யார் இந்த பெண் பெரியார் என்று உங்களுக்கு வியப்பு ஏற்படக் கூடும். ஜெயலலிதாவுக்குப் பிறகு அதிமுகவின் பொதுச் செயலாளராக பதவியேற்க உள்ள சசிகலாவைத்தான் பெண் பெரியாராக உருவாக்க ஊடகங்கள் முயன்று வருகின்றன. இப்படி இவரை பெண் பெரியாராக்க உருவாக்குவதில் பார்ப்பன ஊடகங்களும் முக்கியப் பங்கு வகித்து வருகின்றன என்பதுதான் விசித்திரமான செய்தி.
தமிழகத்தில் பார்ப்பன எதிர்ப்பை மீண்டும் கிளப்ப ஒரு பெருங்கூட்டமே போராடி வருகிறது. ஜெயலலிதா மரணத்தை தொடர்ந்து அவர் இறுதி அஞ்சலி வரை, பூலான் தேவி சசிகலா மற்றும் அவரது உறவினர்கள் எப்படி இறுதி அஞ்சலி நிகழ்ச்சிகளை ஜெயாவின் அண்ணன் மகள் தீபாவைக் கூட உள்ளே விடாமல் ஆக்ரமித்தனர் என்பதை நாம் அனைவருமே பார்த்தோம்.
இப்போது அடுத்த கட்டமாக அதிமுகவுக்கு சசிகலாவை பொதுச்செயலாளர் ஆக்கி அவரை முதல்வராக்குவதற்கான அனைத்து முயற்சிகளையும் அவர் கணவர் நடராஜன் எடுத்து வருகிறார். சசிகலா தலைமையிலான மன்னார்குடி கும்பல் தொண்ணூறுகள் முதல் அடித்து வந்த கொள்ளை என்ன என்பதை நாடே அறியும். சமீபத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் கூட பெரும்பாலான வேட்பாளர்களிடம் பணம் பெற்று, சீட் வழங்கியது சசிகலா அன்ட் கோ தான். என்னதான் சசிகலா ஜெயலலிதாவுக்கு நெருக்கமாக இருந்து உதவிகள் செய்தார் என்றாலும் அந்த நட்புக்காக அவர்கள் அடித்த கொள்ளை வரலாறு காணாதது. இன்றைய சொத்துக் குவிப்பு வழக்கில் சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனங்கள் இன்று வரை உயிரோட்டத்தோடுதான் இருக்கின்றன.
கடந்த இரண்டு நாட்களாக தொழிலதிபர் சேகர் ரெட்டியின் வீடுகளில் வருமான வரித்துறை சோதனை நடத்தியது அனைவருக்கும் தெரிந்திருக்கும். அந்த சோதனைகள் ஜாஸ் சினிமாஸ் அலுவலகத்திலும் நடந்ததாக கலைஞர் டிவி செய்தி வெளியிட்டது. இதற்கெதிராக சசிகலா மற்றும் ஜெயலலிதாவின் வழக்கறிஞரான நாமக்கல் செந்தில் பெயரில் இன்று அனைத்து நாளிதழ்களிலும், ஜாஸ் சினிமாஸ் சார்பாக விளக்க அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. ஜெயலலிதாவுக்காக அறிவிக்கப்பட்ட அரசுமுறை துக்கமான ஏழு நாட்கள் கூட முடியாத நிலையில், தங்கள் சொத்துக்களை பாதுகாப்பதில் எவ்வளவு கவனமாக இருக்கிறார்கள் என்பதையே இது உணர்த்துகிறது.
ஜெயலலிதா உடல் புதைக்கப்பட்ட பிறகு, மன்னார்குடி கூட்டம் மொத்தமும் போயஸ் தோட்டத்தில் குடியேறி உள்ளது. சசிகலாவின் கணவர் நடராஜன் உட்பட அனைவரும் போயஸ் தோட்டத்தில்தான் உள்ளார்கள். போயஸ் தோட்டத்தில் இருந்தபடியே சசிகலாவை அடுத்த பொதுச் செயலாளர் ஆக்குவதற்கும், முதல்வராக்குவதற்கும் பணிகள் சுறுசுறுப்பாக நடைபெற்று வருகின்றன. சசிகலா ஜெயலலிதாவைப் போலவே அதிகாரம் செலுத்தத் தொடங்கி விட்டார் என்றே கார்டன் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பன்னீர் செல்வத்தை, கடந்த புதனன்று சசிகலாவும், திவாகரனும் சேர்ந்து கடுமையாக மிரட்டியுள்ளார்கள் என்றும் தகவல்கள் வருகின்றன.
இவர்களின் முயற்சிகள் ஒரு புறம் இருக்க, தேசிய ஊடகங்கள், சசிகலாவின் கட்சியை பைப்பற்ற செய்யும் முயற்சிகளை பட்டியலிட்டு எழுதத் தொடங்கியுள்ளன. ஊடகங்கள் இப்படி செய்திகளை வெளியிடுவது, மக்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை சசிகலாவும் நடராஜனும் உணர்ந்தே உள்ளனர். இதை எதிர்க்கும் வகையில், சசிகலாவை பார்ப்பன ஆதிக்கத்திற்கு எதிரான “பெண் பெரியாராக” சித்தரிக்கும் வேலையில், அவர் கணவர் நடராஜன் இறங்கியுள்ளார். இதன் முதல் கட்டமாக, பெரும்பாலான ஊடகங்களை வளைக்கும் முயற்சியில் நடராஜன் இறங்கியுள்ளார்.
இன்று வெளியான தமிழ் இந்து நாளிதழில், இரா.சரவணன் என்பவர் ஒரு கட்டுரை எழுதியுள்ளார். இணைப்பு. இரா சரவணன், இதற்கு முன்பு ஜுனியர் விகடனில் பணியாற்றியவர். திமுக 2ஜி வழக்கில் சிக்கியபோது, அதில் சம்பந்தப்பட்டவர்களுக்கு ஆதரவாக பல்வேறு கட்டுரைகளை எழுதியவர். இவர் திரைப்படத்துறைக்கு சென்றது முதல் எந்த பத்திரிக்கையிலும் எழுதுவது கிடையாது. அப்படிப்பட்ட சரவணன் எதற்காக இன்று இந்த கட்டுரையை எழுத வேண்டும் என்பது ஒரு புதிர். அவர் கட்டுரையின் சில பகுதிகளைப் பார்த்தாலே, எப்படி கூசாமல் பொய்யை எழுதியிருக்கிறார் என்பது புரியும்.
“அரை மணி நேரம் மட்டுமே கார்ட னில் ஜெ. உடலுக்கு சடங்குகள் நடக்கும் எனச் சொல்லப்பட்ட நிலையில் மூன்று மணி நேரத்துக்கு மேல் ஜெ.யின் உடல் அங்கேயே இருந்தது. ஜெயலலிதா வுக்குப் பிடித்த பச்சை நிறச் சேலையை சசிகலா உடுத்திவிட்டிருக்கிறார். ஜெயலலிதாவின் கைக்கு வாட்ச் கட்டிவிட்டு, தனது இரு கைகளாலும் முகத்தைப் பிடித்து சசிகலா கதறியிருக்கிறார்.
‘அக்கா, நீங்க இல்லாத வீட்ல இனிமே நான் என்னக்கா பண்ணப் போறேன். எல்லா எடத்துலயும் நீங்கதானக்கா தெரியுறீங்க..’ என்று பிதற்றியபடி ரெண்டு மணி நேரத்துக்கும் மேல் ஜெயலலிதாவின் உடலுக்கு அருகிலேயே சசிகலா அமர்ந்திருக்கிறார். விடிய விடிய ஜெயலலிதா உடலின் மீது கைவைத்துக் கொண்டு கலங்கியபடியே அமர்ந்திருக்கிறார் சசிகலா.”
இது ஒரு சாம்பிள் மட்டுமே. முழுக் கட்டுரையையும் படித்தீர்கள் என்றால் எப்படி கூசாமல் பொய்யை எழுதியிருக்கிறார் என்பது புரியும். சரவணன் மட்டுமல்ல. பெரும்பாலான ஊடகங்கள், ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது, டாக்டர்களிடமும், மருத்துவர்களிடமும் சிரித்துப் பேசினார், செட் தோசை சாப்பிட்டார். போயஸ் தோட்டத்துக்கு அழைத்தார் என்று கூசாமல் பொய்களை கக்கியபடி உள்ளன. இதே ஊடகங்கள் கடந்த 75 நாட்களாக ஜெயலலிதா குறித்த தகவல்களை, அப்போல்லோ மருத்துவமனையின் அறிக்கையாக மட்டுமே பிரசுரித்து வந்தன. புலனாய்வு செய்த தகவல்களை தெரிவிக்க எந்த முயற்சியும் எடுக்கப்படவேயில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், ஜெயலலிதாவின் மரணத்தில் சந்தேகங்களை சமூக ஊடகங்களில் பலர் தொடர்ந்து எடுத்து வருவதால், இதை மறுப்பதற்காகவே ஊடகங்களில் ஆப்பிள் மற்றும் இட்லி சாப்பிட்டது போன்ற கட்டுக் கதைகள் உலா வந்து கொண்டிருக்கின்றன.
சரவணன் எழுதி வெளிவந்துள்ள கட்டுரையைப் போலவே மேலும் ஊடகங்களில் சசிகலாவுக்கு ஆதரவாக செய்திகளை வெளியிட, நடராஜன் தரப்பு கடும் முயற்சி எடுத்துக் கொண்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று திராவிடர் கழக பொதுச் செயலாளர் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கை முக்கியமாக கவனிக்கப்பட வேண்டியது.
வீரமணி தனது அறிக்கையில்
“அதிமுகவின் பொதுச்செயலாளராகவும், முதல்வராகவும் இருந்த ஜெயலலிதா மறைந்து மூன்று நாட்களே ஆன நிலையில், அக்கட்சிக்குள்ளும், ஆட்சி அமைப்புக்குள்ளும் பிளவுகளை ஏற்படுத்திட, குழம்பிய குட்டையில் மீன் பிடிக்கலாம் என்ற திட்டத்துடன் சில சக்திகள் தூண்டிலைத் தூக்கிக்கொண்டு திரிகின்றன.
மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல் அடக்கம் நிகழ்ந்து இன்னும் அந்த ஈரம்கூட காயவில்லை; அதற்குள் சிலரின் சீற்றம் ஆங்கில ஏடுகளின் வாயிலாக ஆரம்பமாகிவிட்டது. அதிமுகவின் எம்எல்ஏக்கள், முக்கிய பொறுப்பாளர்களிடையே பிளவை வலிந்து உண்டாக்கி, இடையே புகுந்து, நூல் பிளந்து பார்க்கும் முயற்சியில் சிலர் ஈடுபடத் துவங்கிவிட்டனர்.
சுமுகமாகவே புதிய அமைச்சரவை அரசியல் சட்டக் கடமைப்படி பதவியேற்று விட்டது. ஓ.பன்னீர்செல்வத்தை முதல்வராகக் கொண்டு; பழைய அமைச்சர்கள் மீண்டும் அமைச்சர்களாகி விட்டனர். அவர்கள் மூலமோ அல்லது ஆளுங்கட்சி எம்எல்ஏக்கள் மூலமோ எந்த அதிருப்திக் குரலும் கிளம்பாத நிலையில், அக்கட்சியின் பொதுச்செயலாளர் பதவி இன்னமும் நிரப்பப்படாத சூழலைப் பயன்படுத்திக் கொண்டு, பல்வேறு கலகங்களை உருவாக்கிட, கட்டுக்கோப்பான அக்கட்சியினை ஜாதி அடிப்படையில் பிரித்தாளும் வேலைகள் செய்யத் தொடங்கிவிட்டனர்.
ஜெயலலிதாவின் நிழலாக இறுதிவரை இருந்து, மெய்க்காப்பாளராக, சேவகியாக, சிறந்த பாசம் காட்டிய தங்கையாகவே வாழ்ந்து, ஜெயலலிதாவின் கஷ்டங்கள், சிறைவாசங்களில் பங்கேற்ற சசிகலாவைப் பற்றி தேவையில்லாமல் பெரும் ஆய்வே நடத்தி, அரசியல் ஆவர்த்தனம் செய்கிறார்கள். முதல்வர் ஜெயலலிதா மறைந்து துக்கம் 7 நாள் என்பதுகூட தீராத நிலையில், துயரத்தில் உழலும் அவர்களிடையே குட்டையைக் குழப்ப தூண்டிலைத் தூக்கிப் புறப்பட்டு விட்டார்கள்! அக்கட்சியின் முக்கியப் பொறுப்பாளர்களுக்கு இல்லாத கவலையும், அக்கறையும் இந்த அறிவுஜீவிகளுக்கு ஏன்? விஷயம் புரிந்தவர்களுக்குக் கண்டிப்பாகவே விளங்கும்.
இன்னொரு பக்கம் தங்கள் பக்கம் சாய்த்துக்கொள்ள – திராவிட இயக்கங்களுக்கு தாங்கள்தான் மாற்று என்ற பாஜகவினரின் ‘கரிசனம்’ அதிமுகவின் மீது கரைபுரண்டு ஓடத் தொடங்கிவிட்டது. இரண்டு கட்சிகளின் லட்சியங்களும் ஒன்றுதானாம்; வெங்கய்யா நாயுடு கசிந்துருகி கண்ணீர் மல்கக் கூறுகின்றார்.
காவிரி நதி நீர் ஆணையத்தை சட்டப்படி அமைக்க கடைசி நேரத்தில் மறுத்த பிரதமர் மோடி, அதிமுக எம்பிக்களைக்கூட சந்திக்க மறுத்த பிரதமர் மோடி ”நான் தொலைபேசியில் கூப்பிடும் தூரத்தில்தான் இருக்கிறேன்” என்று முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திடம் கூறுகிறாரே, எப்படி? சசிகலாவின் தலையில் கைவைத்து ஆறுதல் கூறும் மோடியின் நோக்கம் என்ன?
எனவே, அதிமுகவின் சகோதரர்களே, சிண்டு முடிந்திடுவோரை, உங்கள்மீது திடீர் அனுதாபம், அளவற்ற ஆதரவு தருவது போல் நாடகம் போடுவோரை விழிப்போடு புரிந்துகொள்ளுங்கள். கட்சியின் கட்டுக்கோப்பை – கட்டுப்பாட்டை மறவாதீர். சிறுசிறு ஓட்டைகளைத் தேடி அலைந்து அவற்றைப் பெரிதாக்குகின்றனர். எனவே எச்சரிக்கை தேவை” என்று வீரமணி தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
ஆனால் இந்த பெண் பெரியார்தான், ஒரு பார்ப்பன பெண்மணியின் வீட்டில் 30 ஆண்டுகளாக வேலையாளாக இருந்தார் என்பதை இன்று பார்ப்பனீயத்துக்கு எதிராக குரல் கொடுக்கும் வீரமணி வசதியாக மறந்து விட்டார்
குறிப்பாக, “ஜெயலலிதாவின் நிழலாக இறுதிவரை இருந்து, மெய்க்காப்பாளராக, சேவகியாக, சிறந்த பாசம் காட்டிய தங்கையாகவே வாழ்ந்து, ஜெயலலிதாவின் கஷ்டங்கள், சிறைவாசங்களில் பங்கேற்ற சசிகலாவைப் பற்றி தேவையில்லாமல் பெரும் ஆய்வே நடத்தி, அரசியல் ஆவர்த்தனம் செய்கிறார்கள்.” என்ற வாசகங்கள், வீரமணி எதற்காக இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளார் என்பதை தெளிவு படுத்துகிறது.
இது தவிரவும் ஊடகங்களோடு பல்வேறு வாய்மொழி ஒப்பந்தங்களை நடராஜன் தரப்பு செய்து கொண்டுள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன. அடுத்த நான்கரை ஆண்டுகளுக்கு அரசு விளம்பரங்கள் இரட்டிப்பாக்கப்படும் என்றும், அதற்கு பிரதி பலனாக முழுமையாக சசிகலா ஆதரவு செய்திகளை வெளியிட வேண்டும் என்றும் கூறப்பட்டு வருகிறது.
நடராஜனின் இந்த நடவடிக்கைகளில் விசித்திரமானது என்னவென்றால், கி.வீரமணி போன்ற எலும்பு பொறுக்கிகளை வைத்து காய் நகர்த்துவதோடு அல்லாமல், குமுதம் ரிப்போர்ட்டர் மற்றும் தினமணி போன்ற பார்ப்பன ஏடுகளிலும் சசிகலா ஆதரவு செய்திகளை வெளியிட ஏற்பாடுகள் செய்துள்ளார் என்பதே.
ஜெயலலிதா அடக்கம் செய்யப்பட்ட மறுநாள் வெளியான தினமணி நாளேட்டில், சசிகலா பற்றி இவ்வாறு ஒரு தலையங்கம் எழுதப்பட்டுள்ளது.
“ஜெயலலிதாவின் நிழலாகவும், மனசாட்சியாகவும் அவரது வெற்றியிலும் தோல்வியிலும் பக்கபலமாகவும், பின் துணையாகவும் இருந்து வந்திருப்பவர் சசிகலா மட்டுமே. அவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டாலும்கூட, நீண்ட நாள் ஜெயலலிதாவால்சசிகலாவை ஒதுக்கி வைக்க முடியவில்லை எனும்போது, எந்த அளவுக்கு ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குப் பாத்திரமானவராக அவர் இருந்திருக்கிறார் என்பது தெளிவு.
“மற்றவர்களால் மிகவும் தவறாக சித்திரிக்கப்பட்ட, புரிந்துகொள்ளப்பட்ட ஒரு பெண் அவர். எனக்காக அவர் மிகவும் சிரமப்பட்டிருக்கிறார். எனக்காக சிறை தண்டனை அனுபவித்திருக்கிறார். என்னுடைய நட்பு மட்டும் இல்லையென்றால் அவரை யாரும் இந்தளவு தொந்தரவு செய்திருக்க மாட்டார்கள். எனது உடன்பிறவாச் சகோதரி. என் அம்மாவின் இடத்தை நிரம்பிய பெண் அவர்‘ என்றுஜெயலலிதாவே, சிமி கரேவாலுடனான தனது பேட்டியில் சசிகலா குறித்து கூறியிருக்கிறார் என்றால் எந்த அளவுக்கு சசிகலா ஜெயலலிதாவின் நம்பிக்கையைப் பெற்றிருந்தார் என்று தெரிந்து கொள்ளலாம்.
இன்னும் சொல்லப்போனால், ஜெயலலிதா இருக்கும்போதே, அவரது எண்ணப்படியும், வழிகாட்டுதல்படியும் கட்சியினரை வழிநடத்தி வந்திருப்பவர் சசிகலாதான். அதனால், அ.தி.மு.க.வின் கட்சித் தலைமை என்பது இயற்கையாக சசிகலாவைச் சேரும் என்பதுதான் எதிர்பார்ப்பு. எதிர்கால கட்சித் தலைமைக்கு சசிகலாவும், நிர்வாகத் தலைமைக்கு ஓ. பன்னீர்செல்வமும் என்பது ஜெயலலிதா சொல்லாமல் சொல்லியிருக்கும் செய்தி என்றுதான் கூற வேண்டும். இந்த ஏற்பாடு சுமுகமாகத் தொடர்வதுதான் ஜெயலலிதாவுக்கு அ.தி.மு.க.வினர் செய்யும் உண்மையான அஞ்சலியாக இருக்கும்.“
சசிகலாதான் அதிமுக பொதுச் செயலாளராக வேண்டும் என்று வெளிப்படையாகவே ஜெயலலிதாவின் கல்லறை காய்வதற்குள் தினமணி தலையங்கம் எழுதுகிறதென்றால், ஊடகங்கள் எந்த அளவுக்கு அதிகார மற்றும் பணம் படைத்தவர்களின் கால்களை நக்க தயாராக இருக்கிறது என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும். மற்றொரு பார்ப்பன ஊடகமான குமுதம் ரிப்போர்ட்டரின் கவர் ஸ்டோரி “எனக்காக எத்தனையோ சோகங்களையும் வலிகளையும் தாங்கிய சசி” என்று கவர் ஸ்டோரி வெளியிடுகிறது.
ஜெயலலிதா இறந்த ஒரே நாளுக்குள் எப்படியெல்லாம் நிறம் மாறும் பச்சோந்திகளாக இந்த ஊடகங்கள் மாறி விட்டன என்பதற்கான அறிகுறிகளே இவையெல்லாம்.
சசிகலாவை எதிர்பபோர் எல்லாம் பார்ப்பன அடிவருடிகளாகவும், சசிகலாவை ஆதரிப்போர் எல்லாம் பெரியாரின் வாரிசுகளாகவும் சித்தரிப்பதற்கான அனைத்துப் பணிகளையும், தமிழக ஊடகங்கள் வீசப்படும் எலும்பகளுக்காக செய்யத் துணிந்துள்ளன.
வருங்காலத்தில் சமூக வலைத்தளங்களில் சசிகலாவை எதிர்த்தால் அவர் பார்ப்பன அடிவருடி என்று சித்தரிப்பதற்கான சூழலை நடராஜன் மற்றும் சசிகலா செய்து வருகின்றனர்.
தமிழகம் நல்ல திறமையான நிர்வாகியிடம் ஒப்படைக்கப் பட வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. அந்த நிர்வாகி சசிகலாவா அவர் கணவர் நடராஜனா என்பதே கேள்வி. ஆனால் இவர்கள் இருவரும் அத்தகைய தகுதிவாய்ந்த நிர்வாகிகளும் கிடையாது, நல்ல மனிதர்களும் கிடையாது என்பதே வரலாறு நமக்கு உணர்த்தும் பாடம். கடந்த 30 ஆண்டுகளாக போயஸ் தோட்டத்தில் கோலோச்சி வரும் மன்னார்குடி மாபியாவிலிருந்து ஒரே ஒரு நல்ல தலைவர் கூட உருவாக முடியவில்லை என்பதே யதார்த்தம். அதிகாரத்துக்கு வந்த அனைவரும், லும்பன்களாக, திருடன்களாக, கொள்ளையர்களாகவே உருவாகி இருக்கின்றனர்.
மேலும் 2016 தேர்தலில் மக்கள் அதிமுகவுக்கு அளித்த வாக்கு ஜெயலலிதாவுக்காகவே அன்றி, நிச்சயம் சசிகலாவுக்கோ நடராஜனுக்கோ அல்லது மற்ற மன்னார்குடி மாபியா உறுப்பினர்களுக்காகவோ அல்ல.
இப்படிப்பட்ட தீய சக்திகளை எதிர்ப்பது, ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்ட ஒவ்வொருவரின் கடமை. எம்ஜிஆர் காலத்தில் இருந்து எம்எல்ஏவாக இருந்து வரும் ஒரு பி.எச்.பாண்டியனோ, கே.பி.முனுசாமியோ, அல்லது வெளியே சென்று மீண்டும் வந்த பண்ருட்டி ராமச்சந்திரனோ தலைமைப் பொறுப்பை ஏற்பதே அதிமுகவுக்கும், தமிழகத்துக்கும் நல்லது. கொள்ளைக் கூட்டம் அல்ல.
சசிகலா பெண் பெரியாரும் அல்ல, அவரை எதிர்ப்போர் அனைவரும் பார்ப்பனர்களும் அல்ல என்பதை மக்கள் நன்றாகவே புரிந்து வைத்துள்ளார்கள். இவர்களின் இந்த ஆட்டம் முடிவுக்கு வரும் நாள் வெகு தொலைவில் இல்லை.
வானோக்கி வாழும் உலகெல்லாம் மன்னவன்
கோல்நோக்கி வாழுங் குடி.
உரை:
உலகில் உள்ள உயிர்கள் வாழ்வதற்கு மழை தேவைப்படுவது போல ஒரு நாட்டின் குடிமக்கள் வாழ்வதற்கு நல்லாட்சி தேவைப்படுகிறது.
இப்படிப்பட்ட ஆட்சியை சசிகலாவோ அவரோடு உள்ளவர்களோ நிச்சயம் தர இயலாது என்பதே உண்மை
கருத்துகள்
கருத்துரையிடுக