நாம் எப்போதும் சினிமாவைப் பற்றிப் பேச மட்டுமே பழக்குவிக்கப் பட்டிருக்கிறோம். மூக்கணாங்கயிறு கட்டப்பட்ட தொழுவத்து மாடோ அல்லது வண்டி மாடோ எப்படி கயிறு கட்டப்பட்ட அடுத்த நொடியிலிருந்து தன்னுடைய பாதையை இயந்திர கதியில் கண்ணுக்குள் கொண்டு வருமோ, அப்படி சினிமா மட்டுமே எங்கும் நீக்கமற நிறைந்திருக்கிறது. வெள்ளித்திரை அது என்பதை மறுப்பதற்கில்லை. ஜொலிக்கிற துருவ நட்சதிரங்கள் அங்கேதான் நிறைந்திருக்கிறார்கள் என்பதையும் ஒதுக்கித் தள்ளிவிட முடியாது. அதேசமயம் வெள்ளித் திரையையும் சார்ந்து வாழும் சின்னத் திரையில் அவ்வப்போது என்ன நடக்கிறது என எட்டிப் பார்த்துவிட்டு வருவது தப்பில்லைதானே? வெறும் நான்கு வரிச் செய்திகளாகவே முடித்து விட்டால் எப்படி? அமெரிக்கத் தேர்தலில் எல்லோரும் ஹிலாரிதான் வெற்றி பெறுவார் எனக் கணித்தார்கள். மனிதர்களைத் தாண்டி சில குரங்குகளும் தவளைகளும்கூட கணித்தன. ஆனால் மாறாக டொனால்ட் ட்ரம்ப் வெற்றி பெற்றார். ட்ரம்ப்பின் வெற்றியைப் போலவே சின்னத்திரையிலும் ஒரு வெற்றி பதிவு செய்யப்பட்டிருக்கிறது. சத்தமில்லாத சாதனை அது. அதேசமயம் அந்தச் சாதனைக்குப் பின்னால் உள்ள மாறியிருக்கிற சில அம்சங்கள் குறித்தும் கவனிக்க வேண்டியிருக்கிறது.
சின்னத் திரையைப் பொறுத்தவரை சூரியன்தான் எல்லாமும். மற்ற நட்சத்திரக் கூட்டங்களெல்லாம் எப்போதும் சூரியனை அடியொற்றித்தான் தங்கள் பாதையை வகுத்துக் கொண்டிருக்கின்றன.
கடந்த பத்தாண்டுகளாக சன் தொலைக்காட்சி தவிர்த்த மற்ற சேனல்கள் எப்படியாவது இந்த பெருவெளிச்சத்திற்கு நடுவே தாங்களும் வெளிச்சத்திற்கு வந்துவிட மாட்டோமோ எனப் போராடிக் கொண்டிருக்கின்றன. சன் தொலைக் காட்சியை குறைந்தது இன்னும் பத்தாண்டுகளுக்கு இந்த வணிகத்தில் நெருங்கக்கூட முடியாது என்பதுதான் நிதர்சனமான உண்மை என்பதை இவை ஏற்கனவே புரிந்து கொண்டு விட்டன. ரஜினியை எப்படி நெருங்க முடியாதோ அது போல என்று புரிந்து கொள்ளுங்கள். இரண்டாவது இடத்திற்குத்தான் மற்ற சேனல்கள் போட்டியிடுகின்றன. கடந்த மாதம் முதல் தமிழ் பொழுதுபோக்குத் தொலைக்காட்சி ஓட்டத்தில் இதுவரை இரண்டாம் இடத்தில் இருந்த விஜய் டீவியைப் பின்னுக்குத் தள்ளி ஜீ தமிழ் அந்த இடத்திற்கு வந்திருக்கிறது. இதைத்தான் நான் டொனால்ட் ட்ரம்பின் வெற்றிக்கு நிகரானதாகக் கருதுகிறேன். ட்ரம்ப்பின் வெற்றியை முழு மனதோடு கொண்டாட முடியாத மாதிரி, சந்தேகக் கண்ணோட்டத்துடன் அணுகுகிற மாதிரி, கொஞ்சம் காமெடியாக அணுகுகிற மாதிரி, ஜீ தமிழின் வெற்றியையும் இந்தச் சந்தையில் எல்லோரும் சந்தேகக் கண்ணோட்டத்துடனேயே பார்க்கிறார்கள்.
எனக்கு நன்றாக ஞாபகம் இருக்கிறது. ஐந்தாண்டுகளுக்கு முன்பு நான் ஜீ தமிழில் நிகழ்ச்சிகள் செய்ய ஆரம்பித்த காலத்தில், சில பத்திரிகைகளில் அந்தத் தொலைக்காட்சியைக் கிண்டலடிப்பார்கள். டப்பிங் படங்களை ஒளிபரப்பும் ஒரு தொலைக் காட்சியாகத்தான் அது அறியப்பட்டிருந்தது. ஜீ தமிழில் வேலை பார்க்கிறேன் என்று வீட்டாரிடம் சொல்லக்கூட கூச்சமாக இருக்கும். இந்த ஐந்தாண்டுகளில் அப்படியென்ன மாற்றம் வந்துவிட்டது? ஜீ தமிழை டாப்டென், அஞ்சறைப் பெட்டி, சொல்வதெல்லாம் உண்மை ஆகிய மூன்று நிகழ்ச்சிகள் சென்னை தவிர்த்த பிற இடத்து மக்களிடம் கொண்டு போய்ச் சேர்த்தன. எனக்குத் தெரிந்து ஒரு நிகழ்ச்சிக்கு 0.05 ரேட்டிங் வாங்கிக் கொண்டிருந்த ஜீ தமிழ் இப்போது தடாலடியாக இரண்டாம் இடத்திற்கு எப்படி நகர்ந்து வந்தது? ஜீ தமிழ் புதிய படங்கள் வாங்குவது உண்மைதான். ஆனால் அப்படியொன்றும் அது ரஜினி கமல் நடித்த படங்களையெல்லாம் வாங்கவில்லை. ஏன் இன்னமும் அது விஜய், அஜீத், தனுஷ் ரேஞ்சிற்குக்கூட தன்னை நகர்த்திக் கொள்ளவில்லை.
அதில் வருகிற நிகழ்ச்சிகள் எல்லாமும் ஏதாவதொன்றின் காப்பிதான் என்று சொல்பவர்களும் உண்டு. ஜீ தமிழின் பிரத்தேயக் கண்டுபிடிப்பு நிகழ்ச்சி என்று எதையும் சொல்ல முடியாது. ஏன் சொல்வதெல்லாம் உண்மைகூட விஜய் டீவியில் ஒளிபரப்பான கதையல்ல நிஜம் நிகழ்ச்சியைப் பார்த்துவிட்டுச் செய்ததுதான். ஒரு மூன்று மணி நேரம் அமர்ந்து பார்த்தால், விஜய் டீவியின் பி டீம் என்று உடனடியாகச் சொல்லி விடலாம். ஆனாலும் அது எப்படி இரண்டாவது இடத்திற்கு தன்னை நகர்த்திக் கொண்டது என்கிற கேள்வியில்தான் இந்தத் துறையில் ஏற்பட்டிருக்கிற சமீபத்திய மாற்றங்கள் அடங்கியிருக்கின்றன.
இதற்கு முன்பு அமெரிக்க நிறுவனமான ஏசி நீல்சன் கம்பெனியின் துணை நிறுவனமொன்று இந்தியாவில் டீ.ஆர்.பி எனப்படும் டெலிவிஷன் ரேட்டிங் பாயிண்ட் கணக்கீடுகளை எடுத்துக் கொண்டிருந்தது. விளம்பரதாரர்கள், சேனல்காரர்கள் எல்லாரும் ஒவ்வொரு வியாழக்கிழமையும் நகத்தைக் கடித்துக் கொண்டு அமர்ந்திருப்பார்கள். சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளின் தயாரிப்பாளர்கள் புதன் கிழமை இரவு முழுக்கத் தூங்கவே மாட்டார்கள்.
காலையில் நெஞ்சைப் பிடித்துக் கொண்டுதான் அலுவலகத்திற்கு வருவார்கள். கோலாகலமாக அந்த வாரத்திற்கான ரேட்டிங் வெளியாகும். வழக்கம் போலத்தான் என்று உயரதிகாரிகள், டாக்டர்கள் கழற்றுகிற மாதிரி கண்ணாடியைக் கழற்றுவார்கள். ஒரு உதாரணத்திற்குச் சொல்கிறேன். நம்பர் இப்படி வந்து விழுந்திருக்கும். சன் டீவி – 1300, விஜய் டீவி – 286, பாலிமர் டீவி - 111, ஜீ டீவி – 87, ராஜ் டீவி – 64, ஜெயா டீவி – 53. இந்த எண்ணில் கூடக் குறைச்சல் இருக்கலாம். ஆனால் ட்ரெண்ட் இப்படித்தான் இருக்கும். எல்லோரும் முட்டி மோதிப் பார்த்தார்கள். பருப்பு எதுவும் வேகவில்லை. இரண்டாம் இடத்தில் விஜய் டீவி நங்கூரம் இட்டு முன்னூறிலிருந்து நானூறு என்று ஊசலாடிக் கொண்டிருந்தது. மூன்றாம் இடத்தில் இன்று இருப்பவர், நாளை இல்லை என்கிற நிலைமையில்தான் ஓடிக் கொண்டிருந்தார்கள். இந்த எண் விளையாட்டில் எல்லோருக்கும் திருப்தி இல்லை. வழக்கம் போல சூரியன் மட்டும் சிரித்துக் கொண்டது.
என்ன காரணம் என்று ஆராய்ந்தார்கள். உதாரணமாக டி.ஆர்.பி ரேட்டிங் எடுப்பதற்கான பாக்ஸ்கள் மொத்தமே எழுநூற்றுச் சொச்சம் மட்டுமே இருந்தன. அதில் பாதிக்குப் பாதி சென்னையில் இருந்தன. மீதி பெட்டிகள் இரண்டாம் நிலை நகரங்களில் இருந்தன. அதாவது பத்து இலட்சத்திற்கு மேல் மக்கள் வசிக்கும் நகரங்களில் மட்டுமே இருந்தன. ஒரு இலட்சம் மக்கள் அல்லது அதற்குக் குறைவான அளவில் மக்கள் வசிக்கும் நகரங்களில் இல்லை. கிராமப்புறங்களில் இல்லவே இல்லை. ஏற்கனவே வரையறுக்கப்பட்ட பாதையிலேயே மாடுகளும் தங்களுக்குப் போடப்பட்டிருக்கிற மூக்கணாங் கயிற்றோடு சுற்றிக் கொண்டிருந்தன. ஏசி நீல்சன் நிறுவனத்தை எதிர்த்து சிலர் நீதிமன்றத்தைக்கூட நாடினார்கள். இந்த விஷயத்தில் நிறைய வம்பு வழக்குகளும் இருக்கின்றன. மாற்று என்ன என்று எல்லோரும் சேர்ந்து யோசித்த போதுதான் பார்க் Broadcast Audience Research Coucil (BARC) என்ற ஒரு அமைப்பைத் தோற்றுவித்தார்கள்.
இப்போது பார்க்கின் வழியாகத்தான் இந்த எண் விளையாட்டுக்கள் நிகழ்த்தப்படுகின்றன. இதை விளம்பரதாரர்களும் ஒத்துக் கொண்டிருக்கிறார்கள்.
ஏற்கனவே இருந்த முறைக்கும் இந்த முறைக்கும் என்ன வித்தியாசம்? ஏற்கனவே இருந்ததில் 41 சதவீத ஒதுக்கீடு (weightage) சென்னைக்கு மட்டுமே இருந்தது. இப்போது சென்னையின் ஒதுக்கீடு 13 சதவீதம். தமிழக மக்கள் தொகையில் கிட்டத்தட்ட மூன்றே முக்கால் கோடி மக்கள் வசிக்கும் கிராமப்புறங்கள் கவனத்தில் கொள்ளப்படாமல் இருந்த நிலை மாறியிருக்கிறது. எழுநூறு கணக்கிடும் பாக்ஸ்கள் பழைய முறையில் இருந்தன. இப்போது தோராயமாக இரண்டாயிரம் பாக்ஸ்களுக்கு மேல் இருப்பதாகச் சொல்கிறார்கள். எதிர்காலத்தில் இவை பத்தாயிரம் பாக்ஸ்களாகக்கூட உயர்த்தப்படலாம் என இந்தத் துறை சார்ந்தவர்கள் சொல்கிறார்கள். பார்க் தமிழகத்தின் எல்லா கிராமப் பகுதிகளையும் ஆய்விற்கு உட்படுத்துகிறது என்கிறார்கள்.
ஏற்கனவே இருந்த முறைக்கும் இந்த முறைக்கும் என்ன வித்தியாசம்? ஏற்கனவே இருந்ததில் 41 சதவீத ஒதுக்கீடு (weightage) சென்னைக்கு மட்டுமே இருந்தது. இப்போது சென்னையின் ஒதுக்கீடு 13 சதவீதம். தமிழக மக்கள் தொகையில் கிட்டத்தட்ட மூன்றே முக்கால் கோடி மக்கள் வசிக்கும் கிராமப்புறங்கள் கவனத்தில் கொள்ளப்படாமல் இருந்த நிலை மாறியிருக்கிறது. எழுநூறு கணக்கிடும் பாக்ஸ்கள் பழைய முறையில் இருந்தன. இப்போது தோராயமாக இரண்டாயிரம் பாக்ஸ்களுக்கு மேல் இருப்பதாகச் சொல்கிறார்கள். எதிர்காலத்தில் இவை பத்தாயிரம் பாக்ஸ்களாகக்கூட உயர்த்தப்படலாம் என இந்தத் துறை சார்ந்தவர்கள் சொல்கிறார்கள். பார்க் தமிழகத்தின் எல்லா கிராமப் பகுதிகளையும் ஆய்விற்கு உட்படுத்துகிறது என்கிறார்கள்.
பெருநகரங்கள் மட்டுமல்லாமல் சிறு நகரங்களும் கணக்கீட்டிற்குள் வந்திருக்கின்றன. கணக்கீடுகளை எடுப்பதற்கு கண்ணுக்கே தெரியாத வாட்டர் மார்க் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுவதாகவும் சொல்கிறார்கள். இதோடு டிஜிட்டல் தொலைக்காட்சிப் புரட்சியும் சேர்ந்து கொள்ள சந்தையில் இப்போது வெவ்வேறு மாற்றங்கள் நிகழ ஆரம்பித்திருக்கின்றன.
தன் சந்தையைத் தீர்மானிப்பதில் சிறு நகரத்தானுக்கும் கிராமத்தானுக்கும் இப்போது பங்கு கிடைத்துவிட்டது. அதனால்தான் ஜீ தமிழ் தொலைக்காட்சி இரண்டாம் இடத்தைத் தட்டிப் பறித்திருக்கிறது. ஏனெனில் ஏற்கனவே அது சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியின் வழியாகக் கிராமப் புறங்களில் வலுவாக தன்னுடைய அடித்தளத்தை அமைத்திருந்தது. அதை இப்போது அறுவடை செய்து கொண்டிருக்கிறது. வழக்கம் போல முதலிடம் சூரியனுக்குத்தான். ஏற்ற இறக்கங்கள் கொண்ட இந்தச் சந்தையின் வணிக மதிப்பீடுகள் ஒருபக்கம் இருந்தாலும், நிகழ்ச்சிகளின் தரம் மற்றும் கோணத்தில் இப்போது நிறைய மாற்றங்கள் வரத் துவங்கியிருக்கின்றன. இப்போது தீடீரென விஜய் டீவி நடந்தது என்ன? என்கிற க்ரைம் சார்ந்த நிகழ்ச்சியைத் தூசு தட்டி மறுபடியும் கையில் எடுத்திருப்பதை இந்தக் கோணத்தில்தான் புரிந்து கொள்ள வேண்டும். இதுவரை ஒதுக்கப்பட்டிருந்த கிராமத்தான் கையிலும் பாயிண்டிங் ரிமோட்டைக் கொடுத்த வகையில் இதை ஒரு புரட்சியாகத்தான் பார்க்க முடிகிறது.
கிராமங்கள் மற்றும் சிறுநகரங்களில் உள்ள பார்வையாளர்களை உள்ளடக்கியும் இப்போது நிகழ்ச்சிகளைத் திட்டமிட்டே ஆகவேண்டிய கட்டாயத்திற்கு எல்லா தொலைக்காட்சி நிறுவனங்களும் தள்ளப்பட்டிருக்கின்றன. இந்த இடத்தில் பொழுதுபோக்குத் தொலைக்காட்சிச் சேவைகளை மட்டுமே குறிப்பிடுகிறேன். செய்தித் தொலைக்காட்சிகளைக் கணக்கிலேயே எடுத்துக் கொள்ளவில்லை. ஏனெனில் அவை மிகச் சின்ன அளவிலேயே இந்தச் சந்தையில் தங்களுக்கான இடத்தைப் பகிர்ந்து கொள்கின்றன. சரியான உதாரணத்தைச் சொல்ல வேண்டுமெனில், வாரத்தில் ஐந்து நாட்களில் ஐந்து மணி நேரம் ஒளிபரப்பாகும் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சி 50 ஜி.ஆர்.பிகளை வாங்குகிறது. 24 மணி நேரமும் ஏழுநாட்களும் ஓடும் செய்தித் தொலைக்காட்சிகள் இப்போதுதான் முப்பதைத் தொட ஆரம்பித்திருக்கின்றன.
சன் தொலைக்காட்சியைப் பொறுத்தவரை எப்போதும் நகரங்களைப் போலவே கிராமங்களிலும் தன்னுடைய பலத்தை ஏற்கனவே உறுதி செய்திருக்கிறது. இன்னமும் கிராமப்புறங்களில், ‘எங்கள் வீட்டில் சன் டீவி கனெக்ஷன் வந்துவிட்டது’ என்று சொல்பவர்கள் இருக்கிறார்கள். ஒருமுறை தன்னுடைய கணவன் குறித்துப் புகார் சொன்ன மனைவி ஒருத்தர் இப்படிச் சொன்னார். “எங்க வீட்டுக்காரரு சன் டீவி வயற எடுத்துக் கழுத்த நெறிச்சாரு”.
சன் தொலைக்காட்சியைப் பொறுத்தவரை எப்போதும் நகரங்களைப் போலவே கிராமங்களிலும் தன்னுடைய பலத்தை ஏற்கனவே உறுதி செய்திருக்கிறது. இன்னமும் கிராமப்புறங்களில், ‘எங்கள் வீட்டில் சன் டீவி கனெக்ஷன் வந்துவிட்டது’ என்று சொல்பவர்கள் இருக்கிறார்கள். ஒருமுறை தன்னுடைய கணவன் குறித்துப் புகார் சொன்ன மனைவி ஒருத்தர் இப்படிச் சொன்னார். “எங்க வீட்டுக்காரரு சன் டீவி வயற எடுத்துக் கழுத்த நெறிச்சாரு”.
இந்தச் சந்தை இப்போது டிஜிட்டல் தரத்தில் துல்லியமாகியிருக்கிறது. சுதந்திரமான போட்டியும் இப்போதுதான் ஆரம்பமாகியிருக்கிறது. பத்தாண்டுகளுக்கு முன்பு சன் தொலைக்காட்சி பெரும்பலத்தோடு இருந்ததைப் போல இப்போது இல்லை. கோட்டையைக் கரையான்கள் மெல்ல அரிக்க ஆரம்பித்திருக்கின்றன. சன் தொலைக்காட்சி மனதளவில் சோர்ந்து போயிருக்கிற மாதிரித்தான் தெரிகிறது. ஏனெனில் விஜய் டீவி அப்போது கதையல்ல நிஜம் நிகழ்ச்சியைக் கொண்டு ஹிட் அடித்த போது, சன் டீவி அதைக் கண்டு கொள்ளக்கூட இல்லை. ஆனால் காலத்தின் மாற்றமாய் இப்போது அது சொல்வதெல்லாம் உண்மைக்குப் போட்டியாக நடிகையும் அரசியல்வாதியுமான குஷ்புவை வைத்து நிஜங்கள் என இறங்கி வந்திருக்கிறது. இந்த எண் விளையாட்டில் தமிழகத்தின் எல்லா இடங்களும் உள்ளடக்கப்பட்டு விட்டதால், இப்போது கலவையான நிகழ்ச்சிகளைத் தந்தேயாக வேண்டிய கட்டாயத்திற்கு எல்லா தொலைகாட்சி நிறுவனங்களும் தள்ளப்பட்டிருக்கின்றன என்பதைத்தான் இந்த உதாரணங்கள் சுட்டிக் காட்டுகின்றன.
இந்தத் திறந்த சந்தையில் எல்லோருக்குமான இடமும் இப்போது உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
இந்தத் திறந்த சந்தையில் எல்லோருக்குமான இடமும் இப்போது உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
இன்று ஜீ தமிழ் இரண்டாவது இடத்திற்கு வந்திருக்கிறது. நாளை பாலிமர் வரலாம். நாளை மறுநாள் ராஜ் டீவி வரலாம். அடுத்த வாரம் ஜெயா டீவிகூட வீறுகொண்டு எழுந்து வரலாம். ஆனாலும் சன் தொலைக்காட்சியின் கோட்டையை அரிக்க முடியுமே தவிர, இப்போதைக்கு சாய்க்க முடியாது. அதுதான் நிதர்சனமான உண்மை. ஒரு சந்தையில் அடுத்தவனை அதிகமான விலை வைத்து விற்கச் சொல்லும் விநோதமும் தமிழ்த் தொலைக்காட்சிச் சந்தையில் மட்டுமே நடந்து கொண்டிருக்கிறது. உதாரணமாக பத்து நொடிகளுக்கு சன் டீவி நாற்பதாயிரம் ரூபாய் வரை விளம்பரக் கட்டணமாக வசூலிக்கிறது என்று வைத்துக் கொள்வோம். அதற்கடுத்த இடங்களில் இருப்பவர்கள் இருபதாயிரம், பத்தாயிரம், ஆறாயிரம் என விளம்பரக் கட்டணத்தை நிர்ணயம் செய்வார்கள். இப்போது தயாரிப்புச் செலவு என்பது எல்லோருக்கும் ஒன்றாகி விட்டது. சன் டீவி தன்னுடைய கட்டணத்தை எழுபதாயிரம் என்று நிர்ணயித்தால், மற்ற போட்டியாளர்களும் தங்களுடைய கட்டணத்தை உயர்த்த முடியும்.
ஆனால் சன் தொலைக்காட்சி எனக்குக் கிடைக்கும் இலாபம் போதும் என சொல்லாமல் சொல்கிறது. மற்றவர்கள் புலம்புகிறார்கள். போட்டியாளனின் விளம்பரக் கட்டணத்தை அதிகரிக்கச் சொல்லும் பரிதாப நிலையில்தான் வர்த்தக ரீதியில் மற்ற சேனல்கள் இன்னமும் இருக்கின்றன.
அதேசமயம் தங்களுக்கான பிரத்யேகமான சந்தையை நோக்கியும் மற்ற சேனல்கள் இப்போது திட்டமிட்டு நகரத் துவங்கியிருக்கின்றன. அதை இந்தச் சமீபத்திய பார்க் புரட்சி உறுதி செய்திருக்கிறது. இனியும் யாரையும் நீங்கள் கேலி பேசமுடியாது. டப்பிங் சேனல் என ஒருகாலத்தில் கிண்டலடிக்கப் பட்ட ஜீ தமிழ் இப்போது ‘சொல்லு மாமா ஜீ’ என தன்னை மேல் நோக்கி இந்தப் போட்டியில் நகர்த்திக் கொண்டிருக்கிறது. ஒருவகையில் மற்ற சேனல்களுக்கு அது நம்பிக்கையையும் தந்திருக்கிறது. தமிழ்த் தொலைக்காட்சி சந்தையில் மாற்றங்களுக்கான நேரம் கனிந்து வந்திருக்கிறது. மற்ற சிறிய நட்சத்திரங்களும் பார்வைக்குத் தட்டுப்பட ஆரம்பித்திருக்கின்றன
.
கட்டுரையாளர் சரவணண் சந்திரன் பத்திரிக்கையாளர் ,எழுத்தாளர்
இவரது "ஐந்து முதலைகளின் கதை" ,"ரோலக்ஸ் வாட்ச்"."வெண்ணிற ஆடை" நாவல்கள் பரவாலான வரவேற்பை பெற்றன .
கருத்துகள்
கருத்துரையிடுக