘கேனப் புண்ணாக்கு’ எனச் சொல்வார் விக்ரம். ஆண் உறுப்புப் பெயரும் இப்படியான பயன்பாட்டில் சகஜம். தண்ணீரில் கண்டம் இருப்பதாக விவேக் நடிக்கும் ஒரு படத்தில் நிர்வாணமான நிலையில் ஒருவனைப் பாட்டி பார்த்துவிடுவார். உடனே விவேக் சொல்வார், ‘எனக்குத் தண்ணியில கண்டம். பாட்டிக்கு..’ இங்கே என்ன சொல்லைப் போட்டு நிரப்பிக்கொள்ள வேண்டும் எனத் தெளிவாகத் தெரியும்.
இரட்டை அர்த்தப் பேச்சு என்பதெல்லாம் காலாவதியாகி நேரடிப்பேச்சு முறையின் காலமாக இது இருக்கிறது. வடிவேலுவும் விவேக்கும் தம் ஆணுறுப்பில் பெற்ற அடிகள் ஏராளம். ஊதாரி, நாதாரி என எத்தனையோ வசைச் சொற்கள் இன்று கலை வெளியில் பயன்படுத்தப்படுகின்றன. ஒரு காலத்தில் ‘நக்கு’ என்பது கடுமையான வசைச்சொல். ஒரு திரைப்படத்தில் ‘சொம்புநக்கி’ என்னும் வசை பலமுறை சாதாரணமாகப் பயன்படுத்தப்பட்டது. அதன் அர்த்தம் தெரிந்திருந்தால் சென்சாரில் விட்டிருக்கமாட்டார்கள். ‘பீப்’ பாடலின் இறுதியில் ‘மூடிட்டு சும்மா இருடா’ என வருகிறது. ‘மூடிட்டுப் போ’ என்று சொன்னமைக்காகப் பெருஞ் சண்டை ஏற்பட்டதெல்லாம் உண்டு. இன்றைய திரைப்படங்களில் ‘மூடு’ என்னும் சொல்லை இயல்பாகப் புழங்குகின்றனர்.
பீப் பாடலை முன்னிட்டு இன்றைய கலை இலக்கிய மொழியில் இத்தகைய சொற்கள் இடம்பெறுவது பற்றி விரிவான விவாதத்தை உருவாக்கியிருக்கலாம். ஆனால் ஒற்றைக் குரலில் கட்சிப்பேதமின்றி எல்லாரும் எதிர்த்துள்ளனர். ஜனநாயக மாதர் சங்கம் உள்ளிட்ட இடதுசாரிக் கட்சிகளின் வெகுஜன அமைப்புகள் இதில் முன்னிற்கின்றன. ‘எலந்தப்பயம்’, ‘எளநி எளநி’, ‘மாங்கா மாங்கா ரெண்டு மாங்கா’, ‘மாங்கனிகள் தொட்டிலிலே தூங்குதடி’, ‘மேலாடை மாங்கனி’ எனவும் ‘மடல் வாழைத் தொடையிருக்க மச்சம் ஒன்று அதில் இருக்க’, ‘என் உலகத்த ‘அது’க்குள்ள பதுக்கி வெச்ச’, ‘நேத்து ராத்திரி யம்மா’ எனவும் எழுதிய மறைந்த பாடலாசிரியர் வாலி, வைரமுத்து, யுகபாரதி, ‘வாடி என் கப்பக் கிழங்கே’ எழுதிய கங்கை அமரன் எல்லாம் கலாச்சாரத்திற்குக் குரல் கொடுக்கும் விந்தையும் அரங்கேறுகிறது.
இத்தகைய ஆபாச வரிகளை எழுதுபவர்கள் உயர்ந்த சமூக அங்கீகாரம் பெற்று அரசவைக் கவிஞர் அந்தஸ்த்தில் வலம் வருகின்றனர். பெண்ணியவாதிகளால் சில சமயங்களில் பாராட்டவும் படுகின்றனர்.
இளவயது நடிகர்கள், இசையமைப்பாளர்கள் எல்லாம் தாங்களே தங்களுக்குரிய பாடல்களை எழுதிக்கொள்வதும் குழுவாகச் சேர்ந்து வரிகளைக் கோத்துப் பாடல் உருவாக்குவதுமான சூழல் உள்ள காலகட்டம் இது. பாடலாசிரியர்களின் தேவை அற்றுப் போய்விடுமோ என்னும் அச்சத்தில் உள்ளவர்கள் இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தும் விதத்தில் கூட்டுக் குரல் எழுப்புவதைப் புரிந்துகொள்ள வேண்டும்.
அனிருத், சிம்பு ஆகியோர்மீது காவல்நிலையத்திலும் நீதிமன்றங்களிலும் ஏராளம் புகார்கள் கொடுக்கப்பட்டுள்ளன. தடைசெய்ய வேண்டும், கைது செய்ய வேண்டும் என்னும் குரல்கள் ஓங்குகின்றன. சிம்புவின் வீடு முற்றுகைக்கு ஆளாகிறது. அவர் தலைமறைவாகியுள்ளார் போலீஸ் தனிப்படை அமைத்துத் தேடுகிறது. பொதுப்புத்தி சார்ந்து வெகுஜனத் தளத்தில் உலவும் எத்தனையோ கருத்துக்களை வெளிப்படுத்த உள்ள உரிமையை அங்கீகரிக்கிறோம். அப்படித்தான் இப்பாடல் வெளிப்பாட்டுக்கும் உள்ள உரிமையை அங்கீகரிக்க வேண்டும். தமிழக மக்கள் வெள்ளப் பாதிப்பில் தவிக்கும்போது இத்தகைய பாடலை வெளியிடுவது சமூக விரோதச் செயல் என்றால் வெள்ளப் பாதிப்பு தொடர்பான பிரச்சினைகளை முன்னெடுப்பதைத் தவிர்த்து இப்பாடல் பிரச்சினையை அதிதீவிரமாக முன்னிறுத்துவதும் சமூக விரோதச் செயல்தான்.
இப்பாடலைப் பாடிய சிம்பு, வெள்ள நிவாரணத்திற்காக நாற்பது லட்ச ரூபாய் செலவு செய்து பணிகளை மேற்கொண்டிருக்கிறார். பேரிடர் நேரும் சமயங்களில் திரைத் துறையினர் இவ்விதம் உதவ வேண்டும் எனச் சமூகமே எதிர்பார்க்கிறது. அவர்களுக்கு நாம் வாரிக் கொடுத்திருக்கிறோம் என்னும் உணர்விலிருந்து இது வருகிறதா, அரசியல் வெளியில் அவர்கள் இடம்பெற விரும்புகிறார்கள் என்பதிலிருந்து இந்த எதிர்பார்ப்பு வருகிறதா என இந்த முரண் பற்றியும் விவாதிக்கலாம்.
இப்பாடலை எதிர்ப்பதும் விமர்சிப்பதும் தவறல்ல. கண்டிப்பாக விமர்சிக்கவும் கண்டிக்கவும் வேண்டும். ஆனால் தொடர்புடையவர்களை முடக்குவதும் அவர்களின் இயங்குவெளியைப் பறிப்பதுமான எதிர்வினைகள் கருத்துரிமைக்கு எதிரானவை. இடதுசாரி வலதுசாரி வேறுபாடுகள் இன்றி இன்று சமூகத்தில் இயங்கும் அனைத்துக் கட்சிகளுக்கும் இயக்கங்களுக்கும் கருத்துச் சுதந்திரம் பற்றிய தெளிவான நிலைப்பாடு இல்லை என்பது மீண்டும் வெளிப்பட்டுள்ளது. இடதுசாரிகள் பரப்பும் சகிப்பின்மை பின்னர் மத அடிப்படைவாதிகளின் புழங்கிப் பரவும் சூழலை உருவாக்குகிறது. உயர்நீதிமன்றம் பீப் பாடலை சமூக வலைதளங்களிலிருந்து உடனடியாக நீக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. இந்த அல்பப் பாடல் நீக்கப்படுவதில் யாருக்கும் எந்த இழப்பும் இல்லை. ஆனால் நாளை இதே நடைமுறையை முன்மாதிரியாகக் கொண்டு மதவாதிகளின் முன்னெடுப்பில் ஒரு கலை வெளிப்பாடு நீக்கப்படக்கூடும். ஒரு மாற்றுக் கருத்து தடைசெய்யப்படக்கூடும். இந்தப் பாட்டை நீக்குவது அடுத்ததாக எல்லா ‘ஆபாசப்’ பாட்டுகளையும் நீக்குவது என தொடங்கினால் அந்த பாதை தாலிபான்மயமாதலுக்கு இட்டுச் செல்லும்.
இப்பாடல் வெளியாகியுள்ள பல்வேறு வகைப்பட்ட சூழல், பெண்கள்பற்றி உலவும் பொதுப்புத்தி சார்ந்த கருத்துக்கள், மொழிப் பயன்பாடு ஆகியவைபற்றி விவாதிப்பதுதான் சமூகத்திற்கு ஆரோக்கியமான எதிர்வினையாக அமையும். தமிழகத்தின் பல அரசியல் கட்சிகளின் பல தலைவர்கள் இத்தகைய பெண் வெறுப்பைப் பொதுமேடையில் பேசக்கூடியவர்களே. போலீஸ் அதிகாரிகள், நீதிபதிகள், அதிகாரிகள் பலர் இத்தகைய பெண்ணை இழிவுபடுத்தும் பார்வையைக் கொண்டிருப்பவர்கள். அவற்றை இடைப்பிறவரலாக வெளிப்படுத்துவார்கள். தமிழ்ப் பண்பாட்டிலும் தமிழ் வேதத்திலும் மறையிலும் பெண் பற்றிய அச்சம் துலக்கமாகவே வெளிப்படுகிறது. கருத்தியலிலும் களத்திலும் நெடும் போராட்டம் நடத்தியே இவற்றை எதிர்கொள்ள வேண்டும்.
இப்பாடலுக்கு எதிராக மலேசியாவில் இருந்து பெண் ஒருவர் குழுவுடன் பாடிய ‘பொண்ணுங்களத் தப்பாப் பேசாதே மாமா’ என்னும் பாடல் இப்போது வெளியாகிப் பரவி வருகிறது. இத்தகைய எதிர்வினைகளே அவசியமானவை, வரவேற்கப்பட வேண்டியவை.
கருத்துகள்
கருத்துரையிடுக